தை முதல்நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு
அரசின் சார்பில் அறிவித்தவர் முதல்வர் கலைஞர்
கோவையில் தமிழர் தலைவர் பேச்சு
தமிழ் 60 ஆண்டுகள் வருடப் பிறப்பு கதையை வெளியில் சொல்ல முடியுமா? தை முதல்நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்று அறிவித்தவர் முதல்வர் கலைஞர் என்று கோவை குடிஅரசு நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
கோவையில் 8.5.2010 அன்று குடிஅரசு தொகுதிகள் வெளியீடு, செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தந்தை பெரியார் அன்றைக்கு விதைத்தார். இன்றைக்கு இவர் அறுவடை செய்து களத்து மேட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இப்படிப்பட்ட ஓர் அற்புதமான வரலாற்றை உருவாக்கிய ஏடுதான் குடிஅரசு.
தமிழக அரசே பெரியாருக்குக் காணிக்கை
தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லுகிற நேரத்திலே பேரறிஞர் அண்ணா சொன்னார். சட்டமன்றத்திலே பெரியார் அவர்களுக்கு தியாகி மானியம் உண்டா? என்று முனு ஆதி கேட்டார். 1967 லே பதவிக்கு வந்த அண்ணா சட்டமன்றத்திலே சொன்னார். இந்த அரசே தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை. எனவே அவருக்கு தனியே ஒன்றும் தியாகி மானியம் கிடையாது என்று சொன்னார்.
இதை சொல்லிவிட்டு அப்படியே நின்று விடவில்லை. தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார் அண்ணா.
ஏனென்றால் எதுவும் சாதாரணமாக நடந்துவிட்டால் அதனுடைய பெருமை பலபேருக்குப் புரியாது. தமிழுக்கு செம்மொழி என்று ஆக்கிவிட்டார். இன்றைக்கு பல பேர் செம்மொழி மாநாடு நடத்தலாமா? என்ற கேட்கிறார்கள்.
செம்மொழி வந்தால் அரிசி கிடைக்குமா?
செம்மொழி வந்தால் போதுமா? அதனால் அரிசி கிடைக்குமா? பிரியாணி கிடைக்குமா? அல்லது மற்றது கிடைக்குமா? என்று கேட்கிறார்கள் என்று சொன்னால் எப்பொழுது கலைஞர் அறிக்கை விட்டிருக்கிறார்? செம்மொழி வந்தால் ஒவ்வொருவருக்கும் பிரியாணி கிடைக்கும் என்று முன்னாலேயே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு போட்டிருக்கிறார். மளிகைப் பொருள்களை குறைந்த விலைக்கு வழங்கியிருக்கின்றார்.
மனநோயாளிகள்
ஆனால் இப்படி கேட்கிறவர்கள் எவ்வளவு மனநோய் பிடித்தவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இன எதிரிகள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரே ஒரு வார்த்தை சொல்லலாம்.
உணவா? வேட்டியா?
செம்மொழி என்று சொன்னால் அது நம்முடைய மானப் பிரச்சினை. நம்முடைய உரிமைப் பிரச்சினை. காலம் காலமாக ஏன் அது மறுக்கப்பட்டு வந்தது?
இதன் மூலமாக ஒரு பெரிய உண்மையை வெளியே கொண்டு வந்தார் கலைஞர். தமிழுக்கு செம்மொழி தகுதி பெற கலைஞர் டில்லியுடன் போராடினார். லத்தீன், ஹீப்ரு போன்ற மொழிகளோடு சமஸ்கிருதம் செம்மொழி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. படித்தவர் உள்பட நாம் நம்பிக்கொண்டிருந்தோம்.
இந்த மொழி செம்மொழி என்று அதிகார பூர்வமாக அறிவித்த பிற்பாடுதான் வடமொழி சமஸ்கிருதத்திற்கு அப்பொழுதுதான் அங்கீகாரம் கிடைத்தது. பிரச்சாரத்தினாலேயே செம்மொழி என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள். தமிழ் செம்மொழி என்பதால் சோறு கிடைக்குமா? என்றால் என்ன அர்த்தம்? ஏம்ப்பா நிர்வாணமாக இருக்கிறாயே. பிறந்த மேனியாக இருக்கிறாயே இந்தா வேட்டி கட்டிக்கொள் என்று வேட்டியைக் கொடுத்தால் பசி தீருமா? என்று ஒருவர் கேட்டால் அவன் எங்கே இருக்க வேண்டியவன்? இப்படி சில பேர் கேட்கிறார்கள்.
