திராவிடர் இயக்கமும், இஸ்லாமிய இயக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
காயிதே மில்லத் பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்
திராவிடர் இயக்கமும், இஸ்லாமிய இயக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னை மண்ணடியில் நேற்று (8.6.2010) இரவு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 115ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
காயிதே மில்லத் 115ஆவது ஆண்டு பிறந்தநாள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களுடைய 115ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
இங்கே பேசியவர்களின் அருமையான சொற்பொழிவுகளைக் கேட்கக் கூடிய வாய்ப்பும் எங்களைப் போன்றவர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய பல்வேறு செய்திகளையும் கூட இங்கே அருமையாக எடுத்து வைத்தார்கள்.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
இங்கே பேசிய அருமைத் தோழர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இறுதிவரையிலே இருந்து இப்பொழுது நிறைவுரையாற்றப் போகிறேன் என்று என்னைச் சொன்னார்கள்.
நிச்சயமாக இந்தக் கூட்டத்திற்கு மட்டுமல்ல. இந்த சமுதாயத்திற்கும் இறுதி வரையிலே மாபெரும் துணையாக இருக்கக் கூடியவர்கள் நாங்கள் (கைதட்டல்) திராவிட இயக்கத்தவர்கள்.
காரணம் திராவிட இயக்கம் வேறல்ல. இந்த சமுதாயம் வேறல்ல. இரண்டும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்திலிருந்து இன்றைக்கு கலைஞர் காலம் வரையிலே மிகச் சிறப்பாக நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம்.
இங்கே உருவத்தால் மாறுபாடு சிலருக்கு இருக்கலாம். ஆனால் உள்ளதால் நாம் எல்லோரும் ஒருவராகவே இருக்கக் கூடிய அந்த வாய்ப்பினை இன்றைக்குப் பெற்றிருக்கின்றோம்.
நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்
மிக அருமையான கருத்துகளை இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஒருவருடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதே அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல; அவர்களுடைய சிறப்புகளை எடுத்து விளக்கிச் சொல்வதற்காக மட்டுமல்ல; அவர்கள் எந்தப் பணியை தன்மீது போட்டுக்கொண்டு, தோள்மீது சுமந்து அந்தப் பணியை செய்வதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்களோ அந்தப் பணியை நாம் அவர்களுடைய தொண்டர்கள் அவரை விரும்பக் கூடிய தோழர்கள் தொடர்ந்து செய்தாகவேண்டும். அதன் மூலம் அவர் காண விரும்பிய ஒரு நல்ல சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.
சங்கடங்கள் வரக்கூடிய சூழ்நிலை
இன்றைக்கு எவ்வளவோ மாறுபாடுகள் சங்கடங்கள் வரக்கூடிய ஒரு சூழ்நிலையிலே இந்த சமுதாயத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சாதாரணமானதல்ல. எப்போதும் இருப்பதை விட இப்பொழுது சிக்கலான ஒரு காலகட்டம்.
நம்முடைய இன எதிரிகள் பதுங்கியிருக்கிறார்கள். ஒதுங்கியிருக்கவில்லை. இதைத்தான் நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பதுங்கியிருப்பதையும் அடையாளம் காண வேண்டிய மகத்தான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் நாம் மதத்தால் மாறுபட்டிருந்தாலும், இனத்தால் ஒன்றுபட்டவர்கள் என்ற பெருமையை என்றைக்கும் பெற்று ஒரே நிலையிலே இருக்கக் கூடியவர்கள் (கைதட்டல்).
இங்கே பேசும்பொழுது சொன்னார். நம்முடைய தேசிய தலைவர் அவர்களும் சொன்னார்கள். மற்ற நண்பர்களும் சொன்னார்கள். மிக அருமையாக. இவர்களுக்கு ஏதோ தேசபக்தி இல்லை என்றெல்லாம் இன்னமும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆரியம் பல ரூபத்திலே....
ஆரியம் பல ரூபத்திலே பலரை கிளப்பிவிட்டிருக்கும். எங்கேயாவது ஒரு தீவிரவாதம் நடந்தால் அந்தத் தீவிர வாதத்திற்கே பொறுப்பானவன் ஒரு இஸ்லாமிய சகோதரன்தான் என்பதைப் போன்று இந்த நாட்டிலே இருக்கின்ற ஊடகங்கள் சித்திரிக்கின்றனவே அதை கடுமையாக கண்டனம் செய்து ஆக வேண்டிய கால கட்டத்திலே நாம் இன்றைக்கு இருக்கின்றோம்.
எல்லோரையும் அணைத்து....
அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நிகழ்வுகள் இருக்கலாம். ஆனால் அதே நேரத்திலே தவறுகள் எங்கே நடந்தாலும் அதனைத் தட்டிக்கேட்கக் கூடிய உணர்வைத்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள் (கைதட்டல்).
அவர் என்றைக்கும் மாறுபட்ட சூழ்நிலையை உருவாக்கியதே கிடையாது. அவர்கள் என்றைக்கும் வன்முறையைத் தூண்டியதே கிடையாது. எல்லோரையும் அணைத்துச் சென்றிருக்கின்றார்கள்.
இன்றைக்கு காயிதே மில்லத் அவர்களுடைய பிறந்தநாளை நாம் கொண்டாடுகின்றோம் என்று சொன்னால் நாங்கள் அனைவரும் மனிதகுலத்தைச் சார்ந்தவர்கள். எங்களிடத்திலே வேற்றுமை கிடையாது. வேற்றுமையை களைவதற்காகத்தான் இங்கே சென்றிருக்கின்றோம் என்று தெளிவாக உணர்த்தக் கூடிய சமுதாயம் இந்த சமுதாயம். அந்த வகையிலே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் உரிமை வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும்.
சிரிப்புதான் வருகிறது.....!
நான் தந்தை பெரியாருடைய தொண்டன். தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அனைவர்க்கும் அனைத்தும், எல்லார்க்கும் எல்லாமும். அதிலும் குறிப்பாக யார் பசியோடு இருக்கிறார்களோ அவர்களுக்குப் பந்தியிலே முன்னுரிமை வேண்டும்.
பசி ஏப்பக்காரனுக்கு முன்னுரிமை. புளி ஏப்பக்காரனுக்கு முன்னுரிமை தேவையில்லை. அந்த வகையிலே இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரையிலே இந்த மண்ணுக்குரிய சமுதாயம்.
தேசபக்தியைப் பற்றிச் சொன்னார்களே அவர்கள் யார்? என்று எண்ணிப் பார்த்தோமேயானால் பல நேரங்களிலே எங்களைப் போன்றவர்களுக்கு சிரிப்புதான் வருகிறது. காரணம் என்ன? இங்கே இருக்கிற சமுதாய சகோதரர்கள் அத்துணை பேரும் இந்த மண்ணுக்குரியவர்கள். இவர்கள் யாரும் அரேபியாவிலிருந்து இருந்து வந்தவர்கள் அல்லர்.
ஏன் மாறினார்கள்?
இன்னொரு நாட்டிலே இருந்து வந்தவர்கள் அல்லர். மூன்று தலைமுறைக்கு முன்னால், நான்கு தலைமுறைக்கு முன்னால் இதே மதத்திலே இருந்தவர்கள்தான். ஆனால் ஏன் மாறினார்கள்? அவர்களை நீ அரவணைக்கவில்லை. ஆகவே எங்கே அரவணைப்பு இருந்ததோ எங்கு அன்பு இருந்ததோ எங்கு சாந்தியைக் கண்டார்களோ எங்கு சமாதானத்தைக் கண்டார்களோ அங்கு அவர்கள் சென்று இன்றைக்கும், எல்லோருக்கும் கைநீட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
யார் அந்நியன்?
யார் அந்நியன்? என்பதற்கு பெரியார் அவர்கள் ஒரு விளக்கம் சொன்னார்கள். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் என்னைத் தொடக் கூடாது என்று சொல்லுகின்றான். தொட்டால் தீட்டு என்று சொல்லுகின்றான்.
இன்னொருவன் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பாலே இருந்து, அய்யாயிரம் மைல்களுக்கு அப்பாலே இருந்து வெளிநாட்டிலே இருந்து வந்து என்னைப் பார்த்து கைகுலுக்குகிறான்.
என்னைக் கட்டித் தழுவுகிறான் என்றால் எனக்கு இவன் அந்நியனா? அவன் அந்நியனா? என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள் (கைதட்டல்).
எனவே பக்கத்து வீட்டிலே இருப்பதாலேயே அவன் எனக்கு நெருக்கமானவன் அல்லன். தொலை தூரத்திலே இருக்கின்ற காரணத்தினாலே அவன் வேற்றுமையாளன் அல்லன்.
மனிதநேயத்தை உருவாக்குவதுதான் இந்த மார்க்கம்
அதே நேரத்தில் யார் மனிதனை நேசிக்கிறார்களோ, அந்த மனிதநேயத்தை உருவாக்குவதுதான் இந்த மார்க்கம். அதனுடைய விளைவாகத்தான் மிகப்பெரிய அளவுக்கு ஒரு சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இது உழைத்து வாழக்கூடிய சமுதாயமே தவிர, பிறரை ஏய்த்து, அல்லது மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து வாழக்கூடிய ஒரு சமுதாயமல்ல. எனவே தான் இந்த சமுதாயத்தின்மீது பலருக்கு ஆத்திரம் இருக்கிறது. ஒரு வன்மம் இருக்கிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று உழைக்கிறார்கள். அதனாலே வளருகிறார்கள். அந்த வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, பொறாமைப் படுவதற்கு என்ன இருக்கிறது?
மனங்களால் ஒன்றுபட்டிருக்கின்றோம்
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் மத நல்லிணக்க உணர்வு என்று சொல்லக்கூடிய அளவிலே மதங்களால் நாம் பிரிந்திருக்கலாம். ஆனால் மனங்களால் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்ற தெளிவான சூழலை உருவாக்கிக்காட்டியிருக்கின்றீர்கள்.
இங்கே பேசிய நம்முடைய அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பாளர். ஆனால் அவர்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் எப்படி இவ்வளவு நெருக்கம்? காரணம் என்னவென்றால் பெரியார் கடவுளை மறுக்கிற காரணத்தினாலே எங்கள் கடவுள் ஓடிப்போக மாட்டார். எங்கள் கடவுள் பிரியாணி கேட்கமாட்டார். பசிக்கு ஆறுவேளை பூஜை என்று கேட்க மாட்டார்.
இந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறது. ஆகவே உங்களைப் பொறுத்த வரையிலே நீங்கள் ஒரு நெறியிலே பின்பற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்.
எங்கள் கணக்கிலே மூடநம்பிக்கை. அவர்களுடைய பெயரிலே பக்தி நம்பிக்கை என்றால் அவர்களை மட்டும் அது பாதிப்பதோ அல்லது அவர்களோடு இருந்துவிட்டால் கூட, சரி, தொலைகிறது என்று மற்றவர்கள் கண்ணை மூடிக்கொள்ளலாம். ஆனால் நண்பர்களே, இன்றைக்கு என்ன சூழ்நிலை என்று சொன்னால், ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.
2400 கோடி ரூபாய் திட்டம்
2400 கோடி ரூபாய் செலவில் காலம் காலமாக கனவுத் திட்டமாக இருந்த ஒரு திட்டம் சேது சமுத்திரகால்வாய் திட்டம். அந்த சேது சமுத்திர கால்வாய் திட்டம் வந்திருக்குமேயானால் நெல்லை மாவட்டத்திற்கு மட்டுமல்ல. தென் மாவட்டங்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்குமே பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய அளவிலே வரும் என்ற காரணத்தால்தான். நம்முடைய தலைவர்கள் எல்லோருமே தந்தை பெரியாரிலிருந்து அண்ணாவிலிருந்து, கண்ணியத்திற்-குரிய காயிதே மில்லத்திலிருந்து கலைஞர் வரை, எங்கள் வரை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்காக வலியுறுத்தி வந்தார்கள்.
நல்ல வாய்ப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசிலே பங்கேற்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இஸ்லாமிய சமுதாயமும் அதற்கு உடன்பாடாக இருந்தது. நல்ல கூட்டணி ஏற்பட்டது. கனவுகளுக்கும் கால்முளைத்தது....! இதுவரையிலே கனவாகப் பேசிக்கொண்டு வந்தவர்கள், முன்னாள் அமைச்சர் அ.இரகுமான்கான் மிக அழககாச் சொன்னதைப் போல கனவுகளுக்கும் கால் முளைத்தது என்று சொன்னார்கள். அதே மாதிரி அது செயலுரு பெற்றது. 2400 கோடி ரூபாய் திட்டம் நடைபெறக் கூடிய அளவிலே மிகப்பெரிய திட்டம். 5 வழித்தடங்களை ஆராய்ந்து அது சரியில்லை என்று முடிவெடுத்து ஆறாவது வழித்தடத்தில் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு இன்னும் 12 கி.மீ தான் பாக்கி பணி இருக்கிறது. இப்படிப்பட்ட காலகட்டத்திலே இந்த நாட்டில் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி, எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் ராமன் பாலம் அதை இடிக்கக் கூடாது என்று வெறும் மணல் திட்டுகளுக்கு ராமன்பாலம் என்று சொன்னார்கள். எல்லா ஆராய்ச்சி அறிஞர்களும் சொல்லி-விட்டார்கள். இதில் ஒன்றும் மதப்பிரச்சினை கிடையாது. வேறு பிரச்சினை கிடையாது. ஜெயலலிதா அடித்த பல்டி
இது முழுக்க முழுக்க, அறிவியல் பிரச்சினை, நிலவியல் பிரச்சினை. ஆகவே வெறும் மணல் திட்டுக்களே தவிர அதில் ஒன்றும் பாலமே கிடையாது என்ற தெளிவாகச் சொன்ன பிற்பாடு கூட இன்றைக்கு அரசியல் தரகர்களைப் பிடித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்போட்டு தடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு இன்றைக்கு தலைகீழாக சொல்லுகிறார் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று.
இந்த சேது சமுத்திரத் திட்டத்தையே நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிறார் என்று சொன்னால் இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்கு எதிரானவர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய தன்மை என்ன? இல்லாத இராமர் பாலத்தைக் காட்டி பேசக்கூடிய இந்த கூட்டத்தினர்தான், இருந்த பாபர் மசூதியை இடித்தார்கள்.
எனவே அப்படிப்பட்ட ஒரு கூட்டம் இன்றைக்கு என்ன எண்ணுகிறது? இஸ்லாமிய சமுதாயம் என்றாலே ஏதோ புறம் தள்ள வேண்டியவர்கள் என்று சமுதாயத்தின்மீது ஆத்திரத்தை, கோபத்தை வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள் என்று சொன்னால் நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற முடியாது என்பதற்கு அடையாளமாகத்தான் இன்றைக்கு நாட்டிலே இருக்கின்ற நல்ல உள்ளங்கள் எல்லோரும் இந்த சமுதாயத்திற்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
கலைஞர் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டி
கலைஞருடைய ஆட்சியிலே இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அளவிற்கு இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? என்று கேட்ட நேரத்தில் கொடுக்க முடியும் என்பதற்குத்தான் சஜ்ஜார் கமிட்டியினுடைய பரிந்துரையை செய்திருக்கிறார்கள். மக்களாட்சி என்பதிலே பெரும்பான்மையோர் ஆண்டாலும், சிறுபான் மையோர் வாழ வேண்டும். அவர்களுக்கு உரிய பங்கை அவர்கள் பெற வேண்டும்.
அனைவர்க்கும் அனைத்தும்!
அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே அன்பு சகோதரர்களே!- உங்களைப் பொறுத்த வரையிலே நீங்கள் வேறு அல்ல. மற்றவர்கள் வேறு அல்ல. திராவிடர் இயக்கத்தைப் பொறுத்த வரையிலே, நாம் ஒன்று பட்டவர்கள். நான் மறுபடியும் சொல்லுகிறேன். உருவத்தால் நாம் மாறுபட்டிருந்தாலும் நிச்சயமாக உள்ளதால் ஒன்றுபட்டவர்கள். வாழ்க்கையால் ஒன்றுபட்டவர்கள்.
உங்களைச் சுற்றி பெரிய வளையம்
உங்களைச் சுற்றி ஒரு பெரிய வளையம் இருக்கிறது. பாதுகாப்பு வளையம். அது உங்களுடைய உரிமையைப் பாதுகாக்கும். உங்களுடைய வாழ்வைப் பாதுகாக்கும். எல்லா துறையிலும் இருக்கும். அந்த வளையம்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, இன்றைக்கு கலைஞர் காலம் வரையிலே எங்கள் காலம் வரையிலே தொடர்ந்து இருக்கக் கூடிய அந்த பாதுகாப்பு வளையம்தான் திராவிடர் இயக்கம். இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அமைப்பும், திராவிடர் இயக்கமும் வேறு அல்ல.
ஒரு கிளையிலே கிளைத்த...
நாம் ஒரு கிளையிலே இருந்து கிளைத்தவர்களே தவிர, வளர்ந்தவர்களே தவிர வேறொன்றுமில்லை.
ஆகவே இந்த சமுதாயம் யாரை அடையாளம் காண வேண்டுமோ அவர்களை அடையாளம் காணவேண்டும். சீசனுக்கு சீசன் வரக்கூடியவர்களைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வரலாமா? வரக்கூடாதா என்றெல்லாம் கேட்டார்கள். மக்களுக்கே தெரியும்.
அண்ணா நினைவிடத்திற்கே வராத ஜெயலலிதா....!
ஜெயலலிதா நினைத்தால் வருவார். இங்கே மட்டுமல்ல, அண்ணா நினைவிடத்திற்கே வரமாட்டார். அண்ணா பெயரிலே கட்சி. ஆனால் அண்ணா நினைவிடத்திற்கே வரமாட்டார். ஏன் வந்தார்? தேர்தல் வருமோ என்று நினைத்தார். ஆகவே வருகிறார்கள். ஆனால் நீங்கள் அவ்வளவு சுலபமான ஏமாளிகள் அல்லர். அது எல்லோருக்கும் தெறியும் (கைதட்டல்). உணர்ச்சி பூர்வமாக காட்ட வேண்டிய இடத்திலே அதை செய்வீர்கள்.
உலக செம்மொழி மாநாடு
எனவே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் எல்லோரையும் அரவணைத்து செல்லக் கூடிய பண்பாளர். அந்த பண்பு இந்த சமுதாயத்திலே வளர வேண்டும்.
எல்லோரும் படிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுடைய அந்த மொழிப்பற்று இருக்கிறதே, அது எந்த அளவுக்கு இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறதென்றால் வருகின்ற இந்த மாத இறுதியிலே உலக தமிழ்செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறவிருக்கிறது.
அந்த வாய்ப்புகள் தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கிறதென்றால் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் கனவுகள் நனவாகின்றன. அவை செயல்படுகின்றன. அவர் இன்றைக்கு வெற்றி பெறுகிறார் என்பதற்கு அடையாளம் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
------------------------ " விடுதலை”10-6-2010
2 comments:
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3840
ungalukku illatha otta
Post a Comment