Search This Blog
7.6.09
கலவரத்திற்குக் காரணமாகும் கடவுளின் திருவிழாக்கள்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவோமென பார்ப்பன பா.ஜ.க. இந்தியாவில் அதாவது அவர்களது பாரதத்தில் ராமராஜ்ஜியம் கொண்டு வருவோமென கொக் கரித்து, பாபர் மசூதியை இடித்தும், ஆயிரக் கணக்கான முசுலிம்களை பலியிட்டும் இந்து மதத்தை வளர்க்க நினைக்கும் இந்து மதவெறிக் கும்பல் ராமர் கோவில் கட்டுவது இருக்கட்டும்; இருக்கும் இந்துக் கோவில்களில் நடக்கும் அருகதை என்னவென்று அவர்களால் கூட்டம் போட்டு பேச முடியுமா?
இந்து மதம் என்பது வருண, ஜாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் சிறைச்சாலை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நாட்டுப்புறங்களில் இருக்கும் கோவில்களில் தலித்துக்களுக்கு இன்றும் அனுமதியில்லை என்பது; எங்கெல்லாம் தலித் மக்கள் அந்த உரிமையை கோருகிறார்களோ அங்கெல்லாம் ராமனின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்? சூத்திரன் சம்புகன் நேரடியாக ஆண்டவனை வணங்கி தவம் இருந்தான் என்பதற்காக, அதாவது ஒரு சூத்திரன் தெய்வத்தை தொழவேண்டு மென்றால் பார்ப்பன பூசாரிகள் மூலம்தான் செய்யவேண்டும் என்பதற்காக அந்த சம்புகனை வெட்டிக் கொன்றவன் இந்த அயோத்தி ராமன். இது இராமாயணத்தில் பலரது கவனத்திற்கும் வராத செய்தி.
அந்த பார்ப்பனிய வெறிபிடித்த ராமனின் வாரிசுகள் இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றும் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கொன்று வருகிறார்கள். ஆம், இந்து மதம் சமீபத்தில் தென்தமிழகத்தில் நடத்தியிருக்கும் நரபலியை உங்கள் கவனத்திற் காகக் கொண்டு வருகிறோம். ராம ராஜ்ஜியம் குறித்து இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்! திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும் பான்மையாக உள்ள மேல் ஜாதியினர் ஜாதித்தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.
கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப் பட்ட ஜாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் ஜாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், ஜாதி வெறியர்கள் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு ஜாதிய மேலாதிக்கத்தை ஏவி ஜாதி வெறியர்கள் ஒடுக்கி வருகின்றனர். செந்தட்டி ஊரிலிருக்கும் முப் பிடாதி அம்மன் கோவிலில் மூன்று ஜாதி மக்களும் சேர்ந்துதான் கோவில் விழாவை நடத்துவது வழக்கம். கடந்த 2003இல் குடமுழுக்கு நடைபெற்றபொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் தீர்த்தம் எடுத்துக்கொண்டு உள்ளே வருவதை மேல் ஜாதியினர் தடுத்துள்ளனர்.
கடந்த வருடம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான சுடலை மாடசாமி கோயில் திருவிழாவின் போது பாடப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை என்று கூறி, மின் இணைப்பை துண்டித்து ஆதிக்க ஜாதியினர் ரவுடித்தனம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2008 இல் முப்பிடாதி அம்மன் கொடை விழாவை மேல் ஜாதியினர் நடத்தும்முன்,
கணக்கு வழக்குகளை முறைப்படி நேர் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் கோரிக்கை வைத்தனர். பிறகு, இரு தரப்பினரும் தனித்தனியே விழா நடத்திக்கொள்ளலாம் என அனைவரும் ஒப்புதல் அளித்து, மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கைச்சாத்து(ஒப்பந்தம்) இடப்பட்டுள்ளது.
ஆதிக்க ஜாதியினர் கொடைவிழாவை நடத்தி விட்ட நிலையில், மார்ச் 10ஆம் தேதி தமது கொடைவிழாவை நடத்தத் திட்டமிட்டு தாழ்த்தப்பட்டோர் மனுக் கொடுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய அவர்கள் முற்பட்டபோது, இதனை எதிர்த்து நடைபாதைகளில் முட்கிளைகளை வெட்டிப் போட்டு, ஜாதிவெறியர்கள் இடையூறு செய்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் ஒருவரின் வளர்ப்பு நாயை வெட்டிக் கொன்று குரூரத்தனத்தைக் காட்டினர். மேலும், தாழ்த்தப்பட்டோரை சமூக விலக்கம் செய்து ஊரில் உள்ள கடைகளில் அவர்களுக்குப் பலசரக்கு விற்பதை நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில், மேல் ஜாதிப் பெண் ஒருவர் வந்தபோது, புதர்க்காட்டில் மலம் கழித்துக் கெண்டிருந்த தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எழுந்து நிற்கவில்லை என்ற அற்பகார ணத்தை முன்வைத்து இக்குரூரக் கொலைகளை செய்துள்ளனர். படுகொலைத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்குச் சென்று மிரட்டியுள்ளனர்.
சங்கரன்கோவிலில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கருப்பசாமி என்பவரை வழி மறித்து தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடிவிட்ட தால் அவருக்கு பின்னால் வந்த ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். ஈஸ்வரனின் கழுத்தை வெட்டித் துண்டாக்கி தலையை அறுத்தெடுத்து, இரண்டு துண்டு களாகப் பிளந்துள்ளனர். பரமசிவத்தின் கை வேறு கால் வேறாக வெட்டித் துண்டாக்கி வீசியெறிந்துள்ளனர்.
இந்த வெறிச்செயலுக்கு பழிவாங்கும் உள் நோக்கம் மட்டும் காரணமல்ல. இனி தாழ்த்தப் பட்டோர் யாராவது சம உரிமை கேட்டால் ஆதிக்க ஜாதி குரூரமாகப் பழிதீர்க்கும் எனும் பீதியில் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் அஞ்சி நடுங்க வேண்டும் எனும் ஜாதிவெறிதான் வெட்டுப்பட்டு இறந்தவர்களையும் கண்டம் துண்டமாய்க் கூறுபோட்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்டோரைக் கொன்றொழிப்பது மட்டுமன்றி, பிகார் ஜாதிவெறி நிலப்பிரபுக்களைப் போல அந்த வட்டாரமெங்கும் ஆதிக்க ஜாதிவெறி பயங்கரத்தை நிலைநாட்டும் நோக்கத் தோடுதான் இப்படி கண்டம்துண்டமாக வெட் டிக் கொலை செய்துள்ளனர். கோவில்கொடை தகராறு மட்டுமே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறி இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க ஜாதிவெறியை மறைக்க பல்வேறு தரப்பும் முயலுகின்றன.
தம்மை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அங்கீகரிக்கக் கோரி அரசிடம் கெஞ்சும் ஆதிக்க ஜாதியினர், சம உரிமை கோரும் தாழ்த்தப்பட்டோரை ஆண்ட ஜாதித்திமிரில் இவ்வாறு வெட்டிக் கொல்வதை அந்த கடவுள் வந்து காப்பாற்றுவானா? என்பதே நம்முன் தொக்கி நிற்கும் கேள்வி.
செந்தட்டி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல கிராமங்களிலும் கோவில் திருவிழா என்ற போலியான மூடபழக்க வழக்கத்தினால் மனிதம் மரத்து போயுள்ளது.
இதேபோல, கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம், செம்பாளூர் கிராமத்திலும்,மதுரை கொட்டக்குடி,மற்றும் ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் நடைபெற்ற மோதல்களையும் இந்த சம்பவத்திற்கு உதாரணம் சொல்லலாம்.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஜாதி ரீதியாக பிரித்துப் பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும் செய்யவேண்டும்.
களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட் டாயம் இல்லை. ஆதிக்க ஜாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும்.
------------------வீர்காத்- "விடுதலை" 6-5-2009
Labels:
பார்ப்பனியம்-மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment