சாமியார்களின் சல்லாப லீலைகளா? மடமை வளர்க்கும் மூடநம்பிக்கைகளா?
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கழக பட்டிமன்றங்கள்!
சாமியார்களின் மோசடிகளை சல்லாப லீலைகளை தோலூரித்துக்காட்டும் விதமாக கழக இளைஞரணி சார்பில் நாடு தழுவிய பட்டிமன்றங்கள். முக்கிய ஊர்களில் நல்ல அளவில் விளம்பரம் செய்யப்பட்டு சிறப்பான ஏற்பாடுகளுடன் நடந்தேறிய பட்டிமன்றங்கள் மக்களிடையே மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. சாதாரண சாமியார் தொடங்கி சங்கர மட சாமியார்கள்வரை எல்லோருமே காமக்களியாட்டக்காரர்கள்தான். பக்தர்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள்தான் மகளிர்குலத்தின் மாண்பினைக் கெடுக்கும் பித்தர்கள்தான். உண்மையை ஊரறிய உடனிருப்போர் முயற்சித்தால் அவர்களைக் கொல்லவும் தயங்காத கொடியவர்கள்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. வாய்மையே வெல்லும் என்பதற்கொப்ப பொய்வாதம் பேசி தாம்கடவுள் அவதாரம் என்றோர்....... தாங்களே கடவுள் என்றோர்....... தாங்கள் வேறு கடவுள்வேறு அல்ல என்றோர் முகத்திரை கிழிந்து தொங்குவதை பார்க்க முடிகிறது.
அறியாமைக்கு எதிராக அறிவுப் போர் நடத்திவரும் திராவிடர் கழகம், மடமைகளை மாய்த்து மனிதர்களின் மான உணர்வை தட்டி எழுப்பி வரும்திராவிடர் கழகம் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களை_மக்களின் அறிவை உசுப்பிவிடும்உன்னதமானபணியை செய்திடத் தயங்குவதில்லை. எதிர்ப்புகள் கண்டு அஞ்சாமல் பகுத்தறிவுப் பணியை பறைசாற்றி வருகிறது. மக்களை மதவாதிகள் மிரட்டியபோதெல்லாம்மருளவைத்த போதெல்லாம் மக்களுக்கு அரணாக இன்று மனிதத் தொண்டினை பகுத்தறிவு இயக்கம் செய்தே வந்திருக்கிறது. அறிவுலகம் நோக்கி மக்களை அணியமாக்கிட அயராது உழைத்து வரும் திராவிடர் கழகம் தந்தை பெரியார் காலந்தொட்டு இன்றுவரை முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களத்தில் காரியமாற்றியே உள்ளது. குறிப்பாக சாமியார்கள், மடாதிபதிகள், சங்கரமட அதிபதிகள் யாராக இருந்தாலும், அவர்களால் சமுதாயத்துக்கு கேடு வந்தபோதெல்லாம் திராவிடர் க ழகம் அந்த கேட்டிலிருந்து மக்களை பாதுகாத்தே உள்ளது. நாட்டின் உரிமைக்காகவும், இனநல மேம்பாட்டுக்காகவும், தமிழர்தம் வாழ்வுரிமைக்காவும், ஈழத்தமிழர் விடுதலைப் போருக்கு ஆதரவாகவும், மதவெறி மாய்த்து மனிதநேயம் தழைத்திட செய்வதற்காகவும், வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பொருளாதார உரிமைக்காகவும், மொழிகாப்புக்காகவும் பல்வேறு காலகட்டங்களில் பிரச்சார பெரும் பயணங்களை கழகம் நடத்தி உரிமைமீட்பு இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே என்பதை நிரூபித்து உள்ளது. தமது உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலன்காக்கும் மானப் போரில் பரப்புரை பயணத்தில் தமது பங்களிப்பை தந்தவர்தான்தந்து கொண்டிருப்பவர்தான் தந்தை பெரியாரின் அருங்கொடையான தமிழர் தலைவர்.
தமிழர் தலைவரே நடுவராக...
ஒழுக்கக் கேட்டிலும், ஆபாசத்திலும் விஞ்சியது சைவமா? வைணவமா? எனும் தலைப்பில் நாட்டின் பல இடங்களில் கழகத்தின் பட்டிமன்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கி பட்டிமன்றங்கள் என்ற முத்திரையோடு மக்கள் காசுகொடுத்து டிக்கட் வாங்கி வந்து பார்த்தும் கேட்டும் பரவசமடைந்த பரப்புரை நிகழ்ச்சிகள் அவை. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே நடுவராக இருந்து நல்ல தீர்ப்பை வழங்கிய காட்சிகள் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் ஆகும். மறைந்த டாக்டர் தமிழ்க்குடி மகன் எத்தனை பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்திருப்பார். பேராசிரியர் அ.இறையன் எந்த அளவு லாவகமாக காமச்சுவையை மக்களுக்கு காட்சிப்படுத்திருப்பார். இன்றைய அமைச்சர் அன்றைய கழகத்தின் பேச்சாளர் டாக்டர் க.பொன்முடி, டாக்டர் சபாபதிமோகன், மறைந்தும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கக் கூடிய துரை.சக்ரவர்த்தி இப்படி எத்தனையோபேர்கள் அறியாமை அகற்றி அறிவுலகம் நோக்கி மக்களை அணிதிரட்ட தங்கள் சொற்பெருக்காற்றலை பயன்படுத்தி இருப்பர். திராவிடர் கழகத்தின் மலையளவு பணிகள் மடையை மாய்த்து மன்பதையை காத்திடும் பெரும்பணியை அல்லவோ சாதித்துள்ளன.
ராமாயணத்துக்கும், மகாபாரதத்துக்கும் இந்திய அரசே ஆலவட்டம் சுற்றி ஆர்ப்பரித்த சூழலில், தொலைக்காட்சி எனும் வெகுமக்கள் தொடர்பு சாதனம் பாரத ராமாயண பரப்புரைத் தளமாக ஆக்கப்பட்ட நிலையில் மக்கள் மன்றத்தை நேரிடையாக சந்தித்தது திராவிடர் கழகம். ராமாயண மகாபாரத ஆபாசங்களை, ஒழுக்கக் கேடுகளை, கொலை பாதகச் செயல்களை, மோசடிகளை தோலுரித்துக்காட்டிட ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கருப்பொருளாக்கி கழகம் நடத்திய பட்டிமன்றங்கள் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மெட்டல் டிடக்டர் சோதனை கருவியை காவல்துறையினர் பயன்படுத்திட வேண்டிய கட்டாயம் அன்றைக்கு ஏற்பட்டது. டிக்கட் கிடைக்காமல் மக்கள் திரும்பிய காட்சிகள் அன்றைக்கு! அது போலவே சாயிபாபாவை, பிரேமானந்தாவை, சங்கராச்சாரியை தோலுரித்துக்காட்டிய கழகத்தின் பட்டிமன்றங்கள் பகுத்தறிவு பிரளயத்தையே நாட்டில் ஏற்படுத்தின என்றால் மிகையல்ல. புராண இதிகாச வேதப் புரட்டுகள், கழகம் நடத்திய பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், சுழலும் சொற்போர்கள் மூலம் அம்பலத்துக்கு வந்தன. அவற்றின் கேடுபாடான அழிச்சாட்டியங்களை மக்கள் உணர்ந்தனர்.
கடவுள் மறுப்பு கருத்துகளை மக்கள் காசு கொடுத்து டிக்கட் வாங்கி கேட்டனர் என்றால் தந்தை பெரியாரும், தமிழர் தலைவரும் உழைத்திட்ட உழைப்பின் விளைவுதானே காரணம். ஒரு பக்கம் பிரச்சாரம் இன்னொருபுறம் போராட்டம் என மக்களுக்கான உரிமைக்களுக்காக ஓயாது உழைத்துவரும் திராவிடர் கழகம் அண்மையில் நித்தியானந்தா முகத்திரை கிழ்ந்து தொங்கிய...... தேவநாதன் என்ற அர்ச்சகன் கர்ப்பகிரத்தையே காமக் களியாட்ட கூடாரமாக காட்சிப்படுத்திய..... அபின் போன்ற மயக்கந்தரும் போதைப் பொருளை பிரசாதமாக பக்தைகளுக்கு வழங்கிய கல்கிபகவான்! அருளாசி வழங்கிய... பக்தி எனும் பகல் வேஷம் வெளிச்சத்துக்கு வந்த சூழலில், எந்த ஊடகங்கள் எல்லாம் பகவான்களை கடவுளின் மறு அவதாரமாக காட்சிப்படுத்தினவோ.... அவைகளே அவர்களின் காமக்களியாட்டங்களை அம்பலப்படுத்துவதில் போட்டி போட்டுக்கொண்டன.
மதம் என்ற போர்வையில்.... கடவுள் எனும் பாதுகாப்பு வளையத்தில்....
மூடநம்பிக்கை எனும் நஞ்சினை விதைத்து விவரம் அறியா அப்பாவி மக்களையும், மெத்தப்படித்த மேதாவிகளையும் தங்கள் காமப்பசிக்கும், மோசடி வாழ்வுக்கும் பயன்படுத்திக்கொண்டார்கள் சாமியார்கள். சாமியார்கள் என்றாலே போலிகள்-தான் என்பதை அறியாத மக்கள் அவர்களின் மயக்குமொழிக்கு ஏமாந்தார்கள். ஏமாந்த மக்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களாக காமப் பித்தர்களாக வலம் வந்தனர் சாமி எனும் காமிகள். ஒரு சாமியார் அம்பலத்துக்கு வந்தால் அடுத்த சாமியாரிடம் ஆட்பட்ட கொடுமையை என்னென்பது? புற்றீசல் போல புறப்பட்டு வந்த போலிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் பணியில் திராவிடர் கழகம் முனைப்போடு!
கடவுள்களில் பெருங்கடவுள் சிறுதெய்வம் என பிரித்துப் பார்ப்பதைப் போல சாமியார்களில் பெரிய சாமியார்கள் சிறிய சாமியார்கள் என்று வகைப்படுத்தினால் கூட தவறில்லை. சங்கராச்சாரி, பிரேமானந்தா போன்றோர் காம இச்சையோடு, கொலைவெறியும் கொண்டவர்களாக..... நித்யானந்தா, கல்கி, சதுர்வேதி, சிவங்கர் பாபா போன்றோர் காமக்களியாட்டத்தோடு ஆத்ம திருப்தி அடைந்தனர். இவர்கள் போன்றோர் பெரும் சாமியார்கள்.
கட்டிப்பிடி சாமியார், பீடி சாமியார், பீர் சாமியார், நிர்வாண சாமியார், மண்டை ஓட்டுச் சாமியார், குருதி குடிக்கும் சாமியார், கெட்ட வார்தை சாமியார், சிகரெட் சாமியார் இப்படியாய் லோக்கல் சாமியார்கள் ஊருக்கு ஊர்... மாவட்டத்துக்கு மாவட்டம். ஆசை வெட்கமறியாது என்பதற்கொப்ப சாமியார்கள்_சாமியாரிணிகள் காலடியில் பக்தர்கள். பக்தி வந்தால் புத்தி புறப்பட்டு போய்விடும் போலும்! சாமியார்களிடம் பக்தர்கள் இழந்தது பொருள்பணம் மட்டுமல்ல. மானம் மரியாதைகவுரவம் அவ்வளவையும்தான்!
இதையெல்லாம் குத்திக்காட்டி_ இடித்துரைத்து மக்களை சிந்தித்து செயல்படச் செய்ய திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதி யார்? எந்த அமைப்பு உள்ளது? எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வரும் தொண்டற இயக்கமாம் திராவிடர் கழகமே இப்போதும் களத்தில்! ஆம்! தமிழர் தலைவரின் ஆணையை ஏற்று திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாடு தழுவிய அளவில் பட்டிமன்றங்கள். மாலைநேர கல்லூரியாக மக்களுக்கு அறிவுக் கருத்துகளை உணர்வுபூர்வமாக எடுத்து வைத்து வேத, மத வீணர்களின் வீண் வாதத்தை தவிடு பொடியாக்கி அர்ச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், பீடாதிபதிகளின் முகத்திரையை கிழித்து அம்பல-மாக்கி நாசகாலர்களின் நயவஞ்சகத்தை தோலுரித்துசல்லாப லீலைகளை வெட்ட வெளிச்சமாக்கி பகுத்தறிவு எனும் ஒளி வீச்சை மக்கள் நெஞ்சில் பாய்ச்சி இருக்கின்றன. கழகத்தின் பட்டிமன்றங்கள்! பகுத்தறிவு மன்றங்களாக பட்டிமன்றங்கள் தொடர்கின்றன. மயிலாடுதுறையில் தொடங்கி குத்தாலம், சீர்காழி, வடகுத்து_இந்திரா நகர், குடவாசல், பொதட்டூர்பேட்டை, அரக்கோணம், தஞ்சாவூர், தென்சென்னை, திருவான்மியூர், தாம்பரம், வடசென்னை, மங்கலம்பேட்டை, சிதம்பரம், நெய்வேலி டவுன்ஷிப், செந்துறை, தாராபுரம், பழனி, லால்குடி, கம்பம், திருச்சி, பேராவூரணி, மத்தூர், தருமபுரி, சேலம், எடப்பாடி, திருக்கோவிலூர் என தொடர்கிறது.
பரபரப்பூட்டும் பட்டிமன்றங்கள் கழகத்தோழர்களால் நல்ல அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் அளவிலான மக்கள் கேட்டு பயன்பெறும் வண்ணம் நடத்தப்பட்டு வருகின்றன. நடுநிலை யாளர்கள் கழகத்தின் சீரிய முயற்சியை பாராட்டு கின்றனர். ஏன் காவல்துறையினரே கூட கழகத்தின் பட்டிமன்றத்துக்கு கிடைத்த மக்கள் ஆதரவை பார்த்து வியந்தனர். கடவுள், மதம், திரைப்படம், சின்னத்திரை, பத்திரிகைகள், சாமியார்கள் என சகலமும் மக்கள் நலனுக்கு விரோதமாக மடமையில் ஆழ்த்திடும் போக்கினை சுட்டிக்காட்டி எச்சரிக்கை உணர்-வோடும், விழிப்புணர்ச்சியோடும் மக்கள் வாழும் வகை எடுத்துரைக்கப்பட்டது. இயக்க பேச்சாளர்-களால்! சமுதாயச் சீரழிவிலிருந்து விடியலை நோக்கி அழைப்பு விடுக்கும் கருவிகளாக தொடர்பு சாதனங்கள் பயன்பட வேண்டும் என்று கேட்டுக்-கொள்ளப்பட்டது.
கழகத்தின் பொதுச்செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், கழக சொற்பொழிவாளர் அதிரடி க.அன்பழகன், இரா.பெரியார்செல்வன் ஆகியோர் நடுவர்களாக இருந்து பட்டிமன்றங்களை நடத்தித் தந்தனர். நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசக்கூடிய இயக்கத்தின் பேச்சாளர்களான இராம.அன்பழகன், கவிஞர் சிங்காரவேலு, யாழ்திலீபன், மாங்காடு மணியரசன், முத்து.கதிரவன், செ.வை.ர.சிகாமணி, தமிழ்சாக்ரடீஸ், புலவர் சு.இராவணன், பூவை.புலிகேசி, காஞ்சி கதிரவன், புலவர் வை.இளவரசன், என்னாரெசு பிராட்லா, அண்ணா.சரவணன், ஊமை.ஜெயராமன், சில்லத்தூர் சிற்றரசு, நெல்லை முத்தமிழ், வேங்கைமாறன், ஆகியோர் பட்டிமன்ற பேச்சாளர்களாக பங்கேற்று வாதப்பிரதிவாதங்களை சிறப்பாக கேட்போர்தமை பிணிக்கும் தன்மையில் எடுத்துரைத்தனர். ஏற்றுக்கொண்ட பொறுப்பினை உணர்ந்து ஏராளமான தகவல்களை ஆதாரப்பூர்வமாக தங்கள் அணியின் தலைப்புக்கான கருத்துகளை எடுத்தும்தொடுத்தும் பேசியவிதம் பாராட்டுக்குரியது.
மக்களின் மகத்தான ஆதரவு.....
பட்டிமன்றங்கள் நடைபெற்ற இடங்களில் போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் தந்திட்ட மகத்தான ஆதரவு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும். சாமியார்களின் வண்டவாளங்கள் விவரிக்கப்பட்டபொழுது தங்கள் கைதட்டல் மூலம் மக்கள் தெரிவித்த ஆதரவு மறக்க முடியாதது; தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு எந்த அளவு வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. அடுத்து இனத்தைக் காட்டிக் கொடுத்த கம்பனின் ராமாயணம் பற்றிய கருத்தரங்கம் அறிவுக்கு விருந்தாக இனஉணர்வு பிழம்பாக கழகத்தால் முன்னெடுக்கப்பட உள்ளது. தயாராவீர்!
துரை. சந்திரசேகரன்
துணைப் பொதுச்செயலாளர்
திராவிடர் கழகம் -"விடுதலை” 21-6-2010
0 comments:
Post a Comment