Search This Blog

19.6.10

சாமிக்குச் சக்தியா? ஆசாமிக்குச் சக்தியா


கூர்ம அவதாரம்

கோயில்கள் விபச்சாரம் திருட்டு; சாமியார்களின் காமலீலைகள் என்று வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு நாளும் இணைப்புச் சங்கிலித் தொடர்போல் பலவும் வந்து இணைந்து கொள்கின்றன.

திருப்பதியிலிருந்து ஒரு தகவல். திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவூலத்திலிருந்து வைரம் பதித்த தங்க ஆமை திருடு போயிருக்கிறதாம். இந்தத் திருட்டுத் தொழிலைச் செய்தவர் வெளி உலக ஆசாமி அல்ல; அன்றாடம் திருப்பதி ஏழுமலையானுக்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்து கொண்டிருந்த சிட்டிராஜு என்ற திருப்பதி தேவஸ்தான ஊழியர்.

வைரக்கற்கள் பதிக்கப்பட்ட இந்த தங்க ஆமை 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். இதன் உலக மதிப்பு அற்ப சொற்பம் அல்ல ரூ 300 கோடியாம்!

காவல்துறையினர் தனியார் தொலைக் காட்சியில் பணியாற்றுவோரின் துணை-யோடு இந்தப் பலே கில்-லாடியைப் பொறி வைத்துப் பிடித்துள்ளனர்.

ஆமை என்றால் அவாளின் வைதிகப்படி சாதாரணமானதல்ல. மகாவிஷ்ணுவின் (திருப்பதி ஏழுமலையானின்) இரண்டாவது அவதாரம் ஆகும்; எதற்காக இந்த அவதாரமாம்?

அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை மந்திரகிரியை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடையும் போது, அந்த மேருமலை-யானது, பாற்கடலுக்குள் அமிழ்ந்துவிடாதபடி ஆமை (கூர்ம) உருவெடுத்து விஷ்ணுவானவர் பாதுகாத்தாராம். அதன் காரணமாகத்தான் அமிர்தம் கிடைத்ததாம்; துர்வாச முனிவரின் சாபத்தால் கடலில் மறைந்து போயிருந்த சூரிய சந்திர கிரகங்கள், மகாலட்சுமி முதலியவர்களும் மீண்டும் வெளிப்பட ஏதுவாயிற்றாம்.

கதை எப்படியோ போய்த் தொலையட்டும்; ஆமை என்பது மகாவிஷ்ணுவின் சக்தி வாய்ந்த இரண்டாவது அவதாரம் ஆயிற்றே! அதனைத் திருடியிருக்கிறவர் கோயிலில் வேலை செய்யும் ஓர் ஆசாமி என்றால் இங்கு சாமிக்குச் சக்தியா? ஆசாமிக்குச் சக்தியா என்ற கேள்வி எழத்தானே செய்யும்?

இதே திருப்பதி கோயில் ஏழுமலையானின் உருவம் பொறித்த டாலரைத் திருட்டுத்தனமாக விற்ற டாலர் புகழ் ரெங்காச்சாரிகள் கம்பி எண்ணாமல் ஜோராக திரிந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

திருப்பதி லட்டில் கூட ஊழலோ ஊழல் அவ்வப்போது சேதிகள் தலை காட்டுகின்றன. மொட்டையடித்து மயிரைக் கழிப்பதில்கூட ஊழலாம்!

உண்டியல் பணம் எண்ணும்போதும் மோசடி நடக்கிறது என்பதற்காக விலையுயர்ந்த கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்தியின் லட்சணமும், கடவுளின் சக்தியும் சந்தி சிரிக்கின்றனவே பக்தர்கள் கொஞ்சம்... கொஞ்சமாவது சிந்திக்கக்கூடாதா?

------------------- - மயிலாடன் அவர்கள் 19-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

திருடியவன் பார்ப்பனனா?சூத்திரனா?

தமிழ் ஓவியா said...

திருட்டு புரட்டைச் சொல்லிக் கொடுத்தவனே பார்ப்பான் தானே