Search This Blog

18.6.10

கோயிலில் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதன் தத்துவம் என்ன?


கோபுரம்- ஏன்?

கருவறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி சூட்சுமலிங்கம் என்றும்; கோபுரம் ஸ்தூலலிங்கம் என்றும் பேசப்படுகிறது. விண்ணுயர ஓங்கி நின்று கம்பீரமாக விளங்கும் பெரிய பெரிய கோபுரங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்களுக்கு ஸ்தூலலிங்கமாய் தரிசனம் தருகின்றன. இதற்காகவே ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில் கோபுரத்தைவிட உயர்ந்ததாக எந்தக் கட்டடத்தையும் அந்த நாள்களில் யாரும் கட்டியதில்லை. கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்போ, கால அவகாசமோ இல்லாதவர்கள்கூட, இந்தக் கோபுர தரிசனங்களால் தெய்வ தரிசனம் பெறுகின்றனர். கோபுர தரிசனம் பாபவிமோசனம் என்று ஒரு வசனம் உண்டு. பக்தர்கள் கோபுரங்களைப் பார்த்ததும் கைகூப்பி வணங்குதையும், கன்னத்தில் போட்டுக் கொள்வதையும் பார்க்கிறோம்.

கல்கி இதழில் (20.6.2010) கைவிடமாட்டார் காளத்தியார் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இதில் ஒரு வரியைக் கவனிக்கத் தவறக்கூடாது. சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பே இல்லாதவர்கள் என்று பூடகமாகச் சொல்லுவது ஏன்?

அதற்குள் கசப்பான வருணாசிரமம் அடங்கியிருப்பதால்தான் அவ்வளவு சர்வஜாக்கிரதையாக கல்கி எழுதுகிறது. உண்மை என்ன? இதோ ஓர் ஆதாரம்:

வருணாசிரம தர்மங்களைக் கடைபிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து இறைவனின் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடு நிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற் பிறப் பெய்துந் திருப்பெறவே வானளாவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (நூல்: இராஜராஜசோழன் ஆசிரியர். இரா. சிவ.சாம்பசிவ சர்மா. பக்கம் 93)

கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதன் தத்துவமே தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்ட நிலையில், அதே நேரத்தில் அவர்கள் பக்தி வலையில் சிக்காமலும் இருக்கக்கூடாது; வேறு சிந்தனைகள் மறந்தும் வந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் செய்யப்பட்ட சூழ்ச்சிதான் என்பதை மறந்துவிடக்கூடாது. கோபுரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஓர் அவமானச் சின்னம்தான்.

கோயிலில் நான்கு வாயில்கள் அமைத்திருப்பதிலும் வருணாசிரமம் உண்டு.

அந்தணர் தென்திசை

அரசர் மேற்றிசை

வந்திடு வணிகர்

வடக்கு வான்திசை

தொந்தமில் சூத்திரர்

தோன்றும் கீழ்த்திசை

பிந்திய நடுவது

பிரமன் தானமே

இதன்படி பார்ப்பான் தெற்குக் கோபுர வாயில் வழியாகவும், சத்திரியர் மேற்குக் கோபுர வாயில் வழியாகவும், வைசியர் வடக்குக் கோபுர வாசல் வழியாகவும், சூத்திரர் கிழக்கு கோபுர வாயில் வழியாகவும் கோயிலுக்குள் சென்று வரவேண்டுமாம். அய்ந்தாம் ஜாதியினர் (பஞ்சமர்கள்) என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது. அதனால்தான் அய்ந்தாம் வாயில் இல்லை. இந்த அடிப்படையில்தான் கோபுரம் முளைத்திருக்கிறது. அப்படியென்றால் தன்மானமுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தக் கோபுரங்களை என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழவில்லையா?

-------------------------- மயிலாடன் அவர்கள் 18-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

பனித்துளி சங்கர் said...

புதுமை . பகிர்வுக்கு நன்றி

தமிழ் ஓவியா said...

வருகைக்கு நன்றி