புறப்பட்டு விட்டார்கள் ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்கள்!
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியும் சேர்க்கப்பட வேண்டும் என்று சமூகநீதியாளர்கள் அனைவரும் ஒருமித்த முறையில் ஓங்கிக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இன்னும் சொல்லப் போனால் ஜாதி ஒழிக என்று அழுத்தமாகக் குரல் கொடுப்போரும், ஜாதி ஒழிப்பினைக் கொள்கையாகக் கொண்டவர்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று தீவிரமாகப் பேசி வருகின்றனர்.
ஜாதியில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்களோ ஜாதியின் வாலினைத் தம் பெயரோடு ஒட்ட வைத்துக் கொண்டு உலவுபவர்களோ கூடாது கூடாது ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது என்று ஒய்யாரம் பேசுகிறார்கள் ஒட்டாரமும் செய்கிறார்கள்.
ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தேவை என்கிற அவசியமான சூழல் உள்ள ஒரு நாட்டில், அதுபற்றிய புள்ளி விவரம் தேவை என்பது அடிப்படையான பொது அறிவாகும்.
டில்லியிலே சில பெரிய மனிதர்கள்கூடி ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். அந்த அமைப்பின் பெயர் மேரி ஜாதி ஹிந்துஸ்தானி (Meri Jaati Hindustani)
இந்தியர்களே எங்கள் ஜாதி என்பது இதன் பொருள்.
இதில் முக்கியமாகப் புரவலராக இருப்பவர் மக்களவை முன்னாள் தலைவர் காம்ரேட் சோம்நாத் சட்டர்ஜி.
ஒரு மந்தையில் பசுக்கள், எருதுகள் எருமைகளைப் பிரித்துக் கணக்கெடுப்பது போல மனிதர்களுள் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதாகக் கொச்சைப்படுத்திக் கருத்துகளைக் கூறியுள்ளனர்.
இருக்கும் ஜாதி உணர்வை குறைக்க வேண்டுமே தவிர அதனை வளர்த்துவிடக் கூடாது என்பதாலேயே தான் இத்தகு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் பரந்த உள்ளம் உள்ளவர்கள்போல பாசாங்கு செய்கிறார்கள்.
அரசியல், சமுதாயம் மற்றும் மதவாதிகள்கூட இந்த அமைப்புக்குத் தங்-களின் ஆதரவினைத் தருவதாகக் கூறியுள்ளனர் என்று இந்த அமைப்பின் அமைப்பாளர் பிரதாப் வைதிக் என்பவர் கூறியுள்ளார்.
(தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 12.6.2010 பக்கம் 7)
சமூக நீதிக்காக ஜாதிவாரி கணக்கெடுக்க முனையும்போது, ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல குறுக்குச் சால் ஓட்டும் இந்தப் பெரிய மனிதர்கள் ஜாதி ஒழிப்புக்காக இதுவரை எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டுள்ளனர் என்பதை அறிவு நாணயத்தோடு அறிவித்தால் அதனை வரவேற்கலாம்.
இவர்கள் வீட்டுத் திருமணங்கள் ஜாதி மந்தைக்குள் பட்டிக்குள் (மாடுகளை உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா!) அடங்குகின்றனவா அல்லது ஜாதி வேலியைத் தாண்டி நடக்கின்றனவா என்பதை ஆதாரத்துடன் சொல்லட்டும் அவர்களுக்கு ஒரு வணக்கம் கூடப் போடலாம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று குறைந்தபட்சம் அவர்களின் அமைப்பு சார்பாக ஒரே ஒரு குட்டித் தீர்மானம் போட தங்கள் பேனா மூடியைத் திறப்பார்களா என்று திறந்த மனத்தோடு கேட்க விரும்புகிறோம்.
இதில் ஒரு கடைந்தெடுத்த வேடிக்கை வினோதம் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கோமாளித்தனம் என்ன தெரியுமா?
ஒரு மார்க்சியவாதியாக இருந்து கொண்டு தன் பெயருக்குப் பின்னால் காரசாரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த சட்டர்ஜியை (சோம்நாத் சட்டர்ஜி) வெட்டிக் கொள்ள முடியாதவர்தான், மனம் இல்லாதவர்தான் ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது என்ற அமைப்பின் புரவலர் ஆவார்.
சட்டர்ஜி என்பது பார்அட்லா பட்டமா? பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓர் உயர் ஜாதிக் கூட்டத்தின் ஆணவச் சின்னம் அல்லவா அது!
இன்னும் ஓர் அணுகுண்டு இருக்கிறது அதைத் தூக்கிப் போட்டால் அசந்து போய் விடுவீர்கள். அப்படியா! அது நடந்திருக்குமா? நம்ப முடியவில்லையே! என்று பேசக்கூட ஆரம்பித்து விடுவீர்கள்.
மும்பையிலிருந்து வெளிவரும் எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி என்னும் வாரப் பத்திரிகையில் (8.5.1993) வெளிவந்த அந்த வெடிகுண்டுத் தகவல் இதோ:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி எனும் வங்காளப் பார்ப்பனர் தனது பேரக் குழந்தைகளுக்குப் பூணூல் கல்யாணம் நடத்தி இருக் கிறார்; அது மட்டுமல்ல; அதற்கு அழைப்பிதழ் அச்சிட்டு அரசியல் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்!
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலகம் முழுதுமிருந்தும் மார்க்சிய அறிஞர்களை அழைத்து மார்க்சியம்பற்றிச் சர்வதேசக் கருத்தரங்கை கல்கத்தாவில் நடத்தியது; இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள மேற்கு வங்க இடதுசாரி ஆட்சியில் இடம் பெற்றுள்ள ஆர்.எஸ்.பி. கட்சிக்கோ, பார்வர்டு பிளாக் கட்சிக்கோ அழைப்பு அனுப்பப்படவில்லை.
இவைகள் இடதுசாரி கட்சிகளாக இருந்தாலும்கூட, கட்சிப் பெயரில் மார்க்சைக் கொண்டிருக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுர்ஜித்சிங் இதற்குக் காரணம் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவந்த மார்க்சிய அறிஞர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கும்கூட அக்கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது பற்றிப் பார்வர்டு பிளாக் கட்சி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டாபாசு குறிப்பிடும்போது எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை; மார்க்சிஸ்ட் வட்டாரத்திலிருந்து எனக்கு வந்த ஒரே அழைப்பு சோம்நாத் சட்டர்ஜியிடமிருந்து தான். அந்த அழைப்பு அவர், தனது இரண்டு பேரப் பிள்ளைகளுக்குப் பூணூல் கல்யாணம் நடப்பதற்கான அழைப்பு என்று கூறியுள்ளார்.
பம்பாயிலிருந்து வெளிவரும் எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி வாரப் பத்திரிகை (மே 8, 1993) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
‘‘Chitta Basu, however jocularly remarked, that the only invitation he had received from CPI (M) quarters was from Somnath Chatterjee MP, in connection with his two grandsons ‘thread’ Ceremony’’
_ என்று அந்த ஏடு எழுதியிருக்கிறது; இதுபற்றி அந்த ஏடு தனது கருத்துகளை இவ்வாறு எழுதியிருக்கிறது.
சித்தபாசு சாதாரணமாகச் சொன்ன இந்தச் செய்தி, விருந்து கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் குணாம்சத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் மதத்தையோ கடவுள் நம்பிக்கையையோ உறுதியாக எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றுவதில்லை. ஆனாலும், பூணூல் போடும் சடங்கு, மதத் தத்துவத்தைச் சார்ந்த பிரச்சினை அல்ல; அது மதச் சடங்கு; வர்ணாஸ்ரமத்திலும், ஜாதியிலும் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் சடங்கு.
இந்தச் சடங்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தலைமைப் பேச்சாளருமான அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமாக இருக்கும் சோம்நாத் சட்டர்ஜி இன்னமும் பின்பற்றுகிறார். ஜாதி ஏற்றத் தாழ்வுகளின் சின்னமாக இருக்கும் பூணூல் சடங்கை ஆர்ப்பாட்டமான விழாவாகக் கொண்டாடி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இவர்கள் எல்லாம் எந்த அளவுக்கு மார்க்சிஸ்ட்கள் ஆவார்கள்? இவ்வாறு அந்தப் பத்திரிகை எழுதியிருக்கிறது.
இந்தச் செய்தியை அப்படியே மொழிபெயர்த்து விடுதலை (24.8.1993 முதல் பக்கத்தில்)
பூணூல் பிராண்ட் மார்க்சியம் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத் தும் சோம்நாத் சட்டர்ஜி என்னும் தலைப் பில் அப்பொழுதே வெளியிட்டது.
கொஞ்சம் அசந்தால் மார்ச்சுக்கே பூணூல் போட்டு விடுவார்களோ!
இந்தப் பூணூல் திருமேனிகள்தாம் ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.
குறிப்பு: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்கள் பச்சைக் கொடி காட்டியிருப்பது வரவேற்கத் தக்கதாகும்.
-------------------19-6-2010 "விடுதலை” ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
2 comments:
சாதி எதிர்ப்பாளர்கள் ஏன் சாதிவாரி ஸென்ஸஸ் வேண்டும் என்று கோருகிறார்கள் என்பதை சிறிது விளக்கலாமே! (ஏற்கனவே சொல்லி இருந்தாலும் மீண்டும் ஒருமுறை!)
அரசின் இந்த கொள்கை முடிவில் பா.ம.க கட்சி ஒரு காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கறீர்களா ? ( நான் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரானவன் அல்ல)
Post a Comment