அனைத்து ஜாதியினரும் ஆலய நுழைவு
சுயமரியாதைக்காரர்களே முதன் முதலில் செய்து காட்டியவர்கள்
புதிய வரலாற்று உண்மை
ஆலய நுழைவு என்பது பார்ப்பனர் அல்லாதவர்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றிப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மறுக்கப்பட்டு வந்தது. மதுரை மீனாட்சி கோயிலில் வைத்தியநாத அய்யர்தான் அழைத்துச் சென்றார் என்றெல்லாம் கூறி அதிலும் அவர்களுக்குப் பெருமை சேர்த்தார்கள். கோயிலுக்குச் செல்லாதவர்கள் ஆயிற்றே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தவர். எனவே, ஆலய நுழைவை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் பலரும் கருதினர்.
அதுமட்டுமல்ல, அனைவரும் ஆலயத்தில் நுழையலாம் என்று ராஜாஜிதான் முதன் முதலில் சட்டம் இயற்றினார் என்றும் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்களும் இருந்தார்கள்.
ஆனால், ஆய்வின் பொருட்டு ஒரு புதிய உண்மையை 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட விடுதலையில் காண நேரிட்டது.
கோயிலுக்குள்ளே எல்லா ஜாதியாரும் சம உரிமையுடன் செல்வதற்குத் தடையி ருக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் முதன் முதல் கிளர்ச்சி செய்தவர்கள் சுயமரி யாதைக்காரர்களேயாவர்
என்னும் முதல் வரியே நம்மைத் தலைநிமிரச் செய்தது. ஏனென்றால், விடுதலை தலையங்கத்தின் தலைப்பு தமிழ்க்கோயிலில் ஆரிய மொழி. ஆனால் உள்ளே உள்ள தகவல்களோ சுயமரியாதைக்காரர்கள் ஆலய நுழைவுக் கிளர்ச்சி செய்த செய்தி.
அண்ணல் காந்தி தாழ்த்தப்பட்டவர்களை அரிஜனம் என்னும் பெயரால் அழைத்ததும், திருவாங்கூர் சமஸ்தானக் கோயில்களில் அனைவரும் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்ததும் நேற்றைய நிகழ்ச்சிகள்.
எல்லாவற்றிற்கும், அனைத்துச் சீர்திருத்தத்திற்கும் முன்னோடியாக விளங்கிய தந்தை பெரியாரே தமிழ் மண்ணில் ஆலய நுழைவுக்கும் காரண கர்த்தாவாக விளங்கினார் என்பதும் நாம் பெருமைப்படும் செய்தி. ஆம்! ஆண்டவன் இல்லை, ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரம், ஆலயங்கள் அகற்றப்படவேண்டியவை என்று கூறிய அய்யாதான் முன்னோடி என்னும் அற்புதச் செய்தி.
தந்தை பெரியார் ஈரோடு ஈஸ்வரன் கோயிலின் அறங்காவலராக அதாவது தர்மகர்த்தாவாக இருந்த போது கோயில் நுழைவு குறித்துத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அத்தீர்-மானம் ஈஸ்வரன் கோயிலுக்குள்ளே அனைவரும் நுழைவதற்கு அனுமதி உண்டு என்னும் தீர்மானமாகும்.
எனவே அன்றைய நாளில் தந்தை பெரியாருக்கு நெருக்கமாக இருந்தவர்களான சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மாயவரம் சி.நடராசன், பொன்னம்பலனார், எம்.ஏ.ஈஸ்வரன், எஸ். குருசாமி ஆகியோர் அய்யாவின் தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க முடிவு செய்தனர். அதாவது தாழ்த்தப்பட்ட தோழரை ஈரோட்டு ஈஸ்வரன் கோயிலினுள் அழைத்துச் செல்வது என்று முடிவு செய்தனர்.
ஈரோட்டில் அப்போது குடிஅரசு நிலையத்தில் பணியாளராயிருந்த கருப்பன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்புத் தோழரை அழைத்துக் கொண்டு செல்ல முடிவுசெய்தனர். அவரோடு வேறு சில ஆதித் திராவிடத் தோழர்களையும் அழைத்துக்கொண்டு ஈரோட்டு ஈசுவரன் கோயிலினுள் நுழைந்தார்கள்.
ஆதிக்கச் சக்திகள் சும்மாயிருக்குமா? எதிர்ப்புத் தெரிவித்தார்கள், எப்படி?
கோயிலில் நுழைந்தவர்களை ஆதிக்கச் சக்திகளின் தூண்டுதலால் கோயில் அதிகாரிகள் உள்ளே வைத்துக் கோபுர வாயிற் கதவை இழுத்துப் பூட்டினார்கள். அவ்வேளையில் அய்யா அவர்கள் ஈரோட்டில் இல்லை. பனகல் அரசர் இறந்த செய்திகேட்டுத் தந்தை பெரியார் சென்னை சென்றிருந்தார்.
கோயில் வாயிலை இழுத்துப் பூட்டி விட்டனர். ஆதலால், கோயிலுக்குள் சென்ற சுயமரியாதை இயக்கத் தோழர்கள் இரவு முழுவதும் கோயிலுக்குள்ளேயே இருந்தனர். பக்தர்கள் என்ற போர்வையில் இருந்தவர்கள் வெளியிலிருந்தபடியே கல்லையும், மண்ணையும் வாழைப்பழத் தோலையும். கரும்புச் சக்கைகளையும் பீடித் துண்டுகளையும், எலும்புகளையும் உள்ளே இருந்தவர்கள் மீது வீசியெறிந்தனர்.
மறுநாள் காலையில் பெரியார் ஈரோட்டுக்குத் திரும்பி வந்து கதவைத் திறக்கச் செய்தார். வழக்கு நடந்தது. இருவருக்கு மட்டும் சிறைதண்டனை கிடைத்தது என்று விடுதலை ஏடு பதிவு செய்துள்ளதோடு 1956 இல் எழுதுகையில் இது நடந்தது. 1925 இல் அதாவது 31 ஆண்டுகளுக்கு முன் என்று குறிப்பிட்டுள்ள உன்மைச்செய்தி இது.
இதற்குப் பிறகுதான் நீதிக்கட்சித் தலைவர்களான ஜே.என் ராமநாதன், டி.வி.சுப்ரமணியம், ஆகியோர் திருவண்ணாமலை, திருச்சி மலைக்கோட்டை முதலிய ஊர்களில் கோயில் நுழைவுக் கிளர்ச்சி நடத்தினர். அப்போதெல்லாம் காங்கிரஸ் இயக்கத்தவர்களுக்குக் கோயில் நுழைவைப்பற்றிய சிந்தனை-யுமில்லை, முயற்சியுமில்லை.
அத்தோடு சுயமரியாதைக்காரர்கள் நின்றுவிடவில்லை. சுயமரியாதைக்காரர்கள் உருவாக்கிய ஆலய நுழைவு ஆதிக்கவாதிகளை அச்சம் கொள்ளச் செய்தது. என்ன அச்சம்? எங்கே தம் ஊரிலும் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு நுழைந்துவிடுவார்களோ என்ற அச்சம்தான் அது.
எந்த ஊரில் சுயமரியாதை இயக்கக் கூட்டம் நடந்தாலும் அந்த ஊரிலுள்ள கோயில்களையெல்லாம் மூடிவிடுவார்கள். கூட்டம் முடிந்து 3, 4 மணி நேரம் கழித்துத்தான் கோயில்களைத் திறப்பார்களாம். ஏனெனில், நாம் மேலே குறிப்பிட்டவாறு ஆதித்திராவிடர்களை அழைத்துக் கொண்டு சுயமரியாதைக்காரர்கள் கோயில் நுழைவு செய்வார்கள் என்ற நடுக்கம். இந்த உணர்ச்சியைத் தூண்டியவர்கள் சுயமரியாதைக்காரர்கள். எனவே வைதிகர்களும், ஆரியச் சமய வெறியர்களும் ஆரியர்களும் பொங்கி எழுந்தனர்.
இவர்கள்தான் இந்து மதத்தை எதிர்க்கிறார்களே! கடவுள் இல்லை-யென்கிறார்களே! சிலை வணக்கத்தைக் கண்டிக்கிறார்களே! இவர்கள் ஏன் கோயிலுக்குச் செல்லவேண்டும்? என்று கேட்டனர் பலரும் அதைக் கேட்ட போது, கடவுளை வழிபடுவதற்காக நாங்கள் உள்ளே செல்லவில்லை; தமிழன் கோயிலில் ஆரியனின் ஆதிக்கம் எதற்காகா? தமிழன் கட்டிய கோவிலில் தமிழன் எந்த இடத்துக்கும் செல்ல உரிமையில்லையா? என்று சுயமரியாதைக்காரர், கேட்டனர்.
அதன் பின்னரும் கோயில் நுழைவு அனைவருக்கும் உரியது என்ற கொள்கையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்தனர். 1945 இல் திருச்சியில் திராவி-டர் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் நிறைவேறிய 11 ஆவது தீர்மானம் இது.
இந்த மாகாணத்திலே சில கோயில்களிலே ஆதித்திராவிடரை அனுமதித்தும் சில கோயில்களில் அனுமதிக்காமலும் இருக்கும் போக்கை இம்மாநாடு கண்டிப்ப தோடு மாகாணத்திலுள்ள எல்லாக் கோயில் களிலும் ஆதித்திராவிட மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இத்தீர்மானத்தை டி. சண்முகமும், நாவலர் நெடுஞ்செழியனும் முன்மொழிந் தனர். இத்தீர்மானத்தை வழிமொழிந்-தவர் பேரறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்மானத்தைத் தூத்துக்குடி எம்.எஸ் சிவசாமியும், எஸ்.சுப்பிரமணியனும் எதிர்த்தனர்.
திராவிடர் கழகத்தார் கோயில்கள் கள்ளர் குகைகளாகும் எனக் கருதுவதால் கோயில் பிரவேசம் வேண்டாது கோயில்களை இடித்துத் தள்ள வேண்டும் என்பது எதிர்த்த தோழர்கள் இருவரின் அபிப்பிராயம். அண்ணாவின் தீர்மானம் 1944இல் சேலத்தில் எதிர்ப்பின்றி நிறைவேறியது. ஆனால், இங்கோ அண்ணா வழிமொழிந்த தீர்மானம் எதிர்ப்பிற்கு ஆளாகி ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. பெருவாரியானவர்களால் ஆதரிக்கப்பட்டு இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
விடுதலை தலையங்கத்தில் படித்தவர்களுக்குக்கூட இப்பிரச்சினையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்பதற்காகவே இந்நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறோம் என்று விடுதலையில் குறிப்பிடப்பட்டது.
அடுத்து மாயூரம் ஜாதி ஒழிப்பு மாநாடு குறிப்பிடத்தக்கதாகிறது. இம்மாநாட்டுத் தீர்மானம் இது:
கோயில்களில் தமிழ் மொழியிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும். அதுவும் தமிழர்களே அர்ச்சனையாளர்களாக நியமிக்கப்படவேண்டும். இந்த ஏற்பாட்டை ஒரு மாத காலத்திற்குள் செய்யாவிட்டால் கர்ப்பக்கிரகம் என்று சொல்லப்படும் இடத்திற்குத் தமிழர்கள் செல்வதற்காகக் கிளர்ச்சி தொடங்க வேண்டிவரும் என்று இந்து பரிபாலன இலாகாவுக்கு இம்மா நாடு எச்சரிக்கை விடுக்கிறது
இன்றைக்கு 53 ஆண்டுகளுக்குமுன் நிறைவேறிய இத்தீர்மானம் எவ்வளவு முக்கியமான தீர்மானம் என்பதை உணரவேண்டும்.
தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி அனைத்துப் பிரிவினரும் அர்ச்ச கராக வழி வகுத்த இமாலயச் சாதனை புரிந்த பிறகும், அதற்குரிய பயிற்சியை மாணவர்கள் பெற்ற பிறகும் இன்றும் வைதிகத் திருக்கூட்டமும், அவர்களுக்கு வால்பிடிக்கும் கூட்டமும் நீதிமன்றப் படியேறி அதை நடைமுறைக்கு வரவிடா மல் தடுக்கும் அவலம் உள்ள நிலையில் அன்றே இத்தீர்மானம் நிறைவேற்றினார்கள் திராவிடர் கழகத்தார் என்றால் அது சாதாரணமா?
ஏன் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரனுக்கே இதன் தத்துவம் புரியவில்லையே. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே பெரியார் சிலையைத் திறந்து வைத்த மேடையில் பேசிய அம்மா மணியம்மையார் அவர்கள் எம்.ஜி.ஆரை முதலமைச்சர் என்பதால் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்துப் பிரிவையும் சார்ந்தோர் அர்ச்சகர் ஆகச் சட்டமியற்ற வேண்டினார்.
அடுத்துப் பேசிய முதல்வர் எம்.ஜி.ஆர் குதர்க்கம் பேசினார். கடவுளே இல்லையென்ற பெரியார் ஆலயத்தினுள் கருவறையில் சென்று அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்ய வேண்டுமென்று கேட்டிருப்பாரா? என்று விதண்டாவாதமாகப் பேசினார்.
மறுநாள் மணியம்மையார் முதல்வர் எம்.ஜி.ஆருக்குத் துணிவோடு பதிலடி கொடுத்தார். அது போலத்தான் ஆத்திகத் திருக்கூட்டத்தவர் சிலர் இவர்களுக்குத்தான் சிலை வணக்கத்தில் நம்பிக்கையில்லையே? யார் அர்ச்சனை செய்தாலென்ன? எந்த மொழியில் அர்ச்சனை செய்தாலென்ன? என்று பக்குவமில்லாமல் அரைவேக்காட்டுத்தனமாகக் கேள்வி கேட்டனர்.
அவர்களுக்கு மட்டுமல்ல, இன்னும்கூட நாம் அளிக்கும் பதில் அவர்களின் கேள்வியின் முதுகெலும்பை முறிக்கும் பதிலாக அமைகிறது.
ஆலய நுழைவு விஷயமென்றாலும், ஆலயத்தில் தமிழில் அர்ச்சனை செய்யப்படவேண்டும் என்ற கருத்தானாலும், அனைத்துப்பிரிவினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதற்கான போராட்டம் என்றாலும், திராவிடர் கழகத்தார் தலையிடுவதன் காரணம் ஆத்திகத் தமிழர்களுக்குத், திராவிடர்களுக்குத் தன்மான உணர்ச்சி, சுயமரியாதை உணர்வு ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.
புரியாத மொழியில் செத்த மொழியில் அந்நிய மொழியில் அர்ச்சனை நடக்கிறதே, தூய மொழியான தமிழுக்கு இடமில்லையே, மொழிப்பற்று கடுகளவுமில்லையே ஆத்திக அன்பரான தமிழ் அன்பர்களுக்கு இல்லையே என்ற அடித்தள உணர்வுதான் காரணம். அதுமட்டுமில்லை அந்நியனான ஆரியன் மட்டும் சிலையருகே நிற்கிறானே, அந்தச் சிலை வடித்த தமிழன் எவ்வளவு ஒழுக்கசீலனாகவும், பக்தனாகவும் இருந்தாலும் அவனுக்கு இடமில்லையே திராவிடகுல உணர்ச்சியும் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு ஆதங்கம்தான். எனவேதான் திராவிடர் கழகம் கேட்டது.
யாரோ ஒரு ஆஷாடபூதி ஆரிய அர்ச்சகனுக்கு உள்ள உரிமை ஒரு குன்றக்குடியாருக்கோ, ஒரு மதுரை ஆதீனத்திற்கோ இல்லையே ஏன்? இதற்காக எந்த ஆத்திகத் தமிழராவது வெட்கப்படுகிறார்களா, ஆத்திரப்படுகிறார்களா?
இன்னும் ஒரு மாபெரும் மனித உண்மையையும் இங்கே கொடுக்க வேண்டும்.
ஆரிய மொழியான வடமொழியான தேவபாஷை என்பதற்குப் பதிலாகத் தமிழிலோ, ஆரிய அர்ச்சகருக்குப் பதிலாகத் தமிழர்களோ அர்ச்சனை செய்து விட்டால் உடனே, செம்பில் கல்லில் வடிக்கப்பட்டுள்ள கடவுள் காட்சியளித்துவிடுவார் என்னும் நம்பிக்கை திராவிடர் கழகத்தாருக்குக் கிடையாது.
எல்லாத் துறைகளிலும் இன உணர்ச்சியும், தன்மானமும், மொழிப்பற்றும், வேண்டும்; அப்போதுதான் ஆரியனின் சுரண்டலும், ஆதிக்கமும். ஜாதித் திமிரும் ஒழியும் என்ற கருத்தைக் கொண்டே ஜாதி ஒழிப்பு மாநாட்டில் அன்று தீர்மானம் நிறைவேற்றினர்.
எனவே, ஆலய நுழைவானாலும், அர்ச்சனை விஷயமானாலும், அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதானாலும், அதில் தன்மான உணர்ச்சி வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
------------------ முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் "விடுதலை” ஞாயிறுமலர் 12-6-2010 இல் எழுதிய கட்டுரை
1 comments:
If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.
Post a Comment