Search This Blog

11.6.10

பதிவுத் திருமணம் பற்றி பெரியாரின் தொலைநோக்கு


திருமணமும்- பதிவும்

திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 12 அன்று ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அரசின் அனைத்துச் சலுகைகளையும் பெறுவதற்கு இது அவசியம் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டும் இருந்தது.

இதனையொட்டி 2009 நவம்பர் 14 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டில் அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்படவேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

திருமணப் பதிவு என்பது ஓர் அடிப்படை ஆவணமாகும். பாஸ்போர்ட், வழக்குகள், சொத்துரிமை, வாரிசுரிமை, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தேவைப்படும் அதிகாரப்பூர்வமான ஆவணம் இது.

திருமணம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் 90 நாள்களுக்குள் ரூபாய் நூறு செலுத்தி பதிவு செய்துகொள்ளவேண்டும் என்பது ஆணையின் நிலைப்பாடு.

இதன்படி பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சட்டத்தில் இடம் உண்டு.

ஆனால் நடைமுறையில் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

போதுமான அளவுக்கு மக்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. எடுத்துக்காட்டாக இந்த ஆணைக்குப் பின் தருமபுரி மாவட்டத்தில் நடந்துள்ள திருமணங்கள் 949. ஆனாலும் பதிவு செய்யப்பட்டவை வெறும் 197 மட்டுமே.

இதற்குக் காரணம் என்ன? இந்தச் சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் ஏற்படவில்லை. இது கட்டாயமானது என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு அரசு சார்பில் பிரச்சாரம் நடைபெறவேண்டும்.

ஏடுகளில் விளம்பரங்கள் வாயிலாகவோ, தொலைக்காட்சிகள் வாயிலாகவோ அரசு விளம்பரம் செய்ய வேண்டும். தொடக்கத்தில் தயக்கம் இருந்தாலும், மக்கள் மத்தியில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தானாகவே வந்துவிடும்.

திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவோர் திருமணப் பதிவு செய்யும் படிவங்களை அளித்து, பதிவு செய்திடும் முறைபற்றி விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யலாம்.

எந்தெந்த இடங்களில் உள்ள அலுவலகங்களில் எல்லாம் திருமணப் பதிவு செய்து கொள்ளலாம் என்பதுபற்றி சாதாரண பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தவேண்டும். குறிப்பாக திருமண மண்டபங்களில் அத்தகு விளம்பரங்களைச் செய்யவேண்டும்.

பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்துவது முக்கியமாகும். கோயிலில் உள்ள உதவி ஆணையாளர் உள்பட மேலும் பல அலுவலர்களுக்குத் திருமணத்தைப் பதிவு செய்யும் அதிகாரத்தை அளிக்கலாம்.

சுயமரியாதைத் திருமணம் உள்பட எல்லா மதத் திருமணங்களையும் பதிவு செய்யவேண்டியது கட்டாயமாகும். அதன் மூலம்தான் அனைத்துத் திருமணங்களும் அரசு ஆவணத்துக்குள் வந்து சேரும். இதில் தேவையில்லாமல் மதத்தைக் கொண்டு வந்து குழப்பத் தேவையில்லை.

29.5.1945 அன்று திருச்சிராப்பள்ளி புத்தூர் மைதானத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற 17 ஆவது திராவிடர் கழக மாகாண மாநாட்டின் 6 ஆவது தீர்மானம் வருமாறு:

‘‘திருமணப் பதிவுச் சட்ட அதிகாரம் தற்போது ஜில்லா மாஜிஸ்டிரேட்டுகளின் அதிகாரத்தில் இருப்பதால், பதிவுத் திருமணம் செய்ய விரும்பும் ஜனங்களுக்கு உதவியாக மேற்படி அதிகாரத்தை ஒவ்வொரு தாலுகாவிற்கும், ஆங்காங்குள்ள உத்தியோகப் பற்றற்ற யாராவது தக்கார் ஒருவருக்கு அளிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.’’

65 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும் என்ற கருத்தில், அதைப் பதிவு செய்ய எளிமையான நடைமுறைகள் இருக்கவேண்டும் என்ற திட்டமும், ஒரு தலைவருக்கு உதித்தது என்பது வியப்பிற்குரியதே.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எல்லா மதத் திருமணங்களையும் பதிவு செய்யவேண்டும் என்றும், பதிவு செய்யும்முறைகூட பரவலாக, எளிதாக ஆக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இது நாளடைவில் திருமணம் சிக்கனமாக நடைபெறும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்பதும் இதற்குள் இருக்கும் முக்கிய அம்சமாகும்.

--------------------- " விடுதலை” 19-5-2010

2 comments:

Anonymous said...

திருமணத்தை பதிவு செய்வதற்கு கூட சிலர், மத ரீதியா எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. அதப்பத்தி ஒண்ணும் சொல்லல. பார்ப்பான் எதிர்த்தா தான் நீங்க வாயை தொறப்பீங்க போல் இருக்கு.

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.