Search This Blog

12.11.09

அண்ணா அவர்களின் தலைப்புகளைப் பாருங்கள்

அண்ணா எழுதிய தலைப்புகள் ஆராய்ச்சிப் பட்டம்
பெறுவதற்குரிய தகுதியைப் பெற்றதாகும்!
தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கவுரை

அண்ணா அவர்கள் எழுதிய தலைப்புகளே பெரிய ஆராய்ச்சிக்குரிய, டாக்டர் பட்டம் பெறுவதற்குரிய தகுதி பெற்றது என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை பெரியார் திடலில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள்’’ என்ற தலைப்பில் 1.9.2009 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை நாம் பல்வேறு வகையிலே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னாலும்கூட, அண்ணா அவர்களின் சிந்தனைகள் உலகை ஆளவேண்டும். ஆட்சி ஒரு பக்கத்திலே இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் என்பது தனித்த சிந்தனை அல்ல. தந்தை பெரியார் அவர்களுடைய உலைக்களத்திலே உருவாக்கப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட, சிந்தனைகள். எப்படிச் சொன்னால் மக்கள் ஏற்பார்கள், இளைஞர்கள் ஏற்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப மிகப்பெரிய ஆற்றலோடு கருத்துகளைச் சொன்னார்கள்.

அண்ணா காலத்திற்கு முன்பு இருந்த நிலை...

நேற்று நான் குறிப்பிட்டதைப் போல அண்ணா அவர்கள் ஒரு பல்கலைக் கொள்கலன். ஒரு தனி மனிதர் இத்தனை ஆற்றலோடு திகழ்ந்தார் என்பதற்கு அண்ணா அவர்களைத் தவிர வேறு எவரையும் எளிதில் ஒப்பிடவே முடியாது.

அந்த அளவிற்கு ஒரு சிறந்த எழுத்தாளராக, சிறந்த கருத்தாளராக, நல்ல ஆட்சியாளராக, நல்ல சிறந்த நாடக ஆசிரியராக அவர்கள் திகழ்ந்தார்கள். அவர் எந்தக் கொள்கையை ஏற்றாலும் அந்தப் பரிமாணத்தோடு மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கின்றார்.

அண்ணா காலத்திற்கு முன்னாலே தமிழ் எழுத்துகளிலே இருந்த சுவை என்பது அவ்வளவு ஈர்ப்பில்லாத ஒன்றாகும். கட்டுரைகளிலே கருத்தாழம் இருந்திருக்கலாம். ஆனால், அதை கவர்ச்சியோடு சொல்லக்கூடிய அளவிற்கு அவரைப் போல எவரும் ஆற்றல் பெற்றவர் என்று சொல்லிவிட முடியாது. தலைப்பேகூட வியப்படையக்கூடிய தலைப்பாக அவர்கள் வழங்கக்கூடிய ஆற்றல் அண்ணா அவர்களிடத்திலே இருந்தது.

அண்ணாவின் தலைப்புகள் என்றே ஓர் ஆய்வு செய்யலாம். அந்த அளவிற்கு ஆய்வாளர்களுக்கு அண்ணா அவர்கள் ஒரு சுரங்கம்.

குறுக்கிவிடக்கூடாது

அண்ணா ஓர் ஆழ்கடல். அண்ணா அவர்களுடைய கருத்துகளை இனிவரக்கூடிய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவும் அண்ணா அவர்களை பிற்காலத்திலே எப்படிப் பார்ப்பார்கள் என்றால், முதலமைச்சர் வரிசையிலே வைத்து எண்ணிப் பார்த்து அவரை குறுக்கிவிடக் கூடிய சரித்திர சதிகள் நடைபெறலாம்.

ஆகவே, அண்ணா அவர்களுடைய சிந்தனை என்பது எப்படிப்பட்டது என்பதனைப் பார்க்க வேண்டும். திருப்பூர் மாநாட்டிலே அய்யா அவர்கள் முன்பு தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அதன் பிறகு சுயமரியாதை இயக்கத்தில் ஒரு தனிப்பெரும் தளபதியாகத் திகழ்ந்தார்.

பெரியார் எண்ண ஓட்டத்திலேயே...

அடித்தளத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை வேகமாக எடுத்து வைத்து எழுத்தோவியங்களாகத் தந்தார்கள்.

விடுதலை இதழுக்கு பொறுப்பாசிரியராக அண்ணா அவர்கள் இருந்தார்கள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்திலே நின்றார்கள். பிறகு ‘கபோதிபுரம் காதல்’ என்ற கதை விடுதலையில் தொடர்கதையாக வந்திருக்கிறது என்பது பலபேருக்குத் தெரியாது.

அப்படி அவர்களுடைய எழுத்தோவியங்கள் என்று சொன்னால் சிறுகதைகளாக, தொடர்கதைகளாக ஏராளமாக வந்தது என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிறகு நாடகங்கள், அதுபோல சிறு சிறு கதைகளாக வந்தன. அண்ணா அவர்களுடைய நாடகத்தை தெருமுனை நாடகங்களாகப் போடலாம். அவருடைய எழுத்தோவியங்கள் இப்படி ஏராளம் இருக்கின்றன.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் போராட்டம்

இங்கே நம்முடைய பொதுச்செயலாளர் அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள். காமராஜருக்கும், ஆச்சாரியாருக்கும் நடந்த மிகப்பெரிய இனப்போராட்டம் அரசியல் போராட்டம் என்று வெளிஉலகத்திற்குத் தெரிந்திருந்தாலும் முழுக்கமுழுக்க அது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் நடந்த போராட்டம். அதிலே யார் கை ஓங்கியது? யார் தாழ்ந்தார்கள்? யாருடைய கை தாழ்ந்தது என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்கக்கூடிய அரசியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் வேறு எங்கும் போய்த் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தந்தை பெரியார் அவர்களுடைய பழைய ஆவணங்களை, விடுதலையில் வந்த பழைய ஆவணங்களை, விடுதலையில் வந்த பழைய சம்பவங்களைப் பார்த்தாலே தெரியும்.

அண்ணா அவர்களின் தலைப்புகளைப் பாருங்கள்

கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது’’ எவ்வளவு அற்புதமான தலைப்பைப் பாருங்கள். கோடு என்பது திருச்செங்கோடு. குன்றம் என்பது திருப்பரங்குன்றம்.

அதை அண்ணா அவர்கள் அமைத்த முறை இருக்கிறதே இதுபோன்ற தலைப்புகளே வியப்பாக இருக்கும்.

இரு கொடி ஏந்திகள்’ என்று கம்யூனிஸ்ட்களைப் பார்த்து எழுதினார். இப்பொழுதும் அவர்கள் இருகொடி ஏந்திகள்தான். அப்பொழுதே அண்ணா அவர்கள் இருகொடி ஏந்திகள் என்ற தலைப்பில் அற்புதமான கட்டுரையை எழுதினார்கள்.

அண்ணா அவர்கள் இதுபோன்று எழுதிய தலைப்புகளே மிகச் சுவையாக இருக்கும். அந்தத் தலைப்புகளைப் பார்த்தாலே மற்றவர்கள் சிந்திக்கக்கூடிய அளவிற்கு இருக்கும். அண்ணா அவர்களின் தலைப்புகள் சில நேரங்களில் எளிமையாக இருக்கும்.

இலக்கிய நயத்தோடு இருக்கும். ‘இடம் தேடிகள்’, ‘சிலந்தி சிரிக்கிறது’, ‘பிரபுக்களின் புதிய கோலம்’, ‘சமாதானப் பரிட்சையா?’, ‘முடியுமானால்’, ‘கிளி நிறம் பெற்ற கழுகு’, இதுவரை யாரும் இப்படிப்பட்ட தலைப்புகளை சிந்திக்கவே முடியாது. கழுகு ரொம்ப ஆபத்தானது.

ஆனால், கழுகு கிளி நிறம் பெற்றிருந்தால் என்ன நிலைமை? மற்றவர்களை ஏமாற்றுவதற்காக அது பயன்படும்.

‘சீடர் சிலம்பம் எடுக்கிறார்’

அண்ணா அவர்கள் போட்ட தலைப்பே ரொம்ப வியப்பாக இருக்கும். ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற தலைப்பே ரொம்ப வியப்பான தலைப்பு. அதற்கு முன்னாலே அப்படி ஒரு தலைப்பே வந்தது கிடையாது. அவ்வளவு அற்புதமான தலைப்பைப் போட்டு அண்ணா அவர்கள் எழுதுவார்கள்.

ஒருமுறை சி.சுப்பிரமணியம் அவர்கள் ஆவேசமாக நமது இயக்கத்தைத் தாக்கினார். அதற்கு அண்ணா அவர்கள் பதில் சொன்னார்.

சீடர் சிலம்பம் எடுக்கிறார் என்று. ரொம்ப அற்புதமான தலைப்பு. அவருடைய குருவே சிலம்பம் எடுக்க முடியாமல் உட்கார்ந்திருக்கின்ற பொழுது ஏன் இந்தச் சிக்கலில் சீடர் மாட்டிக் கொள்கிறார் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிப்பட்ட தலைப்பைப் போட்டுச் சொல்லுகின்றார்.

இப்படி எத்தனையோ தலைப்புகள் உண்டு. அந்தத் தலைப்பிலே அவர்கள் எழுதுகின்ற முறை மாறவில்லை.

அண்ணா அவர்களை விட்டு மாறவில்லை. என்னதான் அவர் பொறுப்புக்கு வந்தாலும் அவருடைய எண்ண ஓட்டம் மாறவில்லை.

அவர் ‘சூழ்நிலைக் கைதி’ என்று முதலமைச்சர் பதவியைப் பற்றிச் சொல்லும் பொழுது சொன்னார். அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல, அது இயல்பானது.

ஒருவரை ஒருவர் தாக்கினாலும்...

காட்டிலே இருக்கக்கூடிய ஒரு சிங்கத்தைக் கொண்டு வந்து ஒரு கூண்டிலே போட்டு வைத்தால் அதை எல்லாரும் வியப்பாகப் பார்ப்பார்கள். சிங்கத்தை ஒரு சர்க்கசில் கொண்டு வந்து காட்டினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும். அண்ணா அவர்கள் தனது பதவியை ஒரு துண்டு போலக் கருதினார்கள்.

அண்ணா அவர்கள் பதவிக்கு வந்திருக்கிறார்கள். 16 ஆண்டுகளாக அய்யா அவர்களும், அண்ணா அவர்களும் பிரிந்திருக்கிறார்கள் என்ற புறத்தோற்றம் நம்மிடையே இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் மேடைப் பேச்சில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா அவர்கள் சொன்னாலும்கூட, இடையிலே தேர்தல் வந்து குறுக்கிட்டு, அரசியல் கட்சியாக மாறிய காரணத்தினாலே எதிர்ப்பு என்ற நிலையெல்லாம் வந்த பிற்பாடுகூட அண்ணா அவர்கள் அப்பொழுது ஒரு புதிய அணுகுமுறையைக் கையாண்டார்.

அண்ணா தேர்தலிலே வெற்றி பெற்று காரைவிடச் சொன்ன நேரத்திலே எல்லோரும் நினைத்தார்கள். காரில் கலைஞர் இருந்தார். நாவலர் இருந்தார். எல்லாரும் இருந்த நேரத்திலே காரை விடுங்கள் என்று சொன்னார்.

ஓட்டுநர் என்ன நினைத்தார். நேரே கிண்டி கவர்னர் மாளிகைக்குத்தான் கார் போகப் போகிறது என்று நினைத்த நேரத்திலே அதையும் தாண்டி ஓட்டு என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

காரோட்டி நினைத்தார். ஒரு வேளை காஞ்சிபுரம் போகிறார் போல இருக்கிறது என்று நினைத்தார்.

அண்ணாவின் கார் பெரியார் மாளிகைக்குத்தான் சென்றது

செங்கல்பட்டையும் தாண்டிபோ என்று அண்ணா அவர்கள் சொல்லுகிறார். எங்கே போவது என்று காரோட்டிக்குத் தெரியவில்லை.

அண்ணா அவர்களிடம் நீண்ட நாள்களாக இருக்கிறவர் தோழர் சண்முகம் அவர்கள். அப்படி ஓட்டிக்கொண்டு சென்றபொழுது நேராக திருச்சிக்குச் செல் என்று பிறகு அண்ணா அவர்கள் சொன்னார்.

அண்ணா அவர்களுடைய கார் திருச்சி பெரியார் மாளிகைக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தது. அண்ணா அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 200 மைல்களுக்கு அப்பால் உள்ள பெரியார் மாளிகைக்குத்தான் சென்றார்.

எப்பொழுது? ஆச்சாரியார் உதவியோடு ஆட்சிக்கு வந்த பிற்பாடு. ஆச்சாரியாரும் புரிந்து கொண்டார். கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்திலே சொன்னார்.

கடற்கரையிலே ஒரு பெரிய வெற்றி விழாக் கூட்டம். தி.மு.க. பெற்ற வெற்றி அபாரமான வெற்றி. எதிர்பாராத வெற்றி. காமராஜர் பெற்ற, காங்கிரஸ் பெற்ற பெரும் தோல்வி.

நான் வாழ்க்கையிலே இரண்டு, மூன்று தோல்விகளை சந்தித்திருக்கிறேன் என்று அய்யா அவர்களே அறிக்கையில் எழுதினார்.

அப்படிப்பட்ட நிலையிலே ஒரு பெரிய கூட்டம் நடைபெறுகின்றது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மக்கள் எல்லாம் முழுமையாக திரண்டிருக்கின்றார்கள்.

-------------- தொடரும் ... "விடுதலை" 12-11-2009

0 comments: