Search This Blog

4.6.10

இராமாயண வால்மீகி திருடனா? திருடன் இல்லையா?


வால்மீகி

இராமாயணத்தை எழுதியதாகக் கூறப்படும் வால்மீகி திருடனா? திருடன் இல்லையா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம்வரை சிரிப்பாய் சிரித்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் அலை வரிசை ஒன்று தயாரித்து ஒளிபரப்பி வரும் பிடாய் என்ற ஒரு தொடரில் வால்மீகி பற்றி இரு கதாபாத்திரங்கள் பேசுகின்றன.

அதில் வால்மீகி திருடனாக இருந்து மகரிஷியானார் என்ற உரையாடல் இடம் பெற்றுள்ளது. வால்மீகி ஜாதியைச் சேர்ந்த, ராவிகாஸ் என்பவர் இது எங்களின் மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார் (2009).

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் பல்லா வழங்கியுள்ள தீர்ப்பு வருமாறு:

வால்மீகி வாழ்க்கை வரலாற்றை கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டுவரை தோன்றிய, வேத இலக்கியங்களின் அடிப்படையில் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் மகரிஷி வால்மீகி இருக்கை ஆராய்ந்து, அவர் திருடனாக இருக்க முடியாது என்றே முடிவுக்கு வந்துள்ளது.

எலக்ட்ரானிக் ஊடகங்கள் மத சம்பந்தப்பட்ட கருத்துகளை பரப்ப முற்படும்போது கட்டுப்பாட்டோடும், பொறுப்புணர்வோடும், கவனத்தோடும் ஒளிபரப்ப வேண்டும். அக்கருத்து பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் என்ற உணர்வும் வேண்டும் என்று நீதிபதி இதோபதேசம் செய்திருக்கிறார்.

ரொம்ப சரி, புராணங்களின் பேரகராதி என்று ஒப்புக் கொள்ளப்படும். அபிதான சிந்தாமணி வால்மீகிபற்றி என்ன கூறுகிறது?

இவர் பிறப்பால் வேதியர். ஒழுக்கம் குன்றி, வேடருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்து வருகையில், ஒரு நாள் ஒரு முனிவரை வழி மறித்துப் பறிக்க முற்படுகையில் அவர் இவரிடம் கருணை கூர்ந்து நீர் செய்யும் பாபத் தொழில், உமது வருவாயால் சீவிக்கும் உமது இல்லோர்க்கும் உண்டோ எனக் கேட்டு வருகவென ஏவ, அவ்வாறு சென்று கேட்கையில், அவர்கள் மறுக்கக் கேட்டுக் கூறி மயங்கி நிற்கையில், முனிவர் கருணை கூர்ந்து எதிரில் இருந்த மாமரத்தின் பெயரைக் கூறச் சொல்லிப் போயினர். கள்வர் அவ்வாறு இருந்து நெடுநாள் செபிக்க, மேல் ஒரு புற்று மூடியது. சில நாள் கழித்து அப்புற்றில் இருந்து வெளிப்படுகையில், வேடன் ஒருவன் கிரவுஞ்ச பட்சிகளைக் கொல்ல வர, அதனைக் கண்டு சினந்து அவனைச் சபிக்கத் தொடங்க, அச்சாபமே தம் வாயில் சுலோக ரூபமாக வெளிப்பட்டு இனிய கானமாயிற்று. இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி என்று புராணக் களஞ்சியம், அகராதியான அபிதான சிந்தாமணி கூறுகிறது. வால்மீகி வழிப்பறித் திருடன்தான் என்று சொல்லியிருக்கிறது. நீதிபதி புதிய புராணம் எழுதுவானேன்?

பக்தர்கள் திருடர்களாக இருக்க மாட்டார்களா? திருமங்கை ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் என்று கேள்விப்பட்டதுண்டா? அவன் என்ன செய்தானாம்! சைவ சித்தாந்தப் பதிப்பகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7, வரிகள் 26 -30) என்ன கூறுகிறது?

நாகப்பட்டிணத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலி நாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர் என்று கூறப்பட்டுள்ளதே!

திருட்டுப் பயல் ஒரு ஆழ்வாராம். திருடிய நேரத்தில் கடவுள் தன்மையுடையவராக இருந்தானாம்! அதனால் குற்றம் கூறக்கூடாதாம்! எப்படி?

-------------------- மயிலாடன் அவர்கள் 4-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: