Search This Blog

9.11.09

யாகத்தில் என்னதான் செய்வார்கள்?பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?


யாகமாம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் வேள்விச் சாலை (யாகம்) நடத்தினார்கள். செலவு எவ்வளவு தெரியுமா? பதினாறு லட்சம்தான்.

அப்படி யாகத்தில் என்னதான் செய்வார்கள்? உணவுப் பொருள்களையும் (மிக முக்கியமாக நெய், பால் வகையறாக்கள்) பட்டுத் துணிகள் முதலானவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்துவார்கள். அதாவது மக்களுக்கு அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களைத் தீயில் போட்டுப் பொசுக்கி நாசப்படுத்துவார்கள்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம் அடைகின்றனர். ஊட்டச்சத்து இல்லாத உலக மக்களில் 27 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனராம்.

இந்த நிலையில்தான் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் உள்ளிட்ட இன்றியமையாத பொருள்களை பக்தி என்ற பெயரால் ‘‘கிரிமினல் வேலையில்’’ ‘பிள்ளை விளையாட்டாக’ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த யாகத்தில் பொருள்கள் நட்டமடைந்தாலும், யாகப் புரோகிதப் பார்ப்பான் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டுவது ஏராளம்.

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பார் நடிகவேள் ராதா இரத்தக்கண்ணீர் நாடகத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.

பாலில் நீர் கலந்தால் கலப்படக் குற்றத்தின்கீழ் கைது செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால், நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டினால், அது தெய்வ காரியமோ!

இதில் இன்னொரு கொடுமையும் கூத்தாடுகிறது. இந்த யாகத்தைச் செய்வதற்குமுன் பூமி பூஜை செய்யவேண்டுமாம்; அதைச் செய்யாமல் யாகம் செய்துவிட்டார்களாம். அது சாத்திரக் குற்றமாம்! நீதிமன்றம் எதற்கு இருக்கிறது?

இந்து மதவாதி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார். கனம் நீதிமன்றம் சாத்திரங்களையெல்லாம் கரைத்துக் குடித்து சோதனை செய்து பார்த்து, ‘ஆமாம், ஆமாம் சாத்திரக்குற்றம்தான், எனவே, பரிகாரப் பூஜை செய்யவேண்டும்’ என்று ‘கறாராக’ தீர்ப்பு அளித்துவிட்டது.

இந்தப் பரிகாரப் பூஜைக்கு ஆன செலவு என்ன தெரியுமா? மறுபடியும் ரூ.17 லட்சமாம்.

பார்ப்பனிய அமைப்பில் சாத்திரப்படி நடந்துகொண்டாலும் அவாளுக்கு இலாபம் சாத்திரத்தை மீறி நடந்துகொண்டாலும் கொள்ளை இலாபம்.

இந்தத் தகடுதத்தம் மோசடியை உலகில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?

நியாயப்படி என்ன செய்திருக்கவேண்டும்? பூமிப் பூஜை செய்யாததால் ஏற்பட்ட நட்டத் தொகையை, அதற்குக் காரணமான புரோகிதர்களிடமிருந்துதானே பறிமுதல் செய்திருக்கவேண்டும்?

பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?

-------------------- மயிலாடன் அவர்கள் 9-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: