
அஷ்டமி - நவமி
தமிழ்நாட்டின் கல்வித் துறையில் அதிகாரிகளுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள் வழங்கப் பட்டன. அத்தகையவர்கள் புதிய பொறுப்பை ஏற்கும் போது அஷ்டமி நவமி பார்த்துப் படித்து, தங்களுக்கு உகந்த நல்ல நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனராம்.
படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்? அது வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்றார் தந்தை பெரியார். பெரியார் சொன்னது பொய்த்துப் போகக் கூடாது அல்லவா - அதனால்தான் படித்த இந்த அதிகாரிகள் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் போலும்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவினர் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பார்க் காமல் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்களோ ஜாதகத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். முடிவு என்னாயிற்று?
இவ்வளவுக்கும் இராமன் பிறந்ததுநவமி, கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமி - இவர்கள் போற்றும் கடவுள்கள் பிறந்தது எப்படி கெட்ட நேரமாகும்? ஒரு கால் கடவுள் என்பதே கெட்ட விஷயம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டார்களோ!
இவர்களைச் சொல்லிக் குற்றமென்ன? இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறும் நேரமே அஷ்டமி நவமி பார்த்துத் தள்ளாட்டம் போட்டது. அதனால்தான் நள்ளிரவில் இந்தியாவின் சுதந்திர ஒப்பந்தக் கையெ ழுத்தானது. வெள்ளைக் காரர்களுக்கு நாள் பிறப்பு என்பது இரவு 12 மணி; இந்(து)தியர்களுக்கோ விடியற்காலை சூரிய உதயத்திற்குப் பின்பு தானாம்! எதையோ சமா தானம் சொல்லி சமாளித்து அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்து கொண்டனர்.
தங்களுக்குத் தேவைப்படும் போது, வசதியாக இருக்கும்போது, அது அதற்கும் ஏதாவது வக்கணையான சால் ஜாப்புகளை சொல்லி, பிராயச்சித்தங்களை ஏற்பாடு செய்து, தப்பித்துக் கொள்வார்கள்.
பாவங்களைப் போக்கச் சென்ற மகாமகக் குளத்திலேயே விபத்துகள் ஏற்பட்டு பக்தர்கள் மடிய வில்லையா? கோயில் திருவிழாக்களில் ஏற்படும் விபத்துகளால் எத்தனை ஆயிரம் பேர்கள் பரிதாப மரணத்தைத் தழுவுகிறார்கள்.
இவ்வளவு நடந்தும் பாழாய்ப் போன மதத்தையும் - கடவுளையும், ஜோதிடத்தையும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்ற நேரச் கொல்லியையும் கட்டிக் கொண்டு அழுகின்றனரே!
பணத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்ள முடியும் காலத்தை இழந்தால் இழந்ததுதான் - அதனை மீட்க முடியுமா?
காலம் கண் போன்றது என்று சொல்வது இந்த அர்த்தத்தில்தான். கல்வியில் அடிப்படை மாற்றம் வந்தாலொழிய இந்தக் கண்ணராவிகளுக் கெல்லாம் கழுவேற்றம் நடக்கப் போவதில்லை.
---------------- மயிலாடன் அவர்கள் 7-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
1 comments:
//இவ்வளவு நடந்தும் பாழாய்ப் போன மதத்தையும் - கடவுளையும், ஜோதிடத்தையும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்ற நேரச் கொல்லியையும் கட்டிக் கொண்டு அழுகின்றனரே!
பணத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்ள முடியும் காலத்தை இழந்தால் இழந்ததுதான் - அதனை மீட்க முடியுமா?//
பொழுது போக வில்லை என்ற வார்த்தையை அதிகமாக உச்சரிக்கும் இவர்கள் என்று தான் திருந்துவார்களோ?
Post a Comment