தற்கொலையாளர்களைத் தடுத்தாட்கொண்ட தொண்டு!
மனித வாழ்வில் பலருக்குத் தோல்வியைச் தாங்கும் பக்குவம் இருப்பதில்லை சலிப்பும், விரக்தியும் உச்சத்திற்குச் சென்றவர்களும்கூட, தற்கொலை என்ற தவறான முடிவில் தள்ளப்பட்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் பரிதாபம் உலகெங்கும்கூட காணப்படுகிறது சர்வ சாதாரணமாக!
நேற்று வெளியான ஒரு செய்தி:
ஆஸ்திரேலியாவிலிருந்து மனதிற்கு இதமாய் அமைந்த இனிமைச் செய்தி.
தொண்டறம் செய்ய வயது ஒரு தடை அல்ல; பக்குவப்பட்ட மனமே தேவை என்பதனை உலகுக்கு அது பறைசாற்றுகிறது.
ஆஸ்திரேலியா என்றதும் இந்திய மாணவர்கள் உள்ளூர் நிறவெறியர்களால் கொல்லப்பட்ட முன்பு வந்த செய்தி நினைவுக்கு வருகிறதா? இப்போது நின்றுள்ளது _ இரு சாராரும் தத்தம் பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டதால்!
இதோ ஒரு புதுமைச் செய்தி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் அருகே உள்ள மலைப்பாங்கான இடம் தி கேப். நம்மூர் ஊட்டியில் சூசைட் பாயின்ட் (தற்கொலைக் குன்று) போன்றது. 1800 ஆம் ஆண்டுகளில் இருந்தே தற்கொலை பிரியர்கள் உயிரை விடும் இடம்.
அங்கே சில நூறு அடி தூரத்தில் ஒரு வீடு. அதில் வசிப்பவர் டான் ரிச்சி. இப்போது வயது 84. அதிகாலை எழுந்ததும் கண்ணாடி ஜன்னலைத் திறந்து அருகே நாற்காலி போட்டு அமர்ந்து விடுவார் ரிச்சி. சூசைட் பாயின்ட் மீதே அவரது பார்வை இருக்கும். யாராவது தற்கொலை செய்துகொள்ள வந்திருந்தது தெரிந்தால், தனது ஊன்றுகோலுடன் விரைவார் மலை உச்சி நோக்கி. தற்கொலை மனிதர் குதிக்கப் போகும் கடைசி விநாடி... ஏன் என்னுடன் நீங்கள் ஒரு கப் டீ குடித்துவிட்டுப் போகக் கூடாது? என்பார் ரிச்சி. அவரது கனிவான குரலையும், புன்னகையையும் பார்த்து, தற்கொலையை அப்போதைக்கு தள்ளி வைக்காதவர்கள் குறைவு. அவர்களுடன் தனது வீடு திரும்பும் ரிச்சி, சில நிமிடங்களில் தற்கொலை எண்ணத்தை மாற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைப்பதில் தனது பணியை வெற்றிகரமாக முடிப்பார். இப்படி இதுவரை 160 பேரைக் காப்பாற்றியதாக தகவல். ஆனால், காப்பாற்றி யவர்களை அவர் கணக்கு வைத்துக் கொள்வதில்லை என்பதால், எண்ணிக்கை பல நூறை தாண்டும் என்று ரிச்சியின் மனைவி மோயா கூறுகிறார்.
இதுபற்றி ரிச்சி கூறுகையில்,
என்னால் காப்பாற்ற முடியாதவர்களும் உண்டு. அவர்களது பிணத்தை மீட்க உதவுவேன். மீட்புப் படையினருக்கு டீ கொடுத்துத் தேற்றுவேன். நான் காப்பாற்றிய பலர், என்னுடன் போராடியதுண்டு. அது போன்றவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும்போதே வீட்டின் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவி, போலீசுக்கு போன் செய்து விடுவாள் என்றார்.
இப்படி உயிர் காப்பதையே கடமையாக நினைத்து வாழும் பெரியவர், ஆபத்தை சந்திக்காமலும் இல்லை. ஒருமுறை ஒரு பெண்ணை காப்பாற்றும்போது ரிச்சியையும் சேர்த்துக் கொண்டு குதிக்க முயன்ற அதிர்ச்சியும் நடந்தது. இருப்பினும் அதிலிருந்து மீண்டு, இன்னமும் என் கடன் பணி செய்து கிடப்பதே எனத் தொடர்கிறார் இந்த புதுமையான புன்னகை மன்னன்.
இப்படி தற்கொலைகளைத் தடுத்தாட்கொண்ட தகைமையாளர் அந்த முதிய வயதில் அமைதியாக, ஆரவாரமில்லாமல் எப்படிப்பட்ட தொண்டறத்தை நிகழ்த்துகிறார் பார்த்தீர்களா?
எனக்கு வயதாகி விட்டது; இனி என்னால் எப்படி பிறருக்கு உதவி செய்ய முடியும்? என்று சிலர் பேசுவது, பொருளற்ற புலம்பல் என்பது இதன்மூலம் புரியவில்லையா?
எவரும் எந்த வயதிலும் எங்கிருந்தாலும் தொண்டறத்தைச் செய்யலாம் என்பதற்கு மனம்தான் அடிப்படையாகும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டே! குணம் இருந்தால், அன்பு வெள்ளத்தின் பாய்ச்சல் கொஞ்சமா? நஞ்சமா? என்று எவரும் வியக்கும் வண்ணம் எங்கும் நடைபெறும்!
தொண்டுள்ளங்கள் தொடரட்டும்!
தொய்வின்றி வளரட்டும்!!
மானிடத்திற்கு மகத்தான வழிகாட்டட்டும்!!!
----------------------------வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி “விடுதலை” 17-6-2010
0 comments:
Post a Comment