Search This Blog

20.6.10

பெரியார் நாட்டிலே கொள்கைப் பிரச்சாரம்


சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் கலைஞருக்கு வரும்
பெருமையைத் தடுக்க, ராமனை அழைத்தது அ.தி.மு.க, பா.ஜ.க.
ஒரத்தநாட்டில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறிவிட்டால் கலைஞர் அரசுக்கு, காங்கிரஸ் அரசுக்குப் பெருமை ஏற்பட்டு விடுமே என்று பா.ஜ.க., அதி.மு.க எதிர்க்கிறது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஒரத்தநாட்டில் 30.5.2010 அன்று நடைபெற்ற தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பெரியார் நாட்டிலே கொள்கைப் பிரச்சாரம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே திராவிடர் கழகத்தின் சார்பில் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை ஒரத்தநாட்டிலே பெரியார் நாட்டிலே இங்கே இன்றைக்கு காலை முதற்கொண்டு தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல இதுவரையிலே அடர்த்தியான கொள்கைப் பிரச்சார மழை இந்த பெரியார் நாட்டிலே தொடர்ந்து பெய்யக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பை நம்முடைய தோழர்கள் மிக அருமையாக எடுத்துக்காட்டாக செய்து காட்டியிருக்கின்றார்கள்.

எல்லாம் கொள்கை மயம் என்று சொல்லக்கூடிய அளவிலே எல்லாவற்றுக்கும் துணிந்த நம்முடைய இளைஞர்கள் மிகத் தெளிவான இராணுவ கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன என்று சொல்லுவதைவிட, பெயர் உள்ள இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால் முதலில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய இடம் பெரியார் நாடு ஆகிய ஒரத்தநாடு பகுதிதான் என்ற பெருமைக்குரிய பகுதியிலே இந்த மண்ணிலே நின்று உங்களை எல்லாம் சந்திப்பதிலே மூடநம்பிக்கை ஒழிப்புநிகழ்ச்சியிலே நீங்கள் எப்படி எல்லாம் கணித்திருக்கிறீர்களோ அது போல அந்த மகிழ்ச்சியிலே நானும் பங்கு கொள்வதிலே பெரிய வாய்ப்பு என்று கருதுகின்றேன்.

பழைய தோழர்களை நினைத்துப் பார்த்தேன்

அருமை நண்பர்களே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். இந்த ஊரிலே இளைஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆனால் பழைய தோழர்களான ஆர்.பி.சாமி போன்றவர்கள் வை.குப்புசாமி போன்றவர்கள் இன்னும் பல நண்பர்கள் பழைய தோழர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கின்றோம்.

இங்கே வரும் பொழுதெல்லாம் நான் அசைபோட்டுக்கொண்டு வந்தேன். இந்த ஒரத்தநாடு பகுதி பெரியார் நாடு என்றழைக்கப்படக்கூடிய தலைசிறந்த பகுதியாக இருக்கிறது.

விடுதலை நுழையாத கிராமமே இல்லை. பிரச்சாரம் நுழையாத ஊராட்சிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிலே மகிழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் இதற்கு அடித்தளமிட்ட நண்பர்களை வேர்களாகப் புதைந்திருந்து விழுதுகளாக உங்களை எல்லாம் ஆளாக்கிக் கொண்டு வந்திருப்பதற்கு உழைத்த நம்முடைய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு நாம் அனைவரும் முதற்கண் வீரவணக்கத்தை செலுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

ஆசிரியர் மதிவாணன் அந்த வகையிலே தோழர் மதிவாணன் அவர்கள். அவர் ஒரு ஆசிரியர். பல நண்பர்களுக்கு முதியோர்களுக்கு இங்கே தெரியும். ஒரத்தநாடு நண்பர் மதிவாணன் அவர்கள் தந்தை பெரியாருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக இருந்தவர். அது போல நண்பர் சீதா அவர்கள். அவர் ஒரு விபத்திலே அகால மரணமடையக்கூடிய ஒரு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு இயக்கத்திற்கே பலம் குன்றியது என்று சொல்லும் அளவுக்கு கம்பீரமானவர்.

எப்பொழுதும் மோட்டார் சைக்கிளிலேயே பயணம் செய்து மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள். இலங்கையிலே ஈழத்திலே நீண்ட நாள் இருந்து பிறகு இங்கே வந்து தன்னுடைய பணியை செய்த அருமையான கழகப் பொறுப்பாளர்களிலே ஒருவர் தோழர் ஆறுமுகம் அவர்கள் ஆவார்கள்.

ஆறுமுகம் அவர்கள் பல்வேறு உடல் சங்கடத்திற்கு ஆளாகியிருந்தாலும்கூட அவர் ஆஸ்துமா நோயினாலே தொல்லைப்பட்டவர். ஆனாலும் கூட நல்ல தெளிவானவர். தந்தை பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று இந்த வட்டாரத்திலே கழகம் இயங்குவதற்கு மிகத் தெளிவாகப் பணிபுரிந்த ஒருவர்.

அது போலவே நம்முடைய டாக்டர் முருகேசன். அதுபோலவே இன்னொரு வைத்தியர் முருகேசன். அவர்களும் மிகச்சிறப்பாக இருக்கக் கூடியவர்கள். நைனா முகம்மது அண்மைக் காலம் வரையிலே நம்மோடு இருந்து நமக்கு அறிமுகமானவர். இப்படி ஒரு பெரிய பட்டியலையே நான் நினைத்துக் கொண்டு வந்தேன்.

கைலாசமுத்து-இராமச்சந்திரன்

இந்த இடத்தை தந்தை பெரியார் அவர்களுடைய அறக்கட்டளைக்கு இடம் வாங்கிக்கொடுக்க சர்வே முதற்கொண்டு முயற்சி செய்தவர். நம்முடைய முகிலனுடைய தந்தையார் கைலாச முத்து ஆவார்கள். பெரியார் மய்யத்திறப்பு விழாவிற்குச் சென்றபொழுது அந்த பேருந்திலே அவரும், நம்முடைய குணசேகரன் அவர்களுடைய அருமைத் தந்தையார் இராமச் சந்திரன் அவர்களும், அதுபோலவே அவருடைய தாயார் அவர்களும் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாகி நம்முடைய பேபி ரெங்கசாமி அவர்கள் நல்ல வாய்ப்பாக அந்த பெரும் விபத்திலிருந்து தப்பித்து பல மாதங்கள் மருத்துவமனையிலே இருக்கக் கூடிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இப்படி எல்லாம் அவர்கள் உழைத்த உழைப்புதான் இன்றைக்கு இவ்வளவு அற்புதமான ஒரு விளைச்சலை ஒரத்தநாட்டிலே பெரியார் நாட்டிலே கொள்கை விளைச்சலைப் பார்க்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

நினைவைப் போற்றி....

முதற்கண் அவர்களுடைய நினைவைப் போற்றுகின்றோம். அவர்களுடைய தொண்டுக்கெல்லாம் பாராட்டுத் தெரிவித்து என்னுடைய உரையைத் தொடங்குகிறேன். நிறைய தீர்மானங்கள் அதாவது 15 தீர்மானங்கள் அற்புதமான தீர்மானங்களாக இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சேது சமுத்திர கால்வாய் திட்டம் ஒரத்தநாடு திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்திலே ஒரு வரலாற்றுப் பதிவு அதற்குள்ளாகவே ஊடகங்களுக்கு வந்துவிட்டது. அந்தப் பெருமையை ஒரத்தநாடு இன்றைக்குப் பெற்றிருக்கின்றது. அதற்கு அடிப்படையான தீர்மானம் எதுஎன்றால், அதுதான் நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் விளக்கினார்களே சேது சமுத்திர கால்வாய் திட்டம்.

தேவையின்றி அது காலதாமதம் செய்யப்படுகிறது. திட்டமிட்டே துவக்கப்படுத்தப்படுகிறது. அதற்கு என்ன வழி என்று சொன்னால் நேரடியாக அதை செய்யாமல் மாறாக எப்படியாவது அதைத் தடுக்க வேண்டும். அதை கிடப்பிலே போட வேண்டும் என்பதற்காக இடையிலே இருக்கக் கூடியவர்கள் நீதிமன்றத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பி.ஜே.பி ஆட்சியில்....

மத்தியில் பி.ஜே.பி ஆட்சி செய்த பொழுது சேதுக்கால்வாயில் அய்ந்து வழித்தடங்களை ஆராய்ந்து பார்த்தார்கள் அது சரிவரவில்லை. இந்த வழித்தடங்களை பல்வேறு நிபுணர் குழுவினர் ஆராய்ச்சி செய்தார்கள்.

இந்தப் பணி எப்பொழுது தொடங்கியது என்று சொன்னால் வாஜ்பேயி பிரதமராக இருந்த காரணத்தினாலே தொடர்ந்து நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். பெரியார், அண்ணா, காங்கிரஸ் நண்பர்கள் எல்லாம் வலியுறுத்தி இங்கே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்தால் இன்றைக்கு நமது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, தமிழகமே வளம் கொழிக்கக் கூடிய பகுதியாக ஆகிவிடும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வரும் என்பதை எல்லாம் தெளிவாகப் புரிந்துதான் வலியுறுத்தினோம்.

அதை அரசியல் ரீதியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்ற திட்டத்தை அவர்கள் அறிவித்தார்கள். அறிவித்து அதற்கான முயற்சி செய்தது எல்லாம் அவர்களுடைய காலம்.

பல வகையில் ஆராய்ந்தார்கள்

சேது சமுத்திர கால்வாய் எந்த இடத்திலே அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக முயற்சி எடுத்தார்கள்.

சுற்றுச்சூழல் சரியாக இருக்க வேண்டும். சர்வதேச அனுமதி கிடைக்க வேண்டும். மீன்வளம், பவளப் பாறைகள், இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி பல்வேறு செய்திகளை வைத்து ஆராய்ந்து ஒவ்வொரு தடமும் சரியில்லை, சரியில்லை என்ற ஒதுக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப...

கடைசியாக மிக அருமையான ஆறாவது வழித்தடம் என்று சொல்லக் கூடிய அந்த வழித்தடத்தை எடுத்து நிபுணர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்கள் எல்லோருமே அதை ஆய்வு செய்த பிற்பாடுதான் பணி தொடங்கப்பட்டது.

பாரதீய ஜனதா ஆட்சி முடிந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலே, சோனியாகாந்தி அம்மையாருடைய வழிகாட்டுதலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற ஆட்சியின் காரணமாக சாதனையாக சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி முடிப்போம் என்று தேர்தலிலே கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய வகையிலே 2005_லே மதுரையிலே இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

குறிப்பாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட குறிப்பாக கலைஞர் அவர்கள் இந்தத் திட்டத்தைக் கேட்டுப் பெற்றார்கள்.

கப்பல் துறையைக் கேட்டுப் பெற்றார் கலைஞர்

சேது சமுத்திர கால்வாய் திட்டம் எப்படியும் நம்முடைய காலத்திலே முடிவடைய வேண்டுமானால் நம்முடைய அமைச்சர் இருந்தால் இன்னும் வேகமாக அதனை வற்புறுத்த முடியும் என்ற உணர்வோடு கேட்டுப் பெற்று டி.ஆர்.பாலு அவர்களின் மிகக் கடுமையான உழைப்பின் பெயரில் வேகமாக பணியாற்றினார்கள். 2400 கோடித் திட்டம். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல. இந்த ரூபாய்களை செலவழித்து வேகமாகப் பணிகளை முடுக்கிவிட்டு, கடைசியிலே முடிய வேண்டிய ஒரு பகுதி வெறும் 12 கி.மீ.தான் மீதி எல்லா பணிகளும் முடிந்துவிட்டன. இன்னும் சில மாதங்களிலே கப்பல் ஓட இருக்கிறது என்று அறிவித்தார்கள்.

எதிர்க்கட்சியினருக்கு என்ன நோக்கம்?

உடனே மய்யமாக இங்கேயிருக்கிற எதிர்க் கட்சிக்காரர்களுக்கு என்ன நோக்கம்? அப்படியானால் இதை அவர்கள் செய்து முடித்துவிட்டால் இவர்கள் அல்லவா அந்த பெருமைக்குரியவர்கள் ஆகி விடுவார்கள்.

இதைக்காட்டி அல்லவா திமுகவும் காங்கிரசும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆகவே இதை செய்யவிடக்கூடாது என்று அரசியல் கண்ணோட்டத்தின் காரணமாக அ.தி.மு.கவினுடைய பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே ஒரு முறை அல்ல. இரண்டு முறை வலியுறுத்திய வர்கள்.

இரண்டு தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியவர் ஜெயலலிதா

சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலே வலியுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை யிலே வலியுறுத்தினார். சேது சமுத்திர கால்வாய் திட்டம் என்பது அண்ணா அவர்களுடைய கனவுத்திட்டம். எம்.ஜி.ஆர். வலியுறுத்திய திட்டம். கலைஞர் வலியுறுத்திய திட்டம். ஆனால் அதே ஜெயலலிதா அம்மையார் இப்பொழுது அப்படியே தலைகுப்புற பல்டி அடித்து நேர் எதிரிடையாக முற்றிலுமே திரும்பி சேது சமுத்திர கால்வாய் திட்டமே கூடாது என்று சொல்லக் கூடிய அளவிலே வந்துவிட்டார்கள்.

ராமன் பாலத்தை இடிப்பதா?-இப்படி ஒரு புரளி

பாரதீய ஜனதா கட்சிக்காரர்கள் கூட கொஞ்சம் அரசியல் தெரிந்திருக்கிற காரணத்தினாலே பெரியார் பிறந்த பூமியில் எப்படியும் காலூன்ற முடியவில்லையே என்று கருதிய காரணத்தாலே சேது சமுத்திர திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக ராமர் பாலத்தை இடிப்பதா? என்று ஆரம்பித்து வேறு வழித்தடத்தை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று இல்லாத ஊருக்குப் போகாத பாதையை புரியாத மனிதரிடம் தெரியாத பாஷையில் பேசுவதைப் போல இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அதே நேரத்திலே அவர்கள் சொல்லுகிறார்கள். நாங்கள் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரிகள் அல்லர் என்று சொல்லு கின்றார்கள்.

கலைஞர் பெருந்தன்மையாக சொன்னார்

இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கலைஞர் போன்றவர்கள் செய்கிறார்கள் என்பது தெரிந்தது. சகோதரர் வைகோ போன்றவர்கள் நானல்லவா இந்த திட்டத்திற்கு பாத்யதை உடையவன். எனவே இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர். கலைஞர் அவர்களிடம் கேட்டபொழுது கூட ரொம்ப பெருந்தன்மையாகச் சொன்னார். யாரால் இந்தத்திட்டம் வந்தது என்பது முக்கியமல்ல. இந்தத்திட்டம் முடிய வேண்டும். அதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. அதைத்தான் நான் சொல்லுகிறேன் என்று கலைஞர் அவர்கள் பெருந்தன்மையாகச் சொன்னார்கள்.

இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை தடுப்பதற்காக ஒரு அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி எங்கேயும், யாரையும் பிளாக்மெயில் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு ஆசாமி. நான் ஒரு பொது நல வழக்குப் போடுகிறேன். இது ராமர் பாலம் உடைக்கக் கூடாது என்று இல்லாத பாலத்தை இவர்கள் சொன்னார்கள். இடிக்கக் கூடாது என்று அதற்கு ஒரு தடையை உண்டாக்கக் கூடிய சூழலை உருவாக்கினார்கள்.

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்...

அப்பொழுது தடை ஆணை கொடுக்கவில்லை. ஆனால் நீதிபதிகள் என்ன சொன்னார்கள்? ராமன் என்ற ஒருவனே கிடையாது. அது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப் படக்கூடியதல்ல. ராமாயணம் நடந்த கதை அல்ல. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே என்று சொல்லகின்றீர்களே அத்துணை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே முதலில் மனிதன் இருந்தானா? பொறியியல் துறை இருந்ததா? என்ற கேள்வியை எல்லாம் கேட்டால் அதற்கு அவர் பதில் சொல்லுவதற்குத் தயாராக இல்லை. ஆனாலும் நம்பிக்கை. நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லுகிறார்கள்.

(தொடரும்)-------------"விடுதலை” 11-6-2010


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு விரைவு மனு போடவேண்டும்
ஒரத்தநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு விரைவு மனு போட்டு உடனடியாக நிறைவேற்றிட முயற்சிக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஒரத்தநாட்டில் 30.5.2010 அன்று நடைபெற்ற தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கட்டப் பஞ்சாயத்து......!

நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன அர்த்தம்? யார் வீட்டை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம். இது பற்றி கேட்டால் தாத்தா என்னுடைய கனவிலே வந்தார். இந்த வீடு நம்முடையதுதான் என்று சொன்னார்.

ஆகவே இந்த வீட்டில் இருப்பவர்கள் வெளியே போய்விடுங்கள். அது எங்களுக்குத்தான் சொந்தமானது என்று சொன்னால் எப்படி அது நியாயம்? அதற்குப் பெயர்தான் கட்டப் பஞ்சாயத்து என்று பெயர்.

அது மாதிரி மற்றவர்கள் சொன்னால் என்ன ஆகும்? நீதிபதிகள் என்ன செய்திருக்க வேண்டும்? இதை எடுத்த எடுப்பிலேயே அனுமதிக்காமல் தள்ளியிருக்க வேண்டும். ஏனென்றால் இது மத நம்பிக்கையைப் பொருத்தது என்று சொல்லுகிறார்கள்.

மத நம்பிக்கை எப்படி குறுக்கே வரமுடியும்? ஒரு நல்ல வளர்ச்சித் திட்டத்திற்கு ஆகவேதான் இந்த சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் தேர்வு செய்யப்பட்ட திட்டம்.

பி.ஜே.பி.ஆட்சியில் கைழுத்திட்ட திட்டம்

அதுவும் பி.ஜே.பி யினாலே தேர்வு செய்யப்பட்டதிட்டம். நம்முடைய முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அவர்கள் சில காலம் பி.ஜே.பி அமைச்சராக இருந்தார். இப்பொழுது அவர் காங்கிரசில் இருக்கிறார். நம்முடைய அறந்தாங்கியைச் சார்ந்த திருநாவுக்கரசர் அவர்கள். அவர் இந்தத் திட்டம் நிறைவேற கையெழுத்துப் போட்டி ருக்கின்றார்.

உமாபாரதி கையெழுத்துப் போட்டிருக்கின்றார். அருண்ஜேட்லி கையெழுத்துப் போட்டிருக்கின்றார். இவர்கள் எல்லாம் அந்த கோப்பிலே கையெழுத்துப் போட்டபிறகுதான் சேது சமுத்திர திட்டத்திற்காக ஆறாவது வழித்தடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்ததை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு தேர்தலிலே இதுதான் சாக்கு என்று சொல்லி நீதிமன்ற வாய்ப்பை மத்திய அரசே பயன்படுத்திக்கொண்டு நடக்காமல் நிறுத்தி வைத்தார்கள். அதுவும் இவர்களாக நிறுத்தி வைத்தார்கள். பிறகு அதை அப்படியே கிடப்பிலே போட்டால் என்ன அர்த்தம்?

2400 கோடி ரூபாய் திட்டம்

நம்முடைய பணம் 2400 கோடி ரூபாய் சேது சமுத்திர திட்டம் முடியக்கூடிய நிலையிலே வீணாகப் போகிறதா? வேறு ஒரு நாடாக இருந்தால் மக்கள் வரிப்பணத்தைப் பார்த்து, அரசாங்கத்தினுடைய நிலையைப் பார்த்து பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் நீதிமன்றத்தைக் காரணமாகக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து போராடி வந்திருக்கிறோம். நாடு முழுக்க திராவிடர் கழகம் இந்தத்திட்டத்தை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தது.

மத்திய அரசுக்கு அழுத்தம் தர...

மத்திய அரசுக்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத் திற்காகத்தான் நண்பர்களே ( 5.6.2010 ரயில் மறியல்) ரயில் மறியல் என்ற அறப்போராட்டத்தை நடத்த இருக்கின்றோம். மத்திய அரசினுடைய கவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக நடத்துகின்றோம்.

தொடர் போராட்டமாக ஆகக்கூடாது

ஒத்த கருத்துள்ள அத்துணை பேரும் வரலாம். எங்களுக்கு மற்றவர்களைப் போல குண்டு வைக்க வேண்டும். வன்முறையிலே இறங்க வேண்டும் என்கிற எண்ணம் கிடையாது. எங்களுக்கு மத்திய அரசாங்கத்தினுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ரயில் மறியல் போராட்டத்தை முதற்கட்டமாக நடத்துகின்றோம்.

இது ஒரு தொடர் போராட்டமாக பல்வேறு நிலைகளிலே ஆகக் கூடாது என்று நாங்கள் கருதுகின்றோம். இது மத்திய அரசின் கைகளிலே இருக்கிறது. தமிழர்களுடைய உணர்வுகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசிலே பங்கேற்கக் கூடிய ஓர் ஆட்சி. இப்படி ஒரு தெளிவான நீண்ட காலமாக முடிக்கப்பட வேண்டிய ஒரு திட்டம்.

இன்னும் கேட்டால் இதை இந்நேரம் நிறைவேற்றியிருந்தால் கொண்டாடக் கூடிய அளவிற்கு வந்திருக்கும். எப்படியோ மத்தியிலே இருக்கிற காங்கிரஸ் அரசுக்கு உள்ளூர ஒரு பயம்.

மத்திய அரசின் நிலையோ...

வடநாட்டிலே ஒரு வேளை ராமன் புகுந்து விட்டால் என்ன செய்வதென்பது? தமிழ் நாட்டிலே ராமன் பெயரைச் சொல்லி வெற்றி பெற முடியாது என்பது 1971லே ராமனை செருப்பால் அடித்த பிற்பாடுதான் திராவிட முன்னேற்றக் கழகம் பெரு வெற்றி பெற்றது.

184 இடங்களில் திமுக வெற்றி

ஒரு இடம் அல்ல; 138 இடங்களில் வென்ற திமுக 184 இடங்களில் வெற்றி பெற்றது என்பது தமிழ்நாட்டினுடைய வரலாறு. ஆகா! திமுக போயிற்று போயிற்று என்று சொன்னார்கள்.

ஏன் இதைச் சொல்லுகிறோம்? தமிழ்நாட்டிலே அச்சப்படவில்லை. ஆனால் என்னவோ வடநாட்டிலே ராமனுக்குப் பெரிய மரியாதை இருக்கின்றது என்று நினைத்த காரணத்தால் ஓர் அச்சம். அரசியல் வாதிகளுக்கு எப்பொழுதுமே. ஓட்டு பயம் உண்டு. அச்சம் காரணமாக அவர்கள் தயங்கியிருக்கலாம்.

உச்சநீதிமன்றத்தில் விரைவு மனு சரி, அப்படியே போய்விட்டது. இப்போதாவது உச்சநீதிமனறத்திலே விரைவுமனு கொடுத்து உடனடியாக விசாரித்து உடனே அந்த வேலைகளை முடிக்கச் சொல்ல வேண்டாமா? ஆகவேதான் சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் நடைபெற்றாக வேண்டும் என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

எனவே ஒரத்தநாடு மண் இருக்கிறதே, அது ஒரு போராட்ட உணர்வை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது. நாம் மாநிலம் தழுவிய அளவிலே நடத்துகின்ற போராட்டத்திற்கு நிச்சயமாகப் பலன் இருக்கும்.

திராவிடர் கழக வரலாற்றிலே எந்தப் போராட்டமும் வீண் போனதே இல்லை. நிச்சயமாக வெற்றிப் பலனை அளித்திருக்கிறது. வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதம் ஆகியிருக்கலாமே தவிர, வெற்றியை நாங்கள் பறிக்காமல் விட்டதே இல்லை. அதுதான் வரலாறு.

தமிழகம் வளம் கொழிக்கும்

ஆகவே வெற்றி என்பது எங்களுடைய இயக்கத்திற்கு அல்ல; தமிழர்களுக்கு_தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழர்களுடைய வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு_ அதைப் போக்குவதற்காக, தமிழகம் வளம் கொழிக்கின்ற ஒரு பூமியாக ஆக்கப்படுவதற்காக அதைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு அந்தப் பணியை நாம் செய்கின்றோம்.

முக்கிய தீர்மானம்

இது ஒரு முக்கிய தீர்மானம். அது போலவே அடுத்து நண்பர்களே, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம். எங்கு பார்த்தாலும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றோம். சிலர் நினைக்கிறார்கள் தந்தை பெரியார் காலத்தில் எல்லாம் இப்படி இல்லையே. இப்பொழுது மூடநம்பிக்கைகள் பக்திகள் அதிகமாகிவிட்டதே என்று நினைக்கின்றார்கள்.

பெரியார் காலத்திலே இந்த ஊடகத் தொல்லைகள் இல்லை. எங்கோ ஒரு இடத்தில் அய்யப்பன் கோவிலைக் கட்டினால், அத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால் ஊடகங்கள் என்ன செய்கிறார்கள். அதைத் தொலைக்காட்சி வழியாக நேரடி ஒளிபரப்பு செய்து காட்டுகிறார்கள்.

நல்லதற்கும்-கெட்டதற்கும்

இப்படி நேரடி ஒலி, ஒளிபரப்பு என்பது சில நேரங்களில் நல்லத்திற்கும் பயன்படுகின்றது. கெட்டதற்கும் பயன்படுகின்றது. கிரிக்கெட் ரன்னிங் கமென்ட்ரி கொடுக்கிற மாதிரி கொடுக்கிறார்கள். இப்போதுதான் குருசாமிகள் எல்லாம் ஒன்று சேருகிறார்கள். அய்யப்ப கன்னிசாமிகள் எல்லாம் இந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள், இன்னும் கொஞ்ச நேரத்திலே அய்யப்ப ஜோதி ஏற்றப் கோகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்பொழுதுதான் கடவுள் வீதி உலா புறப்பட்டு விட்டார் என்று சொல்லுகிறார்கள்.

எனவே அறிவியல் கருவியை மூடநம்பிக்கைக்குப் பயன்படுத்துகிறார்கள். என்னதான் மூடநம்பிக்கைகள் என்பது பலூனைப் போல பெரிதானாலும், அதை பகுத்தறிவு என்ற குண்டூசி மூலம் ஒன்றுமில்லாமல் செய்வோம். இதுதான் பெரியார் பெருந் தொண்டர்களின் கடமை.

அஞ்ஞானக் கருத்துகள் விஞ்ஞானக் கருவிகளில்

அஞ்ஞானக் கருத்துகளை விஞ்ஞானக் கருவிகள் மூலமாகப் பரப்பும் முறையை முறியடிப்போம். மக்களை நல்ல சிந்தனை உள்ளவர்களாக, பகுத்தறிவாளர்களாக, மனிதநேயமுள்ளவர்களாக ஆக்கும் பணியைத் தான் திராவிடர் கழகம் தன் தோள்மீது போட்டு செய்து கொண்டிருக்கிற்து.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

----------------------------"விடுதலை” 12-6-2010

4 comments:

Unknown said...

தற்போதைய பெரியார் நாடு எங்கிருக்கிறது? வல்லத்திலா?

தமிழ் ஓவியா said...

உலகத்தில்

Unknown said...

வல்லமும் உலகில் தான் உள்ளது!
(பின் குறிப்பு: தற்போதைய தமிழகம் குஷ்பு நாடு)

Unknown said...

ஐயா,

எங்களுக்கு தனி பெரியார் திராவிட தொண்டை நாடும்,பெரியார் திராவிட குற நாடும் கிடைக்க ஏற்பாடு செய்வீர்களா?கழகம் இதற்கு குரல் கொடுக்குமா?