Search This Blog

15.6.10

எதனால் நடராஜர் கடத்தப்பட்டார் ?


எங்கே நடராஜர்?

கோயில்கள் பூசைகள் திருவிழாக்கள் எல்லாம் பார்ப்பனர்களின் உயர்வையும், ஆதிக்கத்தையும் மய்யப்படுத்தி சுற்றிச் சுற்றி வரக் கூடியவை. அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இந்தச் சமாச்சாரங்களை சதா பரப்பிக் கொண்டே இருக்கின்றன.

கோயிலுக்குள் கர்ப்பக் கிரகத்துக்குள் இருப்பதும் சாமி, அர்ச்சகர்களும் சாமி என்று அழைக்கும் அளவுக்குப் பக்தர்களின் புத்தி அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் இந்த ஓயாப் பிரச்சாரமும், சதா கோயில் பண்டிகைகளின், திருவிழாக்களும்தான்.

தினமலர் வாரம் இருமுறை பொதிகைத் தொலைக்காட்சிகளில் இந்த அக்கப்போரைப் பரப்பிக்கொண்டே இருக்கின்றது. கடந்த திங்களன்று சிதம்பரம் நடராஜக் கடவுளின் பிரதாபங்களை அவிழ்த்துக் கொட்டியது.

தில்லைவாழ் அந்தணர் புராணம் என்ற ஒன்றே தனியாக இருக்கிறது. திருத்தொண்டத் தொகையில் முதலில் வரும் அடியே தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதாகும்.

தில்லையில் வாழக்கூடிய பார்ப்பனர்களுக்கும் அடியேன் நான் என்று சிதம்பரம் நடராஜரே அடி எடுத்துக் கொடுத்தாராம் சுந்தரருக்கு.

இதன் பொருள் நடராஜக் கடவுளே தில்லை (சிதம்பரம்)யில் வாழும் பார்ப்பனர்களுக்கு அடிமை என்பதாகும்.

கைலாயத்திலிருந்து மூவாயிரம் பார்ப்பனர்களை தில்லைக்குச் சிவபெருமானே அழைத்து வந்தாராம். எண்ணிப் பார்த்த போது ஒரு பார்ப்பான் குறைந்தானாம் உடனே நடராஜர் அந்த அந்தணன் நான்தான் என்று சொன்னாராம்.

கடவுளுக்கு மேலே நாங்கள் என்று பார்ப்பனர்கள் சொல்லுவதும், கடவுளுக்கே பூணூல் போட்டிருப்பதன் தந்திரமும் இதுதான். தினமலர் ஏற்பாட்டில் பொதிகையில் ஒளிபரப்பப்பட்டது என்ன தெரியுமா? நடராஜர் திரு உருவத்தின் ஒவ்வொரு அங்கமும் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றியதாகும்.

இவ்வளவு தத்துவார்த்தங்களையும் பேராற்றலையும் பிரதாபிக்கும் இந்தச் சிதம்பரம் நடராஜப் பெருமான் இருக்கிறாரே இவர்தம் சக்தியின் யோக்கியதையை எடுத்துச் சொன்னால் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்துத்தான் தீரவேண்டும்.

முப்பத்தேழு ஆண்டு பத்து மாதம் இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686 வரை) சிதம்பரம் கோவிலில் உள்ள நடராஜர் சிலை சிதம்பரத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என்பதுதான் அந்த உண்மை.

சிதம்பரத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நடராஜர் சிலை முதல் நாற்பது மாதங்கள் குடுமியான் மலையிலும், பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி திருவாரூரில் கிடைத்திருக்கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

எதனால் நடராஜர் கடத்தப்பட்டார் என்ற தகவல்தான் மிகவும் ருசிகரமானது.

பீஜப்பூர் சுல்தான் படையெடுப்புக்குப் பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமிழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமாகவோ சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்தோ சிவ பக்தர்கள் இப்படி நடராஜர் சிலையை எடுத்துக் சென்றிருக்கிறார்கள். கடைசியில் மதுரையில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட்டிய மன்னன் சகசி ஆட்சிக் காலத்தில்தான் என்று தெரிகிறது.

ஆதாரம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம்

இந்தச் செய்தி மணியனின் இதயம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜரின் அங்க அசைவுகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லும் தினமலர் நடராஜரே கடத்தப்பட்டு காப்பாற்றப்பட்டு இருக்கிறாரே அதுவும் பீஜப்பூர் சுல்தானுக்கு அஞ்சி இதற்கு என்ன வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கம் சொல்லித் தப்பிக்கப் போகிறார்களாம்?

------------------- மயிலாடன் அவர்கள் 15-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: