Search This Blog

6.6.09

ஈழத் தமிழர்களின் துயரத்தைக் கண்டு நெஞ்சம் குமுறுகிறார் இலங்கை தலைமை நீதிபதி




நெஞ்சம் குமுறுகிறார் இலங்கை தலைமை நீதிபதி
முகாம்களில் உள்ள தமிழர்களின் துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை!


இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனுபவித்துவரும் இன்னல்களையும், துயரத்தையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை

என்று இலங்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா வேதனை தெரிவித்துள்ளார்.

நெகம்போ மாவட்டத்தில் மரவிலா என்று இடத்தில் நீதிமன்றவளாகத்தை திறந்துவைத்து தலைமை நீதிபதி சரத் என். சில்வா பேசினார்.

அப்போது அப்பாவித் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களுக்கு தான் சென்று பார்த்த அனுபவத்தை விவரித்தார். அவருடைய பேச்சு முழுமையாக எம் டிவியில் ஒளிபரப்பானது.

வன்னியில் இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களுக்குச் சென்றேன். அங்கிருப்பவர்கள் படும் இன்னல்களையும், துயரத்தையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. செட்டிகுளத்தில் உள்ள முகாம்களுக்கு நான் சென்று பார்த்தேன். அங்கு நிலவும் பரிதாபகரமான நிலையை என்னால் விளக்க முடியவில்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்திலும், விவரிக்க முடியாத துயரத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இங்கு நாம் கட்டடங்களை கட்டிக்கொண்டு வாழ்கின்றோம், ஆனால் அவர்கள் அங்கு கூடாரங்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் வாழ்கின்றனர். கூடாரத்தின் மையத்தில் இருப்பவர்தான் நேராக நிற்க முடியும். கூடாரத்தின் மூலைகளுக்குச் சென்றால் அவர்கள் கழுத்து முறிந்து போகும். உடல் கழிவை வெளியேற்றிக் கொள்வதற்குக் கூட நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இப்படித்தான் செட்டிக்குளம் முகாம்களில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்களைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அவர்களிடம் எனது உணர்வுகளை தெரிவிக்க முயன்று தோற்றுப் போனேன். அவர்களுடைய துயரத்தைக் கண்டு நாங்களும் அழுகின்றோம் என்று கூறமுயன்றேன், முடியவில்லை. உங்களுக்கு நாங்கள் புதிய ஆடைகளைத் தருவேன் என்று கூற முயன்றேன், முடியவில்லை.

இந்த நாட்டில் ஒரே இனம் தான் உள்ளது என்றோ, பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் ஏதுமில்லை என்றும் நாம் கூறுவோமானால் அது அப்பட்டமான பொய்யாகும். இந்த நாட்டின் சட்டங்களில் இருந்து அவர்களுக்கு நியாயம் கிடைக்காது. அவர்களின் இன்னல்களும், துயரங்களும் நமது நாட்டின் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்படுவது இல்லை. இதை நான் வெளிப்படையாக கூறுகின்றேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று நீதிபதி சரத் என். சில்வா பேசியுள்ளார்.

-------------------- நன்றி:- "விடுதலை" 6-6-2009

2 comments:

அசுரன் திராவிடன் said...

உங்களின் இந்த சமூக பணியை தொடருங்கள் ....உங்களுக்கு தேவையான பொழுது வருகிறேன்....

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி