Search This Blog

1.11.09

கும்பகோணத்தில் குதித்தாடும் குடுமிகள்



இப்பொழுது ஒரு கதையைக் கட்டி அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்கிருஷ்ண பரமாத்மா உலகம் பூராவும் பரவி விட்டார். கிருஷ்ண பக்தர்கள் உலகெங்கும் தோன்றி விட்டார்கள் - ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகளாவிய இயக்கம் என்ற பரப்புரைதான் அது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், கேரள மாநில முதல் அமைச்சருமான ஈ.கே.நயினார் போப்பை சந்தித்தபோது கீதையைத் தானே கொண்டு போய்க் கொடுத்தார்? போதும் போதாததற்கு ஊடகங்கள் பார்ப்பனர்களின் கைகளில்தானே இருக்கின்றன.

அள்ளிவிட அளவு வேண்டாமா? ஊதிவிட ஊரார்தான் வேண்டுமா?

தந்தை பெரியார்தான் நறுக்கென்று சொன்னார் - முட்டாள்கள் என்ன இந்தியாவுக்குத் தான் சொந்தமா? உலகம் பூராவும் இருக்கத்தான் செய்வார்கள் என்றார். அந்தப் பட்டியலைச் சேர்ந்த சில கிறுக்கர்கள் கும்பகோணம் வந்துள்ளார்களாம்!

கோயில் நகரம் கும்பகோணம் என்று கேள்விப்பட்டு வந்திருக்கிறார்களாம்! குடந்தையில் பரதம் வேறு கற்றுக்கொள்ளப் போகிறார்களாம்! கோயில், குளம் என்று இந்த அய்ந்து பேரும் பரதம் ஆடுகிறார்களாம், பஜனை பாடுகிறார்களாம்!

வேடிக்கை பார்க்க கேட்கவும் வேண் டுமா? அதிசயமாக இந்தப் பஞ்ச பாண் டவர்களை மக்கள் பார்க்கின்றனராம்.

கும்பகோணம் கவரத் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண் டிருக்கிறார்களாம். சொந்தமாகவே சமைத்துக் கொள்கிறார்களாம்.

கிருஷ்ண பக்தர்கள் அல்லவா? கோயில், குளங்கள் என்று சுற்றித் திரிகிறார்களாம்.

இதே கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சி -இது 1936-ஆம் ஆண்டு நடந்த ஒன்றாகும். தினமணி (6.9.1995) அதை வெளியிட்டிருந்தது.

5.9.1936 சனிக்கிழமை குடந்தை ஆலயத்தில் பஜனைக் கோஷ்டி ஹரி சனங்களா? உள்ளே பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

(நமது செய்தியாளர்)

கும்பகோணம், செப்.4. நேற்று இரவு இந்நகர் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி கோயிலில் சுமார் 15 பேர் பஜனை செய்து கொண்டு மேலண்டை கோபுர வாசல் வழியாய் உள்ளே வந்தார்கள். இவர்களைக் கண்டவுடன், அங்கிருந்த வைதீக இந்துக்கள் பயந்து, அவர்களை அணுகி, நீங்கள் யாரென்று கேட்கவே, தாங்கள் நீலகிரி வாசியென்றும், ஆலயப் பிரவேச உரிமை உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்ல, நிச்சயமாய் அவர்கள் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவரும் இந்நகரில் தெரிந்து கொள்ள முடியாததால் உள்ளே போக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மேல் அவர்கள் வெளியேறிவிட்டார்கள். ஸ்ரீகும்பேசுவரர் ஆலயத்திலும் இப்படியே தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1936 இல் தடை. 2009 இல் அனுமதி என்றால் இதற்குக் காரணம் என்ன? 73 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.

இந்த நேரத்தில் இன்னொன்றைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.

வியாசர் விருந்து என்று பாரதம் குறித்தும் சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பில் இராமாயணத்தைப்பற்றியும் நூல் வெளியிட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கிருஷ்ணனைப் பற்றிபல விதமாகப் பேசும் பாகவதம் பற்றி ஏன் நூல் எழுதவில்லை என்ற கேள்வி நியாயமானதாகும்.

அதற்கான காரணத்தை ஆச்சாரியாரே கூறியிருந்தார் அதனைக் கல்கி இதழே கூட வெளியிட்டுள்ளது.

வியாசர் விருந்து என்ற தலைப் பிலும், சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் கல்கியில் தொட ராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர் களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுத லாமே என்று சதாசிவம் தமது யோசனையைக் கூட ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும். சதாசிவம்! எனக்கு பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலை களும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன. ராமாயணம், மகாபாரதம் போன்று தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டங் களாக அமையவில்லை. மனிதனுக்கு தார்மீக நெறிகளில் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் இந்த இதிகாசங்கள் ஊட்டுவது போல பாகவதத்தில் நான் காணவில்லை. (கல்கி4.10.2009.பக்.72)

ராஜாஜியாலும் பகவான் கிருஷ்ணனின் லீலைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்குக் காமரசம் ததும்பும் கதாநாயகனாக கிருஷ்ணன் உருவாக்கப்பட்டிருந்தான்.

இராமாயணத்தைப் பற்றியும், பாரதத்தைப் பற்றியும் ஆச்சாரியார் கூறிய கருத்துகளை பகுத்தறி-வாளர்கள் ஏற்கவில்லை என்பது வேறு விஷயம். ஆச்சாரியாராலேயே கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்க முடியவில்லை என்பதுதான் நமக்கு முக்கியமானது.

ஒரு பக்கத்தில் ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகம் முழுவதும் கிளை பரப்பிப் பரவியிருக்கிறது என்று பார்ப்பனர்களில் ஒரு சாரார் துள்ளிக் குதித்தாலும், அதனை ஜீயர் போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதும் முக்கியமானது.

இந்தத் தகவலையும் கல்கி (11.4.1982) ஏடுதான் பேட்டி கண்டு வெளியிட்டது.

கேள்வி: ஹரே கிருஷ்ணா என்று ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவி வரு கிறதே. இந்தியாவில் கூட இவ்வியக் கத்தினர் சுற்றுகிறார்களே....

ஜீயர் பதில்: நாமம் போட்டுக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, காவி உடுத்தி இங்கேயும் ஒருத்தன் வந்தான். வாயெல்லாம் மந்திரங்கள். பெருமாள் பெயரையே சொல்லிக் கொண்டு இருக்கான். பூணூல் போட்டிருக்கான். உட்காரச் சொல்லி சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான். பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் பிராமணனாக ஆகிவிடமாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுவே சாஸ்வதம். நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான். என்றார் ஜீயர்.

கும்பகோணத்தில் குதியாட்டம் போடும் இந்த கிருஷ்ண பக்தர்கள் குடுமி வைத்துக் கொண்டிருந்தாலும், நாமம் தரித்துக் கொண்டாலும் ஏன், பூணூலை போட்டுக் கொண்டாலும் கூட பிறப்பால் அவர்கள் எதுவோ, அதுவேதான் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்.

--------------------மின்சாரம் அவர்கள் 31-10-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

9 comments:

passerby said...

//பூணூல் போட்டிருக்கான். உட்காரச் சொல்லி சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான். பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் பிராமணனாக ஆகிவிடமாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுவே சாஸ்வதம். நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான். என்றார் ஜீயர்.//

பிறப்பைப் பற்றி ஜீயர் சொன்னதாக இங்கிருப்பதை நமபமுடியவில்லை. திரிப்பாகவே தெரிகிறது.

பிறப்பால், என்றவர், எப்படி பூணூல் போட்டால் ம்ட்டுமே பிராமணன் ஆக முடியாது; நல்லகாரியங்கள் செய்தால் மட்டுமே முடியும் என்பார்?

ஜீயர்களில் இருவகை: ஒன்று வடகலை, மற்றொன்று, தென்கலை.

வடகலை, பிறப்பால் அன்றி, வாழ்வால் மட்டும் பிராமணன் ஆக முடியாது என்பது. பிராமண குலத்தில் பிறந்து, அத்தோடு ந்ற்காரியங்கள் செய்தால் பிராமணத்துவும் முழ்மைபெறும். பிற்ப்பால் ஒரு கீழ்க்குணத்தில் பிறந்து, எவ்வளவுதான் நற்காரியங்களோ அல்லது தெய்வகைங்கர்யங்களோ செய்தாலும், அவன் பிராமணன் ஆக முடியாது.

‘காமதேனுவானாலும் பசுத்தன்மை போகாது’

என்பது வடகலை.

தென்கலை, ஜாதிகள் இல்லை. இறைவன் முன் அனைவரும் ஒன்று. பிறப்பால் அன்றி, வாழ்வாலே ஒருவன் உயர்னிலையை அடையமுடியும் என்பது.

உண்மைகளை அறிய விருப்பமில்லாமல், திரிக்கிறீர்களோ என ஐயுறுகிறேன்.

ரவி said...

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் என்னுடைய வாக்கை செலுத்திவிட்டேன்.

ஆனாலும் மற்றவருக்கு தொல்லை தராத வகையில் இருக்கும் இறைபக்தியை நாம் தடுக்கவேண்டுமா என்ன ? அது தனி மனித உரிமையை மீறுவதாகாதா ?

கோவி.கண்ணன் said...

//கும்பகோணத்தில் குதியாட்டம் போடும் இந்த கிருஷ்ண பக்தர்கள் குடுமி வைத்துக் கொண்டிருந்தாலும், நாமம் தரித்துக் கொண்டாலும் ஏன், பூணூலை போட்டுக் கொண்டாலும் கூட பிறப்பால் அவர்கள் எதுவோ, அதுவேதான் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்.//

:)

தற்பொழுது தோல் வெள்ளையாக இருக்கும் வெள்ளையர்களை பார்பனராகவே பார்க்கின்றனர் பார்பனர், அவர்களுக்கு ஆப்ரிக்க கருப்பர்கள் தான் ஆகாது சாமியோவ் !

தமிழ் ஓவியா said...

கள்ள பிரான் உண்மையை உணர்த்த வேண்டியதுதான் பகுத்தறிவுப் பணியே தவிர திரிப்பது அல்ல.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களித்ததற்கும் மிக்க நன்றி செந்தழல் ரவி.

//மற்றவருக்கு தொல்லை தராத வகையில் இருக்கும் இறைபக்தியை நாம் தடுக்கவேண்டுமா என்ன ? அது தனி மனித உரிமையை மீறுவதாகாதா ?//

இப்பொருள் குறித்து விரிவாக பின்னர் விவாதிப்போம் தோழர்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவி. கண்ணன்

ttpian said...

ஊர் முழுவதும்,பாப்பான் பரிகார பூசை/என்று கூறி ஏமாற்றி 5000, 10,000 கொள்ளை அடிக்கிறான்!( திருகடையுர்/திருனல்லார்,காலகச்தி:
நீங்கள் லெட்டெர் பேடு தலயில் வைத்து தூன்குவதை தவிர என்ன செய்தீர்கள்?

passerby said...

நன்றி.

இன்னொரு உண்மையையும் தமிழ் ஓவியா போன்றவர்கள் தெரிவது நலம்.

அஃது என்ன?

எப்படி தென்கலையில் ஜாதிகள் இல்லையோ (ஜாதிகள் இல்லா ஒரே தமிழ்நாட்டு இந்துமதம் இதுவே!), அப்படியே ஹரே ராமா..ஹரே கிருஷ்ணா இயக்கத்திலும்.

இங்கு எவரும் குருக்கள் ஆகலாம். பத்தாண்டுகள் இந்த் இயக்கத்தில் பணியாற்றிவர்களுக்கு இப்படி பதவிகள் தரப்படும். எவரும் இங்கே பிறப்பால் பிராமணரில்லை. குருக்கள், அஃதாவது ஆலயப்பணி, எவருக்கும் இங்கு பிறந்த ஜாதியை வைத்து கொடுப்பது கிடையாது.

எனவேதான் அந்த் ஜீயர், இவர்கள் எந்த ஜாதியோ, பூணூல் போட்டால் பிராமணனா இவன் ஆகிவிடுவானா? என்ற தோரணையில் பேசுகிறார்!

பிராமணன் என்பது ஒரு தன்முயற்சியால் வரும் உயர்வாக ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் கருதப்படுகிறது. எவரும் அவ்வியக்கத்தின் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் ஆழப்பற்றுகொண்டு தொடர்ந்து பின்பற்றுகிறார்களோ, அவர்கள், குடுமி, பஞசகட்சம், பூணூல் போன்றவற்றை அணியலாம். குடுமி, பஞசகட்சம், போன்றவற்றை அணிந்து சாலையில் நடனமாடிவரும் வெள்ளைக்காரர்களை இவ்வியக்கத்தில் காணலாம்!

எனவே இவர்கள் பிறப்பால் பிராமணர்கள் இல்லை, அல்லது இருக்கலாம்.

ஜீயர் இவர்களைக்கண்டு அசூசை அடைந்தது அவர் கொள்கை இவர்கள் கொள்கைக்கு மாறானபடியாலே!

அவர் தென்கலையாராகயிருப்பின், அவர் தன் மதத்திற்கு துரோகம் செய்தவராவார்.

குடுமி, பஞசகட்சம் போன்றவைகளுக்கு ‘ஜாதி அடையாளஙகள்’ கொடுத்து, வெறுப்ப்பேத்தியவர்கள் தமிழ்நாட்டு பார்ப்பனரே. அவ்வெறுப்பில் நான் உங்களுடன் இணைகிறேன். ஜாதியை மையமாக வைத்த எதுவும் எனக்கும் பகையே!

நம்பி said...

Blogger செந்தழல் ரவி said...

ஆனாலும் மற்றவருக்கு தொல்லை தராத வகையில் இருக்கும் இறைபக்தியை நாம் தடுக்கவேண்டுமா என்ன ? அது தனி மனித உரிமையை மீறுவதாகாதா ?
November 1, 2009 2:29 PM

தொல்லை தந்ததால் தான் பக்தியே வந்தது..கடவுளை திணிக்காமல் பக்தி வராது.

திணிப்பு எனபது தொல்லைதான். இது தான் தனிமனித உரிமையை மீறுவது.

கடவுளை தன்னாலேயே பிறப்பிலேயே எவரும் அறிந்தது இல்லை. அதற்கு ஒரு அறிமுகர் தேவை...அதாவது முகவர்.(ஏஜென்ட்). ஏஜென்டோட வேலை வற்புறுத்துவது தான்.

இந்து மதக் கடவுள்கள் பைபிலில் இல்லாதது ஏன்..?

இந்துமதக் கடவுள் தானே உலகைப் படைத்தது.

கிரேக்கர்களுக்கும், ஐரோப்பியர்களும், அரேபியர்களும் இதை பற்றி அறியாமல் இருந்தது ஏன்? அவர்கள் கடவுள் கதைகள் வேறுபடுவது ஏன்?

அவர்களுக்கு இவர்கள் போய் தொல்லைத் தரவில்லை...அவர்கள் இங்கே வந்து தொல்லைத் தரவில்லை. அங்கங்கேயே அவரவர் நிலப்பரப்பு மக்களுக்கு தொல்லை தந்து கொண்டனர்.

தொல்லைத் தராமல் தனித்தனிக்கடவுள்கள் சார்ந்த வழிபாடுகள் இப்பொழுது எப்படி ? வந்தது?