Search This Blog

7.11.09

அய்யா பெரியாரின் அர்த்தமுள்ள கேள்விகள்



அய்யாவின் அர்த்தமுள்ள கேள்விகள்

மதச் சின்னங்கள் விசயத்தில் ஒருவர் நாமம், ஒருவர் விபூதி, ஒருவர் கருப்புப் பொட்டு, ஒருவர் சந்தனக்கீறல், ஒருவர் முத்திரை, ஒருவர் நெடுக்கு, ஒருவர் குறுக்கு இப்படியாகப் பல மாறுதல்கள் ஏற்படுவானேன்?

இந்த மாறுதல்களோடு இதற்குக் காரணங்கள் ஆளுக்கு ஒருவிதமாய்ச் சொல்லுவானேன்? இந்த வித்தியாசங்களை சுவாமிகளுக்கும் புகுத்துவானேன்?

நாமம் என்பது என்ன என்று கேட்டால் சிலர் சுவாமியின் பாதம் என்கிறார்கள். வெள்ளை நாமம் இரண்டும் பாதமானால் நடுவில் உள்ள சிவப்பு நாமத்திற்குப் பெயர் என்ன?

அப்படியே சுவாமியின் பாதம் என்பதாகவே ஒப்புக்கொள்வோமானால், சுவாமியின் பாதத்தையே நெற்றியில் கொண்டு போய் வைப்பானேன்?

இந்த நாமத்திற்கும் பாதம் வைத்தநாமம், பாதமில்லாத நாமம் என்பதாக வடகலை, தென்கலை என்று ஒருவருக்கொருவர் உதை போட்டுக் கொள்வானேன்?

இவற்றில் ஒரு நாமம், மூன்று நாமம், பதினோரு நாமம் என்கிற கணக்குச் சண்டை எதற்கு?

இந்துக்களிலேயே ஒரு சாரார் இந்த நாமத்தைப்பற்றி கேவலமாகப் பேசுவானேன்? இதுபோலவே விபூதி, பொட்டு முத்திரை இவற்றுக்குப் பல மாதிரி வியாக்கியானங்கள் இருப்பானேன்? இதை மற்ற தேசத்தாரும் ஒப்புக் கொள்ளாதது ஏன்? லிங்கத்தையும், ஆவடையாரைப்பற்றியும் பல விதமாகப் பேசுவானேன்? நமது சுவாமிகளுடைய பெயரெல்லாம், குறிகளெல்லாம் நமது தமிழ்ப் பாஷையில் இல்லாமல் அந்நிய பாஷையாகிய ஆரிய பாஷையில் இருப்பானேன்? சுவாமியைப் பூஜிப்பதற்கும், நமக்கும், சுவாமிக்கும் மத்தியில் ஒரு அந்நியன் பாஷையில் மந்திரங்களும், தோத்திரங்களும் இருப்பானேன்? ஆளுக்கு ஒரு விதமாகப் பூசை செய்வானேன்? இதற்காக நாம் பணம் கொடுப்பானேன்? ஒவ்வொரு சுவாமிக்கும் ஒவ்வொரு வித வாகனங்கள் ஏற்படுத்துவானேன்? சுவாமிக்குப் பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டிகள் தாசிகள் விபச்சாரத் தன்மைகள் ஆகியவற்றைக் கற்பிப்பானேன்? சிலர் சுவாமியைப் பார்த்தால் சுவாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோவிலுக்குள் வந்தால் கோவிலும், சுவாமியும் தீட்டாய்ப் போவானேன்? சிலர் சுவாமியைத் தொட்டால் சுவாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும்,ரூபமும் உள்ள சுவாமிகளுக்கு ஊருக்கு ஒரு விதமாய் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, ஜகந்நாதம், பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. கோவிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சுவாமியைத் தொட்டு தலையில் தண்ணீர் விட்டு புஷ்பம் போட்டு கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சுவாமிகள் நமது நாட்டில் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறது. சிறீரங்கம், சிதம்பரம், பேருர், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, கருர் முதலிய முக்கிய ஷேத்திரங்களில் உள்ள சுவாமிகள் நாடார்கள் கோயில்கலுக்குப் போய் கும்பிட்டால் அக்கோவில்களும், சாமிகளும் சாவதில்லை. மதுரை திருநெல்வேலி ராமநாதபுரம் ஜில்லாக்களில் உள்ள கோயில்களும், சுவாமிகளும் மாத்திரம் நாடார்கள் போய் கும்பிட்டால் உடனே செத்துப் போய்விடுகின்றன.இப்படி சுவாமிகளின் சக்தியும், உயிரும், கோவில்களின் யோக்கியதையும், ஊருக்கு ஒருவிதமாய் இருப்பானேன்? பிறகு பார்ப்பனருக்கு மாத்திரம் அந்த சுவாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்?

நமது வேதம், சுவாமி பூஜை, வணக்கம் முதலியன சம்பந்தமான விசயங்கள் இப்படி இருக்கிறதென்றால் இந்த லட்சணத்தில் இம்மாதிரி சுவாமியானாலும், கோவிலினாலும் நமது சுயமரியாதை எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதோடு, நமது பணம் எவ்வளவு செலவு ஆகிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள். சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்து மத சம்பிரதாயப்படிக்கு ஏற்பட்ட கோவில்களுக்கும், மடங்களுக்கும் வருடம் ஒன்றுக்கு இரண்டு கோடி ருபாய் வரும்படி வருகிறது. இரண்டு கோடி ருபாய் வரும்படி வந்தால் மக்களுக்கு எத்தனை கோடி ருபாய் செலவு ஆகும்?

சாதாரணமாக திருப்பதிக்கு மாத்திரம் சர்க்கார் கணக்குப்படி வருடம் ஒன்றுக்கு 20 லட்சம் வரும்படி வருகிறதாக ஏற்படுகிறது. கணக்குக்கு வராமல் மகந்துகளுக்கும், கோவில் அதிகாரிகளுக்கும், பூசாரிகளுக்கும் போகும் பணங்களுக்கு அளவேயில்லை. யாத்திரைக்காரர்கள் காணிக்கையாகக் கொண்டு வரும் தொகை மகந்துவிடம் கொடுத்தால்தான் சுவாமிக்குப் போய்ச் சேரும்;
"நீர் இவ்வளவு ருபாய், இவ்வளவு நகை கொண்டு வருவதாக சுவாமி என் சொப்பனத்தில் சொல்லிற்று" என்று ஏமாற்றி வழிப்பறி செய்வதில் கொள்ளை போகும் பணம் இந்த 20 லட்சத்தில் சேர்ந்ததல்ல. இன்னமும் யாத்திரைக்காரன் ரயில் சார்ஜ், சில்லரைச் செலவு, மெனக்கேடு, தேங்காய், பழம் முதலிய செலவுகள் எத்தனை லட்சம் ஆகும் என்று கணக்குப் பாருங்கள்.

திருவிழா இன்னும் உற்சாவதிகள், சுவாமிக்கும், அம்மனுக்கும் கலியாணம், சுவாமி தாசி வீட்டுக்குப் போகாமல் ஒரு காலைத் தூக்கி ஆடுதல் நரியைக் குதிரையாக ஆக்குதல் முதலிய திருவிழாக்களும், 10 பவுண்டு இடையேயுள்ள சுவாமிகயை 200 டன் எடையுள்ள தேரில் வைத்து 10.000 பேர் இழுப்பதும், அதற்கு 50.000 பேர் வேடிக்கைப் பார்க்கப் பல இடங்களிலிருந்து வருவதும் ஆகிய காரியங்களுக்கு ஆகும் செலவுகளும், சுவாமிகளுக்கும் அபிசேகம், பூஜை, சதிர், பாட்டுக் கச்சேரி, நகை, பட்டுப் பாவாடை, புனுகு, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ முதலியவற்றின் செலவுகளும் எல்லாம் சேர்ந்து இந்து மத சாமிகளின் பூஜைக்கும், உற்சவங்களும் மாத்திரம் தென் இந்தியாவில் வருசத்திற்கு 25 கோடி ருபாய்க்குக் குறைவில்லாமல் செலவாகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த 25 கோடி ருபாய் நாம் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கும், தினம் தினம் நமக்கு ஞாபகப்படுத்துவதற்கும் செய்யும் செலவே அல்லாமல் இதனால் வேறு என்ன பலனை அடைகிறோம்? இப்பேர்ப்பட்ட இந்து மதம் தான் சென்னை சட்டசபையில் இந்து பரிபாலன் மசோதாவினால் அடியோடு பாதிக்கப்பட்டுப் போய் விட்டதாம்.
இம்மாதிரி நமது சுயமரியாதையை ஒழிக்கும் இந்துக்கள் தான் மதம் போச்சுது, மதம் போச்சுது என்று மாயக் கண்ணீர் விடுகிறார்கள்.

--------------------தந்தைபெரியார் "குடிஅரசு" 9-1-1927

0 comments: