Search This Blog

4.6.09

அறியாமையிலிருந்துதான் மூட நம்பிக்கைகள் பிறக்கின்றன!


அறிவியலும்-ஜோதிடமும்

இயற்கை எப்படி செயல்படுகிறது என்பது குறித்த அறியாமையிலிருந்துதான் மூட நம்பிக்கைகள் பிறக்கின்றன. இயற்கை நிகழ்வு பற்றிய ஓர் அறிவியல் உண்மை வெளிப்படும் போது அது தொடர்பாக அதுவரை இருந்து வந்த மூடநம்பிக்கை மறைய வேண்டும். ஆனால் அப்படி எப்போதுமே நடந்து விடுவதில்லை. இதற்கு அந்த நம்பிக்கையை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களிடம் அறிவியல் மனப்பான்மை இல்லாததே காரணம்.

ஆதிகால மனிதர்கள் கிரகங்களுக்கு அபரிதமான சக்தி இருப்பதாக நம்பினர். கிரகங்கள் என்பது என்ன, அவை எப்படி இடம் பெயர்கின்றன என்று அவர்களுக்குத் தெரியாத காரணத்தால் அப்படி நம்பினர். இன்று அவர்கள் மனதில் இருந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வானவியல் விடை கண்டுபிடித்து விட்டது. தங்களுடைய தவறான நம்பிக்கைகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லையென்று தெரிந்ததும் ஆதிகால நம்பிக்கைகளிலிருந்து மனிதர்கள் விடுபட்டிருக்கவேண்டும். ஆனால் நம்நாட்டில் மட்டுமல்ல, தொழில் நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ள மேலை நாடுகளில் உள்ள படித்த வர்க்கத்தினர்களிடம் கூட அந்த நம் பிக்கைகள் நீடிக்கின்றன.

விஞ்ஞானி எதிர்கொள்ளும் முறை

மனித சமுகத்தை ஆட்டிப்படைக்கும் பாரம்பரிய நம்பிக்கைகளில் முதலிடத்தை ஜோதிடத்திற்குக் கொடுக்கலாம். மனிதர்களின் தலைவிதியை கிரகங்கள் தீர்மானிக்கின்றனவா என்ற கேள்விக்கு ஆம் என்று சொல்வதில்தான் ஜோதிட சாஸ்திரம் அடங்கியிருக்கிறது. ஒரு விஞ்ஞானி இக்கேள்வியை எப்படி எதிர் கொள்ள வேண்டும்? ஒரு குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட ஒரு ஜாதகத்தின் மீது சொல்லும் பலனை வைத்து மட்டும் அவர் ஒரு முடிவுக்கு வந்துவிடமாட்டார். இப்படிப்பட்ட ஆரூடங்கள் சொல்லப்படுவதற்கான தெளிவான விதிகள் எவை என்று அவர் முதலில் ஆராய்வார். ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தின்மீது வெவ்வேறு நபர்கள் ஒரே மாதிரியான பலன்களைச் சொல்லும் அளவுக்கு விதிகள் தெளிவாகக் குழப்பமின்றி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பர். வெவ்வேறு ஜாதங்களையும் முறையாகப் பரிசீலித்து எந்த ஆரூடமும் தற்செயலாகப் பலிக்கவில்லை, நிர்ணயிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பது புள்ளியியல் முறையில் நிரூபணமாகி இருக்கிறதா என்று சோதிப்பார். ஏராளமான பரிசோதனைகளை வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்யப்பட்ட பிறகே அவர் இதில் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

நர்லிகர் வைத்த சோதனை

இப்படிப்பட்ட பரிசோதனைகளை விஞ்ஞானிகள் செய்யாமலில்லை. அவர்கள் செய்து பார்த்த பரிசோதனைகளில் எல்லாம் ஜோதிடம் தேர்ச்சி பெறவில்லை. அண்மையில் ஜயந்த் விஷ்ணு நர்லிகர் முன்முயற்சியில் ஒரு பரிசோதனை செய்யப்பட் டது. 200 குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 100 குழந்தைகள் இயற்கையிலேயே புத்திசாலித்தனமானவை. மீதி 100 குழந்தைகள் மனவளம் குன்றியவை. அனைத்துக் குழந்தைகளின் பிறந்த நாள், நேரம், இடம் ஆகிய வற்றை நர்லிகர் சேகரித்தார். குழந்தைகளின் ஜாதகங்கள் ஜோதிட முறைப்படி கணிக்கப் பட்டன.

200 ஜாதகங்களில் 40 ஜாதகங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாற் பதில் சூ ஜாதகங்கள் புத்திசாலிக் குழந்தைகளின் பிரிவு (1) ஜாதகங்கள் எனில், மீதி (40-சூ எண்ணிக்கை) ஜாதகங்கள் மன வளர்ச்சி குன்றியவை (பிரிவு-2). ஆவணங்களிலிருந்து சூ எந்த எண் என்பதைக் கண்டு பிடிக்க முடியுமே தவிர, அந்த எண் என்ன என்று யாருக்குமே தெரியாமல் இருக்குமாறு ரகசிய மாக வைக்கப்பட்டது. ஜோதிடர்களை அழைத்து எத்தனை குழந்தைகள் பிரிவு-1 அய்ச்சேர்ந்தவை, எத்தனை குழந்தைகள் பிரிவு-2 அய்ச் சேர்ந்தவை என்று பிரிக்கச் சொல்லி இருக்கிறார் கள். இந்த விஷப்பரிட் சைக்கு சில ஜோதிட அமைப்புகள் தயாராக இல்லை. தேர்வில் கலந்து கொள்ள 27 ஜோதிடர்கள் முன் வந்தனர். அவர்கள் சொல்லும் ஆரூடம் உண்மை என்று நிரூபிக்கப்படவேண்டுமானால், நாற்பதில் 28 ஜாதகங்களுக்கு அவர்கள் சரியான பதிலைச் சொல்ல வேண்டும் என்று புள்ளியியல் நிபு ணர்கள் முன்கூட்டியே தெரிவித்து விட்டனர். அவர்கள் கூறிய பதில்களில் சராசரியாக நாற் பதில் 17 மட்டுமே உண்மையான பதிலுடன் ஒத்திருந்தன. இதில் வேடிக்கை என்னவெனில், ஜாதகங்களைப் பார்த்தெல்லாம் சிரமப்பட்டு பதிலைக் கூறாமல் பூவா, தலையா போட்டுப் பார்த்திருந்தாலே இதைவிடக் கூடுலாக சரியான பதில்களைக் கூறியிருக்க முடியும்!

நர்லிகன் செய்த மாதிரி சோதனைகள் அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் செய் யப்பட்டுள்ளன. எந்த சோதனையிலும் ஜாதகம் மூலம் ஒருவரைப் பற்றி கணிப்பது என்பது அறிவியல் பூர்வமானது என்று தேறவில்லை.

-------------------------நன்றி:- பேராசிரியர் கே. ராஜு - "தீக்கதிர்", 4.6.2009

1 comments:

Unknown said...

//அறியாமையிலிருந்துதான் மூட நம்பிக்கைகள் பிறக்கின்றன.//

உண்மை . உண்மையிலும் உண்மை.