காலாவதியான மருந்து, உணவுகளை விட காலாவதியான கருத்துகளே மூளையைக் கெடுக்கிறது!
மதுரையில் தமிழர் தலைவர் விளக்கவுரை
காலாவதியான மருந்து, உணவு இவை உடலுக்கு மட்டும் கேடு. ஆனால் காலாவதியான கருத்துகளோ அறிவுக்கு, மூளைக்குக் கேடு என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
பாலியல் ஆராய்ச்சியாம்!
இப்பொழுதெல்லாம் சாமியார்கள், ஆனந்தாக்கள், நித்யானந்தாக்கள் இவர்கள் எல்லாம் பெண்களிடம் தவறாக நடப்பதற்குப் பெயர் பாலியல் ஆராய்ச்சி என்று சொல்லுகிறார்கள். பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்யக்கூடிய கூடமாகத்தான் மடத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.
அபாண்டமாக எங்கள்மீது பழி சுமத்திய ஒரு காலகட்டம் உண்டு. ஆனால் உண்மைகள் ஒருநாள் வெளியே வரும் என்பதற்காக அர்ச்சகர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தின் முன்னாலே நிறுத்தப்படுகிறார்கள்.
கொள்ளையடிப்பவர்கள் கோயிலிலும்-மடத்திலும்!
கடவுள் பெயராலே கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிப்பவர்கள் கோயிலிலும் மடத்திலும் இருக்கிறார்கள். எனவே இப்பொழுது சொல்லுங்கள். பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்று.
இந்த இயக்கத்தைப் பொறுத்த வரையிலே இது ஓர் அறிவு இயக்கம். மனிதநேய இயக்கம். எனவே ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கம்.
பக்தி இல்லாவிட்டால் எந்த நட்டமும் இல்லை. பெரியார் அவர்கள் அழகாகச் சொன்னார்கள். நான் கடவுளை நம்பாதவன். கடவுளை மறுக்கிறவன். கடவுள் இல்லை என்று சொல்லுகிறேன்.
ஏன் இல்லை என்று சொல்லுகிறேன் என்பதற்கு பெரிய விளக்கம் ஒன்றும் தேவையில்லை. இல்லாததை இல்லை என்று சொல்லுகின்றேன். காற்றை இல்லை என்று சொல்லுகிறோமா? சூரியனை இல்லை என்று சொல்லுகிறோமா? அதுபோல மற்றவைகளை இல்லை என்று சொல்லுகிறோமா?
வாயு பகவான்
நேரடியாகப் பார்க்க முடியாதவைகளைக் கூட உணருகின்றோம். இதோ என் பக்கத்திலே மின்சார விசிறி சுழன்று கொண்டிருக்கிறது. இது அறிவுத் தெளிவு இல்லாத காலத்திலே காற்றை வாயு பகவான் என்று சொன்னார்கள்.
காற்று வேகமாக அடித்தது. குகையிலே இருந்த மனிதன், கல்லிலே இருந்த மனிதன், பொந்திலே வாழ்ந்த மனிதன் மிரண்டு போன மனிதன் காற்றைப் பார்த்துக் கன்னத்திலே போட்டுக்கொண்டான்.
புரியாத காரணத்தாலே அதை கடவுளாக்கி வாயு பகவான் என்று சொன்னான். ஆனால் இன்றைக்கு வாயு பகவான் நம்முடைய அற்புதமான வேலைக்காரன். மனித அறிவின் வெற்றி, பகுத்தறிவின் வெற்றி. இங்கே தான் இருக்கிறது.
இந்த மின்சார விசிறி சுழலுகிறது என்று சொன்னால் ஸ்லோவில் வைத்தால் வாயு பகவான் ஸ்லோவில்தான் சுற்ற வேண்டும். வாயு பகவானுக்கு ஃபாஸ்டாக சுற்றுகிற உரிமையே கிடையாது. நாம் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டால் வாயு பகவான் வர முடியாது. அக்னி பகவான் அது போலத்தான் அக்னி பகவான். ஒரு காலத்திலே மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தன. உடனே நெருப்பு உண்டானது. புரியாத ஆதி மனிதன் இதைக் கன்னத்திலே போட்டு, கீழே விழுந்தான். வேண்டிக்கொண்டால் ஒரு வேளை அக்னி பகவான் போய்விடுவான் என்று. அது அறிவு தெளிவில்லாத காலம். அதுதான் காட்டுமிராண்டி காலம்.
அக்னி பகவான் எங்கேயிருக்கிறான்? பீடி, சிகரெட் பிடிக்கிற பழக்கமுள்ளவர்கள் இருந்தால், பையிலே, கையிலே, மடியிலே அக்னி பகவான் உள்ளே இருக்கிறான். வத்தி பெட்டியை எடுத்து வத்திக் குச்சியில் உரசினால் உடனடியாக அக்னி பகவான். அங்கே வருகிறான். வா இந்த பக்கம் என்று சொன்னால் வருகிறேன், கொளுத்துகிறேன் என்று வருவான். சிவகாசியில் அக்னி பகவான்
அக்னி பகவானை பெட்டிக்குள்ளே வைத்து அடைப்பதுதான் சிவகாசியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள். நெருப்பை அவர்கள் அளந்து உள்ளே வைத்திருக்கிறார்கள்.
இன்னும் கேட்டால் அளவுக்கு மீறி அக்னி பகவான் தன்னுடைய லீலைகளை ஆரம்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தீயணைப்புத் துறையையே வைத்திருக்கின்றார்கள்.
தீயணைப்புத் துறை யாரை ஒடுக்க?
ஓர் அமைப்பையே அறிவுபூர்வமாக உருவாக்கி யிருக்கிறார்கள். எங்கெல்லாம் அக்னி பகவான் வருகிறானோ அங்கெல்லாம் தீயணைப்புத் துறையும் வரும்.
ஒரு காலத்திலே அறிவுத் தெளிவில்லாத போது இவைகளை எல்லாம் கடவுள்கள் என்று கருதிக்கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு எங்களுடைய தோழர்கள் கார் இழுத்தார்கள். யாரையாவது புண்படுத்துவ தற்காகவா? இல்லை எங்களுடைய தோழர்களின் முதுகு புண்பட்டிருக்கிறது. காரணம் உங்களைப் பண்படுத்துவதற்காக நாங்கள் எங்களை வருத்திக்கொள்கிறோம்.
இன்னொருவரை நாங்கள் வருத்துவதில்லை. அதுதான் சுயமரியாதைக்காரன், பகுத்தறிவாளனின் ஆழ்ந்த பணியாகும்.
எங்களுடைய தோழர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தார்கள். எங்களுடைய தோழர் சட்டத்துறை தலைவர் மகேந்திரன் அவர்கள்கூட தீச்சட்டியைத் தூக்கிக் காட்டினார்.
அதை ஒளிப்பட நிபுணர் படம் எடுத்தார் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் தூக்கியது ஒரு பெரிய சாதனை அல்ல. யார் வேண்டுமானாலும் தூக்கலாம்.
யார் தூக்கினால் என்ன? அது சுடாது என்று சொல்லும்பொழுது யார் தூக்கினால் என்ன? இதே மதுரையிலே நான் தீச்சட்டி ஏந்தியது பத்திரிகையிலே வந்திருக்கிறது.
எதற்காகச் சொல்லுகிறோம். பக்தி என்ற பெயராலே புத்தியை அடகு வைக்கக் கூடிய ஒரு சூழல் நாட்டிலே ஏற்பட்டிருப்பது தவறு. அறிவார்ந்த சிந்தனைகள் வரவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம். அண்மையிலே கடந்த ஒரு மாத காலமாக நம்முடைய நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்ற ஒரு செய்தி. அன்றாட தாள்கள், தொலைக்காட்சி செய்திகள், ஊடகங்கள் இவைகளிலே வந்திருக்கக் கூடிய செய்தி உங்களுக்கெல்லாம் தெரியும்.
காலாவதியான மருந்துகள்
காலாவதியான மருந்துகள், அந்த மருந்துகளைப் பிடிக்க வேட்டைகள். காலாவதியான மருந்துகளை விற்ற நபர் பலரைப் பிடித்து சிறையிலே அடைக்கக் கூடிய அளவிற்கு நிலைமைகள் ஏற்பட்டது.
இப்பொழுது வழக்குகள் வேகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இது முடிவதற்கு முன்னாலே இந்த பரந்த ஞானபூமியிலே முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலகர்கள் இவர்கள் எல்லாம் இல்லாமல், மீனாட்சி சுந்தரேசுவரர், அழகர் உள்பட இப்படி எல்லோரும் இருக்கக் கூடிய இந்த நாட்டிலே காலாவதியான உணவு_அடுத்தபடியாக இன்றைக்குப் பரிசோத னைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காலாவதியான உணவை உண்டால் உடலுக்குக் கேடு. காலாவதியான மருந்தை எடுத்துக்கொண்டால் அதுவும் உடலுக்குக் கேடு. இவை இரண்டும் உடலை வருத்தக்கூடியது. ஆனால் நண்பர்களே, இந்த அறிவியல் காலத்தில் அக்னி_நெருப்பு வத்திப்பெட்டியில் வந்த நேரத்தில், சிகரெட் லைட்டரில் தட்டியவுடனே நெருப்பு வரக்கூடிய இந்தக் கட்டத்திலே இன்னமும் திருவண்ணாமலை தீபம் என்று சொல்லி அண்ணாமலைக்கு அரோகரா என போட்டுக்கொண்டிருக்கிறானே.
பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுகிறார்கள். அங்கே நெய்யை ஊற்றுகிறார்கள் என்றால் இதை விட மோசமான விளையாட்டு வேறு இருக்க முடியுமா? எவ்வளவு பெரிய அக்னி பகவான் வந்தாலும் அதை அணைக்கக் கூடிய ஆற்றல் தீயணைப்புத்துறைக்கு உண்டு.
தீயணைப்பு நிலையம் உருவான இந்த காலகட்டத்திலே அக்னி என்பது கடவுள் அல்ல என்று தெரிந்துகொள்ளவதற்குப் பதிலாக இதைவிட காலாவதியான கருத்து வேறு இருக்க முடியுமா? எண்ணிப் பார்க்க வேண்டும்.
உங்களுடைய அறிவைக் கெடுக்கும்!
காலாவதியான மருந்தை விட, காலாவதியான உணவை விட, காலாவதியான கருத்துகளை நீங்கள் பிடித்துக்கொண்டிருந்தால், அது உங்களுடைய உடலை மட்டும்தான் கெடுக்கும்.
இதுவோ உங்களுடைய அறிவைக் கெடுக்கும். உங்கள் மூளையை அரிக்கும். உங்களை என்றைக்கும் வளரவிடாமல் தடுக்கும். ஆகவேதான் திராவிடர் கழகம் செய்கின்ற பணி மிக முக்கியமான பணி. சாதாரணமான பணி அல்ல. பிள்ளை விளையாட்டு என்று சொல்லுகிறபொழுது ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
பக்தி வந்தால் புத்தி போய்விடும்!
பக்தி வந்தால் புத்தி போய்விடும். பெரியார் ரொம்ப சுலபமாகச் சொன்னார். புத்தி வந்தால் பக்திப் போய்விடும் என்று அழகாகச் சொன்னார்கள். அதைத்தான் குடிஅரசு ஏட்டிலே பக்கம் பக்கமாக விளக்கி பல்வேறு பிரச்சாரங்களை செய்தார்கள். வேறொன்றும் அதிகமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சில வாரங்களுக்கு முன்னாலே இதே மதுரையிலே நடைபெற்ற மூடநம்பிக்கை நிகழ்ச்சி.
கள்ளழகர் ஆற்றில் இறங்கினாராம்!
தொலைக்காட்சியை கண்டுபிடித்தது மீனாட்சி சுந்தரேசுவரர் அல்ல. அல்லது கள்ளழகர் அல்ல. கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கு 10 லட்சம் மக்கள் திரண்டார்கள் என்று நம்முடைய ஊடகங்களிலே காட்டுகிறார்கள். இது புத்தி இல்லாதவர்களின் சிந்தனை அல்லவா? நாம் சொல்லும் பொழுது கோபப்படாதீர்கள். ஆத்திரப்படாதீர்கள். மீனாட்சிக்கும், சுந்தரேசுவருக்கும் இப்பொழுது திருக்கல்யாணம் நடந்தது என்று சொல்லுகிறார்கள். இரண்டு பேரும் வந்து உள்ளபடியே திருக்கல்யாணம் பண்ணிக்கொண்டால் நமக்கொன்றும் ஆட்சே பணையே இல்லை. நமக்கு என்ன விரோதமா? நமக்கு என்ன குரோதமா? இல்லையே.
இது பொம்மை விளையாட்டு!
இரண்டு பேர் பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். பார்ப்பான்தானே தாலி கட்டுகிறான். வண்ண வண்ண உடைகளை உடுத்திக்கொண்டு இப்படி ஒரு பார்ப்பனர் வருகிறார். அப்படி ஒரு பார்ப்பனர் வருகிறார்.
சின்னப் பிள்ளைகள் எப்படி பொம்மையை வைத்து விளையாடினால் நாம் அதைக் கண்டு பார்த்துக்கொண்டிருப்போமா?
பெரியவர்கள் எத்தனை ஆண்டுகள் விளையாடுவது?
அது மாதிரி பெரியவர்கள் இதை எத்தனை ஆண்டு காலம் விளையாடிக்கொண்டிருப்பது? அதுதான் வேதனை. இதைவிட காலாவதியான கருத்து வேறு உண்டா? மக்களுக்கோ இது ஒரு பெரிய வேடிக்கை கடவுள் நம்பிக்கை. அரோகரா, கோவிந்தா என்ற சத்தம் போடுகிறான். பக்தி ரசம் சொட்டச் சொட்ட பகவான்கள் மெய் மறந்தார்கள் என்று சொல்லுகின்றான். ஆணும் மெய் மறந்து, பெண்ணும் மெய் மறந்தால் என்ன ஆவது?
கிரகத்தை ஆராய்கிறான் மனிதன்
திருவிழாக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு மிகப் பெரிய சிரமம். இது அறிவுக்காலம். நிலவைப் பிடித்து விட்டான் மனிதன். செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
நம்முடைய நாட்டிலே இருந்து ராக்கெட்டுகள் பறக்கின்றன. களத்திலே இருந்து அனுப்புகிறார்கள். அதுவும் வெளிநாட்டு கிரயோஜனி எஞ்சின்களை விட இங்கேயே தயாரிக்கப்பட்ட கிரயோஜனிகளை அனுப்புகிறார்கள். அதுவும் பறக்கிறது. பணியை செய்கிறது.
விஞ்ஞானிகள் இப்படி முயற்சி செய்யும்பொழுது முதல் முயற்சியே வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதில்லை. சில தவறுகள் நடக்கலாம். அதிலே தோல்வி ஏற்படலாம். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு பல தோல்விகள் ஏற்பட்ட பிறகுதான் அவர் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் வெற்றி பெற்றார் என்பது வரலாறு.
அழுக்கு மூட்டை விஞ்ஞானி
ஆனால் இங்கே இருக்கக் கூடிய விஞ்ஞானி அழுக்கு மூட்டை சிந்தனைக்காரர். காலாவதியான கருத்துகளை மூளையிலே ஏற்றுக்கொண்டவர். இவர் விஞ்ஞானி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வந்து பொறுப்பேற்றவர்.
அதன்பிறகு இவர் பொறுப்பேற்று வெளியிடப்-பட்ட ஏவுகணை தோல்வி அடைந்தது. இவர் என்ன சொல்ல வேண்டும்? பரவாயில்லை, அடுத்த ஏவுகணையை விடுவோம், முயற்சி செய்வோம் என்று சொல்ல வேண்டும்.
படித்தவர்களையும் பிடித்து ஆட்டுகிறது
ஆனால் அறிவியல் படித்த இந்த விஞ்ஞானி என்ன சொல்லுகிறார்? எல்லாம் பகவத் கீதையிலே கண்ணன் சொல்லியிருக்கின்றான். கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்று.
ஏனய்யா, இதை யார் சொல்லுவது? படிக்காத குப்பனும், சுப்பனும் சொன்னாலே கேலி செய்வோம். பலனை எதிர் பார்க்காமலா விண்வெளி பயணத்தை செய்வது? எனவே இந்த காலாவதியான கருத்தும், சிந்தனையும் பாமர மக்களை மட்டும் தாக்கவில்லை. படித்தவர்களையும் பிடித்து ஆட்டுகிறது.
----------------(தொடரும்)19-6-2010
அழகர் ஆற்றில் இறங்குவது-வருடா வருடம் கடவுளுக்கு கல்யாணம்
இது பெரியவர்களின் பொம்மை விளையாட்டே!
மதுரையில் தமிழர் தலைவர் பேச்சு
வருடா வருடம் கடவுளுக்குக் கல்யாணமா? ஒவ்வொரு வருடமும் கள்ளழகர் ஆற்றில் இறங்கி திரும்புவதை 10 இலட்சம் மக்கள் வேடிக்கை பார்ப்பது என்பது மூடத்தனம். பொம்மைகளை வைத்துக்கொண்டு பெரியவர்கள் விளையாடலாமா?
இது அறிவுக்குப் பொருந்துமா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
பெரியார்தான் கேட்பார்...
தந்தை பெரியார் கேட்பார் கடவுளுக்கு ஆண்டு தவறாமல் கல்யாணம் பண்ணி வைக்கிறீர்களே போன வருஷம் பண்ணின கல்யாணம் என்ன ஆனது என்று கேட்பார்.
நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்க வருகிறார். அவர் வந்தவுடன் என்னங்க யாருக்குத் திருமணம்? என்று கேட்டால், எனக்குத் தாங்க என்று அவர் சொன்னாரென்றால், நாம் கேட்போமே இவருக்குத்தான் ஏற்கெனவே திருமணம் நடந்திருக்கிறதே. நாமே போயிருக்கிறோமே,
அந்தத் திருமணம் என்ன ஆயிற்று? இப்பொழுது ஒரு கல்யாணம் பண்ணிக்கொள்வதாக பத்திரிகை கொடுத்திருக்கிறாரே என்று நேரடியாக கேட்க முடியாவிட்டாலும் மற்றவர்கள் மூலமாவது கேட்கச் செய்வோம்; விசாரிப்பார்கள்.
கடவுளுக்கு வருடாவருடம் கல்யாணமா?
பெரியார் அதே மாதிரி கேட்டார். என்னய்யா இது? வருடா வருடம் ஏன் கடவுளுக்கு கல்யாணம் பண்ணுகிறாய், அதுவும் உருவம் இல்லாத கடவுளுக்கு பிறப்பும், இறப்பும் இல்லாத கடவுளுக்கு அதற்கு ஒரு உருவம் மாதிரி காட்டுகிறார்கள். கடவுளுக்கு எதற்கு வருடா வருடம் கல்யாணம் பண்ணுகிறாய் என்று பெரியார் கேட்பார்.
உண்மையிலேயே கல்யாணம் ஆகாத பெண்கள் நிறைய பேர் உள்ளனர். நமது நாட்டிலே இலட்சக் கணக்கிலே இப்படி இருக்கிறார்கள்.
கல்யாணம் ஆகாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்
செவ்வாய் தோஷம், வறுமை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு கல்யாணம் ஆகாமல் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் கடவுளுக்கு இவன் வருஷா வருஷம் கல்யாணம் பண்ணுகிறான். ஒவ்வொரு கடவுளுக்கும் வெறும் கல்யாணம் அல்ல, திருக்கல்யாணம் என்று சொல்லுகின்றான்.
பெரியார் கேட்டார். உன் கடவுளுக்கு போன வருடம் கல்யாணம் பண்ணினாயே அது என்ன டைவர்ஸ் ஆச்சா? மணவிலக்கா, அல்லது வேறு எவரிடமாவது கோளாறா? என்ன நடந்தது என்று சிந்திப்பதில்லையே. இதைவிட பெரிய பிள்ளைகளின் விளையாட்டு வேறு இருக்க முடியுமா?
கடவுளுக்காவது தெரியவேண்டாமா?
கடவுளை ரொம்ப நாட்களாக நம்மாள் தூக்கிக்கொண்டிருக்கின்றான். கடவுளுக்காவது தெரியவேண்டாமா? ரொம்ப நாட்களாக இவன் என்னைத் தூக்கிக் கொண்டிருக்கிறான். நீ என்பக்கத்திலேயே மொழு, மொழு என்று உட்கார்ந்து கொண்டு வருகிறாய்; கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ்வளவு நாள் என்னைத் தூக்கியவன் அவன்; என் அருகில் வந்து உட்காரட்டும் என்று சொன்னானா?
கடவுள் இருந்தால் சொல்லியிருப்பான். இல்லையே. அவன் கருணையே வடிவான கடவுள் அல்லவா? இருந்தால் இவ்வளவு அக்கிரமம் செய்கிறார்களே என்று கோபம் வந்திருக்கும்.
அதனால் வருடா வருடம் இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கின்றான். வெட்கமில்லாமல் நம்மாள் என்ன சொல்லுகிறான்?
10 இலட்சம் மக்கள் திரண்டார்களாம்!
கள்ளழகர் ஆற்றில் இறங்கியதைப் பார்க்க 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்று சொல்லுகின்றான். இது என்ன பெருமையாகச் சொல்லுகின்ற விசயமா? புராணங்களில் எழுதி வைத்திருக்கிறான். இது குடிஅரசில் அச்சடிக்கப்பட்டதல்ல. மீனாட்சியினுடைய சகோதரர் கள்ளழகர். புராணப்படி கள்ளழகர் கல்யாணத்திற்கு வருகிறார். மீனாட்சி சுந்தரேசுவரர் கல்யாணத்திற்காக வருகிறார்.
புறப்பட்டு வந்தவர் நேரே கல்யாணத்திற்கு வந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் நேராக வரவில்லை. வருகிற வழியில் அவர் ஓர் ஊரில் தங்குகிறார். அங்கு தங்கி இளைப்பாறுகிறார்.
துலுக்கநாச்சியார் வீட்டில் இரவு தங்கல்
அதுவும் அவர் ஒரு துலுக்க நாச்சியார் வீட்டில் இருந்தார் என்று சொல்லுகின்றார்கள். ஒரு வேளை ஒருமைப்பாட்டிற்காக இருக்கலாம். அந்தக் காலத்திலேயே ஒருங்கிணைப்பு வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக இருக்கலாம். புராண பிரசங்கிகள் விளக்கம் சொல்லுவார்கள்.
தங்கினவர் என்ன செய்தார்? வந்த வேலையை விட்டு விட்டு சொந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அதனுடைய விளைவு, என்ன ஆயிற்று? அப்பொழுதெல்லாம் அலாரம் டைம்பீஸ் கிடையாது.
கடவுளை எழுப்புகிறான்
மார்கழி மாதத்திலேயே எம்பாவாய் எழுந்திரு என்ற திருப்புகழ் பாடி எழுப்புவார்கள். உலகத்திலேயே தூங்குகின்ற கடவுளை எழுப்பு-கின்றவர்கள் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள்.
எழுப்புகிற பக்தர்கள் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறார்களா? நமது பிள்ளைகள் கூட பரிட்சை நேரத்தில் அலாரம் வைத்து அடித்தவுடன் திரும்பவும் படுத்துவிடுவார்கள். மறுபடியும் தாய், தந்தையார்கள் விட மாட்டார்கள். பிள்ளையை எழுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.
கள்ளழகர் துலுக்க நாச்சியார் வீட்டில் அயர்ந்து தூங்கி விடுகின்றார். அவர்களோ இவரை எதிர்பார்த்து நேரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் முடிந்து விடுகிறது
நேரம் அதிகமான உடனே மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தை முடித்துவிடுகிறார்கள். கள்ளழகர் அரக்கப்பறக்க எழுந்திருந்து அய்யோ, நேரமாகி விட்டதே என்று இவர் மதுரையை நோக்கி வருகிறார். அப்பொழுதுதான் ஆற்றைக் கடந்து வருகிறார்.
இது அய்தீகமான கதை புராணம். ஸ்தல புராணத்தில் இருக்கின்ற கதை. நாங்களாக கட்டுக்கதையோடு சொல்வதல்ல. பாதிவழியில் ஆற்றில் அழகர் இறங்கும் பொழுது இந்தச் செய்தி தெரிகிறது. என்ன?
அழகருக்கு கோபம் பாதியிலே திரும்பி விடுகிறார்
திருமணத்திற்காக உங்களுக்காக காத்திருக்கவில்லை. திருமணத்தை முடித்து-விட்டார்கள். அழகருக்கு கோபம் வந்துவிடுகிறது. நம்ம அழகராக இருந்தால் கொஞ்சம் யோசித்திருப்பார். ஏனென்றால் இவர் பகுத்தறிவாளர்.
கதைப்படி கள்ளழகருக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. கள்ளழகருக்கு கோபம் வரலாமா? அவர் முக்காலும் உணர்ந்தவர் அல்லவா? எனக்காக காத்திருக்காமல் எனது சகோதரி மீனாட்சி திருமணம் நடக்கலாமா? ஆகவே அந்தத் திருமணத்திற்குச் செல்லவில்லை என்று சொல்லி கள்ளழகர் திரும்பு என்று கூறி திரும்பிப் போய்விடுகிறார். இதுதான் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய கதை. ஆனால் வருடா வருடம் பொம்மைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்ற சம்பிரதாயத்தை நடத்துகின்றார்கள்.
அதுவும் பத்திரிகையில் எழுதுகின்றார். கள்ளழகர் பச்சைப் பட்டாடை உடுத்திக் கீழே இறங்கினார் என்று எழுதுகின்றான்.
வருடா வருடம் லேட்டா?
சரி, உங்களை ஒன்றைக் கேட்கின்றோம். நீங்கள் சிந்திக்க வேண்டும். பக்தர்களாக இருக்கிறவர்கள் கோபப்படாமல் ஆத்திரப்படாமல் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் ஓர் அலுவலகம் நடத்துகின்றீர்கள். அதில் பத்து பேரை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள். வேலைக்கு வருகிறவர் உரிய நேரத்தில் வராமல் லேட்டாக வருகிறார். லேட்டாக வந்தால் என்ன பண்ணுவீர்கள்?. முதல்நாள் அவருக்கு எச்சரிக்கை.
ஏம்ப்பா, நீ டைம்க்கு வர வேண்டும். இந்த மாதிரி லேட்டாக வரக்கூடாது. அலுவலகம் தொடங்கி அரைமணி நேரம் லேட்டாக வந்திருக்கிறாய். இனிமேல் இப்படி வராதே என்று சொல்லுகிறார்கள். சரி, அடுத்த நாளும் அவர் லேட்டாக வந்தால் என்ன செய்வீர்கள்?
அபராதம் போடுவீர்கள். மூன்றாவது நாளும் தொடர்ந்து அவர் லேட்டா வந்தால் உனக்கு வேலை கிடையாது; டிஸ்மிஸ், வெளியே போ! என்று சொல்லுவீர்கள். இது சாதாரண புத்தி உள்ளவன் செய்கின்ற வேலை. அழகர் எத்தனை வருடமாக வந்து இப்படியே பாதி வழியில் திரும்புவது? (கைதட்டல்). போன வருடம் தான் லேட்டாக வந்தீர்கள்; சரி, இந்த வருடமாவது நேரத்திற்கு வர வேண்டாமா? பகுத்தறிவோடு சிந்தித்துப் பாருங்கள். எல்லாம் பிள்ளை விளையாட்டே!
இதைவிட நல்ல விளையாட்டு வேறு இருக்க முடியுமா? எல்லாம் பிள்ளை விளையாட்டே! சொன்னது பெரியார் அல்ல; வடலூர் இராமலிங்கனார். எனவே பக்தி என்பதன் பெயராலே நம்மவர்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி விட்டார்கள் பாருங்கள். இன்னும் கேட்டால் வைகை ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. நம்முடைய அரசாங்கம் ஆற்றில் தண்ணீரை விட்டு தேக்கி வைக்கிறது. கலைஞர் தண்ணீர் விடவில்லையென்றால் அழகர் ஆற்றில் இறங்கமுடியாது. எங்கள் தோழர்கள் ஒழுங்குபடுத்த-வில்லை என்றால் மகாமகமே நடக்காது.
அமைச்சர் எ.வ.வேலுவின் வேலை என்ன?
நம்முடைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அமுது படைக்கவில்லை என்றால், எல்லா ஆண்டவனும் பட்டினிதான்; அல்லது நாங்களே உணவை வரவு வைத்துக்கொள்வோம் என்று சொல்லக்கூடிய நிலை உண்டா?
அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார். கடவுளை மற; மனிதனை நினை என்று. கடவுளை மற என்று நிறுத்திவிடவில்லை. மனிதர்களை நினைத்துப்பாருங்கள் என்றார்.
பட்டினி கிடக்கின்ற மனிதனை நினைத்துப் பாருங்கள். கல்வி என்பதற்கு இப்பொழுது என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள்? மத்திய கல்வி அமைச்சர் என்ற பெயர் இப்பொழுது மாறிப்போய்விட்டது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை என்று இப்பொழுது பெயர் வைத்திருக்கின்றார்கள்.
மனிதவள மேம்பாட்டுத்துறை
மனிதர்கள் 100 கோடி இருந்தாலும், 105 கோடி இருந்தாலும், 110 கோடி ஆனாலும், பரவாயில்லை. இந்தத்துறை மனித வள மேம்பாட்டுக்கான துறை என்று வைத்திருக்கின்றார்கள். மனிதவளம் என்று சொல்லுகிறார்கள்.
எனவே அந்த மனிதவளம் எதைப் பொறுத்தது? மூளையைப் பொறுத்தது. நம்முடைய நாவலர் சொல்லுவார் ரொம்ப வேடிக்கையாக, யாராவது ஒருவர் வகுப்பில் இருக்கிற பையனையோ அல்லது கூட்டத்தில் இருக்கின்ற பையனையோ கூப்பிட்டு, அல்லது பெற்றோர்களைக் கூப்பிட்டு உங்களிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லைங்க என்று சொல்லலாம். அல்லது சொத்து இருக்கிறதா என்று கேட்டால் இல்லைங்க என்று சொல்லுவார். படித்திருக்கிறாயா என்று கேட்டால் இல்லை என்று சொல்லுவான். இத்தனையும் கோபப்படாமல் இல்லை என்று சொல்லுவான்.
உனக்கு மூளை இருக்கிறதா?
உனக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்டுப் பாருங்கள். ஓங்கி இரண்டு அறை அறைந்து விடுவார். எதற்காக இதைச் சொல்லுகிறோம்? ஒரு மனிதனுக்குத் தேவை சுயமரியாதை. மூளை இருக்கிறதா என்று கேட்டால் இவனாலே தாங்கிக்கொள்ள முடியாது.
ஏனென்றால் அதுதான்சிந்தனையின் ஊற்று. ஆனால் மூளையைப் பயன்படுத்தாத அளவிற்கு திருவிழாக்கள் மூலம், பக்தியின் மூலம், மூடநம்பிக்கையின் மூலம் மக்களை எப்படி சிந்தனை அற்றவர்களாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். நம்முடைய பெண்கள் இன்னமும் சாமியார்களை நம்பி பிள்ளைவரம் கேட்டுக்கொண்டிருக்கின்றார்களே!
இதைவிட அசிங்கம் உண்டா?
ஆண்கள் வெளியே உட்கார்ந்திருக்கிறார்களே. இதைவிடக் கொடுமை வேறு உண்டா? இதைவிட அசிங்கங்கள் வேறு உண்டா? அது நம்முடைய நாட்டு ஊடங்கள், பத்திரிகைகள் வெளியிடுகின்றன.
இன்றைக்கு நமது நாட்டின் ராசி பலன் என்ன? சரி ராசி பலன், ஜாதகப், பலன் என்பவைகளைப் போட்டு காசு பலன்களைப் பார்க்கக் கூடியவர்கள். விடுதலை, முரசொலியைத் தவிர தனுசு, சிம்மராசி, கடக ராசி என்று போடுகிறார்கள் பாருங்கள். இதை நான்கு பத்திரிகைகளில் பாருங்கள். காசு கொடுத்து வாங்காதீர்கள். நூலகத்தில் பாருங்கள்.
ஒரு பத்திரிகையில் வருமானம் வரவு என்று எழுதியிருப்பார்கள். இன்னொரு பத்திரிகையில் வருமானம் இழப்பு என்று போட்டிருப்பார்கள்.
ஒரு ராசியில் மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லுவான், அல்லது துக்கமான செய்தி என்று சொல்லுவான்.
மூடநம்பிக்கை வியாபாரம்
மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்யலாம் என்று கருதுகின்றார்கள். இவைகளைப் பற்றி எல்லாம் விளக்கத்தான் தந்தை பெரியார் குடிஅரசு ஏட்டைத் துவக்கினார்கள்.
அதிலும் இப்பொழுது நவீன மூடநம்பிக்கை என்ன தெரியும்களா? வாஸ்து சாஸ்திரம். ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சொல்லே பார்க்க முடியாது.
இப்பொழுது தேர்தலில் தோற்றுப் போகிறார்கள். தோற்றுப் போய் சோகமாக உட்கார்ந்திருப்பவரிடம் வந்து ஒரு நண்பர் சொல்லுகின்றார்,
நீங்க ஏன் தேர்தலில் தோற்றுப் போனீர்கள் தெரியுமா? அவர் உடனே ஆவலாக, ஓகோ நல்ல செய்தி, ஏதோ காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் போல இருக்கிறது என்று நினைப்பார். இவர் சொல்லுவார், உங்களுடைய வாசற்படி சரியில்லை என்று. இந்த வாசற்படியை இடித்துக்கட்டினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லுவார். வாசற்படியா வந்து ஓட்டு போட்டது? அதுவா ஓட்டுப் போடவில்லை. உடனே நம்மாள்_யார்? தேர்தலில் தோற்றவன், அதற்கென்னங்க இடிக்கலாம் என்று சொல்லுகின்றான். இதை செய்வது சாதாரண ஆட்கள் அல்ல. அரசியல் தலைவர்களே செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை நோய்?
-------------தொடரும் 20-6-2010கடவுள், ஜாதி, மதம் ஆகியவை மனிதனைப் பிரிக்கிறது
தந்தை பெரியார் மனிதநேயத்தால் எல்லோரையும் இணைக்கிறார்
தமிழர் தலைவர் விளக்கவுரை
கடவுள், ஜாதி, மதம் ஆகியவை மனிதனைப் பிரிக்கிறது. தந்தைபெரியார் மனிதநேயத்தால் எல்லோரையும் இணைக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
மூடநம்பிக்கைகள்தான் நம்முடைய மூளைகளை அரிக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மூடநம்பிக்கை தன்னம்பிக்கையின் விரோதி
மூடநம்பிக்கை என்பது தன்னம்பிக்கையின் விரோதி. எங்களைப் பாருங்கள். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப் படாதவர்களாயிற்றே. ஆதரவு வந்தால் ஏற்போம் எதிர்ப்பு வந்தால் சந்திப்போம்.
வெற்றி வந்தால் அமைதியாக இருப்போம். ஆகவே குடிஅரசு இதழ் உருவாக்கிய அடிப்படை பகுத்தறிவு மட்டுமல்ல. இந்தப் பகுத்தறிவு பகுத்தறிவிற்காக அல்ல, மனிதநேயத்திற்காக. மற்ற மனிதர்களை சமமாகப் பாவிக்க வேண்டும்.
சமத்துவம், சகோதரத்துவம்
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இந்த மூன்றையும் அடிப்படையாக வைத்துதான் குடிஅரசு ஏட்டை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி-னார்கள். ஏன், எதற்கு, என்று கேட்க வேண்டும். அறிவு சுதந்திரம் வேண்டும் என்று சொன்னார்.
நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளுக்குத் தெரியுமா?
அப்படி கேட்டதினால்தான் இந்த ஒலிபெருக்கி. அப்படிக் கேட்டதினால்தான் அவரிடம் இருக்கின்ற வீடியோ கேமரா. இந்த வீடியோ, காமிரா என்பது என்ன? முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஒரு பயலுக்காவது இதைப் பற்றித் தெரியுமா? அல்லது நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளுக்குத் தெரியுமா?
ஆனால் இப்பொழுது மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்ற வேண்டும் என்றாலும் முதலில் வீடியோ சாதனங்களை ரெடி பண்ணிக்கொண்டுதான் கூழ் ஊற்றுகிறான். இன்றைக்கு அப்பேர்ப்பட்ட அறிவியல் கருவிகளைக்கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு முன் வருகிறார்கள்.
கோமாளிப் பயல் ராஜ்ஜியம்!
எச்சிலைத் துப்புகிற சாமியார் என்று சொல்லுகின்றான். கொச்சையாகத் திட்டுகின்ற சாமியார் என்று சொல்லுகின்றான். திட்டினால் நல்ல சாமியார் என்கிறான். செருப்பை எடுத்து அடித்தால் நல்ல சாமியார் என்று சொல்லுகின்றான். இவ்வளவு கோமாளிப் பயல் ராஜ்ஜியம் உலகத்தில் வேறு உண்டா என்று சொன்னால் இல்லை. நாங்கள் ஒரு பக்கத்திலே வெற்றி அடைகிறோம் என்று சொன்னாலும் இன்னொரு பக்கத்தில் நாங்கள் வேதனை அடைகிறோம்.
ஆகவே நீங்கள் எந்த அரசியல் கட்சியில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை நண்பர்களே! நீங்கள் உங்களை மனிதர்களாக ஆக்கிக் கொள்-ளுங்கள்.
எங்கள் பின்னால் வந்தால்....!
இளைஞர்களே! எங்கள் பின்னால் வந்தால் உங்களை எல்லாம் நாங்கள் அந்தப் பதவிக்குக் கொண்டு போவோம், இந்தப் பதவிக்கு கொண்டுபோவோம், அப்படியாக்குவோம், இப்படியாக்குவோம் என்று சொல்லி உங்களை இந்த இயக்கத்திற்கு அழைக்க மாட்டோம்.
மாறாக உங்களுக்கு மனிதத்தைக் கற்றுக்-கொடுப்போம். உங்களை மனிதர்களாக்குவோம். மானமுள்ள மக்களாக்குவோம் என்பதற்காகத்தான் இந்த இயக்கம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. எனவே இந்த இயக்கம் செய்கின்ற பணியிருக்-கிறதே அது அற்புதமான பணி_மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி. இது பெரியாருக்காக அல்ல.
அண்ணா ஒரு முறை சொன்னார்
பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்: பல நூற்றாண்டுப் பணிகளை ஒரு குளிகைக்குள்ளே நுழைத்தவர் பெரியார் என்று சொன்னார்.
பெரியார் முதல் பேராசிரியர். அந்தப் பேராசிரி-யருடைய வகுப்பு மாலை நேரத்திலே தொடங்கும். மாலை நேரக் கல்லூரிகளாக ஒவ்வொரு பொதுக்-கூட்டமும் நடைபெறும் என்று சொன்னார்.
மருந்து சாப்பிடுவது யாருக்காக?
எனவே இந்தப் பணி என்பது எங்களுக்காக அல்ல. மருந்து சாப்பிடுகின்றீர்கள் என்று சொன்னால் எதற்காக மருந்து சாப்பிடுகின்றீர்கள்? டாக்டர் எழுதிக்கொடுத்துவிட்டார், வருத்தப்படுவார் என்பதற்காகவா? அல்லது மருந்துக் கடை வைத்தி-ருக்கிறாரே அவர் வருத்தப்படுவாரே என்பதற்காகவா? வியாபாரம் ஆகுகிறது என்பதற் காகவா? அல்ல. நம்முடைய நோயைப் போக்கிக்-கொள்ள நாம் மருந்து சாப்பிடுகின்றோம்.
மாமனிதர்களாக ஆக்க!
அது போல நீங்கள் இந்தப் பகுத்தறிவை, சுயமரியாதையை, குடிஅரசின் தத்துவத்தை ஏற்க வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொருவரும் மாமனிதர்களாக ஆக வேண்டும் என்று சொன்னால் இந்தக் கொள்கையை மூச்சுக்காற்றாகக் கொள்ளுங்கள். இந்தக் கொள்கை உங்களை உயர்த்தும்; உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
மூடநம்பிக்கையினால் ஏற்பட்ட விளைவு
மூடநம்பிக்கையினாலே சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்_2400 கோடி ரூபாய் திட்டம்_தமிழகத்திற்கு வளம் கொழிக்கக் கூடிய திட்டம். தென் மாவட்ட மக்கள் வளம் பெறக் கூடிய திட்டம்.
அந்த சேது சமுத்திர திட்டத்தை இல்லாத ராமனைக் காட்டித்தான், இல்லாத பாலத்தை இடிக்கிறார்களே என்று சொல்லித்தானே தடுக்க முனைந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை போடுகிறார்கள். எனவே மதம் மனிதர்களைப் பிரிக்கிறது. கடவுள் சண்டைகளை உருவாக்கியிருக்கிறது. ஜாதி ஒவ்வொருவரையும் பிரித்திருக்கிறது.
பெரியார் எல்லோரையும் இணைக்கிறார்
பெரியார் மனிதநேயத்தோடு எல்லோரையும் இணைத்திருக்கிறார். குடிஅரசு எல்லோரையும் இணைத்திருக்கிறது. பகுத்தறிவு நல்ல வழிகாட்டுகிறது என்று சொல்லி இவ்வளவு, அற்புதமான வாய்ப்பை உருவாக்கி மிக அருமையாக இந்தப் பகுதியிலே இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த நம்முடைய இளைஞர்களுக்குப் பாராட்டு; ஒத்துழைத்த அனைத்துக்கட்சி நண்பர்கள், உதவி செய்தவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி.
மேலும் இளைஞர்கள் இந்த இயக்கத்திற்கு வந்து, இதனைப் பலப்படுத்தி, மான வாழ்வுக்கு ஆயத்தமாகுங்கள் என்று கூறி முடிக்கிறேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்-----------------------” விடுதலை”.21-6-2010
7 comments:
அருமையான பதிவு...
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html
பெரியார் ஏன் வீரமணியையும், ராமகிருஷ்ணனையும் பிரித்தே வைத்துள்ளா?
சென்டிமென்ட் என்பது ஒவ்வொருவருக்கும், ஒரு மாதிரி! கருப்புச் சட்டை, மஞ்சள் துண்டு...இது போல! அடியாளம் என்று வாதிட்டாலும், ஒன்றையே ஏன் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்!அதுவும் ஒரு மூட நம்பிக்கை தானே!
(கடவுளுக்கு கல்யாணம் என்பதும், அதை மனிதர்கள் நடத்து வதும் ஆத்திகவாதிகளுக்கே ஜீரணிக்க முடியாத விஷயம் தான்!)
//கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ்வளவு நாள் என்னைத் தூக்கியவன் அவன்; என் அருகில் வந்து உட்காரட்டும் என்று சொன்னானா?//
தலைவர் தன் வீட்டு வாட்ச் மேனை பார்த்து " நீ இத்தனை நாள் காவல் காத்தாய் , கொஞ்ச நாளைக்கு நீ வீட்டு முதலாளியாக இரு நான் வாட்ச் மேனாக இருக்கேன்" என்று சொல்வாரா?
"கொஞ்ச நாளைக்கு நீ சமையல் காரனாக சமையல் செய் ; சமையல் காரனை வாட்ச் மேனாக வாசலில் நிற்கட்டும் என்று சொல்வாரா
//கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ்வளவு நாள் என்னைத் தூக்கியவன் அவன்; என் அருகில் வந்து உட்காரட்டும் என்று சொன்னானா?//
தலைவர் தன் வீட்டு வாட்ச் மேனை பார்த்து " நீ இத்தனை நாள் காவல் காத்தாய் , கொஞ்ச நாளைக்கு நீ வீட்டு முதலாளியாக இரு நான் வாட்ச் மேனாக இருக்கேன்" என்று சொல்வாரா?
"கொஞ்ச நாளைக்கு நீ சமையல் காரனாக சமையல் செய் ; சமையல் காரனை வாட்ச் மேனாக வாசலில் நிற்கட்டும் என்று சொல்வாரா
//Blogger விஸ்வாமித்திரன் said...
//கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ்வளவு நாள் என்னைத் தூக்கியவன் அவன்; என் அருகில் வந்து உட்காரட்டும் என்று சொன்னானா?//
தலைவர் தன் வீட்டு வாட்ச் மேனை பார்த்து " நீ இத்தனை நாள் காவல் காத்தாய் , கொஞ்ச நாளைக்கு நீ வீட்டு முதலாளியாக இரு நான் வாட்ச் மேனாக இருக்கேன்" என்று சொல்வாரா?
"கொஞ்ச நாளைக்கு நீ சமையல் காரனாக சமையல் செய் ; சமையல் காரனை வாட்ச் மேனாக வாசலில் நிற்கட்டும் என்று சொல்வாரா
June 22, 2010 8:50 AM//
சரி பிச்சைக்காரன் எப்ப முதலாளியானான்...ஏங்கிட்ட உழைக்காமல் வாங்கி தின்றவன் எப்படி முதலாளி ஆகமுடியும். பிச்சைப்போடற நான் இல்ல முதலாளியாக இருக்க முடியும் என்று அவன் கேட்டால் என்ன பதில் சொல்லுவ...
உனக்கென்று நிலமும் இல்லை வீடும் உன்னது இல்ல....நீ திங்கற சாப்பாடும் நீ உழைச்சி சம்பாதித்தது இல்ல எல்லாம் நான் கொடுத்தது. நீ எப்ப முதலாளி ஆனே...என்று இவ்வளவு நாள் வாட்ச் மேனாக ஏமாந்து வேலைபார்த்து கொண்டிருந்தவன் முதலாளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு ஏமாற்றி கொண்டிருக்கும் சோம்பேறியிடம் கேட்டால் என்ன பண்ணுவ....
அது மாதிரிதான் பார்ப்பனன் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு சவாரி செய்யறானே...அவனை ஒரு நாள் தூக்க சொல்லி உண்மையான முதலாளி மற்றும் தொழிலாளியான திராவிடன் அதன் மேல் ஏறி சவாரி செய்யனும்...அதை கடவுள் செய்தாரா... செய்யமாட்டார் ஆகையால் அதை நாம தான் செய்யணும்னு பெரியார் சொல்றார். இப்ப புரியுதோ...நோக்கு...
முதலாளியா தொழிலாளியா என்பதை நீ முடிவு பண்ணக்கூடாது...பத்திரம் முடிவு பண்ணணும்...அரசு முடிவு பண்ணணும்...பார்ப்பன ஜாதி முடிவு பண்ணக்கூடாது. உடல் உழைப்பு முடிவு பண்ணணும். பிடுங்கித் திண்ணக்கூடாது...உழைச்சி சம்பாதிக்கணும்....
அடுத்தவ முதுகில ஏறி சவாரி செய்யக்கூடாது...பக்தி இருந்தா நீயும் சேரந்து தூக்கணும். அவன் மேல மனிதாபிமானமற்ற முறையில் ஏறி உட்காரக்கூடாது. ஏறி உட்கார்ந்து கொண்டு பக்தியை பத்தி வாய்கிழியப் பேசப்படாது. (ஆனா நீ பேசுவே நீ யாரு....ராசா மனிதநேயமிக்கவனாச்சே...உன்னை நீயே மெச்சிக்கணும்)
இது மாதிரி தொழிலாளர் நல சட்டத்திலேயே இருக்குது...போய் தொழிலாளர் நல சட்டப் புத்தகத்தை பார்க்கலாம்........தொழிலாளர் நல சட்டத்தில் தொழிலாளருக்குத்தான் அதிக முன்னுரிமை....அங்கேயே முதலாளி ஏறி சவாரி எல்லாம் செய்யமுடியாது...ஏறினால் கம்பி எண்ணனும்...லாக் அவுட் தான...அது தெரியுமோ நோக்கு...
இப்படி தத்து பித்துன்னு உளரப்படாது. இந்த உருப்படாத தத்துவத்தை ஊத்தைவாயன் கிட்ட வேணுமான சொல்லலாம்.
எவ்வளவு? பெரிய அவதூரை எவ்வளவு அசால்ட்டா பின்னூட்டமா வைக்கிற பார்த்தியா....வைச்சுட்டு எங்க மனது புண்படுது என்றும் கருத்து வேற வைப்ப...நீ வைக்கும்போதே கோடிக்கணக்கானவர்கள் மனது புண்படுவதை பத்தி கவலைப்பட்டிருப்பியா...திருந்தாத ஜென்மம்.
//Blogger ரம்மி said...
சென்டிமென்ட் என்பது ஒவ்வொருவருக்கும், ஒரு மாதிரி! கருப்புச் சட்டை, மஞ்சள் துண்டு...இது போல! அடியாளம் என்று வாதிட்டாலும், ஒன்றையே ஏன் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்!அதுவும் ஒரு மூட நம்பிக்கை தானே!
(கடவுளுக்கு கல்யாணம் என்பதும், அதை மனிதர்கள் நடத்து வதும் ஆத்திகவாதிகளுக்கே ஜீரணிக்க முடியாத விஷயம் தான்!)
June 22, 2010 7:53 AM//
அது போடுகிறவர் இது போட்டா நல்லது நடக்கும் என்று விளம்பர படுத்தினா தான் மூடநம்பிக்கை...
தனக்கு பிடித்த வண்ணத்தை தேர்வு செய்வது என்பதை நமது மூளை சம்பந்தப்பட்ட விஷயம்...கடைக்கு போய் துணி எடுக்கும்பொழுதே சிலருக்கு பிடித்த வண்ணத்தையே வழக்கமாக எடுப்பார்கள் அந்த வண்ணம் தான் வீட்டில் இருக்கிறதே என்று நினைவு படுத்தினால் தான் அவருக்கு நினைவு வரும். அடுத்தவருக்கு வேறொரு வண்ணம் அப்படியே நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கும்...நீலம், கருப்பு, சிவப்பு...பஞ்சு மிட்டாய்...சிலருக்கு பிடித்த வண்ணம் அடுத்தவருக்கு அருவருப்பாக கூட இருக்கும். ஆனால் அவர் அதை மாற்றுவதில்லை. இவருக்கு (குறை கூறுபவர்) பிடித்த வண்ணம் அவருக்கு அருவருப்பாக இருக்கும். அதற்காகவும் இவர் மாற்றிக்கொள்வதில்லை. மாற்றாததற்கு காரணமாக மூடநம்பிக்கையை பிறருக்கு கற்பிப்பது தான் தவறு.
ஒரு கட்சித்தலைவர் பிறரிடமிருந்து வேறுபட்டுத் தெரிவதற்காக தன்னுடைய தொண்டர்களுக்காக இப்படி போட்டுக்கொள்வது தவறில்லை. விபி.சிங் தொப்பி, எம்.ஜி.ஆர் தொப்பி...இப்படி எத்தனையோ பல விஷயங்கள். அவரிடம் ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும், குறை சொல்ல வேண்டும் என்பதற்காக விமர்சனங்கள் எழும். இப்படி எம்.ஜி.ஆருக்கும் எழுந்திருக்கிறது. வி,பி.சிங்கிற்கும் எழுந்திருக்கிறது. ஏன் அப்துல் கலாமிற்கும் எழுந்திருக்கிறது. (அவர் நடையுடைக்காக...) இப்பொழுது இன்னொருவருக்கும் எழுந்திருக்கிறது.
ஹி ஹி ரொம்ப நாளாக வேட்டி சட்டை போட்டிருப்பது எவர் கண்ணிற்கும் தெரியவில்லை (அதுவும் ஒரே வண்ணம் தான் வெள்ளை)...இப்பொழுது மஞ்சள் துண்டு சரியாக கண்ணில் பட்டுவிட்டது... சக்சஸ்...! இதற்காகத்தான் அதை போடுவதே...அப்புறம் எதற்கு ஆடை அலங்காரம். எல்லாம் இதற்காகத்தான்.
பெண்களை கவருவதற்கு ஒரே மாதிரியாக உடையணிந்து அனைவரும் சென்றால் எப்படி பெண்களால் தனித்து ஒருவர் மற்றும் உற்று நோக்கப்படுவார்... பிறரிடமிருந்து மாறுபட்ட வண்ணத்தில் போனால் தான் அவர் உற்று நோக்கப்படுவார்.... இது இளைஞனோட கவலை...
உடனே இதற்குத்தானா? என்று கருத்து வைக்க கூடாது...அவரவர் நோக்கம் சார்ந்தது...நம்ம நோக்கம் ஏதாவது குறை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்பது மாதிரி.. தொடர்ந்து நிறைய இடத்தில் பின்னூட்டமாக இதையே வைத்திருப்பது கூட ஒரே மாதிரியான நோக்கம் தானே..
ஹி ஹி இல்லை இதை கூட சென்டிமென்டாகத்தான் எடுத்துக்கொள்ள முடியுமா..?
Post a Comment