தமிழால் ஒன்றுபடுக!
தஞ்சாவூரில் 1995 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றதற்குப் பிறகு உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக வரும் ஜூன் 23 முதல் 27 முடிய கொங்கு நாட்டில் (கோவையில்) நடைபெறவுள்ளது.
தமிழுணர்வு, தமிழன் உணர்வு உள்ள அனைவரும் இதனை வாழ்த்தி வரவேற்கவே செய்வர்.
வரவேற்காதவர்களில் பல பிரிவினர் உண்டு. தமிழை எதிர் கலாச்சாரமாகக் கருதும் இனப் பகைவர்கள் ஒருபுறம், அரசியல் காரணத்திற்காக அனல் கக்கும் பிரிவினர் இன்னொருபுறம்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் இப்படியெல்லாம் காழ்ப்பு வெப்பு நோய்க்குப் பலியாகிக் கிடப்பது இன்று நேற்றல்ல.
தந்தை பெரியார் அவர்கள் தமிழன் என்கிற இனவுணர்வை ஊட்டுவதற்குப் பெரிதும் முயன்றார். பிரச்சாரம் செய்தார், பாடுபட்டார்.
ஆதீனகர்த்தர்களைக்கூட தமிழன் என்ற முறையில் அரவணைத்த சிறப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு.
1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தில், அன்றைய பிரதம அமைச்சர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் படிக்கச் சொல்லுவதாகப் பச்சையாகவே கூறினார்.
"நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பெருமைகளைப் புறக் கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமை ஸம்ஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால் மகாபெரிய விபத்தாகும்.
அது பணம் இருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிச்சை யெடுப்பதற்கு ஒப்பாகும்.
(சென்னை லயோலா கல்லூரியில் பிரதம அமைச்சர் ராஜாஜி, 24.1.1937)
மக்களின் பேச்சு வழக்கிலில்லாத செத்த மொழிபற்றி பார்ப்பனர்களின் முக்கிய தலைவரான ஆச்சாரியார் அருளிய கருத்து இது.
இந்திய மக்கள் தொகையில் சமஸ்கிருதம் தெரிந்தோர் 0.01 சதவிகிதம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெளிவாக்கியுள்ளன.
இதில் வெட்கக்கேடு என்னவென்றால், இந்தியாவில் உள்ள செம்மொழிகளுள் இந்தச் செத்துச் சுண்ணாம்பாகிப்போன சமஸ்கிருதமும் ஒன்றாகும்.
எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானாவது இதுபற்றி குறைகூறி எழுதுவதுண்டா? இந்த சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியைத்தான் தமிழகப் பள்ளிகளில் ஆச்சாரியார் திணித்தார்.
அந்தக்கால கட்டத்தில்தான் ஜாதி, மதம், ஆன்மீகம் என்பவற்றையெல்லாம் கடந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தார் தந்தை பெரியார்.
மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் தந்தை பெரியார் தலைமையில் அணிவகுத்து நின்றனர் என்றால், மொழியால், இனத்தால் ஒன்றுபடச் செய்த தந்தை பெரியார் அவர்களின் மிகப்பெரிய முயற்சியே அதற்கு விழுமிய காரணமாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்மூலம் இந்த உணர்வை மேலும் மேலும் வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா?
அதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை அரசியல் கண்கொண்டு பார்த்து தமிழர்கள் மொழியால்கூட ஒன்று சேரமாட்டார்கள் என்ற நிலையை உருவாக்கலாமா?
செல்வி ஜெயலலிதா அப்படி நடந்துகொள்கிறார் என்றால், அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், தமிழர்களாக உள்ள சிலர் கோவை மாநாட்டின்மீது கறைச் சேற்றை வாரி இறைக்கலாமா என்பதுதான் நமது நியாயமான வினாவாகும்.
உலகெங்குமிருந்தும் 4000 தமிழறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்று கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர் என்றால், அது எவ்வளவுப் பெரிய பெருமை!
தமிழால்கூட ஒன்றுபட முடியாவிட்டால், நாம் எதில் ஒன்றுபடப் போகிறோம்? தமிழர்கள் சிந்திப்பார்களாக!
---------------- "விடுதலை” 21-6-2010
0 comments:
Post a Comment