இந்த 50 ஆண்டுகளில் சட்டசபையில் கலைஞர் உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே!
பீர் முகம்மது: விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவரும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!
கலைஞர்: கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மதுகூட அவரது தந்தைக்கு 33வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.விநாயகம்: மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?
கலைஞர்: இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் (14.3.1969)
ஜேம்ஸ்: மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதுபற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ஒன் சைடெட் லவ் போலத்தான் இருக்கிறது.
கலைஞர்: ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை! (26.2.1970).
அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவதுபற்றி ஆலோசிக்குமா?
கலைஞர்: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது. (8.12.1971)
கோவை செழியன்: ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மயமாக்கிவிட்டால் பிரச்சினை இருக்காது அல்லவா?
கலைஞர்: ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்! (18.12.71)
காமாட்சி: மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?
கலைஞர்: மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! (14.3.73)
கலைஞர்: நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ்காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.
அனந்தநாயகி: அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?
கலைஞர்: அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம். (23.3.1973)
சோனையா: தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அரிய விரும்புகிறேன்
கலைஞர்: பல பேர்மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்பவில்லை. (27.3.73)
பி.ஹெச் பாண்டியன்: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது!
கலைஞர்: புல் என்பது புல்லா?(16.2.1989)
பி.ஹெச்.பாண்டியன்: ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல்கிறார்?
கலைஞர்: காலிகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்! (7.4.1989)
ஆர். சிங்காரம்: இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானே? புதிய வித்வான்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான்கள்!
கலைஞர்: நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா? (4.5.1989)
நூர்முகம்மது: கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா?
கலைஞர்: குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது! (6.5.1989)
பி.வி. ராஜேந்திரன்: உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப் பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?!
கலைஞர்: தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப் பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை! (20.1.90)
ரகுமான்கான்: இந்திராகாந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம்கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!
கலைஞர்: தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்து விட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார். (9.4.90)
வி.பி. துரைசாமி: ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?
கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்! (24.4.1990).
குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர்செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு அய்யப்பாடு...
கலைஞர்: குமரி அனந்தனுக்கு அப்படியொரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம்.. அதையும் முயற்சித்துப் பாருங்கள். (7.5.1990).
தொகுப்பு: எம். பரக்கத்அலி
நன்றி: ஆனந்தவிகடன்
--------------நன்றி:- “விடுதலை” 2-6-2010
0 comments:
Post a Comment