Search This Blog

7.6.09

தனியார்த் துறைகளில் கல்வியிலும் இடஒதுக்கீடு என்பது மிகவும் நியாயமானதாகும்


கபில்சிபல் செயல்படட்டும்
கறுஞ்சட்டை கைலாகு கொடுக்கும்


மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் அவர்கள், தமது முதல் பேட்டியில் தனியார்த் துறைகளிலும் கல்வியில் இட ஒதுக்கீடுக்கு வகை செய்யப்பட இருப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்ற கருத்தினைத் தெரி வித்துள்ளார்.

இது ஒரு வரவேற்கத்தகுந்த கருத்தாகும். தனியார்த்துறைகளில் வேலை வாய்ப்புத் தேவை என்ற கருத்து ஒன்று வலுபெற்று வருவதுபோலவே தனியார்த் துறைகளிலும் கல்வியிலும் இடஒதுக்கீடு என்பது மிகவும் நியாயமானதாகும். வேலை வாய்ப்பு என்ற கனிக்குத் தரு போன்றது கல்வி வாய்ப்பாகும். அதில் முதலாவதாக இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால்தான் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது பொருத்தமானதாக இருக்க முடியும்.


தனியார்த் துறைகள் என்றாலும் ஏதோ ஒரு வகையில் அரசின் உதவியைப் பெறத்தான் செய்கிறார்கள். அப்படியிருக்கும் போது அரசாங்கத்தின் ஆணைகள் அவர்களையும் கட்டுப்படுத்தத்தானே செய்யும்?

ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கல்வி ஆர்வம் கரைபுரண்டு ஓடும் ஒரு காலத்தில், தங்கு தடையின்றி அவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்கச் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஒரு முறை தமிழ்நாடு முதல் அமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்த எல்லோருக்கும் கல்லூரிகளில் உயர் தரப்படிப்பு வசதி கொடுக்க வேண்டுமென்பது முடியாத காரியம். இது எந்த நாட்டிலுமே இயலாத காரியம் என்று கூறினார்.

அவ்வாறு கூறியதற்குத் தந்தைபெரியார் கண்டனத்தைத் தெரிவித்தார்.

இந்தக் காட்டுமிராண்டி நாடு தவிர வேறு எந்த நாட்டிலும் மேல் ஜாதி (பார்ப்பன ஜாதி) கீழ் ஜாதி (அடிமை ஜாதி) என்கிற வகுப்பு (ஜாதி) - இல்லையென்பதையும் மந்திரி யார் உணர்ந்திருந்தால், ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் கொடுக்க இயலாது; எந்த நாட்டிலும் இயலாது என்ற சொற்களை உச்சரித்திருக்கவே மாட்டார் என்று குறிப்பிட்ட தந்தைபெரியார் அவர்கள் முதல் அமைச்சர் பக்தவத்சலம் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

இன்று எந்த எஸ்.எஸ்.எல்.சி. படித்த பார்ப்பனப்பையனுக்கு மேல் படிப்பு படிக்க இட மில்லை? நமக்கு மாத்திரம் ஏன் இயலாது? (விடுதலை 2.8.1965)
என்றார்.

அதே போல அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த சர் சி.பி. இராமசாமி அய்யர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டார். கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்காக வரும் பிள்ளைகள் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் தேறியிருந்தால் மட்டும் போதாது; அவர்கள் கல்லூரித் தலைவர்கள் குறிப்பிடும் மார்க்குகள் பெற்றிருக்க வேண்டும்; அப்படிக்கு இல்லாத பிள்ளை களைச் சேர்க்கக் கூடாது என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.

அதனையும் கண்டித்து விடுதலையும் (16.4.1964) பக்கம் 2) அறிக்கை வெளியிட்டதந்தை பெரியார் அவர்கள், ஷெட்யூ மக்களுக்கு இருப்பதுபோல சூத்திரர்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கு விகிதாசார உரிமை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றார். உருப்போட்டு மனப்பாடம் செய்து வாங்கும் மார்க்கு என்பது தகுதியின் அளவுகோல் அல்ல; சான்றிதழ்களில் பாஸ் அல்லது ஃபெயில் என்று மட்டுமே போட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர் (விடுதலை 2.8.1965).


இவற்றையெல்லாம் எடுத் துக்காட்டுவதற்குக் காரணம் உயர் நிலைப்பள்ளிப் படிப்பு, மேல் நிலைப் பள்ளிப் படிப்பு, கல்லூ ரிப் படிப்பு என்கிற வகையில் படிப்படியாக தாழ்த் தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட மக்களும் படிக்க ஆரம் பித்து, அடுத்த நிலையில் உயர் கல்வி என்று சொல்லப்படும் அய். அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் படிக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் இந்த நிறுவனங் களில் தாழ்த்தப்பட்ட மக்களுக் குப் பெயரளவுக்கு இடஒதுக்கீடு உண்டு என்றாலும் ஒரு சதவிகிதம் பேர்கள்கூட அனுமதிக்கப் படுவதில்லை - காரணம் அவ் வளவும் கடுமையான விதிமுறைகளும், கட்டுகளுமே! பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறவே உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.

2004-இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உயர்கல்வி நிறு வனங்களிலும் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கருத்து உரத்த முறையில் வலியுறுத்தப்பட்டது.

திரு. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவும் இதனை காரண காரியத்துடன் பரிந்துரைத்தது.

அதிகார வர்க்கம் எளிதில் அனுமதிக்க விடுமா? வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களே வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்பும் கொடுத்து விடுமா? அக்கிரகார வாசிகளுக்கென்று பூட்டி வைத்திருந்த அந்த இரும்புக் கதவுகளைத் தான் எளிதில் திறந்து விடுமா?

ஆட்சிகள் மாறினாலும் அதிகார வர்க்கம் அப்படியே தானே இருக்கிறது - அதுவும் பெரும்பாலும் ஆரிய மயமாகத்தானே ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ளது.

அனைத்திலும் அவாளுக்கே என்றிருந்த அனைத்து அப்பங்களையும் ருசி பார்த்து வந்த கூட்டம் மற்றவர்கள் பங்கு கேட்க வரும்போது எதையாவது இடக்கு முடக்காகக் காரணங்களைக் கற்பிக்கத்தானே செய்வார்கள்; தள்ளிப் போடப் பார்ப்பார்கள்; அதுவும் முடியாவிட்டால் கேட்கும் அளவைச் சிதைக்கப் பார்ப்பார்கள்.

உடனடியாக 27 விழுக்காடு இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிப்பதாகவிருந்தால், அவ்வளவுக்கும் வசதிகளுக்கு எங்கே போவது? வகுப்புகள் வேண்டாமா? சோதனைச் சாலைகள் தேவையில்லையா? பேராசிரியர்கள் கிடைக்க வேண்டுமே? - கிடைத்தாலும் அனுபவம் வேண்டுமே! உயர் கல்வி என்றால் சாதாரணமா? தகுதி, திறமைகளைப் பார்க்க வேண்டாமா என்று தாளம் தப்பாமல் தம்புராவை மீட்டுவார்கள்.

அப்படிதான் ஆயிற்று பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடங்களை அளிக்கலாம்; ஒரே தடவையில் அல்ல; ஆண்டுக்கு 9 சதவிகிதப்படி 3 ஆண்டுகளில் அளிக்கலாம் என்று ஒரு யோசனையை அவிழ்த்து விட்டார்கள். அதுதான் இன்றைய நிலை! தாழ்த்தப்பட் டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சேர்த்து ஒரே மசோதாவாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட் டது. எதிர்ப்புக் காரணமாக தனித் தனியே தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்தியா முழுமையும் உள்ள அய்.அய்.டி. இயக்குநர்கள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து உயர்கல்வி நிறு வனங்களில் இடஒதுக்கீடு என்பது அறவே கூடாது; திறமைக்கும், தகுதிக்கும் மட்டுமே அங்கு இடம் இருக்க வேண்டும் என்றுகூறி, அவற்றிற்கு விதி விலக்கு அளிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் அவசர அவசரமாக நாடாளுமன்றத் தொடர் முடியும் தருவாயில் நிறைவேற்றப்பட்டது. தாழ்த்தப்பட்டவர் களுக்கென்றுள்ள - பூட்டா சிங் தலைமையிலான ஆணையத்தின் கருத்தைக் கூடக் கேட்கவில்லை.

மக்களவையில் தாக்கல் செய்யப் பட முடியவில்லை; 15-ஆவது மக்கள வைத் தேர்தல் குறுக்கிட்டதால் அந்த நிலை. தாழ்த்தப்பட்டவர்களுக்கே இந்த நிலை; பிற்படுத்தப்பட்டவர் களைப் பற்றி கேட்கவா வேண்டும்?

தேர்தலும் முடிந்தது. மத்தியில் மீண்டும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்து விட்டது. அர்ஜூன்சிங் வகித்த மனிதவள மேம்பாட்டுத் துறை இப்பொழுது பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் கைக்கு வந்திருக்கிறது!

அர்ஜூன் சிங் அவர்களைப் பொறுத்தவரை இன்னொரு வகையில் வி.பி. சிங்கை ஒத்தவர். பிற்படுத்தப் பட்டோருக்கு உயர் கல்வி நிறுவனங் களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டே ஆக வேண்டும் என் பதிலே மிகவும் கறாராகவே இருந்தவர்.

கபில்சிபல் அவர்களும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்று முதன் முதலாக கல்வியில் தனியார்த் துறை உட்பட இடஒதுக்கீடு வகை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற பச்சைக் கொடியைக் காட்டியுள்ளார்கள்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழுப் பரிந்துரை அறிக்கையில் உள்ளபடி) பிற்படுத்தப் பட்ட மக்கள்தான் இந்நாட்டில் பெரும்பான்மையினர் அவர்கள் 58 ஆண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டுள் ளனர்.

இனியும் வஞ்சிக்கப்பட்டால், அது விபரீதமாக வெடிக்கக் கூடும்.

ஆலோசிக்கப்படும் என்கிறார் அமைச்சர். எல்லா ஆலோசனைகளும் ஆழமாக மேற்கொள்ளப்பட்டு விட்டது. ஏற்கெனவே ஆவணங்கள் தரப்பட்டுள்ளன. நாடாளுமன்ற நிலைக் குழுவும் ஆதரவாகக் கருத்துகள் கூறிவிட்டது. இப்பொழுது நம் முன் உள்ளதெல்லாம் அவற்றைச் செயல்படுத்திக் காட்டுவதே! சமூக நீதிக் கொள்கையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு போது மானதாக இல்லை என்பதே யதார்த்தமாகும். அந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

கபில்சிபல் செயல்படட்டும்! கருஞ்சிறுத்தைக் கூட்டம் கைலாகு கொடுக்கும். கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் உறுதுணையாக நிற்பார்கள்.

குறிப்பு: தாழ்த்தப்பட்டோருக்குத் துரோகம் செய்யும் இந்த மசோதாவை எதிர்த்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் சென்னையில் மெமோரியல் ஹால் முன் திரா விடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது (24.2.2009).

----------------"விடுதலை"ஞாயிறுமலர் 6-6-2009

3 comments:

Unknown said...

Is there a reservation for SC/ST in Periyar-Maniyammi University.
If so can you give details.

அசுரன் திராவிடன் said...
This comment has been removed by the author.
அசுரன் திராவிடன் said...

பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் நிச்சயம் பார்ப்பனர்களுக்கு இடம் கிடையாது என்பது மட்டும் உறுதி