Search This Blog

20.6.10

பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா?

மதுரை கருப்புச்சட்டை மாநாட்டை வைத்தியநாதய்யர் கூட்டம் எரித்தது
காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கூட்டமோ பாலியல் வன்முறை
மதுரையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

மதுரையில் வைத்திய நாதய்யர் கூட்டம் மதுரை கருப்புச்சட்டைப் படை மாநாட்டைத் தீ வைத்து கொளுத்தினர். இன்றைக்கு காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கூட்டமோ பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பார்ப்பனர்களே வன்முறையாளர்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

மதுரை செல்லூர் பகுதியில் 9.5.2010 அன்று நடைபெற்ற மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநாடு, குடிஅரசு தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மதுரையில் இப்படி ஒரு விழா

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இந்த மதுரை செல்லூர் பகுதியில் மதுரை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநாடு அறிவு ஆசான் தந்தை பெரியார் நடத்திய குடிஅரசு ஏட்டினுடைய தொகுதிகள் களஞ்சியம் புத்தக அறிமுக விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கே சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன.

இந்தப் பகுதியில் நல்லதோர் எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டை உருவாக்கி நிறைய குடிஅரசு தொகுதிகளையும் இங்கே பரப்பி, மூடநம்பிக்கை ஒழிப்புகளையும் இங்கே நடைமுறையிலே செய்துகாட்டி தீமிதி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் மாநாட்டு களப்-பணியாளர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த மதுரையிலே இப்படி ஒரு பகுத்தறிவு திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கியதற்குப் பிறகு இப்பொழுது எங்கள் அழகர் (கழகத்தோழர்) முயற்சியினாலே உண்மையான அழகர் முயற்சியினாலே இங்கே சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.

இவரும் நெருப்பில் இறங்குவார். நீச்சல் போடுவார். ஆனால் இவரே இயங்குவார். அந்த அழகரைப் போல இன்னொருவர் தூக்கிக்கொண்டு வந்து பொம்மை விளையாட்டைப் போன்ற நிலை இருக்காது.

எல்லாம் பிள்ளை விளையாட்டே!

வடலூர் வள்ளலார் சொன்னார். இந்தத் திருவிழாக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லுகிற பொழுது எல்லாம் பிள்ளை விளையாட்டே என்று அழகாக ஆறாம் திருமுறையிலே சொன்னார்கள்.

கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் நம்முடைய நாட்டிலே கண்மூடி வழக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையிலே இந்த மதுரையிலே நல்ல பகுத்தறிவு இருக்கிறது. சிலர் கேட்கலாம்!

உடனே கேட்கலாம். லட்சோப லட்சம் மக்கள் அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது வந்தார்கள். இங்கே அவ்வளவு கூட்டம் கூடியதா? என்று கேட்கலாம். தயவு செய்து பொது மக்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பக்தர்கள் ஏராளம் இருக்கலாம். ஆனால் பகுத்தறிவாளர்கள் இவ்வளவு பெரிய அளவிலே திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது. வெளியிலே துணிவோடு சொல்ல முடியாதவர்கள் கூட இவர்கள் கேட்கின்ற கேள்வி நியாயமாகத்தானே இருக்கிறது. இது சரியாகத்தானே இருக்கிறது. பெரியார் சிலை திறப்பு

நமக்குத்தான் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளக்கூடிய துணிச்சலும், தெம்பும் இல்லையே என்று மனதுக்குள்ளே நினைக்கக் கூடியவர்களும் ஏராளம் உண்டு.

அருமைத் தோழர்களே இந்த மதுரையிலே இப்படி கருப்புச்சட்டைத் தோழர்கள் ஊர்வலமாக இங்கே வந்தார்கள். அதேபோல அதற்கு முன்னாலே வட மண்டல தலைவர் அருமைச் சகோதரர் இசக்கி முத்து அவர்கள் சுட்டிக்காட்டியது போல பல ஆண்டுகளுக்கு முன்னாலே தந்தை பெரியார் அவர்களுடைய சிலை. அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களை வைத்துக்கொண்டே திறக்கப்பட்டது.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், மதுரை மேனாள் மேயர் முத்து அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக அன்றைக்கு நடந்தது. அன்றைக்கு காலையிலே கருப்புச்சட்டை மாநாடு நடை-பெற்றுத்தான் மாலையிலே இந்த சிலை திறப்பு விழா நடைபெற்றது.

அதற்குப் பிறகு எத்தனையோ நிகழ்ச்சிகள். இன்றைக்கும் இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சி இருக்கிறதென்று சொன்னால் எவ்வளவு மகிழச்சி நமக்கு. உங்களில் பலபேருக்குத் தெரியாது. இளைஞர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

1948-கருப்புச்சட்டை மாநாடு

1948_லே வைகை ஆற்று மணலிலே தந்தை பெரியார் அவர்களது இயக்கம் ஒன்றாக இருந்த காலத்திலே அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகம், பிளவு படாத நேரத்திலே திராவிடர் கழகத்தின் சார்பாக மாநாடு நடைபெற்றது.

அதாவது 1948இல் முதலாவது கருப்புச்சட்டைப் படை மாநாடு என்ற பெயராலே நடைபெற்றது. 1946இல்தான் கருப்புச்சட்டை அமைப்பே உருவாயிற்று.

திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச்சட்டை அணியக் கூடிய அந்தப் பழக்கமே வந்தது. அதற்கு முன்னாலே ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக சேலம் மாநாட்டிலே 1944லிலே உருவானது.

முதல்நாள் மாநாட்டிற்கே பெரும் கூட்டம்

1945இல் திருச்சியில் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதிலே அறிவிக்கப்பட்டதுதான் கருப்புச்சட்டை அணியவேண்டும் என்ற ஒரு திட்டமும், அதனுடைய வேலை அமைப்பும் உருவானது. கருப்புசட்டை அணிவது என்பது நம்முடைய இன இழிவை எடுத்துக்காட்டு-வதற்காக_சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காக_-நம்முடைய மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை எடுத்துச்சொல்வதற்காக இதே இடத்திலே சற்று கொஞ்சம் தள்ளிதான் அந்தக் கருப்புச்சட்டைப் படை மாநாடு நடைபெற்றது.

என்ன நடந்தது? முதல்நாள் மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுக்க இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்தனர்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் தளபதி அழகிரிசாமி, அதே போல நடிகவேள் ராதா, பேராசிரியர், கலைஞர் என்று இப்படி பல்வேறு தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்ட அந்த மாநாட்டிலே முதல்நாள் மாநாடு மிக வெற்றிகரமாக நடைபெற்று விட்டது.

எப்பொழுதுமே இரண்டு நாள் மாநாடு சனி, ஞாயிறு நம்முடைய இயக்க வரலாற்றிலே முதல்நாள் மாநாட்டை விட அடுத்த நாள் மாநாட்டிலே மிகப்பெரிய அளவுக்கு கூட்டம் பல மடங்கு இருக்கும்.

இது வழமையான ஒன்று. விசயம் தெரிந்தவர்களுக்கு புரியும். ஆகவே முதல்நாள் மாநாடே அந்த அளவுக்கு களைகட்டிவிட்டது என்று சொன்னவுடனே பார்ப்பனர்களால் அதை செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை.

மதுரை வைத்தியநாதய்யர் தூண்டுதல் பெயரில்...

மதுரை வைத்தியநாதய்யர் என்ற பார்ப்பனர் வழக்கறிஞர். அவருடைய மகன் சங்கரன் என்பவர் கூட, மத்திய சட்டப் பேரவை தொகுதியினுடைய உறுப்பினராகக்கூட இருந்ததுண்டு. காங்கிரசைக் காட்டி வைதீகர்களை எல்லாம் திரட்டுவதற்குப் பதிலாக சில காலித்தனம் செய்யக் கூடியவர்களை எல்லாம் ஏவிவிட்டு, எப்படியும் இந்த மாநாடு அடுத்தநாள் நடக்கக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக சதித்திட்டம் தீட்டி, திடீரென மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்தார்கள். மாநாட்டுப் பந்தல் ஒரு புறம் எரிந்து கொண்டிருக்கிறது.

கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்

மாநாட்டிற்கு போதிய காவல்துறை பாதுகாப்பும் அன்றைக்குக் கிடையாது. என்றைக்குமே திராவிடர் கழகத்துக்காரர்கள், கருப்புச்சட்டைக்காரர்கள் காவல் துறையை எதிர்பார்ப்பதில்லை. எங்களுடைய கட்டுப்பாட்டிற்கு மேலாக காவல்துறை கட்டுப்பாடு என்பது அதிகமானதல்ல. ஆகவே கருப்புச் சட்டைக்காரன் காவலுக்கே கெட்டிக்காரன். நாட்டைப் பாதுகாக்கிறவன் திராவிடர் கழகத்துக்காரன். இன்றைக்கு அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறாரே மாண்புமிகு, மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களுடைய ஆட்சியைப் பாதுகாக் கின்றவர்கள்.

இனப் பாதுகாப்பிலிருந்து...

இயல்பாகவே இனப்பாதுகாப்பிலே இருந்து இனநலம் பேணுகிற ஆட்சியைப் பாதுகாக்கின்ற பணியை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள். எனவே நாம் பாதுகாப்பை பற்றிக் கவலைப் படாதவர்கள். சாணி உருண்டைகள்- எங்களுக்கு ஏவுகணைகள்

அது மட்டுமல்ல அந்த காலகட்டத்திலும் சரி, இந்த காலகட்டத்திலும் சரி திராவிடர் கழக மேடைகளிலே எர்ப்புகள் வந்தால் சாணி உருண்டைகள் வந்தால், இவை எல்லாம் எங்களுக்கு வரவேற்பு ஏவுகணைகள் அந்தக் காலத்தில். இப்பொழுதும் அவற்றை மறந்துவிடவில்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. தலைவரிலிருந்து கடைசி தொண்டர்வரை சொல்லிவிட்டு வருவதெல்லாம் திரும்பி வரமாட்டோம் என்று சொல்லிவிட்டுத்தான் புறப்படுவதுண்டு.

எதிரிகளைப் பார்த்து வீரம் செறிந்த உணர்வுகளை அப்பொழுது பெறுவார்கள். மேடையிலே முழக்கமிடுவார்கள். சிங்கம்போல் கர்ஜிப்பார்கள். மேடையிலே பேசும்பொழுது அண்ணன் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் சொல்லுவார்கள்.

மறைந்திருந்து கற்களை வீசுகிறீர்களே...!

கற்களை எங்கள் மீது வீசுகிற எதிரிகளே மறைந்து நின்று வீசுகிறீர்களே! உங்களுக்குத் தைரியம் இருந்தால் நேரிலே வந்து நின்று பாருங்கள். வீசுங்கள்.

ஆனால் ஒவ்வொரு கல்லும் என்ன சொல்லும்? நீங்கள் ஒளிந்து கொண்டு வீசுகின்ற ஒவ்வொரு கல்லும் சொல்லும். நாங்கள் நெஞ்சை உயர்த்தித்தான் நிமிர்த்தித்தான் நிற்கையிலே. ஒவ்வொரு கல்லும் என்னைப் பார்த்து சொல்லும். அழகிரியே சற்று உரத்துப் பேசு என்று தான் சொல்லும் என்று அவர்கள் சொல்லுவார்கள் (கைதட்டல்). அதன்படியே உரத்துப் பேசுவார்கள். எனவே வெற்றிகரமாக முடியும்.

காவல்துறையினர் குறுக்கிட்டனர்

அப்படித்தான் அன்றைக்கு நடைபெற்றது. இன்றைக்கு இந்த திறந்தவெளி மாநாட்டைப் போல வைகை ஆற்றிலே மாநாட்டை நடத்திக்-கொண்டிருக்கின்ற நேரத்தில் அரசாங்கம் குறுக்கிட்டது. கலகம் அதிகமாகிவிட்டது. நீங்கள் மாநாட்டை நிறுத்த வேண்டுமென்று காவல் துறையினர் ஆணையிடுகின்றனர். இதற்கிடையியே ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள். அந்தக் காலத்தில் நடந்த ஆரிய நாளேடுகள். அதேபோல தினமணி போன்ற ஏடுகள். அன்றைக்கு திட்டமிட்டே வைத்தியநாதய்யர் கும்பலால் ஒரு செய்தி கொடுக்கப்பட்டது.

இந்த கருப்புச்சட்டைப் படை மாநாட்டிற்கு மதுரைக்கு வந்த கருப்புச்சட்டைக்காரர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்கள். கோவிலில் கும்பிடச் சென்ற பெண்களை அவமரியாதையாகப் பேசினார்கள். கொச்சையாகப் பேசினார்கள் என்று.

திட்டமிட்டே ஓர் அவதூறைப் பரப்பினார்கள். இல்லாத ஒரு பழியை எங்கள்மீது, எங்கள் தோழர்கள் மீது திட்டமிட்டே ஒரு அவதூறைப் பரப்பினார்கள். மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்களின் சட்டையைக் கிழித்து, மண்டையை உடைத்து, காயங்களை உண்டாக்கி அதை நியாயப்படுத்துவதற்காக பக்திக்காக வந்த பெண்களை இவர்கள் அவமரியாதை செய்தார்கள் என்று ஓர் அவதூறைப் பரப்பினார்கள்.

உள்ளபடியே திராவிடர் கழகத்துக்காரர்கள்_இங்கு நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போல நம்முடைய சகோதரர் மானமிகு வேங்கடபதி அவர்கள் எடுத்துச்சொன்னதைப் போல, திராவிடர் கழகத்துக்காரன் என்றால் அவனைவிட தலைசிறந்த ஒழுக்கவாதி வேறு இருக்க முடியாது.

கடவுள் மறுப்பாளன் என்று சொன்னால்...

கடவுள் மறுப்பாளன் என்று சொன்னால் தன்னம்பிக்கைக்காரன், மூடநம்பிக்கையாளன் அல்ல என்று பொருள். எனவே மாநாட்டிற்கு வந்தவர்கள் ஏதோ ஒருவர், இருவர் நகரத்திற்குள்ளே போனார்கள். நகரத்தை சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றவர் ஓரிருவர்கள் உண்டு. இடைவெளியிலே அவர்கள் எல்லாம் தாக்கப்பட்டார்கள்.

கோவிலுக்குச் சென்றவர்கள் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று இப்படி எல்லாம் அசிங்கமாக, எவருக்கும் கோபம் வருவதைப் போல கற்பனையான, பொய்யான செய்திகளை எல்லாம் போட்டார்கள்.

மீண்டும் கலவரம் வெடிக்கட்டுமே! மீண்டும் கலவரம் வெடிக்கட்டும். யார் யார் கருப்புச்சட்டைக்காரர்கள் வெளியூரிலிருந்து வருகிறார்களோ அவர்கள் எல்லாம் தாக்கப்படட்டும் என்பதற்காகத்தான் அன்றைக்குச் சொன்னார்கள்.

பெரியோர்களே! அனைத்துக் கட்சி நண்பர்களே! உங்களுக்குத் தெரியும். திராவிடர் கழகத்துக்காரன் பெண்களை மதிப்பதைப் போல வேறு எவரும் எந்த இயக்கமும் மதிக்க முடியாது.

சுயமரியாதை இயக்கக் கொள்கையே!

குடிஅரசினுடைய கொள்கையே ஜாதி ஒழிப்பு _பெண்ணுரிமை காத்தல், சுயமரியாதை இயக்கமே அதற்காகத்தான் பிறந்தது. ஏனென்றால் பிறவி பேதம் கூடாது என்பது முதல் கொள்கை.

பிறப்பினால் பேதம் இருக்கக் கூடாது. உயர்ந்த ஜாதி பார்ப்பான்; தாழ்ந்த ஜாதி பறையன் என்று நம்முடைய சகோதரர்களை, மனிதர்களை சொல்லுகிறார்களே, அதுவும் பிறவி பேதம் அதுபோலவே கணவன் எஜமானன். மனைவி அடிமை. அவன் ஆண் எஜமானன். பெண் அடிமை என்றிருக்கிறதே அதுவும் பிறவி பேதம்தான் என்று எடுத்துச்சொல்லத்தான் சுயமரியாதை இயக்கம் பிறந்தது.

சுயமரியாதை கொள்கையைப் பரப்புவதற்குத்தான் குடிஅரசு தனது பணியைத் தொடங்கியது. இன்று வரையிலே அதனுடைய குரல் கேட்டுக்-கொண்டி ருக்கிறது.

எனவே அப்படிப்பட்டவர்கள் பெண்களிடம் தவறாக நடப்பதற்கு அதுவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பெண்களிடத்திலே இப்படி நடந்தார்கள் என்று சொல்வதெல்லாம் அபாண்டமான, அபாரமான கற்பனைகள் ஆகும்.

ஆனால் அதைக் கேட்டு ஆத்திரப்பட்ட சிலரும் உண்டு. உண்மை அல்லாதவற்றை அன்றைக்கு செய்தார்கள். ஆனால் இன்றைக்கு என்ன நிலை? காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகன் தேவநாதன் செய்ததென்ன?

கோயில்களுக்கு வந்த பெண்களை எல்லாம் கர்ப்ப கிரகத்திற்குள் கடவுளுக்குப் பின்னாலே அழைத்துப் போய் அவன் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டான். ஏனென்றால் இப்பொழுதெல்லாம் சாமியார்கள் ஆனந்தாக்கள், நித்யானந்தாக்கள் இவர்கள் எல்லாம் தவறாக நடப்பதற்குப் பெயர் பாலியல் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

பாலியல் செய்யக் கூடிய கூடாரமாகத்தான் மடத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக தனி இடமே தேவையில்லை என்று அர்ச்சகன் கோவிலையே தேர்ந்தெடுத்தான்.

------------------தொடரும் ”விடுதலை” 18-6-2010


காலாவதியான மருந்து, உணவுகளை விட காலாவதியான கருத்துகளே மூளையைக் கெடுக்கிறது!
மதுரையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

காலாவதியான மருந்து, உணவு இவை உடலுக்கு மட்டும் கேடு. ஆனால் காலாவதியான கருத்துகளோ அறிவுக்கு, மூளைக்குக் கேடு என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

பாலியல் ஆராய்ச்சியாம்!

இப்பொழுதெல்லாம் சாமியார்கள், ஆனந்தாக்கள், நித்யானந்தாக்கள் இவர்கள் எல்லாம் பெண்களிடம் தவறாக நடப்பதற்குப் பெயர் பாலியல் ஆராய்ச்சி என்று சொல்லுகிறார்கள். பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்யக்கூடிய கூடமாகத்தான் மடத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.

அபாண்டமாக எங்கள்மீது பழி சுமத்திய ஒரு காலகட்டம் உண்டு. ஆனால் உண்மைகள் ஒருநாள் வெளியே வரும் என்பதற்காக அர்ச்சகர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தின் முன்னாலே நிறுத்தப்படுகிறார்கள்.

கொள்ளையடிப்பவர்கள் கோயிலிலும்-மடத்திலும்!

கடவுள் பெயராலே கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிப்பவர்கள் கோயிலிலும் மடத்திலும் இருக்கிறார்கள். எனவே இப்பொழுது சொல்லுங்கள். பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்று.

இந்த இயக்கத்தைப் பொறுத்த வரையிலே இது ஓர் அறிவு இயக்கம். மனிதநேய இயக்கம். எனவே ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கம்.

பக்தி இல்லாவிட்டால் எந்த நட்டமும் இல்லை. பெரியார் அவர்கள் அழகாகச் சொன்னார்கள். நான் கடவுளை நம்பாதவன். கடவுளை மறுக்கிறவன். கடவுள் இல்லை என்று சொல்லுகிறேன்.

ஏன் இல்லை என்று சொல்லுகிறேன் என்பதற்கு பெரிய விளக்கம் ஒன்றும் தேவையில்லை. இல்லாததை இல்லை என்று சொல்லுகின்றேன். காற்றை இல்லை என்று சொல்லுகிறோமா? சூரியனை இல்லை என்று சொல்லுகிறோமா? அதுபோல மற்றவைகளை இல்லை என்று சொல்லுகிறோமா?

வாயு பகவான்

நேரடியாகப் பார்க்க முடியாதவைகளைக் கூட உணருகின்றோம். இதோ என் பக்கத்திலே மின்சார விசிறி சுழன்று கொண்டிருக்கிறது. இது அறிவுத் தெளிவு இல்லாத காலத்திலே காற்றை வாயு பகவான் என்று சொன்னார்கள்.

காற்று வேகமாக அடித்தது. குகையிலே இருந்த மனிதன், கல்லிலே இருந்த மனிதன், பொந்திலே வாழ்ந்த மனிதன் மிரண்டு போன மனிதன் காற்றைப் பார்த்துக் கன்னத்திலே போட்டுக்கொண்டான்.

புரியாத காரணத்தாலே அதை கடவுளாக்கி வாயு பகவான் என்று சொன்னான். ஆனால் இன்றைக்கு வாயு பகவான் நம்முடைய அற்புதமான வேலைக்காரன். மனித அறிவின் வெற்றி, பகுத்தறிவின் வெற்றி. இங்கே தான் இருக்கிறது.

இந்த மின்சார விசிறி சுழலுகிறது என்று சொன்னால் ஸ்லோவில் வைத்தால் வாயு பகவான் ஸ்லோவில்தான் சுற்ற வேண்டும். வாயு பகவானுக்கு ஃபாஸ்டாக சுற்றுகிற உரிமையே கிடையாது. நாம் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டால் வாயு பகவான் வர முடியாது. அக்னி பகவான் அது போலத்தான் அக்னி பகவான். ஒரு காலத்திலே மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தன. உடனே நெருப்பு உண்டானது. புரியாத ஆதி மனிதன் இதைக் கன்னத்திலே போட்டு, கீழே விழுந்தான். வேண்டிக்கொண்டால் ஒரு வேளை அக்னி பகவான் போய்விடுவான் என்று. அது அறிவு தெளிவில்லாத காலம். அதுதான் காட்டுமிராண்டி காலம்.

அக்னி பகவான் எங்கேயிருக்கிறான்? பீடி, சிகரெட் பிடிக்கிற பழக்கமுள்ளவர்கள் இருந்தால், பையிலே, கையிலே, மடியிலே அக்னி பகவான் உள்ளே இருக்கிறான். வத்தி பெட்டியை எடுத்து வத்திக் குச்சியில் உரசினால் உடனடியாக அக்னி பகவான். அங்கே வருகிறான். வா இந்த பக்கம் என்று சொன்னால் வருகிறேன், கொளுத்துகிறேன் என்று வருவான். சிவகாசியில் அக்னி பகவான்

அக்னி பகவானை பெட்டிக்குள்ளே வைத்து அடைப்பதுதான் சிவகாசியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள். நெருப்பை அவர்கள் அளந்து உள்ளே வைத்திருக்கிறார்கள்.

இன்னும் கேட்டால் அளவுக்கு மீறி அக்னி பகவான் தன்னுடைய லீலைகளை ஆரம்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தீயணைப்புத் துறையையே வைத்திருக்கின்றார்கள்.

தீயணைப்புத் துறை யாரை ஒடுக்க?

ஓர் அமைப்பையே அறிவுபூர்வமாக உருவாக்கி யிருக்கிறார்கள். எங்கெல்லாம் அக்னி பகவான் வருகிறானோ அங்கெல்லாம் தீயணைப்புத் துறையும் வரும்.

ஒரு காலத்திலே அறிவுத் தெளிவில்லாத போது இவைகளை எல்லாம் கடவுள்கள் என்று கருதிக்கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு எங்களுடைய தோழர்கள் கார் இழுத்தார்கள். யாரையாவது புண்படுத்துவ தற்காகவா? இல்லை எங்களுடைய தோழர்களின் முதுகு புண்பட்டிருக்கிறது. காரணம் உங்களைப் பண்படுத்துவதற்காக நாங்கள் எங்களை வருத்திக்கொள்கிறோம்.

இன்னொருவரை நாங்கள் வருத்துவதில்லை. அதுதான் சுயமரியாதைக்காரன், பகுத்தறிவாளனின் ஆழ்ந்த பணியாகும்.

எங்களுடைய தோழர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தார்கள். எங்களுடைய தோழர் சட்டத்துறை தலைவர் மகேந்திரன் அவர்கள்கூட தீச்சட்டியைத் தூக்கிக் காட்டினார்.

அதை ஒளிப்பட நிபுணர் படம் எடுத்தார் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் தூக்கியது ஒரு பெரிய சாதனை அல்ல. யார் வேண்டுமானாலும் தூக்கலாம்.

யார் தூக்கினால் என்ன? அது சுடாது என்று சொல்லும்பொழுது யார் தூக்கினால் என்ன? இதே மதுரையிலே நான் தீச்சட்டி ஏந்தியது பத்திரிகையிலே வந்திருக்கிறது.

எதற்காகச் சொல்லுகிறோம். பக்தி என்ற பெயராலே புத்தியை அடகு வைக்கக் கூடிய ஒரு சூழல் நாட்டிலே ஏற்பட்டிருப்பது தவறு. அறிவார்ந்த சிந்தனைகள் வரவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம். அண்மையிலே கடந்த ஒரு மாத காலமாக நம்முடைய நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்ற ஒரு செய்தி. அன்றாட தாள்கள், தொலைக்காட்சி செய்திகள், ஊடகங்கள் இவைகளிலே வந்திருக்கக் கூடிய செய்தி உங்களுக்கெல்லாம் தெரியும்.

காலாவதியான மருந்துகள்

காலாவதியான மருந்துகள், அந்த மருந்துகளைப் பிடிக்க வேட்டைகள். காலாவதியான மருந்துகளை விற்ற நபர் பலரைப் பிடித்து சிறையிலே அடைக்கக் கூடிய அளவிற்கு நிலைமைகள் ஏற்பட்டது.

இப்பொழுது வழக்குகள் வேகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இது முடிவதற்கு முன்னாலே இந்த பரந்த ஞானபூமியிலே முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலகர்கள் இவர்கள் எல்லாம் இல்லாமல், மீனாட்சி சுந்தரேசுவரர், அழகர் உள்பட இப்படி எல்லோரும் இருக்கக் கூடிய இந்த நாட்டிலே காலாவதியான உணவு_அடுத்தபடியாக இன்றைக்குப் பரிசோத னைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

காலாவதியான உணவை உண்டால் உடலுக்குக் கேடு. காலாவதியான மருந்தை எடுத்துக்கொண்டால் அதுவும் உடலுக்குக் கேடு. இவை இரண்டும் உடலை வருத்தக்கூடியது. ஆனால் நண்பர்களே, இந்த அறிவியல் காலத்தில் அக்னி_நெருப்பு வத்திப்பெட்டியில் வந்த நேரத்தில், சிகரெட் லைட்டரில் தட்டியவுடனே நெருப்பு வரக்கூடிய இந்தக் கட்டத்திலே இன்னமும் திருவண்ணாமலை தீபம் என்று சொல்லி அண்ணாமலைக்கு அரோகரா என போட்டுக்கொண்டிருக்கிறானே.

பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுகிறார்கள். அங்கே நெய்யை ஊற்றுகிறார்கள் என்றால் இதை விட மோசமான விளையாட்டு வேறு இருக்க முடியுமா? எவ்வளவு பெரிய அக்னி பகவான் வந்தாலும் அதை அணைக்கக் கூடிய ஆற்றல் தீயணைப்புத்துறைக்கு உண்டு.

தீயணைப்பு நிலையம் உருவான இந்த காலகட்டத்திலே அக்னி என்பது கடவுள் அல்ல என்று தெரிந்துகொள்ளவதற்குப் பதிலாக இதைவிட காலாவதியான கருத்து வேறு இருக்க முடியுமா? எண்ணிப் பார்க்க வேண்டும்.

உங்களுடைய அறிவைக் கெடுக்கும்!

காலாவதியான மருந்தை விட, காலாவதியான உணவை விட, காலாவதியான கருத்துகளை நீங்கள் பிடித்துக்கொண்டிருந்தால், அது உங்களுடைய உடலை மட்டும்தான் கெடுக்கும்.

இதுவோ உங்களுடைய அறிவைக் கெடுக்கும். உங்கள் மூளையை அரிக்கும். உங்களை என்றைக்கும் வளரவிடாமல் தடுக்கும். ஆகவேதான் திராவிடர் கழகம் செய்கின்ற பணி மிக முக்கியமான பணி. சாதாரணமான பணி அல்ல. பிள்ளை விளையாட்டு என்று சொல்லுகிறபொழுது ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்!

பக்தி வந்தால் புத்தி போய்விடும். பெரியார் ரொம்ப சுலபமாகச் சொன்னார். புத்தி வந்தால் பக்திப் போய்விடும் என்று அழகாகச் சொன்னார்கள். அதைத்தான் குடிஅரசு ஏட்டிலே பக்கம் பக்கமாக விளக்கி பல்வேறு பிரச்சாரங்களை செய்தார்கள். வேறொன்றும் அதிகமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சில வாரங்களுக்கு முன்னாலே இதே மதுரையிலே நடைபெற்ற மூடநம்பிக்கை நிகழ்ச்சி.

கள்ளழகர் ஆற்றில் இறங்கினாராம்!

தொலைக்காட்சியை கண்டுபிடித்தது மீனாட்சி சுந்தரேசுவரர் அல்ல. அல்லது கள்ளழகர் அல்ல. கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கு 10 லட்சம் மக்கள் திரண்டார்கள் என்று நம்முடைய ஊடகங்களிலே காட்டுகிறார்கள். இது புத்தி இல்லாதவர்களின் சிந்தனை அல்லவா? நாம் சொல்லும் பொழுது கோபப்படாதீர்கள். ஆத்திரப்படாதீர்கள். மீனாட்சிக்கும், சுந்தரேசு-வருக்கும் இப்பொழுது திருக்கல்யாணம் நடந்தது என்று சொல்லுகிறார்கள். இரண்டு பேரும் வந்து உள்ளபடியே திருக்கல்யாணம் பண்ணிக்கொண்டால் நமக்கொன்றும் ஆட்சே பணையே இல்லை. நமக்கு என்ன விரோதமா? நமக்கு என்ன குரோதமா? இல்லையே.

இது பொம்மை விளையாட்டு!

இரண்டு பேர் பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். பார்ப்பான்தானே தாலி கட்டுகிறான். வண்ண வண்ண உடைகளை உடுத்திக்கொண்டு இப்படி ஒரு பார்ப்பனர் வருகிறார். அப்படி ஒரு பார்ப்பனர் வருகிறார்.

சின்னப் பிள்ளைகள் எப்படி பொம்மையை வைத்து விளையாடினால் நாம் அதைக் கண்டு பார்த்துக்கொண்டிருப்போமா?

பெரியவர்கள் எத்தனை ஆண்டுகள் விளையாடுவது?

அது மாதிரி பெரியவர்கள் இதை எத்தனை ஆண்டு காலம் விளையாடிக்கொண்டிருப்பது? அதுதான் வேதனை. இதைவிட காலாவதியான கருத்து வேறு உண்டா? மக்களுக்கோ இது ஒரு பெரிய வேடிக்கை கடவுள் நம்பிக்கை. அரோகரா, கோவிந்தா என்ற சத்தம் போடுகிறான். பக்தி ரசம் சொட்டச் சொட்ட பகவான்கள் மெய் மறந்தார்கள் என்று சொல்லுகின்றான். ஆணும் மெய் மறந்து, பெண்ணும் மெய் மறந்தால் என்ன ஆவது?

கிரகத்தை ஆராய்கிறான் மனிதன்

திருவிழாக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு மிகப் பெரிய சிரமம். இது அறிவுக்காலம். நிலவைப் பிடித்து விட்டான் மனிதன். செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

நம்முடைய நாட்டிலே இருந்து ராக்கெட்டுகள் பறக்கின்றன. களத்திலே இருந்து அனுப்புகிறார்கள். அதுவும் வெளிநாட்டு கிரயோஜனி எஞ்சின்களை விட இங்கேயே தயாரிக்கப்பட்ட கிரயோஜனிகளை அனுப்புகிறார்கள். அதுவும் பறக்கிறது. பணியை செய்கிறது.

விஞ்ஞானிகள் இப்படி முயற்சி செய்யும்பொழுது முதல் முயற்சியே வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதில்லை. சில தவறுகள் நடக்கலாம். அதிலே தோல்வி ஏற்படலாம். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு பல தோல்விகள் ஏற்பட்ட பிறகுதான் அவர் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் வெற்றி பெற்றார் என்பது வரலாறு.

அழுக்கு மூட்டை விஞ்ஞானி

ஆனால் இங்கே இருக்கக் கூடிய விஞ்ஞானி அழுக்கு மூட்டை சிந்தனைக்காரர். காலாவதியான கருத்துகளை மூளையிலே ஏற்றுக்கொண்டவர். இவர் விஞ்ஞானி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வந்து பொறுப்பேற்றவர்.

அதன்பிறகு இவர் பொறுப்பேற்று வெளியிடப்-பட்ட ஏவுகணை தோல்வி அடைந்தது. இவர் என்ன சொல்ல வேண்டும்? பரவாயில்லை, அடுத்த ஏவுகணையை விடுவோம், முயற்சி செய்வோம் என்று சொல்ல வேண்டும்.

படித்தவர்களையும் பிடித்து ஆட்டுகிறது

ஆனால் அறிவியல் படித்த இந்த விஞ்ஞானி என்ன சொல்லுகிறார்? எல்லாம் பகவத் கீதையிலே கண்ணன் சொல்லியிருக்கின்றான். கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்று.

ஏனய்யா, இதை யார் சொல்லுவது? படிக்காத குப்பனும், சுப்பனும் சொன்னாலே கேலி செய்வோம். பலனை எதிர் பார்க்காமலா விண்வெளி பயணத்தை செய்வது? எனவே இந்த காலாவதியான கருத்தும், சிந்தனையும் பாமர மக்களை மட்டும் தாக்கவில்லை. படித்தவர்களையும் பிடித்து ஆட்டுகிறது.

(தொடரும்) “விடுதலை” 19-6-2010

0 comments: