மக்களவைத் தலைவராக
ஒரு பெண் - வரவேற்கத்தக்கது
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்கிற செய்தி - குறிப்பிடத்தகுந்த ஒளிவிடும் மணிமகுடம் என்றே சொல்லவேண்டும்.
பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் பெண்கள் வந்துள்ளனர். ஆனால், மக்களவைத் தலைவராகப் பெண் ஒருவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவது என்பது இப்பொழுதுதான்.
இதுவரை மிஸ்டர் ஸ்பீக்கர் என்று விளிக்கப்பட்டதற்கு மாறாக மேடம் ஸ்பீக்கர் என்று அழைக்கப்படும் புதுமையை என்னென்று சொல்ல!
அதுவும் சுதந்திரப் போராட்ட வீரரும், மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும், பெரும்பாலும் மத்திய அமைச்சராகவிருந்தவரும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளில் கவனம் செலுத்துபவரும், மதிப்பவரும், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களைப் பெரிதும் போற்றுபவருமான பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் மகளான மீராகுமார் அந்த இடத்தை அலங்கரிக்கிறார் என்பது - பொன்மலர் மணம் பெற்றது என்ற உருவகத்துக்குப் பொருந்துவதாகும்.
பாபு ஜெகஜீவன்ராம் மகள் என்பதற்காக மட்டுமல்ல; சிறந்த கல்வியாளர், மக்களவைக்குப் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், மத்திய அமைச்சராக இருந்தவர் என்ற தகுதியும் அம்மையாருக்கு உண்டு. தனது காலத்தில் மக்களவையை வெகுநேர்த்தியாக நடத்திக் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெண் ஒருவர் அவைத்தலைவராக வரவிருப்பது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணி மக்களவையின் தலைவராகப் போட்டி யின்றித் தேர்ந்தெடுக்கபட உள்ளார் என்ற செய்தி நம் செவி களிலெல்லாம் தேனாகப் பாய்கிறது. அதுவும் அந்தப் பெண்மணி திருமதி மீராகுமார் அவர்கள் - நீண்ட காலம் மத்திய அமைச்சரவையிலே பங்கு பெற்றுப் பெரும் பணியாற்றிய தன்னிகரற்ற தலைவர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் திருமகள் என்பது - நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.
நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டப்பேரவை களிலும் - பெண்களுக்கான ஒதுக்கீடு சட்ட வடிவம் பெறப் போகிறது இந்த அருமையான காலகட்டத்தில், அதற்கு முன்னோடியாக - அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவராக திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்கள் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த நல்ல நேரத்தில் - ஒரு பெண்மணி இந்தியத் திருநாட்டின் மக்களவைக்குத் தலைவராவது நாம் அனைவரும் வரவேற்றுப் பாராட்டி மகிழக்கூடிய நிகழ்வாகும் (முரசொலி, 3.6.2009, பக்கம் 3) என்று மிகப் பொருத்தமான வரிகளில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் முதலமைச்சர்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இதோ வருகிறது, அதோ வருகிறது என்று சூ காட்டும் தன்மையில் 1996 ஆம் ஆண்டு முதலாக நிலுவையிலே நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றது.
மக்கள் தொகையில் சரி பகுதியுடைய பெண்களுக்கான ஒரு சட்டம் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் - கட்சிகளைக் கடந்த ஆண்களின் ஆதிக்கத்தால் திணிக்கப்படும் முட்டுக்கட்டையே! பெண்கள் மத்தியிலும் போதுமான விழிப்புணர்வு இல்லாததையும் அலட்சியப்படுத்திட முடியாது.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், மயிலே, மயிலே என்றால் இறகு போடாது; வீதிக்கு வந்து பெண்கள் போராடவேண்டும் என்று கூறி வந்திருக்கிறார்கள்.
1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது நடந்து முடிந்திருப்பது 15 ஆவது மக்களவைக் கான தேர்தலாகும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 59 தான். இதுதான் மக்களவையில் அதிகபட்ச எண்ணிக்கை என்று நினைக்கும்போது ஒரு வகையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய தாகும்.
உலகில் - நாடாளுமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை யைப் பொறுத்தவரையில் இந்தியாவிற்கான இடம் 104 ஆகும். இஸ்லாமிய நாடான பாகிஸ்தான்கூட 42 ஆம் இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் உள் ஒதுக்கீடுடன் கூடிய பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண் ஒருவர் மக்களவைத் தலைவராக இருக்கும் இந்தக் காலகட்டத்திலேயே நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதாகும்.
மக்களவைத் தலைவர் என்று வருகிறபோது, வெறும் அவையை நடத்துவது மட்டும் அவருடைய அதிகாரத்துக் குட்பட்டதல்ல - நாடாளுமன்ற குழுக்களை அமைப்பது என்கிற முக்கிய அதிகாரமும் மக்களவைத் தலைவருக்கு உண்டு.
மிக நீண்ட காலமாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பலமுறை இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி சற்றும் அசைந்து கொடுக்கவில்லை
இந்த நிலையில், சமூகநீதியில் ஆர்வம் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்மையார் இந்தக் குறையைப் போக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைவருக்கு வாழ்த்துகள்.
---------------------"விடுதலை"தலையங்கம் 3-6-2009
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தமிழ்10 banner ஐ இணைத்து விட்டீர்கள் ஆனால் , அது வலப்பக்கத்திலே அமைந்திருக்கிறது அதில் உங்கள் மேற்புறத்தில் மாற்றி விட்டீர்கள் என்றால் சரியாக இருக்கும்
Post a Comment