Search This Blog

18.6.10

பெரியாரின் சிக்கனம் தமிழ்நாட்டின் பொக்கிஷம்

தந்தை பெரியாரின் கொள்கை எல்லோரையும் வாழ வைத்திருக்கிறது
சென்னை மணவிழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை

தந்தை பெரியாரின் கொள்கை எல்லோரையும் வாழ வைத்திருக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற மணவிழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை_கொரட்டூர் ஜெ.சந்திரகுமார், எம்.சொப்னா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்தவிழா 7.6.2010 அன்று கொரட்டூரில் நடைபெற்றது. மணவிழாவில் பங்கேற்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

செல்வமணி வரவேற்புரையாற்றினார்

எங்கள் மூத்த அண்ணன் கோவிந்தராஜன் அவர்களுடைய அன்பு செல்வன் செல்வமணி அவர்கள் இங்கே அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இந்த அழைப்பிதழ் வீரமணி, மோகனா ஆகியோருடைய பெயராலே போடப்பட்டிருக்கின்ற அழைப்பிதழ். முறைப்படி, சட்டப்படி வரவேற்பு என்பதை நான்தான் நிகழ்த்த வேண்டும் என்றாலும் என்னுடைய மகன் செல்வமணி முந்திக்கொண்டார். பரவாயில்லை. இரண்டு முறை வரவேற்பது என்பது ஒன்றும் நமக்குத் தவறானதல்ல.

எத்தனை முறை ஆனாலும் வரவேற்று பழக்கப்பட்டவர்கள்தான் தமிழர்கள், தமிழர் களுடைய பண்பாடு அதுதான். ஆகவே நான் இந்த மணவிழாவிற்குத் தலைமைதாங்கி நடத்துவதைவிட மிகப்பெரிய பொறுப்பாக இது நம்முடைய குடும்பம் என்ற பெருமையோடு, மகிழ்ச்சியோடு வந்திருக்கின்ற அனைவரையும் முதற்கண் வருக வருக என்று வரவேற்று என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.

என்னுடைய பெயரன் மணவிழா

இந்த மணவிழாவைக் காணக்கூடிய அருமை நண்பர் சந்திரகுமார் அவர்கள் என்னுடைய பெயரன். அவர்கள் தற்பொழுது சென்னை_கொரட்டூரில் வசிக்கும் ஜெயபாலன், தேன்மொழி ஆகியோருடைய அன்புச் செல்வர் சந்திரகுமார் ஆவார்கள். அது போலவே காட்பாடியைச் சார்ந்த நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்களே அது போன்ற ஒரு சிறந்த பல்கலைக் கழகமாக பல வகையிலும், பல்வேறு பொறுப்புகளிலே மிகச்சிறப்பாக பெருமையோடு இருக்கக் கூடிய குடும்பம். அருமை அய்யா மகேஸ்வரன், நந்தினி ஆகியோருடைய செல்வி சொப்னா அவர்களுக்கும் வாழ்க்கை இணை ஏற்புவிழாவாக நடைபெறுவதிலே இதனை நடத்தி வைப்பதிலே நாங்கள் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதுவும் குறிப்பாக எங்களது மூத்த மருமகனாக நாங்கள் எண்ணுவதைவிட மகனாகத்தான் எண்ணுகிறோம் என்கிற அளவுக்கு பெருமைக்குரியவர் அருமை ஜெயபால் அவர்கள் ஆவார்கள்.

எங்களுடைய இல்லத்திலே அண்ணன் வழிவந்த குடும்பத்தினர் எல்லோருமே எங்களுக்குள் எந்த விதமான பேத உணர்ச்சியோ, மாற்று உணர்ச்சியோ கிடையாது.

பெரியாரின் கொள்கை வயப்பட்ட குடும்பம்

மாறாக அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை வயப்பட்ட குடும்பம் இந்தக் குடும்பம். என்னுடைய அண்ணன் அவர்களுடைய காலத்திலே மூத்த அண்ணன் கோவிந்தராஜன் அவர்கள் ஆனாலும், அடுத்த அண்ணன் தண்டபாணி அவர்கள் ஆனாலும் தொடர்ந்து அவர்களுடைய இல்லத்து மணவிழா என்று சொன்னால் எங்கள் இல்ல மணவிழாக்கள் இத்தகைய முறையிலே சுயமரியாதை திருமணங்களாக சிறந்த நல்ல அறிஞர்களை அழைத்து நல்ல மனம் கொண்டவர்களைப் பாராட்டுகின்ற வகையிலே நடத்துவதுதான் முறையான நிகழ்வாக நடந்திருக்கிறது.

ஜெயபாலன்-தேன்மொழி மகன் சந்திரகுமார்

அந்த வகையிலே நம்முடைய சந்திரகுமார் அவர்களுடைய தந்தையார் ஜெயபாலன் தாயார் தேன்மொழி ஆகியோர் இந்த சுயமரியாதை மணமுறைக்கு ஒப்புக்கொண்டு நடைபெறுவது அதிசயமல்ல. ஏனென்றால் பாரம்பரியமாக அவர்களே இந்த உணர்வு கொண்டவர்கள். 1973_லே அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எங்களாலே அழைக்கப்பட்டு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்கள் என்ற முறையிலே அவர்களுடைய தலைமையிலேதான் ஜெயபால் தேன்மொழி ஆகியோருடைய திருமணமும் கடலூரிலே நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களுக்கு நாங்கள் வரவேற்பை கொடுத்து அழைத்து வந்தோம்.

பெரியார் தலைமையில் மணவிழா

37 ஆண்டுகளுக்கு முன்னாலே அந்த மணவிழா நடைபெற்றது. இன்றைக்கு ஆலம்விழுதுகளைப் போல அடுத்து சந்திரகுமார் அவர்களுக்கு இங்கே மணவிழா இப்பொழுது நடைபெறுகின்றது. அதே கொள்கையோடு மாறாமல் இந்த கொள்கை வழியிலே மணவிழா நடத்தவதைத்தான் நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். எவ்வளவு பெரிய பதவிக்குப் போனார்கள் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பணம் சேர்த்தார்கள் என்பது எங்களுக்கு பெருமை அல்ல.

கொள்கை உறுதிதான் முக்கியம்

இந்த கொள்கையிலே எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதுதான் பாராட்ட வேண்டிய ஓர் அம்சம். ஏனென்றால் இந்தக் கொள்கையை தழுவியவர்கள் யாரும் கெட்டுப்போனதில்லை. தாழ்ந்து விடவில்லை. வீழ்ந்து விடவில்லை என்பதற்கு அடையாளம் தான் ஜெயபால் அவர்களுடைய வளர்ச்சி. அதேபோல இந்த மணமுறையை ஏற்ற வாழ்க்கைத் துணைவர் எல்லோரையுமே சுட்டிக்காட்டலாம்.

ஆகவே வந்திருக்கின்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஒரு சில கருத்துகளை எடுத்து வைக்க விரும்புகின்றேன். என்னுடைய உரை நீண்டநேரம் இருக்காது. என்றாலும் இந்தக் கருத்துகளைப் புதிதாகக் கேட்கக் கூடிய வாய்ப்புகளைப் பெற்ற மக்கள், சான்றோர்கள் இங்கே இருக்கிறீர்கள். ஆகவேதான் ஒரு சில கருத்துகளை எடுத்து வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

எங்கள் குடும்பத்தின் சார்பில் முதற்கண் நன்றி

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த முறையிலே நம்முடைய செல்வன் சந்திரகுமாருக்கு வாழ்க்கை இணை ஏற்பிற்கு மணமகளைத் தேடிய நேரத்திலே மிக அருமையான ஒரு குடும்பம் கிடைத்தது.

சொப்னா அவர்கள் சந்திரகுமாருக்கு வாழ்க்கை இணையாக இன்றைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டி-ருப்பது அவர்கள் முன் வந்திருப்பதற்காக எங்கள் குடும்பத்தின் சார்பாக முதற்கண் இயக்கத்தின் சார்பிலே அவர்களுக்கு நன்றி கூறி பாராட்டு மகிழ்ச்சிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜெயபால் அவர்களோ நாங்களோ தேன்மொழி அவர்களோ இந்த முறையில் திருமணம் செய்து கொள்ள வைப்பது அதிசயமல்ல. நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, ஆனால் இவர்களுடைய குடும்பம் இந்த மண-முறைக்கு சுயமரியாதை மண முறைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் சொன்னதை ஜெயபால் அவர்கள் பெருமையாகச் சொன்னார்கள்.

சுயமரியாதை மணமுறையில்தான் ஈடுபாடு

பொதுவாழ்க்கையிலே இருக்கிற நாங்கள் பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்களில் பங்கேற்பதில்லை. அந்த நிலையிலே ஜெயபால் அவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் இவ்வளவு செய்கிறார்கள். அவ்வளவு செய்கிறார்கள் என்பதை பெருமையாகச் சொல்லுவார்கள்.

ஆனால் இந்தக் குடும்பத்தைப் பொறுத்த வரையிலே ஜெயபால் அவர்களும், தேன்மொழி அவர்களும், மிகப்பெருமையாக சொன்ன செய்தி என்னவென்று சொன்னால் நாங்கள் இந்த முறையிலேதான் மணமுறை இருக்கும் என்று சொன்னபொழுது எங்களுக்கும் அதில்தான் உடன்பாடு என்று அவர்கள் சொன்னார்களே அது ஒன்றே போதும். இது ஒரு சிறந்த குடும்பம். நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் போன்ற குடும்பம் என்பதற்கு அடையாளமாக உள்ள மணமகளுடைய பெற்றோர்களை நான் பாராட்டுகின்றேன். அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

சடங்குகள், சம்பிரதாயங்கள் கூடாது

மற்றபடி இது ஒன்றும் அதிசயமானதல்ல. வைதீகத் திருமணம் என்று சொன்னால் அதிலே தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்குமென்று உங்களிலே பலருக்குத் தெரியும். ஆனால் எங்களைப் பொறுத்தவரையிலே நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. ஜெயபால் அவர்களுக்கோ அல்லது எனக்கோ சம்பந்தி குடும்பத்தினருக்கோ நிறைய பார்ப்பன நண்பர்கள் இருப்பார்கள். நட்பு முறையிலே நாம் யாரையும் வெறுப்பதில்லை. எல்லோரையும் அழைப்போம். எல்லோரையும் கவுரவப்படுத்துவோம். எல்லோரையும் அழைத்து சிறப்பு செய்வோம்.

அதிலே நமக்கு எந்தவிதமான மாறுபட்ட உணர்வே கிடையாது. மனிதத்தன்மையிலே மனிதத்தன்மை அடிப்படையிலே. ஆனால் அதே நேரத்திலே தேவையற்ற சடங்குகளை செய்யக் கூடிய நிகழ்வுகள் இங்கே தவிர்க்கப்பட்டிருக்கிறது.

அன்புதான் கடவுள்

நம்முடைய அய்யா லெப்டினன்ட் கர்னல் அவர்கள் மிக அருமையான கருத்துகளைச் சொன்னார்கள். அன்பை விட தாண்டிய கடவுள் வேறு கிடையாது என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு கடவுள் பெயராலே எப்படி எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

காஞ்சிபுரம் தேவநாதனே சாட்சி

காஞ்சிபுரம் தேவநாதன் ஒருவனே போதும். கடவுள் பக்திக்கு எப்பேர்ப்பட்ட அடையாளம்? அந்த கோயில் உள்ள கருவறை எதற்குப் பயன்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த நிகழ்விலே அதை விளக்கமாகப் பேசி சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு கடவுளைக் காட்டிக்கொண்டு கடவுள் பக்தி வேசத்தைப் போட்டுக்கொண்டு, இன்றைக்கு எவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன? எவ்வளவு கற்பழிப்புகள் நடக்கின்றன? எவ்வளவு அசிங்கங்கள்!

எவ்வளவு அசிங்கங்கள் நடக்கின்றன என்ற காரணத்தால்தான் எங்களைப் போன்றவர்கள் நேரடியாக கருப்புச்சட்டைப் போடாவிட்டாலும் கூட, லெப்டினன்ட் கர்னல் அவர்கள் நல்ல அளவுக்கு இராணுவத்திலே இருந்து பணிபுரிந்த கட்டுப்பாடான வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வருகிறவர்கள். அன்பைவிட பெரிதானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று சொன்னார்கள்.

ஏனென்றால் இப்பொழுது மனிதர்களிடம் வற்றிப் போவது குறைந்து வருவது அன்புதான். எனவே அந்த அன்பு நிலைக்க வேண்டும். பண்பு நிலைக்க வேண்டும். அதைத்தான் இந்த இயக்கத்திலே தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

பக்தி என்பது....

பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்று சொன்னார்கள். ஒரு மனிதனுக்கு பக்தி இருக்கிறதா? ஒழுக்கம் இருக்கிறதா? என்று பார்த்தால் பக்தி முக்கியமல்ல. ஒழுக்கம் என்பதுதான் மிக முக்கியம். ஒழுக்கம் என்றால் என்ன என்று பெரியார் அவர்களைக் கேட்டபொழுது தந்தை பெரியார் அழகான, எளிமையான விளக்கத்தைச் சொன்னார்கள்.

ஒழுக்கம் என்பது வேறொன்றும் இல்லை. மற்றவர்கள் எப்படி உங்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படி நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். அதற்குப் பெயர்தான் ஒழுக்கம் என்று அழகாகச் சொன்னார்கள்.

நம்மால் மற்றவர்களுக்கு நன்மை

எனவே அந்த ஒழுக்கத்தோடு வாழுகின்ற நேரத்திலே நம்மால் மற்றவர்களுக்கு நன்மையே தவிர, எந்த விதமான தீமையும் வருவதில்லை. இந்த மணவிழாவிலே எந்த சடங்கும், சம்பிரதாயமும் இல்லை. பெரியார் அவர்களுடைய கொள்கை எவ்வளவு லாபமானது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

படித்தவர்கள் நேரடியாக அவர்கள் இந்தக் கொள்கையை ஏற்காத குடும்பமாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்திலே ஒன்றை இங்கு வந்திருக்கின்ற எல்லோருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டி-ருக்கின்றோம்.

மணமகன் சந்திரகுமார், பி.இ., முடித்து டாட்டா கன்சல்டன்சி சர்வீசிலே பணியாற்றிக் கொண் டிருக்கிறார். அவர்கள் மேலாண்மைத் துறையிலே எம்பிஏ., படிப்பையும் படித்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.

அதே போல மணமகளாக இருக்கக் கூடிய செல்வி சொப்னா அவர்கள் கணினித் துறை பொறியாளராக தேறி பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தயவு செய்து வந்திருக்கின்ற பெற்றோர்கள், தாய்மார்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் பிறந்திருக் காவிட்டால், இந்த இயக்கம் தொடங்கியிருக்கா விட்டால் தமிழர்களிலே இப்படி படித்தவர்கள் ஏராளம் வந்திருக்க முடியுமா ஒரு நூற்றாண்டு காலத்திலே என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தடுக்கி விழுந்தால்....

இப்பொழுது நம்முடைய பிள்ளைகள் தடுக்கி விழுந்தால் பொறியாளர்கள். குறுக்கே வந்தால் டாக்டர்கள், வழக்குரைஞர்கள்.

அது மட்டுமல்ல. இங்கே இருக்கின்ற குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் அரைமணி நேரத்திற்கு முன்னாலே பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது தங்களுடைய பிள்ளைகள் எல்லாம் சிகாக்கோவிலே இருக்கிறார்கள். அமெரிக்காவிலே இருக்கிறார்கள். லாஸ் ஏஞ்செல்சிலே இருக்கிறார்கள் என்று இப்படி எல்லாம் சொன்னார்கள். அதைக் கேட்ட பொழுது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

---------------------------------”விடுதலை” 8-6-2010

மணமகள் சொப்னா குடும்பத்தினர் அன்னை மணியம்மையாரின் உறவுக்காரர்கள் ஜெயபாலன்-தேன்மொழி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் பேச்சு

மணமகள் சொப்னா குடும்பத்தினர் அன்னை மணியம்மையாரின் உறவுகுடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை_கொரட்டூர் ஜெ.சந்திரகுமார், எம்.சொப்னா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்தவிழா 7.6.2010 அன்று கொரட்டூரில் நடைபெற்றது. மணவிழாவில் பங்கேற்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் டாக்டர் பட்டம்

ஒரு காலத்தில் தமிழர் சமுதாயத்திலே படித்தவர்கள் உண்டா? எஸ்.எஸ்.எல்.சி கூட படிக்காதவர்கள் ஏராளம் உண்டு. ஆனால் இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் பொறியாளர்களாக இருக்கிறார்கள். டாக்டர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு காலத்திலே டாக்டர் படிப்பு படிக்க வேண்டுமானால் சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் ஒழிய டாக்டர் படிப்புக்கு மனுவே போடமுடியாது. இப்படி இருந்ததை மாற்றிய இயக்கம் பெரியார் இயக்கம். நீதிக்கட்சி, ஜஸ்டிஸ் கட்சி. சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் டாக்டர் படிப்பு படிக்க முடியும் என்றிருந்தால் நம்மவர்கள் டாக்டர்களாகவே வர முடிந்திருக்காது.

குலதர்ம கல்வித்திட்டம் ஒழிந்ததால்....

காரணம் சூத்திரனுக்கு சமஸ்கிருதத்தை சொல்லிக்கொடுக்கக் கூடாது என்ற நியதியும் வைத்திருந்தார்கள். ஆகவே அவை எல்லாம் மாற்றப்பட்ட காரணத்தால் நாம் இன்றைக்குப் படித்திருக்கிறோம்.

ராஜகோபாலாச்சாரியார் 54லிலே குலதர்ம திட்டத்தைக்கொண்டு வந்தார். அதைத் தந்தை பெரியார் எதிர்த்த காரணத்தால் இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் எல்லோரும் படிக்கிறார்கள்.

இப்பொழுது பார்த்தீர்களேயானால் 447 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன. லட்சக் கணக்கான பிள்ளைகள் பொறியியல் படிப்பு படிக்கிறார்கள்.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை

தெலுங்கிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள். புத்தி பட்ன வாடுக்கு எஞ்சினீயரிங் என்று அதாவது கொடுத்து வைத்தவர்கள்தான் எஞ்சினீயரிங் படிக்க முடியும் என்று ஒரு கதை உண்டு. இன்றைக்கு அந்த பழமொழிகள் எல்லாம் தாண்டி போயிருக்கின்றன.

நம்முடைய ஜெயபாலன் பட்டப்படிப்பு படித்து விட்டுப் பணியாற்றினார். டிப்ளமோ படித்தார். அவருடைய பிள்ளைகள் இன்றைக்குப் பல மடங்குகள் படித்திருக்கிறார்கள். தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு படித்திருக்கிறார்கள். அது போலவே எங்களுடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வந்து சேரக்கூடிய பெண் பிள்ளைகளை முதல்நாள் பார்ப்பானேயானால் பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையிலே ஒன்றே ஒன்றை கேட்பேன்.

பிள்ளைகளிடம் கேள்விகேட்டபொழுது

உங்கள் பெற்றோர்கள் படித்தவர்களா? எத்துணை பேர் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள். வந்திருக்கிற-வர்கள் 100 பேர் என்று சொன்னால் அதில் 30 பேருடைய தாயார் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள் என்று கை தூக்குவார்கள்.

கையை கீழே போடுங்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த படியாக ஒரு கேள்வி கேட்பேன். உங்களுடைய பாட்டி எத்தனை பேர் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள்.

கையைத் தூக்குங்கள் என்று சொன்னால் ஒரு ஏழு, எட்டு பேர் கூட கையைத் தூக்க மாட்டார்கள். இன்றைக்குப் பார்த்தீர்களேயானால் இவ்வளவு தலைமுறையினர் படித்திருக்கிறார்கள் என்று சொன்னால் காரணம் சரசுவதி பூஜையினாலே அல்ல. சரசுவதி பாட்டிக்கே கையெழுத்துப் போடத்தெரியாது.

சரசுவதி பேத்தி எஞ்சினீயர்

இன்றைக்கு சரசுவதியின் பேத்தி படித்திருக்கிறார். எஞ்சினீயர் சரசுவதியாகியிருக்கிறதென்றால் இது தந்தை பெரியார் அவர்களுடைய அறக்கொடை. அவரது தொண்டறத்தினாலே வந்த மிகப்பெரிய மாறுதல். ஆகவே அந்த மாறுதலினாலேதான் மேடையில் அமர்ந்திருக்கின்ற மணமக்கள் படித்தவர்களாக இருக்கின்றார்கள். பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஒரு காலத்திலே அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டார்கள்.

இன்றைக்கு ஊதுகின்ற அடுப்பு கிடையாது

மூன்று தலைமுறைக்கு முன்னாலே ஊதுகின்ற அடுப்பை விட்டுவிட்டார்கள். இன்றைக்கு நல்ல வாய்ப்பாக கலைஞர் ஆட்சியில் ஊதுகின்ற அடுப்பு இல்லை. கேஸ் அடுப்பை இலவசமாக வழங்கினார்.

திருகினவுடனே எரிகிற அடுப்பு வந்தாகிவிட்டது. அப்பேர்ப்பட்ட ஒரு சமுதாயமாற்றம் இன்றைக்கு வந்திருக்கிறது. எனவே மணமக்கள் சொப்னா அவர்கள் ஆனாலும், சந்திரகுமார் அவர்கள் ஆனாலும் ரொம்ப மகிழ்ச்சியோடு வாழ்க்கையைத் தொடங்கக் கூடிய ஓர் அற்புதமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். எங்கள் குடும்பத்தைப் பொறுத்த வரையிலே தந்தை பெரியார் அவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள்தான் தலைவர்கள்.

அன்னை மணியம்மையாரின் உறவுக்காரர்

சுற்றி வளைத்துப் பார்த்தால் மணமகள் வீட்டார் அன்னை மணியம்மையாரின் உறவுக்காரர்கள் என்று நான் விசாரித்தபொழுது தெரிந்துகொண்டோம். இதைக் கேள்விப்பட்டு இன்னும் அதிகமான அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தேன்.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று வாழ வேண்டியவர்கள் நாம். யார் என்ன ஜாதி என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இங்கே இவ்வளவு பேர் அமர்ந்திருக்கிறோம். இதில் யாருக்காவது என்ன ஜாதி என்று தெரியுமா? தெரிந்து கொள்ள முடியாது. அதனால் யாரும் கெட்டுப் போவதில்லை. இது ஒரு தவறான அணுகுமுறை.

நீண்ட காலமாக ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நம்முடைய நாட்டிலே வந்த காரணத்தினாலே மூளைக்குள்ளே ஏற்பட்ட ஒரு சாயமாக, மூளைக்குப் போடப்பட்ட விலங்காக இது ஆகிவிட்டது. நம்ம ஜாதி, நம்ம ஜாதி, ஜாதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது?

மனிதநேயம் வளர்ந்து வருகிறது

அறிவியல் ரீதியாக விஞ்ஞான மனப்பான்மையோடு சொல்லும்பொழுது எந்தவிதமான அடித்தளமும் ஜாதிக்குக் கிடையாது. உங்களுக்குத் தெரியும் அண்மைக் காலத்திலே ஒரு புறத்திலே மனிதநேயம் தேய்ந்தாலும், இன்னொரு புறத்திலே அது வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய அளவிற்கு நல்ல நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அதற்கு உதாரணம் திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த டாக்டர் அசோகன் தம்பதியினர். அவர்களுடைய பிள்ளை ஹிதேந்திரன் என்பவர் விபத்து ஏற்பட்டு மூளைச் சாவுக்கு ஆளாகிய நிலையிலே உடனடியாக தன்னுடைய மகன் உடல் உறுப்புகளை கொடையாக வழங்கினார்கள். அது மற்றவர்களுக்குப் பயன்பட்டது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் விழிக்கொடை, குருதிக்கொடை வழங்குகிறார்கள்.

மூளைச் சாவு Brain Death எங்கேயாவது ஏற்பட்டால், விபத்திலே ஏற்பட்டால் உடனடியாக இன்னொருவருக்குப் உறுப்புகளை பொருத்துவதற்காக கொடுத்துவிடுவார்கள். அது இப்பொழுது சர்வசாதாரணமாக நடைபெறுவதைப் பார்க்கிறோம்.

ஒருவருடைய கண்களை எடுத்தவுடன் இன்னொருவருக்குப் பொருத்துகிறார்கள். ஒருவருடைய உறுப்புகளின் வேறு பகுதிகளையும் கொடுக்கிறார்கள். அதே போல சிறுநீரகம், கிட்னி போன்ற மற்ற பகுதிகளையும் எடுத்துப் பொருத்துகிறார்கள். இந்த சம்பவம் நிறைய நடக்கிறது. நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

உடல் உறுப்புக்கொடைகள் வழங்கப்படுகின்றன

நம்முடைய பிள்ளை இறந்து போய்விட்டது நம்முடைய பிள்ளையின் உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது பல குடும்பங்களுக்கு வருகிறது என்று சொன்னால் உடல் உறுப்புகளை பொருத்துகிறார்கள் பாருங்கள். செட்டியாருடைய கண் செட்டியாருக்குத்தான், முதலியாருடைய கண் முதலியாருக்குத்தான் என்று எங்காவது பார்த்துப் பொருத்துகிறார்களா? இல்லை உடையாருடைய சிறுநீரகம் உடையாருக்குத்தான் பொருந்தும் என்று வைத்திருக்கின்றார்களா? யாருடைய உடலுக்கு உடல் உறுப்பு பொருந்துகிறதோ அவர்களுக்கு அதைப் பொறுத்துகிறார்கள். ஜாதி இல்லை, மதம் இல்லை

இதிலே ஜாதி இல்லை, மதம் இல்லை, ஏன் நாடு கூட இல்லை. இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? இதற்கு முழுக்க முழுக்க சுற்றிச் சுற்றி வளையம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாம் செயற்கையாக வைத்திருக்கிறோம். நல்ல குடும்பமா? பண்புள்ள குடும்பமா? என்றுதான் நாம் பார்க்கிறோம்.

மானிடப்பற்று, மனிதநேயம் தேவை

இங்கே அய்யா அவர்கள் சொன்னார்கள் பாருங்கள். அந்த அன்பு வற்றாத அன்பு. தேவை. மனிதநேயம் இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் மானிடப் பற்றிருக்க வேண்டும். இல்லறத்தைப் பற்றி நல்லறத்தைப் பற்றி இங்கே சொன்னார்கள். தந்தை பெரியார் அதையும் தாண்டி ஒரு படி மேலே போய் சொன்னார்கள். தொண்டறம்

இல்லறம், துறவறம் இரண்டையும் தாண்டி தொண்டறம் என்ற மூன்றாவது அறத்தை உண்டாக்கினார்கள். தொண்றடம் என்றால் வேறொன்றுமில்லை. மற்றவர்களுக்கு நீங்கள் உதவவேண்டும். சமுதாயம் உங்களுக்கு உதவினால் நீங்கள் உயர்ந்திருக்கிறீர்கள். அப்படி உயர்ந்த நீங்கள் சமுதாயத்திற்கு உங்களுடைய உழைப்பின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுங்கள். உங்களுடைய குடும்பத்திற்குக் கொடுப்பதைப் போலவே மற்றவர்களுக்கும் தாருங்கள் என்றுதான் சொன்னார்கள். ஆகவே அந்த அடிப்படையிலே இந்த மணமக்கள் இருவரும் நல்ல விவரம் தெரிந்தவர்கள் பொறி யாளர்கள். அது மட்டுமல்ல. எந்தப் பிள்ளைக்கும் அறிவுரை சொன்னால் அவர்கள் கேட்பதற்குத் தயாராக இல்லை. எல்லா வீடுகளிலும் இந்த நிலை. வயதானவர்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள்.

ஆரம்பித்து விட்டாரய்யா?

பேரப்பிள்ளைகளிடம் கூட தாத்தாவோ, பாட்டியோ அறிவுரை சொன்னால் ஆரம்பித்து விட்டாரய்யா என்று பிள்ளைகளே சொல்லுவார்கள். ரொம்ப ஓப்பனாகவே சொல்லுவார்கள்.

பிள்ளைகளைவிட பேரப்பிள்ளைகள்தான் நம்மிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசக்-கூடியவர்கள். ஆகவே நான் எந்தத் திருமணத்திற்குப் போனாலும் வந்திருக்கிறவர்களுக்கு விளக்கவுரை சொல்லுவேனே தவிர, மணமக்களுக்கு அறிவுரை சொல்லுவது என்பது கிடையாது. அதே மாதிரி நம்முடைய பொருளாளர் ஒன்றை சொன்னார்.

இன்றைய நாள் திருமண நாளாக இருக்கிறது என்பதைப் பற்றிச் சொன்னார். வேறொன்றும் சொல்லவில்லை. திருமண நாள் இல்லாத நாளில் மண்டபம் பாதி போய் வாடகைக்கு கிடைக்கும். அது மட்டும் நெருக்கடி இருக்காது.

இராகு காலம்; எமகண்டம்

இங்கு வந்திருக்கின்றவர்கள் பார்த்தீர்களேயானால் நான்கு திருமணத்திற்குப் போக வேண்டும். அய்ந்து திருமணத்திற்குப் போக வேண்டும் என்ற நெருக்கடி எல்லாம் இருக்காது. அதோடு அய்யோ நாள் பார்க்கவில்லையே., நட்சத்திரம் பார்க்கவில்லையே. இராகு காலமா? எமகண்டமா? என்பதெல்லாம் பார்க்கக் கூடிய அவசியம் கிடையாது. இங்கே நிதர்சனமாக உங்களிடம் சொல்லுகின்றோம்.

என்னுடைய திருமணத்திற்கு....

என்னுடைய திருமணத்தை தந்தை பெரியார் அவர்களும் அன்னை மணியம்மையார் அவர்களும் 52 ஆண்டுகளுக்கு முன்னாலே திருச்சியிலே நடத்தினர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரெல்லாம் வந்திருந்தார்கள். மாலை அய்ந்தரை மணிக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

என்னுடைய துணைவியார் இங்கே வந்திருக்கிறார். தாலி கிடையாது. பொட்டு கிடையாது. யாரும் பயப்படக் கூடாது. நாங்கள் எதைப் பேசுகிறோமோ அதை செய்யக் கூடியவர்கள். எதை சொல்லுகிறோமோ அதைத்தான் பேச வேண்டும். அதைத்தான் நடத்திக்காட்ட வேண்டும். என்னுடைய மணவிழா மாலை அய்ந்தரை மணிக்கு நடைபெற்றது என்ன கெட்டுப்போய்விட்டது? இன்றைக்கு என்ன நாங்கள் குறைந்துவிட்டோம்?.

மூளையிலே போட்ட விலங்கு

எதிலே எங்களுக்கு குறைவு இருக்கிறது? எங்களுக்கு மனநிறைவு இருக்கிறது. வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பயம்தான் காரணம். பல்லி கத்துவது, ஜோசியம் பார்ப்பது என்று மூளையில் பயத்தை ஏற்றி வைத்துவிட்டான். மூளையிலே விலங்கை போட்டுவிட்டான். அப்படி இருக்கக் கூடாது என்பதற்குத்தான் இந்தக் கொள்கைகள். ஒருவன் அடி எடுத்து வைக்கும்பொழுது உறுதியாக எடுத்து வைத்தால் அவன் சறுக்க மாட்டானோ. அதே போலத்தான் இந்தக் கொள்கையை ஏற்றவர்கள் சறுக்க மாட்டார்கள்.

அதே போல நம்முடைய ஜெயபால் அவர்களை எடுத்துக்கொள்ளுங்களேன். 37 ஆண்டுகாலத்திற்கு முன்பு அவர் மணமகனாக இருந்து எப்படி வாழ்க்கையைத் தொடங்கினாரோ அதைவிட பன்மடங்கு இன்றைக்கு வளர்ந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்குப் பெரிய வெற்றி. அவருக்கு மட்டுமல்ல இந்தக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.

காரணம் என்ன உழைப்பு, ஒழுக்கம் அவரைப் பொறுத்த வரையிலே எந்த விசயமாக இருந்தாலும் இந்தக் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். எங்களுடைய மூத்த மருமகனான_மகனாக இருக்கக் கூடிய ஜெயபால் கொஞ்சம் கூட கொள்கையிலிருந்து நழுவமாட்டார். அதுதான் நான் அவரிடத்தில் வைத்திருக்கின்ற மிகப்பெரிய மரியாதை.

இந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நிறைய பேர் இங்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் எதைப் பெற்றாலும் பெறாவிட்டாலும் இந்தக் குடும்பத்தினுடைய பெருமை புரோகிதத் திருமணம் நடத்துவதல்ல. இந்தக் குடும்பத்தினுடைய பெருமை சடங்கு, சம்பிரதாயம் நடத்தினோம் என்பதல்ல. இந்தக் குடும்பத்தினுடைய பெருமை இந்தக் கொள்கையைக் காப்பாற்றினோம் என்பதைத்தான் பெருமையாக நினைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது வேறு வகையிலே போனால் கோவிந்தராஜனுக்கோ, தண்டபாணிக்கோ, வீரமணிக்கோ பெரியார் தொண்டர்களுக்கோ மரியாதை அல்ல. அதற்கு மாறாக மரியாதை குறைவாக நடந்துகொள்ளுகிறீர்கள் என்பது தான் பொருள்.

பணம் சேர சேர பயம் வரும்!

யாரையும் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. பணம் எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரும். பணம் அதிகமாக அதிகமாக அவன் பெருமைபடக்கூடிய நிலை அல்ல. பணம் அதிகமாக அதிகமாக அவன் பயப்படக்கூடிய நிலைதான் இருக்கிறது. வருமான வரிக்காரனிலிருந்து திருடர்களிடமிருந்து எல்லோருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் பணம் சேர்க்கிறவனுக்கு உண்டு. அதே மாதிரி புகழ்வேட்டை பெருமை வேண்டாம். அதற்கு மாறாக மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்ட வேண்டும்.

சிக்கனமாக வாழுங்கள்

சிக்கனமாக வாழுங்கள். எளிமையாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள். காலையில்கூட நான் கேட்டேன். சம்பந்தியாரைத் திருப்திப்படுத்த மூன்று ஸ்வீட்டை வைத்திருந்தார்கள். வழக்கமாக திருமணங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவேன். நமது வீட்டுத் திருமணத்திற்காக வந்தேன். எல்லோரையும் அன்பாக உபசரித்தார்கள். மணவிழா ரொம்ப அற்புதமாக எல்லா வகையிலும் இருந்தது. அதில் ஒன்றும் குறைவே இல்லை.

பெரியாரின் சிக்கனம் தமிழ்நாட்டின் பொக்கிஷம்

நாங்கள் எல்லாம் பெரியாரிடத்தில் தயாரானவர்கள். தந்தை பெரியாரின் சிக்கனம்தான் தமிழ்நாட்டின் பொக்கிஷம் 101 காலனாவைக் கொடுத்துதான் இன்றைக்குப் பல்கலைக் கழகமாக ஆக்கியிருக்கின்றார்கள். மூன்று ஸ்வீட்டில் எதை சாப்பிடுவது? அதுவும் பாதிபேரில் டையாபடீஸ்காரர்கள்.

இலையில் வைத்து அவர்கள் பாட்டுக்குப் பரிமாறிக்கொண்டே போனார்கள். இலையில் வைத்து வேஸ்ட் பண்ணுகிற பொழுது குற்ற உணர்வு இருந்தது. எவ்வளவு பேர் சாப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். பசி என்று கேட்கிறவர்களுக்கு சாப்பாடு இல்லாத நிலை இருக்கிறது. நாம் தேவையில்லை என்று கருதி இலையை மூடுகிறோமே என்று எண்ணினேன்.

பஃபே சிஸ்டம் பரவாயில்லை

இதைவிட பஃபே சிஸ்டம் பரவாயில்லை. அவரவர்க்குத் தேவையானதை, தேவையான உணவை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் யாருக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டும் அவர்கள் சாப்பிட்டுவிட்டு மற்றவைகளை வீணாக்காமல் போய்விடுவார்கள். மூன்று ஸ்வீட் வைத்ததற்கு குற்றம் சொல்வதற்காக அல்ல.

குறை சொல்லுவதற்காக அல்ல. தோழர்கள் இந்த ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும். அந்தப் பணத்தை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

ஆடம்பரங்கள் கூடாது

எத்தனையோ பிள்ளைகள் சாப்பிடாமல் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே இவர்களுக்காக நான் சொல்லவில்லை. வந்திருக்கிற எல்லோருக்காகவும் நான் சொல்லுகின்றேன்.

நம்முடைய திருமண முறைகளில் ஆடம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். உணவு முறையிலே கூட ஆடம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையிலும் ஆடம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு சிக்கனமாக வாழ்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு வாழ்க்கை சிறப்பாக அமையும். ஜெயபாலன் அவர்களோ, தேன்மொழி அவர்களோ சிக்கனத்திற்கு மாறுபட்டு இருக்கக் கூடியவர்கள் அல்லர். ரொம்பத் தெளிவாக இருக்கக் கூடியவர்கள்.

எனவேதான் எல்லா வகையிலும் நீங்கள் ஆடம்பரத்தை ஒதுக்கி வைத்து எளிமையாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

வரவுக்குட்பட்டு செலவு செய்யுங்கள்

வரவுக்கு உட்பட்டு செலவழிக்க வேண்டும் என்ற தந்தை பெரியாரின் தத்துவம் அவருடைய வாழ்வியல் என்பது மிக மிக முக்கியமானது. யாரும் கை நீட்டி வாழ வேண்டிய அவசியமில்லை. கடன் கேட்டு வாழ வேண்டிய அவசியமில்லை. யார் வரவுக்குட்பட்டு செலவு செய்கிறார்களோ அவர்கள் அத்துணை பேரும் கை நீட்ட வேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளைகளுக்கும் நடத்துவேன்

நீங்கள் இளைய தலைமுறையினர், துணிச்சலாக வாழ வேண்டும். மூன்றாவது தலைமுறையினர், நான்காவது தலைமுறையினரையும் சிறு குழந்தைகளாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அப்படிப்பட்ட நிலையிலே உங்களுடைய மணவிழாவை நான் நடத்தி வைக்கின்ற வாய்ப்பைப் பெறுகிறபொழுது நிச்சயமாக உங்களுடைய பிள்ளைகளுக்கும் திருமணத்தை நடத்தி வைக்கக் கூடிய வாய்ப்பைப் பெறுவோம்.

அது எங்களுக்கு மகிழ்ச்சி. பேரப்பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி. இந்த மணவிழாவிற்கு வந்திருக்கின்ற அத்துணைபேரையும் மீண்டும் வரவேற்று, இந்த மணமுறையை அறிமுகப்படுத்தியவர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இந்த மணமுறைக்கு சுயமரியாதை மணமுறைக்கு சட்ட வடிவம் இல்லாமல் இருந்தது. இந்த மணமுறை செல்லாது என்று சொன்னார்கள். நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாங்கள் அந்தக் காலத்தில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல.

தி.மு.க ஆட்சியில் சட்ட வடிவம்

பேரறிஞர் அண்ணா அவர்களது தலைமையிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடனே, அவர்கள் இந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கை என்று கூறி சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

நடந்த திருமணங்களும் செல்லும். இனி நடக்கவிருக்கின்ற திருமணங்களும் செல்லும் என்று சொன்னார்கள். எனவே அப்படிப்பட்ட முறையிலே இந்த மணமுறை நடக்கவிருக்கிறது. மணமக்கள் இப்பொழுது உறுதிமொழி கூறி இங்கே வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை நடத்திக்கொள்ள இருக்கிறார்கள்.

பெரியார்-அண்ணாவை நினைத்து...

எனவே தந்தை பெரியாரை நினைத்து, அண்ணாவை நினைத்து, அவர்களுடைய தொண்டுக்கு வீர வணக்கம் செலுத்தி மணமக்கள் வாழ்க்கை இணை நல ஏற்பு விழாவை நடத்திக்கொள்கிறார்கள்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------------ “விடுதலை” 9-6-2010



0 comments: