கோவையில் விரைவில் பெரியார் மய்யம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்
தமிழர் தலைவர் அறிவிப்பு
கோவையில் விரைவில் பெரியார் மய்யம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கோவையில் அறிவித்தார்.
கோவையில் 8.5.2010 அன்று குடிஅரசு தொகுதிகள் வெளியீடு, செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் 1.6.2010 அன்றைய தொடர்ச்சி வருமாறு:
No Vacancy. No Room நாரதர் திடீர் என்று வருகிறார். என்ன கிருஷ்ணா நான் ஆயத்தமாக வந்த பிற்பாடு இப்படி ஏமாற்றலாமா? என்று கேட்டாராம்.
நாரதரும், கிருஷ்ணரும் சேர்ந்து
பிறகு நாரதரும், கிருஷ்ணரும் இரண்டு பேரும் சேர்ந்து தங்களுடைய இச்சையைப் பூர்த்தி செய்து கொண்டனராம். அவர்களுக்கு 60 குழந்தைகள் பிறந்தனவாம். அதுதான் தமிழ் வருடப் பிறப்பு.
இந்த கதையை வெளிநாட்டுக்காரனிடம் சொன்னால் நம்மை எவ்வளவு பாராட்டுவான்? நல்லவேளை இஸ்ரேல் நாட்டில் இந்த கதை தெரியாமல் இருந்திருக்கிறது. இவ்வளவு அசிங்கமாக, இவ்வளவு காட்டுமிராண்டிகளா உங்கள் கடவுள் என்று வெளிநாட்டுக்காரர்கள் நினைக்க மாட்டார்களா?
பெருமை திமுக ஆட்சிக்கு
இன்றைக்கு இந்த அழுக்கை மாற்றித் துடைத்து நமக்கு ஒரு பெரிய பெருமை தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு_பொங்கல் திருநாள் உழவனுடைய உழைப்பின் பெருநாள் என்று ஆக்கிய பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைச் சார்ந்தது. கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது.
பகுத்தறிவும் இதிலே காப்பாற்றப்பட்டிருக்கிறது. இழிவும் துடைக்கப்பட்டிருக்கிறது. பண்பாடும் அதன் கொடியும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பகுத்தறிவுக் கொள்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏராளமாக சொல்லிக்-கொண்டே போகலாம். இன்னமும் இந்த உணர்வுகளை எடுத்துக்காட்டி நாம் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறது.
டில்லி பெரியார் மய்யம் திறப்பு
இன்றைக்கும் ஊடகங்கள், பத்திரிகைகள் இந்த ஆட்சிக்கு விரோதமான செய்திகளை வெளியிடு-வதில்தான் அவர்களுக்கு ஆசை. கான்ஸ்பிரசி ஆஃப் சைலன்ஸ் என்று அம்பேத்கர் சொன்னார். அதாவது மவுனத்தின் மூலமாக கொன்றுவிடுவது. டில்லியில் பெரியார் மய்யம் திறப்பு நடைபெற்றது. அவ்வளவு பேர் படம் எடுக்க வந்திருந்தார்கள்; அவ்வளவு பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள்; ஆனால் செய்திகள் மட்டும் வரவே இல்லை.
ஓட்டை கள் இருக்காதா?
அவனுக்கு ஏதாவது ஒரு கல் விழாதா என்று பார்த்திருக்கிறான். கல் விழவில்லை. அங்கு யாராவது கனைக்க மாட்டார்களா? என்று பார்த்திருக்கிறான். அங்கே ஏதாவது எதிர்ப்பு வராதா என்று பார்த்திருக்கிறான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. டில்லி பெரியார் மய்ய விழாவில் முதலமைச்சர் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்கள் எழுதத் தயாராக இல்லை. எங்காவது ஓட்டைகள் இருக்குமா என்றுதான் பார்க்கிறார்கள். ஊடகத்துறையினர் கலைஞர் அரசின் சாதனைகளைச் சொல்லுகிறார்களா? இல்லையே. அதே மாதிரிதான் மற்ற மற்ற செய்திகள்.
பெண்களுக்கு சொத்துரிமை. பெண்களுக்கு இடஒதுக்கீடு. இவை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அரசில் இடம் பெற்றிருப்பதாலே செய்ய முடிந்தது. இன்றைக்கு அந்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பார்ப்பன சூழ்ச்சியின் அடையாளமாக சென்சஸ் என்ற மக்கள் தொகை கணக்கீடு எடுப்பதிலே கூட ஜாதி வாரியாகக் கூடாது என்று சொல்லுகிறார்கள். ஏதோ ஜாதியை ஒழிப்பதற்கு இவர்கள்தான் என்பதைப் போல பேசுகிறார்கள்.
தொலைதொடர்பு துறையில் புரட்சி
ஜாதி வாரியாக கணக்கு எடுக்கக் கூடாதுங்க என்று சொல்லுகிறார்களே. அவர்களுக்கு என்ன எண்ணம்? மற்ற ஜாதீய அமைப்புகளுக்கெல்லாம் புள்ளிவிவரம் எடுத்துவிட்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடையாது என்று சொல்லும் பொழுது அந்த சமூகநீதியை மாற்றிக்காட்ட வேண்டும் என்றுதான் சமூகநீதியில் ஆர்வம் உள்ள தலைவர்கள் பாராளுமன்றத்திலே கட்சி வேறுபாடு இல்லாமல் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இந்தக் கருத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னார் என்றால் குடிஅரசின் கொள்கைகள் சமூக நீதிக் கொள்கைகள் திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகள் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. நாளும் என்பதற்கு இவை எல்லாம் அடையாளம்.
திராவிட இயக்கமல்லவா இவற்றைச் செய்கிறது என்று அவர்கள் நினைத்த காரணத்தினாலேதான் அவர்களுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. குற்றம் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் தொலை தொடர்புத்துறையிலே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். 70 வருடங்களுக்கு முன்பு பெரியார் சொன்னது
இப்பொழுது ஆளுக்கு ஆள் செல்போனில் பேசிக்கொள்கிறார்கள். அந்த செல்ஃபோன் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். செல்ஃபோனில் இனிமேல் உருவம் பார்த்து பேசக்கூடிய நிலைமை வரப்போகிறது.
பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளம் இதுதான். ஏற்கெனவே 70 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் இனிவரும் உலகம் என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.
அடுத்து வரும் காலங்களில் உருவம் காட்டிப் பேசிக்கொள்வார்கள். எதிர்காலத்தில் இனிவரும் உலகத்தைப் பற்றி பெரியார் 70 வருடங்களுக்கு முன்னால் இந்தக் கருத்தைச் சொன்னார். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரே அதை செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டதென்றால், நாம் எப்படிப் பாராட்டுவது, எப்படி சிந்திப்பது என்றே தெரியவில்லை.
என்ன வசதி குறைவு அதனாலே ஏற்படப்போகிறது என்றால் போனை எடுத்துக்கொண்டு அவர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ரொம்ப பேர் வழக்கமாக சொல்வார்கள். அவர் இங்கே இல்லிங்க. இப்பொழுதுதான் வெளியே போயிருக்கிறார் என்று சொல்லுவார்கள். அந்த வசதி குறைவு வாய்ப்பெல்லாம் இனிமேல் இருக்காது.
பல்லாயிரம் கோடி ரூபாயில் 3 ஜி ஸ்பெக்ட்ரம். இந்த சாதனையை செய்த அமைச்சரைப் பாராட்டுவதற்குப் பதிலாக வயிற்றெரிச்சலோடு என்ன சொல்லுகின்றான்? செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை மாதிரி இன்றைக்கு ஊழல், ஊழல் என்று எதையோ ஒன்றை சொல்லுகின்றான். எல்லா நடவடிக்கைகளும் பிரதமருக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறதென்று ஒரு மணி நேரம் நாடாளுமன்றத்திலே நம்முடைய இராசா அவர்கள் தெளிவுபடுத்திப் பேசியிருக்கின்றார்.
பிணத்தை வைத்துக்கொண்டு பிரச்சாரம்
இந்தத் துணிச்சல் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது. பாராளுமன்றத்திலே விளக்கம் அளித்திருக்கின்றார். 2 ஜி பற்றிய குற்றச்சாற்று முன்னாலேயே சொல்லப்பட்டது. அப்பொழுதே நாடாளுமன்றத்தில் பதில் சொல்லப்பட்டது. அதற்குப் பிறகு அதை தேர்தல் பிரச்சினையாக கூட ஆக்கினார்கள். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ.இராசாவும் நின்று வெற்றி பெற்றார். தி.மு.கவும் வெற்றி பெற்றது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் மத்தியில் உருவானது.
ஆ.இராசாவும் அதே இலாகாவைப் பெற்றார். இதற்குப் பிறகு பேசினால் என்ன அர்த்தம்? புதைக் குழிக்குப் போன பிணத்தை எடுத்துத்தோண்டி சிங்காரித்து வைத்து இந்தப் பிணத்தை வைத்துக்கொண்டே பிரச்சாரம் செய்து ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்தால் அவ்வளவு பைத்தியக்காரன்களா நம்முடைய மக்கள்?
எப்பொழுதோ சொன்ன செய்தி. என்னமோ நேற்று நடந்த மாதிரி ஆக்கி பிரச்சாரம் செய்கிறான். வழக்கமாக இராமாயண காலத்திலிருந்து நம்மாள் என்ன பண்ணுவான். ஒரு பெண்ணோடு இணைத்து விடுவான். நம்மாளும் உடனே தலையாட்டுவான். டாடா கன்சல்டிங் நிறுவனத்தினுடைய தலைமை பொறுப்பு அதிகாரி பெண். அவர் அமைச்சருடைய பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்து சொல்லியிருக்கின்றார்.
ஊழலுக்கு ஆதாரம் உண்டா?
ஏனென்றால் இது ஒரு தொடர்பான அமைப்பு. இது ஒன்றும் பெரிய விசயமல்ல. பொது வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் வாழ்த்து சொல்லுவார்கள்.
பலர் வாழ்த்து சொல்லுகின்றார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவருடைய படத்தைப் போட்டு ஆகா என்று கொச்சைப்படுத்துவதா?
ஊழலை புள்ளி விவரப்படி அவனாலே சொல்ல முடியவில்லை. ஆதாரத்தோடு சொல்ல முடியவில்லை என்று சொன்னவுடனே இந்த அம்மையார் பிறந்தநாளின் பொழுது வந்து ஏதோ பேசினார் என்று பத்திரிகையில் போடுகின்றான்.
இராமாயண காலத்திலிருந்து இராசா காலம் வரையிலே பார்ப்பனர்களுடைய முறை என்னவென்றால் பெண்களை தொடர்புபடுத்தி சொல்லுவது இராவணன் மீது அந்த குற்றச்சாற்றைத்தானே சொன்னான்.
இராவணன் ஒரு தவறும் செய்யவில்லையே.
சீதைதான் இராவணனை விரும்பி சென்றாள் என்று இராமாண ஆராய்ச்சியில் பெரியார் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன ஆதாரங்களை இதுவரை ஒருவர் கூட மறுத்ததில்லை. பெரியார் வால்மீகி இராமாயணத்தில் உள்ளதை சொன்னார். அண்ணா கம்பராமாயணத்தில் உள்ளதையும் சொன்னார்.
இராவணனுக்கு ஒரு சாபம்
இந்த இயக்கத்தில் ஆதாரம் இல்லாமல் யாரும் பேசிப் பழக்கப்பட்டவர்களே கிடையாது. அய்யா படித்த அளவுக்கு இராமாயண ஆராய்ச்சியை வேறு யாரும் படித்ததில்லை. எத்தனை பதிப்பிருக்கிறதோ அத்தனை பதிப்புகளையும் படித்தவர் அவர்.
அய்யா சொன்னார். இராவணனுக்கு ஒரு சாபம் இருக்கிறது. விரும்பாத பெண்ணை இராவணன் தொட்டால் அவன் தலை சுக்கல் நூறாக வெடித்து விடும் என்று ஒரு கடவுள் சாபம் இருக்கிறது. இராவணன் சீதையைத் தூக்கி தொடையில் வைத்துக்கொண்டு போகிறான் என்பது வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது. ஆனால் இராவணனுடைய தலை வெடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று பெரியார் கேட்டார்.
இவர்கள் சொல்லுகிற கணக்குப்படி பார்த்தால் அசோக வனத்தில் சீதை எத்தனை நாள் இருந்திருக்கிறாள். தவறான நிகழ்வு இராவணனால் நடத்தப்பட்டிருக்கிறதா?
சாதாரண போலீஸ் ஸ்டேசனுக்குள்ளே போனாலே தகராறு நடக்கிறது என்று இந்தக் காலத்திலே சொல்லுகின்றான். இராவணனுடைய ராஜ்ஜியம் அவன் நினைத்தால் எதையும் செய்ய முடியுமே. அங்கு ஒரு சிறு தவறுகூட நடக்கவில்லை என்றால் இராவணனைவிட யோக்கியவான் வேறு யார் இருக்க முடியும்? ஆனால் இராவணனை எப்படி படம் பிடித்துக்காட்டுகிறார்கள்? தலைகீழாக படம் பிடித்துக்காட்டுகிறார்கள்.
சீதையினுடைய ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பற்றி சொல்லும்பொழுது வேறு விதமாக கம்பன் எழுதுகின்றான். அவள் விரும்பினால் என்பதற்கு அண்ணா பேசும்பொழுது சொன்னார். கம்பராமாயணத்திலேயே இருக்கிறது.
அண்ணா சொன்னார்
கம்பராமாயணத்தில் பாட்டின் மூலமாக வைத்திருக்கின்றான். கம்ப ராமாயணத்தில் இருப்பதை அண்ணா விளக்கிச் சொன்னார். மனோ, வாக்கு, காயம் என்று மூன்று உண்டு. மனதாலே தவறு செய்வது. வாக்கினாலே தவறு செய்வது. சொல்லினாலே_வாக்கினாலே தவறு செய்வது காயத்தினால்_உடம்பினால் தவறு செய்வது. கம்பராமாயணத்தில் சீதா பிராட்டியார் சொல்வதாக கம்பர் எழுதி வைத்திருக்கின்றார்.
கம்பர் எவ்வளவு சாமர்த்தியமாக எழுதியி-ருக்கிறார் என்பதை அண்ணா சுட்டிக்-காட்டியிருக்கின்றார். மனதினால் தவறு செய்யவில்லை. வாக்கினால் தவறு செய்யவில்லை. காயத்தை விட்டுவிட்டார் கம்பர். அண்ணா சொன்னது இது. காரணம் காயம் காயப்பட்டுவிட்டது என்பதால் என்று ரொம்ப அழகாக சொன்னார்.
எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்று சொன்னால், அவ்வளவு சங்கடங்கள் நடந்த நேரத்திலே இராவணன் மீது பழிபோட்ட அதே சம்பவங்கள்தான் இன்றைக்கும் நடைபெறுகின்றன. இப்படி எத்தனையோ சம்பவங்களை எடுத்துச் சொல்ல முடியும்.
ஏன் இந்த இயக்கம் நல்ல பணியை செய்கிறது. என்பதற்காகத்தான் இவ்வளவு சங்கடங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு குற்றங்களை சொல்லுகிறார்கள்.
ஆட்சியை பாதுகாப்பது
யார் மீது வேண்டுமானாலும் பழியைத் தூக்கிப் போடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழ் பெருமக்கள் விழிப்போடு இருப்பார்கள். எங்களைப் பொறுத்த வரையிலே, நாங்கள் கோட்டைக்குள்ளே செல்லக் கூடியவர்கள் அல்லர்.
கோட்டைக்கு வெளியே நிற்கக்கூடியவர்கள். கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற முறையிலே எங்களுடைய பணி உள்ளே போவதில்லை. இந்த ஆட்சியைப் பாதுகாப்பது. அவர்களுக்காகவும் அல்ல. எங்களுக்காகவும் அல்ல. உங்களுக்காக, சமுதாயத்திற்காக, தமிழர் சமுதாயத்திற்காக எனவே குடிஅரசு எந்தக் கொள்கையை எடுத்துக்கொண்டு கிளம்பி வெளியே வந்ததோ எந்தக் கொடியை ஏற்றவேண்டும் என்று நினைத்ததோ எந்த லட்சியங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்ததோ, அது அத்துணையும் இன்றைக்கு வெற்றிப்பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது.
எனவே இந்த இயக்கத்தினுடைய வெற்றிதான் பல பரிமாணங்களாக அவ்வப்பொழுது நடக்கிறது என்று சொல்லி, இவ்வளவு அற்புதமான ஏற்பாட்டை செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர் அவர்கள், பொறுப்பானர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பைத் தெரிவித்து பெரியார் மய்யம் கோவையில் விரைவில் தொடங்கிட ஏற்பாடு செய்யப்படும் என்று சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
_இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
-------------------------"விடுதலை” 4-6-2010
0 comments:
Post a Comment