Search This Blog

6.11.09

உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்துமா, செயல்படுத்தாதா?


உச்சநீதிமன்றம் விசாரிக்க
என்ன இருக்கிறது?

முல்லை பெரியாறு பிரச்சினை ஒரு முப்பது ஆண்டுகால வயதை உடையதாகும். 999 ஆண்டு அளவுக்கு தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள ஒரு பிரச்சினையில் 120 ஆண்டுக்குள்ளாகவே சிக்கல் ஏற்படுகிறது என்றால், இதற்குக் காரணம் யார்?

இரு மாநிலங்களும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியாயிற்று; பல வல்லுநர்களின் குழுக்களும் பலமுறை அறிக்கைகளைக் கொடுத்தாயிற்று.

எல்லாவற்றிற்கும் மேலாக உச்சநீதிமன்றமே தீர்ப்பும் அளித்தாயிற்று.

இதற்கு மேலும் இந்தப் பிரச்சினை நிலுவையென்றால், இதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்றும் இருக்கத்தான் முடியுமா?

நிலநடுக்கம் உள்பட பல்வேறு கோணங் களிலும் முல்லை பெரியாறு அணையின் பாது காப்பு நிலைபற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டுவிட்டன. நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் அணைக்கு ஆபத்து என்ற கருத்தில் எவ்வித அடிப்படையும் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் கேரளம் தேவையின்றி முட்டுக்கட்டை போடுவதாகவே ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வருகிறது.

மத்திய நீர்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை அடிப்படையில் அணையின் சில இடங்களில் பழுது பார்க்கும் பணிகளை முடிப்பதற்குக் கேரள அரசு அனுமதி யளிக்கவில்லை.

அணையின் எல்லாப் பகுதிகளும் பாதுகாப் பாகவே உள்ளன. அளவுக்கு அதிகமான கசிவு எங்குமேயில்லை; அணை சமீபத்தில்தான் பலப் படுத்தப்பட்டுள்ளது (27.2.2006).

இது உச்சநீதிமன்ற தீர்ப்பாகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், சி.கே. தக்கர், பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதற்குப் பிறகு என்ன விசாரணை தேவைப்படுகிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இப்பொழுது தேவையெல்லாம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்துமா, செயல்படுத்தாதா? என்பதுதான். செயல்படுத்தாத நிலையில் அரசமைப்புச் சட்டச் சிக்கல் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அதன்படி நடக்கவேண்டிய அவசியத்தை மத்திய அரசு தட்டிக் கழிக்கிறது என்பதுதானே தெளிவான நிலை?

கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும், முல்லை பெரியாறு பிரச்சினையைப் பொறுத்தவரை முதலையும், மூர்க்கனும் கொண்டது விடா என்ற நிலையில்தான் நியாயத்துக்கும், சட்டத்துக்கும், தீர்ப்புக்கும் விரோதமாக செயல்படுவது என்று திட்டவட்டமாக உறுதி எடுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கர் விவசாயத்தையும், 2.16 லட்சம் விவசாயிகளையும் பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சினையில் சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவது எந்த வகையில் நியாயம்? 65 லட்சம் மக்களுக்குக் குடிநீரை வழங்குவதும் இந்த அணைதான். இதில் மனிதாபிமானமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டாமா?

இவ்வளவுக்கும் இனாமாக நீரைக் கொடுக்கவில்லை கேரள அரசு. அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டுதானிருக்கிறது. மீன்பிடி உரிமை, படகு போக்குவரத்து எல்லாவற்றிற்கும் மிகப் பெருந்தன்மையோடு தமிழ்நாடு விட்டுக் கொடுத்துதான் வந்திருக்கிறது.

ஆனால், கேரளாவின் நிலைப்பாடு என்ன? அணை உடைந்தால் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு ஏற்படும் ஆபத்து என்று கூறி கிராபிக்ஸ் முறையில் படங்களைத் தயாரித்து அம்மக்களுக்குப் போட்டுக் காட்டி அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.

அணையின் காரைகளைச் சுரண்டி, ஏதோ வீறல் விழுந்தது மாதிரி காட்டியது. தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டுவராமலேயே கப்பல் படை வீரர்களை இரகசியமாகக் கொண்டு வந்து சில சோதனைகளை நடத்த முனைந்தது. முதலைமைச்சர் கலைஞர் அவர்கள் சரியான நேரத்தில் எச்சரித்ததன் காரணமாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.

போதும் போதாதற்குப் புதிய அணை ஒன்றைக் கட்டிடத் துடிக்கிறது.

தமிழ்நாட்டில் எதிர்கட்சித் தலைவரும், சில அரசியல் தலைவர்களும் தொட்டதற்கெல்லாம் தி.மு.க. அரசைக் குறைகூறுவதுதான் அன்றாட வாடிக்கை-யாகிவிட்டது.

நியாயமாக அவர்கள் இதில் என்ன செய்ய-வேண்டும்? மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராட்டங்களை நடத்தவேண்டும். அதை விட்டுவிட்டு எதிலும் அரசியல் என்பது எதிரிகளுக்குத்தான் இலாபத்தை ஏற்படுத்தும் என்பதை மறக்கவேண்டாம்!

----------------"விடுதலை" 5-11-2009

0 comments: