Search This Blog

1.6.09

பரம்பரை வியாபாரிகள்கூட இந்தப் பக்தி வியாபாரிகளிடத்திலே பிச்சை வாங்கவேண்டும் - போங்கோ!


பக்தி வியாபாரம்

திருப்பதி ஏழுமலையான் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வி.அய்.பி.,க்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தான நிருவாகம் அறிவித்துள்ளது.

சபாஷ், சரியான அறிவிப்பு இது! குறிப்பாக ஏழை பாழைகள் நடுத்தர மக்கள்தானே ஏமாந்த சோணகிரிகள் - கடவுள் கடாட்சம் காட்டமாட்டாரா என்று ஏங்குவது இவர்கள்தானே?
உழைத்தும் ஒரு காசு கூட மிச்சமில்லையே என்று உருகிக் கண்ணீர் வடிப்பவர்கள் இவர்கள்தானே!

இன்றில்லாவிட்டாலும் நாளை பகவான் கண்களைத் திறப்பார் (அவர் என்றைக்குத் திறந்தார்? சிற்பி அடித்து வைத்த அந்த உருவம் சலனமில்லாமல் அப்படியேதானே ஆண் டாண்டு காலமாக இருந்து வருகிறது) என்ற நப்பாசையில் கோயில் குளங்கள் என்று நாடித் திரிகிறார்கள். ஏற்கெனவே வறுமை - இதில் கடன் வாங்கியாவது க்ஷேத்திராடனம் செய்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

அதுவும் தீராத வினை களையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று விளம்பரப்படுத்தப் பட்ட கடவுளாயிற்றே - அப்படிப்பட்ட கோயிலுக்கு அப்பாவிப் பக்தர்கள் திரளக் கேட்கவா வேண்டும்?

வி.அய்.பி.,க்கள் வீட்டில் இருந்தே இணைய தளம் மூலம் ஏழுமலையானைத் தரிசிக்கத்தான் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்களே - பக்தி வியாபாரம் இப்பொழுது ஹை-டெக்கில் சவாரி செய்துகொண்டிருக்கிறதே.

இந்த நிலையில், வி.அய். பி.,க்கள் தேவையில்லாமல் ஏழுமலையானைக் காண திருப்பதி வருவானேன்? அவர்கள் வருகிறார்கள் என்பதற்காகக் குறுக்கு வழியில் பகவானைக் காட்ட ஏற்பாடு செய்யவேண்டும்; இதன்மூலம் பக்தர்களிடையே சலசலப்பு வேறு!

பகவான் முன்னே எல்லோரும் சமம்தான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொள்கிறார்கள்; அப்படி யென்றால் வி.அய்.பி.,க்கள், வி.அய்.பி.,க்கள் அல்லாதார் என்று கோடு போட்டுப் பிரிப்பது சரியானதுதானா? என்று யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது - எல்லாரும் மனிதர்கள் என்றாலும், அவாள் அவாளுக்கென்று தலையெழுத்து என்பது தனித்தனியாகத் தானே இருக்கிறது!

இப்படி அது அதற்கும் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விளக்கம் ஹிந்து மதத்தில் வண்டி வண்டியாகக் கொட்டிக் கிடக்கிறதே.

இப்பொழுது திருப்பதி வெங்கடேஸ்வரனின் பிராஞ்ச் (கிளை) கடைகள் வேறு திறந்தாகி விட்டது. திருப்பதியில் ஏழுமலையானுக்குத் திருக்கல்யாணம் நடக்கும் அதேநேரத்தில் சென்னைத் தீவுத் திடலிலும் டூப்ளிகேட் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தை நேரில் பார்க்கலாம்.

ஹி... ஹி... பரம்பரை வியாபாரிகள்கூட இந்தப் பக்தி வியாபாரிகளிடத்திலே பிச்சை வாங்கவேண்டும் - போங்கோ!

------------------- மயிலாடன் அவர்கள் 1-6-2009 "விடுதலையில் எழுதிய கட்டுரை

1 comments:

nagoreismail said...

சிற்பி வடித்த சிலைக்கு சக்தி இல்லை - தந்தை பெரியார்