தம்பி இது உணவை விட முக்கியமானது. சோறா? மானமா? என்று கேட்டால் மானம்தான் மிக முக்கியம் மானம்தான் மனிதருக்கு அழகு என்ற கொள்கை உடைய இயக்கம். எனவே நமக்குரிய வாய்ப்பு இருந்தும் அது மறுக்கப்பட்டதே என்பதை அறிந்துதான் தமிழ் செம்மொழி அந்தஸ்தை போராடி பெற்றோம். செம்மொழி அறிவியல்மொழியாக ஆக்கப்பட வேண்டும். இந்த மொழி உலக மக்கள் மத்தியிலே செல்வதன் மூலமாக தமிழனுடைய பண்பாடு, கலாச்சாரம் பரப்பப்படவேண்டும்.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னால் அதற்காகத்தான் சுயமரியாதை இயக்கம் பிறந்தது. அதற்காகத்தான் குடிஅரசு ஏடு பிறந்தது. எனவே கொஞ்சம் ஆழமாகவே நீங்கள் யோசித்துப் பார்த்தால் செம்மொழி மாநாடே ஒரு வகையிலே குடிஅரசு கொள்கையின் வெற்றிப் பிரகடனம் என்றே தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஆகவே நண்பர்களே, நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
எவ்வளவு அற்புதமான ஒரு பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது? அது மட்டுமல்ல தமிழனுக்கு மிகப்பெரிய தலைகுனிவு எங்கேயிருக்கிற-தென்றால் தமிழ் வருஷப் பிறப்புதான். வருஷமும் தமிழில் இல்லை. தை முதல்நாள்தான் தமிழனுக்கு புத்தாண்டு என்பது புலவர்கள் மத்தியிலே மட்டும். இந்தக் கருத்து இருந்தது. தமிழுக்கும், தமிழ் வருடப் பிறப்புக்கும் சம்பந்தமே இல்லை என்பதை 60 வருடத்தினுடைய பெயரைப் பார்த்தாலே புரியும்.
காசிக்கும் போகிறேன் என்று சொன்னாலே
யாராவது 60 வருடத்தைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். விரோதி, குரோதி, பிரபவ, விபவ, இப்படி பெயர்கள் எல்லாம் வாயில் நுழையாது. 60 வருடம் என்றால் வருடத்திற்கு மேல் இவன் சிந்தித்ததில்லை. 60 வருடம் தாண்டினாலே சஷ்டியப்த பூர்த்தி. அதோடு பூர்த்தியானது என்று அர்த்தம்.
ஒரு காலத்தில் நமது பாட்டிமார்கள் காசிக்குப் போகிறேன் என்று சொன்னால் கதை முடிந்தது என்று பொருள். திரும்பி வரமாட்டார்கள். 24 மணி நேரத்திற்குள் இப்பொழுது திரும்பி வந்துவிடலாம்.
அண்ணா அந்தக் காலத்தில் சொன்னார். நாங்கள் எல்லாம் மாணவர்களாக இருந்து கேட்டு ரசித்ததுண்டு. பஜனை மடத்தில் பாடிக்கொண்டு வருவான் எத்தனை தூரமோ பண்டரி புரமோ? என்று.
ஒவ்வொரு வருஷமும், போன வருஷம்தான் தெரியவில்லை. அதை கேட்டாவது தெரிந்துகொள்ளவேண்டாமா? அண்ணா சொல்வார் நகைச்சுவையாக அந்தக் காலத்தில், நேராக ரயில்வே ஸ்டேஷனுக்கு போ. அங்கே ரயில்வே கால அட்டவணை விற்பான். அதை வாங்கி பார். ரொம்ப தெளிவாக எத்தனை தூரம் என்று தெரியும். இதற்கு ஏன் தெருத்தெருவாக தாளம் போட்டுவிட்டு போகிறாய்? என்று அழகாக பதில் சொல்வார்கள். எனவே இப்படியெல்லாம் இந்த இயக்கம் கேட்டதினுடைய விளைவு, ஒரு ஆட்சி மலர்ந்தது. பகுத்தறிவாளர் ஆட்சி மலர்ந்தது. பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆட்சி மலர்ந்தது. அதனுடைய விளைவாகத் தான் துணிச்சல் மிகுந்த ஒரு பிரதமர் வந்தனுடைய விளைவாகத்தான் அருமை நண்பர்களே!
தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு
மனிதநேயத்தோடு அவர்கள் இங்கே பண்பாட்டை காக்க வேண்டுமென்பதற்காக தமிழ் புத்தாண்டு என்பது தை முதல்நாள்தான் என்பதை அதிகார பூர்வமாக அறிவித்தார்கள்.
இது சாதாரணமானது அல்ல. நடந்தது சாதாரணமானது என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்னமும் பார்த்தீர்களேயானால், பார்ப்பனர்களாலே, நம்முடைய இன எதிரிகளாலே, நம்ம பைத்தியக்காரர்கள் சில பேர் இருக்கிறார் பாருங்கள். விபீஷணர் ஆழ்வார் கூட்டம். பிரகலாதன் கூட்டம். இவர்களாலே இதை செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. நம்முடைய இனம். இனத்தை அடையாளம் காட்டி இந்த ஆண்டு பார்த்தீர்களேயானால் ஏப்ரல் 14ஆம் தேதி என்று வந்தால், அதற்கு ஒரு சிறப்பு, என்ன சிறப்பு? ஒரே சிறப்பு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிறந்த அந்த நாள் என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு.
ஜெயலலிதா - சோ - தினமணி
தமிழ் வருட பிறப்பு வாழ்த்து என்று தமிழர்கள் சொல்லவில்லை. சித்திரை முதல்நாளுக்கு இரண்டே பேர்தான் வாழ்த்து சொன்னார்கள். யார்? ஜெயலலிதா. இனம் இனத்தோடு சேரும் என்பதற்கு அடையாளமாகத்தான்.
தினமணி, துக்ளக் சோ, இப்படி போன்ற ஆள்களெல்லாம். ஒரு கோடு தெளிவாக இருக்கிறது. ஆரியம், திராவிடம் கலந்து போய்விட்டது என்று சொல்கிறான். இன்றும் கலக்கவில்லை என்று அவனே காட்டிக்கொண்டிருக்கிறான்.
அதுமட்டுமல்ல, 60 வருடம் வெளிநாட்டுக்காரன் ஒருத்தன் வரான். வந்து தமிழ் வருஷ பிறப்பு என்று கொண்டாடுகிறான் பாருங்கள். தமிழ் வருஷப் பிறப்பு என்று கொண்டாடும் பொழுது என்னங்க. உங்க தமிழ் வருஷ பிறப்பினுடைய வரலாறு என்ன? கொஞ்சம் சொல்லுங்க. ஏனென்றால் வெளிநாட்டுக்எதையுமே கேட்டு சிந்திக்கக் கூடியவன். கேள்வி கேட்கக் கூடியவன்.
உடனே நம்மாள் விசயம் தெரிந்தவனாக இருந்தால், புராணக் கதை தெரிந்தவனாக இருந்தால் என்ன சொல்லணும் அவன். ஏங்க 60 வருஷத்துக்கு ஒரு கதையே, ஒரு பாரம்பரியமே இருக்கிறது. எங்க பாரத கலாச்சாரமே அதில்தான் இருக்கு. எங்கள் கடவுள்களில் மிக முக்கியமானவர் கிருஷ்ணன். அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. அதிலே ரொம்ப மிக முக்கியமானவர் நாரதர் என்று ஒருவர். வேல்டு மெசஞ்சர், உலகம் முழுவதும் போய் செய்தி கொண்டு வருவார். அவர் கலகம் எல்லாம் செய்வார்.
அந்த நாரதர் வந்து கிருஷ்ணன் கிட்டே போய் கேட்டார். அவருக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. பகவான் கிருஷ்ணன் கிட்டே போய் கேட்கிறாரு. கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று சொல்கிறான் நம்மாள். அவர் கிட்டே போய் கேட்டார். என்ன கிருஷ்ணா? என்ன உனக்கு வேணும். எனக்கு ஒரு ஆசை நீ தீர்க்கணும். நீயே பதினாறாயிரம் கோபியாஸ்திரீ களுடன் கொஞ்சிக் கொண்டு இருக்கிறாயே. எனக்கு ஒன்றாவது கொடுக்க வேண்டாமா? கடவுள் பக்தியில் எவ்வளவு பெரிய ஆராய்ச்சி நடந்து இருக்கிறது பாருங்கள்.
இந்த லீலைகளை படித்ததோட விளைவுதான். அவன் நித்யானந்தாவாக மாறினான். கடவுள் கதை இது. கேட்கிற உங்களுக்கு எல்லாம் புண்ணியம். எனக்கும் புண்ணியம். மோட்சத்திலே முதல் சீட் நமக்கெல்லாம் போடப்பட்டு இருக்கும் நீங்க கேட்டால், ஆகவே கடவுள் கதை என்ன ஆயிற்று? எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா என்று சொன்னவுடனே. அப்படியே கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு பதில் சொன்னானாம், புராணத்திலே இருக்கிறது.
உனக்கும் வாய்ப்பு உண்டு
பரவாயில்லை. உனக்கும் வாய்ப்பு உண்டு. நான் எந்த வீட்டில் இல்லையோ அந்த வீட்டுக்குப் போ என்று பதில் சொன்னாராம். இவர் தயார் நிலையில் போய்விட்டார். இவர் எந்த வீட்டுக் கதவைத் திறந்தாலும் அங்கே கிருஷ்ணன் இருக்கிறார்.
------------------ “விடுதலை” 1-6-2010
0 comments:
Post a Comment