Search This Blog
3.6.09
உலக நாடுகள் -தூரப்பார்வை-பெலாரஸ்-பெல்ஜியம்-பெலிஸ்
பெலாரஸ்
சுலாவிக் (Slavic) இன மக்கள் 5 ஆம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்த இடம் பெலாரஸ் நாடு. பைலோ ரஷியா என்றும் இந்நாடு அழைக்கப்படுவது உண்டு.வெள்ளை ரஷியா என்ற பெயரும் கூட உண்டு.
டச்சு சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த லிதுவானியாவின் ஒரு பகுதியாக 1569 இல் இருந்து பிறகு போலந்துடன் இணைக்கப்பட்டது. போலந்து நாட்டில் அடிக்கடி ஏற்பட்ட பிரி வினைகளின் காரணமாக, பெலாரஸ் ரஷியாவுடன் சேர்க்கப்பட்டது.
முதல் உலகப் போர் முடிந்த பிறகு, பெலாரஸ் சுதந்திர நாடு என 1918 இல் அறிவித்துக் கொண்டது. வழக்கம் போலவே சோவியத்தின் செஞ்சேனை 1919 இல் தாக்குதல் நடத்தி சோவியத் ஒன்றியத்து டன் இணைந்த பெரலாரஷிய சோவியத் சோஷலிசக் குடியரசு என ஆக்கப்பட்டது. 1930 களில் ஸ்டாலின் அரசின் கொடுமை களால் இந்நாட்டில் பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 இல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியர்களின் படையெடுப்பில் பத்து லட்சம் பேர்களுக்கு மேல் பெலாரசில் இறந்து போயினர். தலைநகர் மின்ஸ்க் நகரில் ஏற்பட்ட சேதம் கூடுதலானது. 1944 இல்தான் சோவியத் படை ஜெர்மனியரை விரட்டியடித்தது.
பக்கத்து நாடான உக்ரைனில் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்தில் பெலாரஸ் 1986 ஆம் ஆண்டில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. 1991 சோவியத் ஒன்றியம் உடைந்த போது, பெலாரஸ் தனி நாடாகியது.
2005 ஆம் ஆண்டில் ரஷியா நாட்டுடன் இணையலாம் என்கிற எண்ணம் கொண்ட அமைப்பு உருவானது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதி ஒப்புதலுக்காக விளாடி மிர் புடினுக்கும் லுக்கரி ஷன்கோவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இது ரஷியாவுக்கு ஏற்புடையதாக அமையவில்லை. கூட்டாட்சியாக மலரும் நிலையில் ரஷிய அதிபரும் பெலாரஸ் அதிபரும் அதிகாரங்களைக் கூட்டாக வகிப்பதும் பகிர்ந்து கொள்வதும் ரஷிய அதிபர் புடினுக்கு உடன்பாடு இல்லாததாக இருந்தது. ஆனால் இம்மாதிரி கூட்டு அமெரிக்க அதிபரும் டெக்சாஸ் மாநில அதிபரும் சமமாகப் பகிர்ந்து கொண்டுள்ள நிலை உள்ளது. ஏற்கெனவே 1996 இல் ரஷ்ய அதிபராக போரிஸ் எல்ஸ்டின் இருந்தபோது இத் திட்டத்திற்கான முன் முயற்சிகள் எடுக்கப் பட்டன. என்றாலும் நடைமுறைக்கு வர வில்லை.
2 லட்சத்து 7 ஆயிரத்து 600 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் ஒரு கோடியே 3 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் கிழக்கத்திய பழமைவாதக் கிறித்துவம் சார்ந்தவர்கள் 80 விழுக்காடு மீதிப் பேர் கத்தோலிக, புரொடஸ் டன்ட், யூத, இசுலாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள். நூற்றுக்கு நூறு ஆண்களும் பெண்களும் கல்வியறிவு பெற்றவர்கள். ஆனால் இந்நாட்டில் கல்விக்கென தனிக்கடவுள் சரசுவதி இல்லை.
பெல்ஜியம்
பொது ஆண்டுக் கணக்குக்கு 57 ஆண்டுகளுக்கு முந்தி ரோமன் சக்ர வர்த்தி ஜூலியஸ் சீசர் இந்நாட்டை 7 ஆண்டுகள் ஆண்டார். 16ஆம் நூற்றாண்டு வரை ரோமானியப் பேரரசின் பகுதி யாகவே இருந்தது. 155 இல் தாழ்நாடுகளான பெல்ஜியம், நெதர்லாண்டு, லக்சம்பர்க் ஆகியவை ஸ்பெயின் நாட்டுடன் சேர்ந்தன. பின்னர் 1713 இல் உட்ரெக்ட் ஒப்பந்தப்படி இதன் ஆளுமையுரிமை ஆஸ்திரியாவுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் பிரான்சு நாடு இதனைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
நெப்போலியன் ஆதிக்கத்திற்குப் பின் 1814-15 இல் அமைந்த வியன்னா மாநாட்டின் முடிவுப்படி பெல்ஜியத்தை நெதர்லாந்துக்குக் கொடுத்தார்கள். ஆனால் இதை எதிர்த்து பெல்ஜியத்தில் போராட்டம் தொடங்கி டச்சு நாட்டுக்கு எதிராக பெல்ஜியம் சுதந்திர நாடு என அறிவித்துக்கொண்டது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து மன்னர் மூன்றாம் லியோபோல்டு என்பவரைக் கைது செய்தது. போர் முடிவில் 1944 இல் ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து பெல்ஜியம் நேசநாடுகளால் விடுவிக்கப்பட்டது. மன்னர் மூன்றாம் லியோபோல்டு மீண்டும் பதவிக்கு வர முயன்றார். ஆனாலும் அவரின் மகன் பாவ் டவுனுக்குப் பதவியைத் தருமாறு மக்களின் எழுச்சி 1950இல் அமைந்துவிட்டது. 1960 இல் பெல்ஜியம் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆப்ரிக்க குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை வழங்கியது.
இந்நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில்தான் அய்ரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமும் நாடோ அமைப்பின் தலைமையிடமும் அமைந்துள்ளன. இங்கு தான் அய்ரோப்பிய பாராளுமன்றமும் உள்ளது.
30 ஆயிரத்து 528 சதுர கி.மீ. பரப்பும் 1 கோடியே 4 லட்சம் மக்கள் தொகையும் உள்ள நாடு. ரோமன் கத் தோலிக்கர்கள் 95 விழுக் காடும் மீதிப் பேர் புரொடஸ்டன்ட் பிரிவைச் சார்ந்தவர்களாக உள்ளனர். டச்சு மொழி, பிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மூன்று மொழிகளும் ஆட்சி மொழிகளாக உள்ளன.
பெலிஸ் (Belize)
மாயா நாகரிகம் பரவியிருந்த நாடு. கப்பலில் பயணம் செய்த போது கப்பல் உடைந்த காரணத்தால் கரையேறிய பிரிட்டிஷ் கடலோடிகளால் முதல் குடியேற்றம் நடந்தது. இது 1638 இல் நடந்தது. பிரிட்டிஷ் ஹோன்டு ராஸ் எனும் பெயரில் 1840 இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாகியது. 1964 இல் உள்நாட்டு சுயஆட்சி உரிமை வழங்கப்பட்டது. 1981 இல் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
குவாடிமாலா இந்நாட்டின் மீது முழு பாத்யதையையோ அல்லது சில பகுதிகளின் மீதான பாத் யதையேயோ கொண்டாடி வந்தது. அந்தப் படிக்கு வரை படங்களையும் தயாரித்து குவாடிமாலா வெளியிட்டு வந்தது. 2005 இல் எல்லைத் தகராறு வளர்ந்து, பேச்சு வார்த் தைகள் நடந்தும் பலனில்லாமல் போனது.
விடுதலை பெற்றதிலிருந்தே பிரிட்டிஷ் போர்ப்படைப் பிரிவு ஒன்று, அந்நாட்டு அரசின் வேண்டுகோளின் படி பெலிஸ் நாட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது.
22 ஆயிரத்து 966 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 3 லட்சமே. ரோமன் கத்தோலிக்கர் 50 விழுக்காடும் புரொடஸ்டன்ட் 27 விழுக்காடும் உள்ளனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் 14 விழுக்காடு உள்ளனர். மதமே இல்லாதவர்கள் 10 விழுக் காட்டினர்.
------------------"விடுதலை"2-6-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நல்ல பதிவு.
Post a Comment