Search This Blog
5.6.09
உலக நாடுகள் -தூரப்பார்வை-பல்கேரியா-பர்க்கினா ஃபாசோ-புருண்டி-கேமரூன்
பல்கேரியா
பொது ஆண்டுக் கணக்குக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பே தாராசியர்கள் பல்கேரியாவில் வாழ்ந்து வந்தனர். ரோமப் பேரரசு இந்த நாட்டை முதல் நூற்றாண்டில் தங்களுடன் இணைத் துக் கொண்டது. ஆனால், ரோமானியப் பேரரசு அழிந்தபிறகு இந்நாட்டின் மீது பல்வேறு இனத்தவர்கள் படையெடுத்தனர். அவர்களில் பல்கர் இனத்தவர் குறிப்பிடத் தக்கவர்கள்.
1836 இல் துருக்கி யின் ஒட்டாமான் வமிசத்தைச் சேர்ந்தவர்கள் பல்கேரியாவை வெற்றி கொண்டனர். ரஷியாவுக்கும் துருக்கிக்கும் 1877 இல் போர் மூண்டு முடிந்தபின் பல்கேரியா வுக்கு விடுதலை அளிக்குமாறு ரஷியர்கள் வற்புறுத்தினர். தன் நாட்டு எல்லையைக் காப்பாற்றிக் கொள்ளவும் குறிப்பாக மாசிடோனியாவைத் தக்க வைத்துக் கொள்ளவும் பல்கேரியா பல போர்களை இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியில் நடத்தியது. ஆனாலும் எல்லாமே பல்கேரியாவின் தோல்வியில் முடிந்தன.
1944இல் ஜெர்மனியின் வசமிருந்த பல்கேரியாவை சோவியத் படையினர் தாக்கிப் பிடித்தனர். 1946இல் நடந்த வாக்கெடுப்பின் படி முடியாட்சி ஒழிக்கப்பட்டு பல்கேரியா குடியரசானது. நடந்து முடிந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஜார்ஜி டிமிட்ரோவ் என்பவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 29-3-2004 இல் பல்கேரியா நாட்டோ நாடுகளுடன் சேர்ந்தது. பின்னர் அய்ரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்தது.
அய்ரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் கருங்கடலுக்கருகில் உள்ள இந்நாட்டின் பரப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 910 சதுர கி.மீ. 74 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 12 விழுக்காடு முசுலிம்களைத் தவிர மீதிப் பேர் பழமைவாதக் கிறித்துவர்கள். பல்கேரிய மொழிதான் ஆட்சி மொழி. 99 விழுக்காட்டினர் படித்தவர்கள்.
பர்க்கினா ஃபாசோ
ஆப்ரிக்கக் கண்டத்தின் வடமேற்கே பிரெஞ்சு மேற்கு ஆப்ரிகாப் பகுதியில் மேல்வோல்டா என்ற நாடு 1947 இல் உருவாக்கப்பட்டது. 1960இல் விடுதலை அடைந்தது.
அது முதல் 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் புரட்சிகள் ஒன்று மாற்றி ஒன்று ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. 1984இல் நாட்டின் பெயர் பர்க்கினாபாசோ என மாற்றப்பட்டது. மேலை நாட்டவர் இட்டழைத்த பெயர்களை மாற்றித் தம் சொந்தப் பெயரை வைத்துக் கொள்ளும் நிலை ஆப்ரிக்கா முழுவதும் ஏற்பட்டது.
2 லட்சத்து 74 ஆயிரத்து200 சதுர கி.மீ. பரப்பும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் தொகையும் உள்ள நாடு. பாதிப்பேர் இசு லாமியர். 10 விழுக்காடு கிறித்துவர். மீதிப்பேர் உள்நாட்டு மத நம் பிக்கையினர். பிரெஞ்சு மொழிதான் ஆட்சி மொழி. சூடான் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த உள்நாட்டு ஆப்ரிக்க மொழி தான் பேச்சு மொழி.
நாட்டின் அதிபரும் பிரதமரும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அய்ந்து ஆண்டுக் காலம் பதவி வகிப்பார்கள்.
புருண்டி
ஆப்ரிக்கக் கண்டத்தில் நுழைந்து நாடுபிடிக்கும் வெறியில் பல நாடுகளை உண்டாக்கியவர்கள் அய்ரோப்பியர்கள். அந்த வகையில் குறிப்பிடத் தக்கவர்கள் - பிரிட்டிஷார், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஜெர்மனியர்களும் கூட இதில் அடங்குவர். அந்த வகையில் ஜெர்மனியக் கிழக்கு ஆப்ரிக்காவில் அடங்கிய நாடாக உருண்டியும் (ருசரனே) ருவாண்டாவும் இருந் தன. இவை டுட்சி அர சைச் சேர்ந்த நாடுகளாக இருந்தாலும் 1890 இல் ஜெர்மன் வசத்திற்குப் போய் விட்டன.
1923இல் இந் நாட்டை நிருவகிக்கும் பொறுப்பை சர்வதேச சங்கம் (லீக் ஆப் நேஷன்ஸ்) பெல்ஜியம் நாட்டுக்கு அளித்தது. 1962 இல் ருவாண்டாவும் உருண்டியும் தனித் தனி நாடுகளாக்கப்பட்டன. புருண்டி எனப் பெயரிட்டு விடுதலையும் வழங்கப்பட்டது. நான்காம் முவாம் புட்ஸா எனும் மன்னரின் முடியாட்சி நாடானது. கடந்த 40 ஆண்டுகளாக நாட்டில் புரட்சிகள், கலவரங்கள், கொலைகள், கும்பல் கும்பல்களாகக் கொல்லப்படுதல் என்று அமை தியே இல்லாத நிலை தான் நிலவியது. காரணம் ஆப்ரிக்க மக்களிடையே நிலவி வரும் தனித்தனி இனக் குழுப் பிரிவினை மனப்பான்மை.
2001 அக்டோபரில் நெல்சன் மண்டேலா வின் முயற்சியில் இடைக் கால அரசு அமைக்கப் பட்டது. ஹுடு மற்றும் டுட்சி இனத் தலைவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாக ஏற்பாடானது. ஆனால் முக்கிய ஹுடு இனக் குழுக்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப் பமிட மறுத்து போரைத் தீவிரப் படுத்தினர். .2004 வரையும் போர் நீடித்தது.
27 ஆயிரத்து 830 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந் நாட்டில் 81 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். கிறித்துவ மதத்தை 67 விழுக்காடும், முசுலிம் மதத்தை 10 விழுக்காடும் பின்பற்றுகின்றனர். ஆப்ரிக்கப் பழக்க வழக் கங்களை 23 விழுக்காடு மக்கள் பின்பற்றி நடக்கின்றனர். 52 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்.
2005 ஆகஸ்ட் 26 முதல் அதிபராக பியர்ரி நெக்ருன்னிஸாஸா இருந்து வருகிறார்.
கேமரூன்
போர்த்துகீசியர்களும் டச்சுக்காரர்களும் அய்ரோப்பியாவிலிருந்து வந்து கேமரூன் நாட்டை அடிமைப்படுத்தியவர்கள். ஆனால் 1919 இல் நாடு பிரிக்கப்பட்டது. 20 விழுக்காடு பகுதி பிரிட் டன் வசமும் 80 விழுக்காடு பிரெஞ்ச் வசமும் பிரித்து அளிக்கப்பட்டது. குரங்கு அப்பத்தைப் பிரித்துக் கொடுத்ததைப் போன்று இதனைச் செய்தது லண்டன் பிரகடனம். 1922இல் இப்பிரிவினையை அங்கீகரித்து ஆசீர்வாதம் வழங்கியது சர்வதேச சங்கம். (முதல் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட அனைத்து நாடுகள் மன்றம். அதிகாரம் இல்லாத அமைப்பாக இருந்து பின் அழிந்துபோனது. அதனால்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இன்றைக்கிருக்கும் அய்க்கிய நாடுகள் அவை ஏற்படுத்தப்பட்டது. இது மட்டும் என்ன செய்கிறது? என்ன அதிகாரம் இதற்கு இருக்கிறது?)
பிரெஞ்சுக்காரர்கள் தம் வசம் இருந்த கேமரூன் நாட்டிற்கு 1958இல் சுயாட்சி உரிமையை வழங்கினார்கள். அகமது அகிட்ஜோ என்பவர் பிரதமரானார். 1961இல் அய்.நா. சபை யின் மேற்பார்வையில நடத்தப் பெற்ற பொதுவாக்கெடுப்பின்படி பிரிட்டன் நிருவகித்த கேமரூனில் ஒரு பகுதி கேமரூன் குடியரசில் இணைக்கப்பட்டு கேமரூன் பெடரல் குடியரசாகியது. மற்றொரு பகுதி நைஜீரியாவுடன் இணைந்து கொண்டது.
1972இல் நடந்த பொது வாக்கெடுப்பின்படி கேமரூன் ஒரே நாடாக, கேமரூன் அய்க்கிய குடி யரசு என்ற பெயரில் அமைந்தது. பால்பியா என்பவர் அதிபராக 6-11-1982 முதல் இருந்து வருகிறார். இப்ராகிம் இனோனி என்பவர் பிரதமராக 8-12-2004 முதல் இருக்கிறார். 4 லட்சத்து 75 ஆயி ரத்து 440 சதுர கி.மீ. பரப்பும் ஒரு கோடியே 74 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட நாடு. கிறித்துவர்கள் 40 விழுக்காடு, முசுலிம்கள் 20 விழுக்காடு. மீதிப் பேர் உள்ளூர் மதங்களையும் பின்பற்றி வருகின்றனர். இங்கிலீசும் பிரெஞ்சு மொழியும் ஆட்சி மொழிகள். 79 விழுக்காடு கல்வி கற்றோர்.
---------------------"விடுதலை" 4-6-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment