Search This Blog
7.6.09
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைஉள் ஒதுக்கீட்டுடன் நிறைவேற்ற வேண்டும்? ஏன்? எதற்காக?
உள் ஒதுக்கீடு கொண்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை வலியுறுத்தி
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
செய்தியாளர்களிடம்
தமிழர் தலைவர் அறிவிப்பு
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதிய அரசு மத்தியிலே அமைந்திருக்கிறது. மதவெறி அபாயம் இல்லாத ஒரு முற்போக்குச் சிந்தனையுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நூறு நாள்களுக்குள் பல நல்ல மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பது இன்னமும் சிறப்பானது.
குடியரசுத் தலைவருடைய மத்தியஅரசின் கொள்கை உரையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்த முறை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது.
1996 முதல் நிலுவை
1996 ஆம் ஆண்டு முதல் இந்த மசோதா கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது.
இது சட்டமாக ஆகக் கூடிய சூழல் இருந்ததில்லை. ஏறத்தாழ ஒரு மகாமகம் முடியக் கூடிய அளவுக்கு 12, 13 ஆண்டுகளைத் தாண்டி இன்னமும் சட்டமாக நிறைவேற்றப்படாத நிலை இருக்கிறது.
மகளிர் இட ஒதுக் கீடு சட்டம் சமூக ரீதியாக உள் ஒதுக்கீடு கொண்டதாக நிறை வேற்றப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு என்பது உள் ஒதுக்கீடு கொண்ட சட்டமாக நிறைவேற்றப் பட வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதியில் அக்கறை உள்ள அனைவருக்கும் இதை ஒரு வேண்டு கோளாக வைக்கின்றோம்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலை வாழ் மக்கள் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் இடம் பெறவேண்டும். அப்படி இல்லை என்றால் வெறும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் என்றால், அது உயர்ஜாதி சாம்ராஜ்ஜியத்திற்கு வழி வகுக்கப்பட்டதாகவே அமைந்துவிடும்.
சட்டம் நிறைவேற்ற அரசியல் சட்டத்தின் பீடிகையிலே ஆதாரம் உள்ளது.
சமூகநீதி கொண்ட இட ஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றமே ஒத்துக்கொண்டுள்ளது.
விஷம் குடிக்கவேண்டாம் - போராடுங்கள்!
உள் ஒதுக்கீடுடன் கூடிய இந்தச் சட்டத்தை நிறைவேற்றா விட்டால், விஷம் குடிப்பேன் என்று சரத்யாதவ் சொல்லியிருக்கின்றார். அது தேவையில்லை. அதற்காகப் போராட வேண்டும்.
லாலுபிரசாத், முலயாம்சிங் யாதவ் போன்றவர்கள் ஏதோ பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று ஊடகங்கள்தான் பிரச்சாரம் செய்கின்றன - அது தவறானது;
பெண்கள் இட ஒதுக் கீட்டில் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறவர்கள்தான். ஆகவே, இதற்கு எதிரானவர்கள் அல்ல அவர்கள்.
சட்டத்தில் வாய்ப்பு உண்டு
ஏற்கெனவே பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு போடப்பட்ட அரசியல் சட்டப் பிரிவு 243-டி பிரிவின்படி நிறைவேற்றலாம்.
இதுவரை பஞ்சாயத்திலிருந்து மேயர் பதவி வரை பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டிருக்கிறது.
அது சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அகில இந்திய அளவில் பெண்களுக்கும் நீளவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும்.
தி.மு.க.வும் ஆதரிக்கவேண்டும்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்கெனவே இந்தப் பிரச்சினையை வலி யுறுத்தியிருக்கின்றார்கள். மீண்டும் அதை முதல்வர் கலைஞர் அவர்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
1929 ஆம் ஆண்டிலேயே பெரியார் கூறினார்
1929 ஆம் ஆண்டிலேயே செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டிலே சமுதாயத்தில் சரி பகுதி யாக இருக்கின்ற பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி ஆகவேண்டும் என்று தந்தை பெரியார் தீர்மானமாகவே நிறை வேற்றியிருக்கின்றார்கள். எனவே, சமூகநீதியாக இருந்தாலும், இட ஒதுக்கீடாக இருந்தாலும் தமிழ்நாடுதான் வழிகாட்டி என்று வட புலத்தவர்களே சொல்லியிருக்கின்றார்கள்.
- இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
------------------------------------------------------------------------------------
கல்வி வியாபாரமாகக் கூடாது
கேள்வி: கல்வி வியாபாரமாகிவிட்டது இலட்ச இலட்சமாக பணம் வாங்குகிறார்களே?
தமிழர் தலைவர் :
இது ஒழிக்கப்பட வேண்டியது தான் அதே நேரத்தில் அட்மிஷன் நேரத்தில் இந்தப் பிரச்சினை எழும், பிறகு மறையும். இது ஒரு சுனாமி போல வரும், போகும். சீசனுக்கு சீசன் தோன்றக்கூடிய பிரச்சினைதான் இது. இதைத் தடுக்கத்தான் தமிழ்நாடு அரசு, நிறைய அரசின் சார்பில் கல்லூரிகளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.
கல்விக் கட்டணம் வசூலிப்பது என்பது ஒரு பக்கம் - சம்பள உயர்வு கொடுத்ததால் மறுபக்கம் காய்கறி விலை ஏறிவிட்டது என்பது போன்ற ஒரு தீய விளையாட்டு போன்றது.
இடத்தை அதிகப் படுத்தினால் பிரச்சினை தோன்றாது. குறிப்பிட்ட கல்லூரி வேண்டும், குறிப்பிட்ட பாடம் வேண்டும் என்பதால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
நாட்டில் முழு சோசலிசம் வந்தால் ஒழிய இந்தப் பிரச்சினை தீராது. அதுவரை ஒவ்வொரு ஆண்டும் இதைப் பற்றி பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். எப்படி இருந்தாலும் கல்வி வியாபாரம் ஆகாது தடுக்கப்பட்டு தான் ஆக வேண்டும்.
(செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பதில் - சென்னை 6.6.2009)
------------------------------------------------------------------------------------------
உயர்ஜாதியினர் ஆதிக்க அவையாகிவிடும்
சமூக விழிப்புணர்வு வளர்ந்துவரும் காலகட்டம் இது. உயர்ஜாதியினர் ஆதிக்கம் செலுத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில்கூட தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர்தான் அதிக வாக்களித்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை மத்தியில் அமர்த்தியுள்ளனர்.
பார்ப்பனர்களும் உயர்ஜாதிக்காரர்களும் பி.ஜே.பி.,க்குத்தான் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் வாசல் வழியாக சட்டமன்றங்களில், நாடாளுமன்றத்தில் நுழைய முடியாதவர்கள் கொல்லைப்புறம் வழியாக உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள். பெண்களுக்கான இடஒதுக் கீட்டில் உள் ஒதுக்கீடுக்கு வழியில்லை என்றால், மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பாகம் உயர்ஜாதி பெண்களே அவையை ஆக்கிரமித்து விடுவார்கள்.
எனவே, சமூகநீதி இயக்கமாகிய திராவிடர் கழகம் இதில் மிகவும் விழிப்பாக இருக்கிறது - கவனம் செலுத்துகிறது; போராட முன்வந்திருக்கிறது. இதில் ஒத்த கருத்துள்ளவர்களையும் அழைக்கின்றோம்.
- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்
-----------------------------------------------------------------------------------------
பெண்களின் நிலை முன்னணியில் உள்ள நாடு
பெண்களுக்கு உரிமை வழங்குவதில் நாடாளுமன்றத்தில் அதிகம் உள்ள முன்னணி நாடுகள் ஸ்வீ டன் - 47.3 சதவிகிதம்; ரொவாண்டா - 48.8 சதவிகிதம்; பெண்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவதில் பாகிஸ்தான் 42 ஆவது இடம். இதில் இந்தியா 104 ஆவது இடத்தில் இருக்கிறதென்றால் எப்படி என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இது வெட்ககரமானது. வேதனையானது.
நீங்கள்தான் வழிகாட்டி சரத் யாதவ் கூறினார்
சரத்யாதவ், நிதிஷ்குமார் போன்றவர்கள் - இட ஒதுக்கீட்டில் தெளிவானவர்கள். 1996 ஆம் ஆண்டு சரத்யாதவ் அவர்கள் என்னிடமே நேரில் சொல்லியிருக்கின்றார்.
என்ன, அவர் பி.ஜே.பி. கூட்டணியில் இருக்கிறார். அதுதான் ஒரு குறை! அவர் என்னிடம் சொன்னார்,
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதன்முதலில் வலியுறுத்தியவர்களே நீங்கள்தான். அதை உள் ஒதுக்கீட்டுடன் நிறைவேற்ற வேண்டும். தி.மு.க.விடமும் சொல்லுங்கள் என்று நேரிலே சொன்னவர்தான் சரத்யாதவ் அவர்கள்.
- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்
------------------நன்றி:-"விடுதலை" 6-6-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment