Search This Blog

24.6.10

கதரின் மீதுள்ள மூடப்பக்தி பற்றி பெரியார்

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படாதென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை. வீதம்தான் கூலிகிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப்பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணிகளுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்று சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங்கொள்ளத் தொடங்கினார்கள்.

சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு இதை ஓர் ஆயுதமாக உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின்வாங்காது உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு இப்போதுதான் திரு.காந்தி அவர்கள் கண்விழித்து இதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார். அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும்படியான புதிய கை யந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்குச் சன்மானங்கள் செய்வதற்கு ஆக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார். இது பயன்பட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர் நிலை இப்படியே தான் இருக்க வேண்டும் என்றும், இதனாலேயே தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனமக்கள் கவனிப்பார்களே ஒழிய மகாத்மா சொல்லுகின்றார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில் கண் மூடி நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத்தனத்திற்குச் சற்று உதவி செய்வார்களாக.

---------------தந்தைபெரியார் - “குடிஅரசு”. கட்டுரை. 11.08.1929

2 comments:

Unknown said...

இயந்திரங்களைக் கொண்டு,சில மணிகளில் முடிக்கும் பணிகளை, தேசிய ஊரக பிக்னிக் திட்டம் மூலம் மாதக் கணக்கில் செய்கிறார்கள்!? இத்திட்டம், உமது சுயமரியாதைத் தலைவரின் வோட்டு வாங்கும் திட்டம் தானே! (பயனாளிகளுக்கு பென்ஷன் போல நேரிடையாகவே கொடுத்து விடலாம்! - வேலை என்ற பெயரில் பிக்னிக் போவதை விட! விவசாய ஆட்கள் பஞ்சம் குறைந்து, விலைவாசி குறையும்!)

தமிழ் ஓவியா said...

ரம்மி ஜோக்கராகவே இருக்கிறார்