Search This Blog

21.6.10

சிகரத்தை நோக்கிய பயணமும்,சிறப்பான அடித்தளமும்!

மனித வாழ்வில் நியாயமான, அறிவார்ந்த நம்பிக்கைகள் சிறந்த அனுபவத்தாலும், ஆராய்ச்சியாலுமே நமக்குக் கிட்டுகின்றன.

இது ஒரு புதையல் போன்றது; ஏன் கல்வி போன்றது என்ற உவமையையும்கூட கூறலாம். கல்வி எப்போதும் தொட்டனைத்தூறும் மணற்கேணி போன்ற ஊற்று ஆகும்!

பல பேர் கல்வியில்கூட, ஏன் இன்றைய கல்வியே கூட, வீடுகளில் சேமித்து வைத்து நமது பயன்பாட்டுக்குக் கிடைக்கும் குழாய் நீர்போல பயன்படுகிறது, மதிப்பெண் தகுதிகளைப் பெறுவதற்கு.

தண்ணீர் தொட்டி காலியானால் மீண்டும் எப்போது நீர் வரத்து என்பதுதான் கவலை!

சிலர் குளியல் அறையில் உடம்பெல்லாம் சோப்பைப் போட்டுக்கொண்டு குழாயை அல்லது (ஷவரை) நீர் வீழ்க் குழாயை திறந்தால் தண்ணீருக்குப் பதில் காற்றுதான் வருவதைக் கண்டு கூச்சல் கிளப்பி, வாட்டர் டேங் ஸ்விட்சைப் போட்டு தண்ணீரை மேலே ஏற்றுங்களேன் என்று வீட்டு உறுப்பினர்களுக்கு கருணை மனு போடும் பரிதாபக் காட்சிகளும் உண்டு. (எப்போதுமே முழுமையாக தண்ணீர் பிடித்து வைத்தோ அல்லது தண்ணீர் கிடைப்பதோ 100க்கு 100 உறுதி என்ற பிறகே குளிக்கச் செல்வது வருமுன்னர் காக்கும் வழியாகும்).

பலர் வெற்றி வரும்போது அது தொடர் வெற்றியாக அமைந்துவிடும் என்று அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புடன் செயல்படுகிறார்கள்.

அடுத்துவரும் தோல்வியின்போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தகுந்த பக்குவமின்றித் துவண்டு விடுகிறார்கள்!

சரியான மனப் பக்குவம் உடையவர்களோ, வாழ்க்கையில் வெற்றியின்மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தோல்வி வந்த பிறகும்கூட நம்மால் வெற்றியைத் தட்டிப் பறிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழக்காமல் பாடுபட்டு உழைத்தால், வெற்றியின் வெளிச்சத்தை அவர்கள் அனுபவிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டே தீரும்!

இது ஒரு வகையான கட்டுப்பாடு. நம் வாழ்வில் தேவையான பயிற்சியும்கூட!

படிக்கட்டின் முதல் படியைப் பார்த்து ஏறிச் செல்பவர்கள் மற்ற படிக்கட்டுகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை; அதை நம்பலாம் என்றார் பிரபல மனிதநேயர் மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்).

இத்தகைய நியாயமான நம்பிக்கை பூத்துக் குலுங்கும்போது, சந்தேகக் காற்று அடித்தாலும் செடிகள் கீழே விழாது வேண்டுமானால் தலை சாயும் நன்றாக முற்றிய நெல் கதிர்மணிகளைப் போல! வாழை போல உள்ளவர்கள் நிலை வேறு!

தன்னம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு வழியில் உள்ள தடைகள் தெரியாது; இலக்கு மட்டும்தான் தெரியும்!

கொலம்பசுடன் வந்த கப்பல் வீரர்கள் அவரை எவ்வளவோ சங்கடத்திற்கு ஆளாக்கி, ஊர் திரும்பும்படி வற்புறுத்தி எதிர்ப்புக் காட்டியும், அவர் இலக்கினை அடைய முழு கவனஞ்செலுத்தினார்!

புது உலகமான அமெரிக்கா அவருக்குக் கிடைத்தது!

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்குவதற்குமுன்பே அவர் நடத்திய குடிஅரசு வார ஏட்டினை காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே தொடங்கி நடத்தினார் சொந்தப் பொருள் இழப்பு எவ்வளவோ!

உடன் இருந்த சில சீடர்கள் தோழர்கள் மிகுந்த நட்டத்தில் இதை இன்னமும் நடத்தவேண்டுமா என்று கேட்டநேரத்தில், பெரியார் சொன்ன பதில் எல்லோருக்கும் நல்ல பாட போதனை ஆகும்!

யார் ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும், நான் ஒருவனே எழுதி, நானே அச்சடித்து, நானே என் திண்ணையில் அமர்ந்து சத்தம்போட்டு, படித்து மகிழ்வேன் என்று உறுதியுடன் சொன்னதால், இன்று சமூகநீதியும், சுயமரியாதையும் இந்திய நாட்டில், தமிழ்நாட்டில் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகின்றது!

மிகப்பெரிய ஆழிப்பேரலை (சுனாமி) அவ்வப்போது_ பூகம்பங்கள், எரிமலையின் சீற்றங்கள் மனித குலத்திற்கு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. புவி வெப்பத்தின் காரணமாக தட்பவெட்ப நிலை மாறிவிட்டது வேகமாக.

என்றாலும், மனிதனின் விண்வெளிப் பயணம் அடுத்து செவ்வாய்க்கோளை நோக்கி நடக்கிறதே!

50 ஆண்டுகளுக்குப் பின்னே நடைபெறவேண்டிய வளர்ச்சி 21 ஆம் நூற்றாண்டைத் தாண்டி 22, 23 ஆம் நூற்றாண்டு எப்படி இருக்கப் போகிறது என்று சிந்திக்காமலா இருக்கிறார்கள் மனிதர்கள்?

நாளை நமதே! நாளும் நமதே!! என்ற நன்னம்பிக்கையின் சிகரத்தை நோக்கி தனது சிந்தனை ஆற்றலால் ஏறிக்கொண்டு பயணிக்கும் மனிதனின் வெற்றிக்கு வானமே எல்லை _ நம்பிக்கையே அடித்தளம்!

--------------- கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் "விடுதலை”21-6-2010

0 comments: