Search This Blog

4.6.09

பார்ப்பனர்கள் ஏன் ஆத்திரப்படுகிறார்கள் என்பது இப்போதாவது புரியட்டும்!




மனித தர்ம ஆட்சி நடத்தும்
மாமேதை கலைஞர் வாழ்க! வாழ்க!!


ஈரோட்டுக் குருகுலத்தில் வளர்ந்து, காஞ்சி அண்ணாவின் அரவணைப்பில் பூத்து, கடுமையான உழைப்பின் மூலமும், இன எதிரிகள் இடும் உரத்தினாலும் (ஏச்சும் பேச்சும்) வளர்ந்து, காய்த்து, தொண்டால் கனிந்த நமது மானமிகு சுயமரியாதைக்காரர் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் - நாளை (3-6-2009) 86 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

86 ஆம் வயதிலும் . . .

இந்த 86 ஆவது வயதிலும் சோர்வறியா உழைப்பிலும், சொலன்வல்லன் என்னும் ஆற்றலிலும், நிலையான நினைவு வன்மையின் பாய்ச்சலிலும் அவருக்கு நிகர் அவரே என்ற எவரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் மனிதநேயம் பொங்கி வழியும் ஆட்சியை - அய்ந்தாம் முறையாக - அரியதோர் பொற்கால ஆட்சியை முன்னிறுத்தி, ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமையற்றோராக வாழ்ந்தவர்கள் - மகளிர் ஆகிய அனைத்துத் தரப்பினரும் மனநிறைவு கொள்ளும் வண்ணம் நடத்தி சாதனைச் சரித்திரத் தொடர்ச்சியைத் தொடர்ந்து கொண்டே உள்ளார்கள்.

மகளிர் மறுமலர்ச்சித் திட்டங்கள்

எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. விதவைத் தாய்மார்கள், பெண்டிர் வாழ்வுக்கென அவர்கள் பாதுகாப்பிற்காகவும், மறுமண உதவிக்கான பல திட்டங்களை - அறிவித்து, அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை திருமண உதவித் திட்டம், டாக்டர் தருமாம்பாள் அம்மையார் விதவை மறுமண நிதி உதவித் திட்டம் என பல்வேறு நிலையில் 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவித் திட்டம் என்று முன் வந்து மகளிர் அனைவரும் பயன்பெறும் வண்ணம் உதவுவதோடு, 50 வயது கடந்து திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் ஆறாயிரம் ஏழைப் பெண்களுக்கும் மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம் வரை எத்தனையோ திட்டங்கள்!

இவை அனைத்தும் அனைத்து ஜாதிமதம் இவற்றில் உள்ளவர்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டமாகும்!


அன்று பார்ப்பனர்களுக்கு மட்டும்
அரசு நலத் திட்டங்கள்

ஆனால் நீதிக்கட்சி ஆட்சி தோன்று முன்பு - பார்ப்பனர் ஆதிக்கம் அதிகார வர்க்கம் ஆண்ட காலத்தில் - வெள்ளைக்காரர்களையும் மிரட்டி மத விஷயங்களில் தலையிடாக் கொள்கையைப் பெற்றுக் கொண்டனர். மனு, மாந்தாதா ஏற்படுத்தியவைகளையே பயன்படுத்தி, பார்ப்பனருக்கு மட்டுமே ஆட்சியின் நலத்திட்டம் பயன்பெற்ற வரலாறு பலரும் அறியாததாகும்.

ஆவணக் காப்பக ஆதாரங்களைத் திரட்டி விடுதலை பவளவிழா வெளியீடாக வரும் நூலிலிருந்து திரட்டப்பட்ட ஒரு செய்தி.

பிராமண விதவைகளுக்கு மட்டும் - திருவல்லிக் கேணியில் பலகோடி ஒதுக்கி விடுதி - உதவித் தொகை - இதோ ஆதாரம்:

தமிழ்நாடு ஆவணக் காப்பகச் சான்றுகள்

திருவல்லிக்கேணி பிராமண விதவைகள் விடுதியை நடத்துவதற்கு ஏற்படும் செலவினங்கள் குறித்து எம்.சி. ராஜா விடுத்த வினா பதிவு செய்யப் பட்டமையையும் சட்டமன்றத்தில் அதற்குப் பதில் அளிக்கப்பட்டமையையும் காண்க.

பிராமண விதவை விடுதிக்கு,

1918-19 இல் ஏற்பட்ட செலவு ரூ 12, 334

1919- 20 இல் ஏற்பட்ட செலவு ரூ 13,144

இவற்றில் உதவியும் அடங்கும். கட்டடத்திற்காகச் செலவழிக்கப்பட்ட தொகைக்கான, வட்டி உட்பட ஒரு மாணவிக்கு ரூ.12,918

1919 இல் 206,

1920 இல் 173 என்னும் பதில்.

பிராமண விதவைகளை மட்டும் போஷிக்கும் இத்திட்டத்தில் மனுதர்மம் -

சூத்திர விதவைகள் தள்ளப்பட்டனர்.

18-3-1919 இல் திருவல்லிக்கேணி பிராமண விதவைகள் விடுதிக்கு 8-4-1916 இல் மேலும் 16 விதவைகளை அனுமதித்ததையும், இதன் மூலம் விதவையர்கள் வாங்கும் நிதி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது என்பதும் மேலும் விண்ணப்பிக்கப்படுகின்றது.

அரசு ஆணை 16/6 -
உள்துறை கல்வி - 31.12.1919

கல்வித் துறை இயக்குநர் திருவல்லிக்கேணியில் பிராமண விதவை விடுதியில் மாதம் ரூ 15 வீதம் அளிக்கவும், மேலும் ஒன்பது அரசு உதவி அளிக்கக் கல்வித் துறை இயக்குநர் அளித்த கோரிக்கையை அனுமதிப்பது பற்றியது.

திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பிராமண விதவையர் விடுதிக்கு 59 விதவையர் உதவி நிதிகள் இப்போது வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசு ஆணை 982 உள்துறை -கல்வி 12.8.1919 இல் வழங்கப்பட்ட ஆறு மிகுதியான நிதி உதவிகளும் அடங்கும்.

. . . திருவல்லிக்கேணியில் உள்ள பிராமண விதவைகள் விடுதியில் மாதம் 15 ரூபாய் அளிக்கக் கூடிய மேலும் ஒன்பது அரசு உதவி நிதி அளிக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர். லிட்டில் ஹெபால்ஸ் சென்னை அரசாங்க உள்துறை செயலருக்கு 1.12.1919 அன்று கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு ஜூலை 1920 முதல் அவ்வாறே வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டமை காண்கிறோம் (30.12.1919).


விடைபெற்றது மனுதர்ம ஆட்சி

எண்ணிப் பாருங்கள். மனுதர்ம ஆட்சி விடை பெற்றுக் கொண்டது. மனித தர்ம ஆட்சி -கலைஞர் ஆட்சி - அனைவருக்கும் அனைத்தும் என்கிற சுயமரியாதைக் கொள்கைகளை அமல்படுத்தும் ஆட்சியின் மாட்சியைப் பாருங்கள். பார்ப்பனர்கள் ஏன் ஆத்திரப்படுகிறார்கள் என்பது இப்போதாவது புரியட்டும்!

வாழ்க! வாழ்க!! கலைஞர் - நூற்றாண்டையும் கடந்து.


-------------------கி.வீரமணி அவர்கள் 2-3-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

பிராமண விதவைகளுக்கு மட்டும் தனிச் சலுகை வழங்கப்பட்டது எப்படி? ஏன்?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி