Search This Blog

4.11.09

கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?


தோற்றேன்! தோற்றேன்!! தோற்றேன்!!! என்று மும்முறை கூறி அண்ணாவிடம் ஒப்புக்கொண்டார் இரா.பி.சேதுப்பிள்ளை பழைய செய்திகளை விளக்கித் தமிழர் தலைவர் பேருரை

கம்பனுக்காகவும், இராமாயணத்திற்காகவும் வாதிட்ட இரா.பி.சேதுப்பிள்ளை அண்ணா அவர்களிடம் தோற்றேன்! தோற்றேன்!! தோற்றேன்!!! என்று மும்முறை கூறிச்சென்றார் என்ற செய்தியை திராவிடர்கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்கள்.

சென்னை பெரியார் திடலில் 31.8.2009 அன்று மாலை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவை ஒட்டி அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற விவாதங்கள் என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரையின் 1.11.2009 அன்றைய தொடர்ச்சி வருமாறு:

பண்டித ஜவகரைப் பிரியமாகக் கருதும் தோழர்கள் சிலர் இங்கிருப்பார்கள். அவர்களுக்கு அந்த ஆதாரம் திருப்தி தரும் என்பதற்கே நான் உரைத்தேன். மேலும், ஆதாரம் தேவையானால் பல உண்டு. தத், ரகோசினி, ஆபேடூபே என்று எத்தனையோ கூறலாம்.

ஆங்கிலம் பேசும் தமிழர் ஆங்கிலராகார்

இராவணன் வடமொழி பேசினான், ஆகவே ஆரியன் என்றுரைப்பது பொருந்தாது. ஆங்கிலம் பேசும் தமிழர், ஆங்கிலராகார். இன்னும் வடமொழியறிந்த தமிழர் பலர். அவர்கள் ஆரியரா? சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே, சமஸ்கிருதப் பண்டிதராக உள்ளவர் ஓர் தமிழர். இராவணன் வடமொழி தெரிந்த ஆரியனல்லன். தோழர் பிள்ளை அவர்கள் ஆரியன் குறைகளை நிறைவாக்கியது. கம்பனின் பெருந்தன்மை என்றார். மாற்றுக் குறைந்த உலோகத்தைப் பொன்மெருகிட்டு ஏய்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

கம்பனைப் பிடித்து சிறையில் போடவேண்டும்.

(மோசடி செய்திருக்கிறார். கம்பரைப் பிடித்து சிறையில் தள்ள வேண்டும். கம்பனுக்காக வாதாடுகிறவர்களுக்கும் சேர்த்து தண்டனை கொடுக்க வேண்டும் என்பதைப் போல மிக அழகாகச் சொல்கிறார் அண்ணா.)

அது போலவே, ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க்கலை எனும் நகாசு வேலை செய்தது, தமிழருக்குத் கம்பன் செய்த கேடு என்பேன்.

கண்ணகியின் மாண்பை கம்பன் சீதையைத் தீட்டுவதிலே காண்கிறோம் என்கிறார்.

(கண்ணகியின் மாண்பை சீதையின் மூலமாக ஏன் காண வேண்டும். கண்ணகி காவியமே இருக்கிறது என்று அண்ணா கேட்கின்றார். இப்பொழுது அதைவிட இன்னொன்றை இந்த நேரத்தில் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

சில பேர் சொல்கிறார்கள். கம்ப ராமாயணத்தில் அந்தக் காலத்தில் மிகப் பெரிய ராடார் இருந்திருக்கிறது. இப்பொழுது சந்திர மண்டலத்திற்குச் சந்திரயானை அனுப்புகிறார்கள்.

கம்ப ராமாயணத்தில் வளவன் ஏவா வானஊர்தியும் என்ற பாடல் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. இராமாயணத்தில் விஞ்ஞானம் இருக்கிறது. அந்த விஞ்ஞானத்திற்காகவாவது படிக்க வேண்டும்.

சில பேர் பெரிய புராணத்தில் விஞ்ஞானம் இருக்கிறது என்று சொன்னவுடனே, அய்யா ரொம்ப நன்றாக, அழகாகச் சொன்னார்.

அய்யா பளிச்சென்று சொன்னார்

அய்யா மக்கள் நெஞ்சில் போய் பாய்கிற மாதிரி பளிச்சென்று சொல்லுவார். அய்யா அந்தக் காலத்தில் சொன்னார். விஞ்ஞானம் வேண்டுமென்றால் நான்கணாவுக்கு நல்ல விஞ்ஞான புத்தகமே போட்டிருக்கிறார்கள்.

அதை வாங்கிப் படித்து முழுக்க விஞ்ஞானத்தைத் தெரிந்துகொள்வதை விட்டுவிட்டு, கம்பராமாயணத்தில் விஞ்ஞானம் எங்கேயிருக்கிறது என்று ஏன் தேடி உள்ளே போய்க் கண்டுபிடிக்க வேண்டும்?

அரிசி வேண்டும் என்றால் நேராக அரிசிக் கடைக்குப்போய் அரிசி வாங்க வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டு மலத்தில் அரிசி பொறுக்குவதா? என்று தந்தை பெரியார் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு இதுவரையில் யாருமே பதில் சொல்லவில்லை. ஆகவே தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை இருக்கிறது பாருங்கள் ரொம்ப ஆழமானது.)

கண்ணகி குறித்த ஏடு இருக்க இது ஏன்? என்று கேட்கிறேன். அவர் என் உரையிலே குறித்த பல விசயங்களை மறுத்துரைக்காது, இராவணன் ஆரியன் என்று ஆதாரமற்ற சொல் கூறி, வாதத்திலிருந்து தப்ப முயன்றது காண வருந்துகிறேன்.

மன்றத்தினர் இதனை உணர வேண்டுகிறேன் என்று பேசினார். தலைவர் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியாரவர்கள், விவாதத்திலே இருவரும் அழகுறப் பேசினர். இனியும் பேசுவார் என்று நம்புகிறேன். எனவே, பிறகே என் கருத்தைக் கூற விரும்புகிறேன். இப்போது இது குறித்து ஒன்றும் கூறவில்லை. விவாதம் மிக மேலான முறையில் இருந்து கண்டு மகிழ்ந்தேன்! என்று பேசினார். அமைச்சரின் வந்தனங் கூறலுடன் கூட்டம் இனிது முடிந்தது.

சேலத்தில் நடந்த விவாதம்

அதன் பிறகு 14.3.1948 மாலை 6 மணிக்கு சேலம் செவ்வாய் பேட்டைத் தேவாங்க பாடசாலை மண்டபத்தில், கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றிய சொற்போர், பெரியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சேலம் சித்தையன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நாவலர் சோமசுந்தர பாரதியாரும், அண்ணாவும் பேசியது; அடுத்த சொற்போர் நிகழ்ச்சி இது.

பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் தனது சொற்பொழிவில் சொல்லுகின்றார், இராமாயணம் ஆரிய மதக் கருத்தைப் போதிக்கின்றது என்று சொன்னார். தமிழனுடைய நிலை, பிற மதக் கருத்தைப் படித்தாலும் கெட்டே விடும், அழிந்தே போகும் என்று ஏன் அஞ்ச வேண்டும்?

ஷேக்ஸ்பியரின் நூல்களிலே, கிறிஸ்துவ மதத் தத்துவங்கள் நிரம்ப இல்லையா? இராமாயணத்தில் தானா ஆபாசம் இருக்கிறது? இராமாயணத்தைக் கொளுத்தி விட்டால் போதுமா? பாரதத்திலே ஆபாசம் இல்லையா?

(பெரியாரிடம் கேட்டால் என்ன சொல்லுவார்? அதையும் சேர்த்துக் கொளுத்து. என்றுதான் சொல்லுவார். இது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள். எங்கே போய் எதில் வந்து முடிகிறது பாருங்கள்.)

பாரதத்தில் சகிக்க முடியாத ஆபாசம்

ஒரு பழமொழி உண்டு. பாரதத்தை வீட்டிலே படிக்கக் கூடாது எங்காவது மடத்திலேதான் படிக்க வேண்டும் என்பார்கள். வீட்டிலே பெண்கள் கேட்டுச் சகிக்க முடியாத ஆபாசம். அதிலே இருக்கிறது. அய்ந்து பேர்களுக்குப் பத்தினியாம் திரவுபதி. அந்தக் கோயிலுக்கு மானமில்லாமல் தமிழ் மக்கள் தங்கள் பெண்களை அனுப்புகிறார்கள்!

கிருஷ்ணன் பல பெண்களுடன் ஆடினது போதாமல், தன் சொந்த அத்தையையே பெண்டாக்கிக் கொண்டான்!

(நாவலர் சோமசுந்தர பாரதியார் எந்தக் கட்சிக்காகப் பேசுகிறார் என்றே புரியவில்லை.

அத்தகைய பாரதத்தைக் கொளுத்தினால் போதுமா? இப்படி யார் கேட்பது?

நாவலர் சோமசுந்தர பாரதியார். அதைக் கொளுத்துவது தவறு என்று இவரைக் கூப்பிட்டால் இவர் என்ன சொல்லுகிறார். இராமாயணத்தை மட்டும் கொளுத்தக்கூடாது. பாரதத்தையும் சேர்த்து அல்லவா கொளுத்த வேண்டும் என்று சொல்கிறார்.)

அவருக்கு அடிக்கடி கைதட்டினீர்களே!

அத்தகைய பாரதத்தைக் கொளுத்தினால் போதுமா? இராமாயணத்தில் ஆரியன் கதை இருக்கிறது என்றார்கள்.

பகவத் கீதையிலே, சகல ஜீவராசிகளுக்கும் நான் கடவுள், எனக்குப் பிராமணர் கடவுள் என்று கிருஷ்ணன் சொல்லுகிறாரே! அதைக் கொளுத்த வேண்டாமா? நாலாயிரப் பிரபந்தத்தைக் கொளுத்த வேண்டாமா? வைணவ நூல்களிலே காணப்படும் ஆபாசங்களைவிடச் சைவப் பண்டிதர்களின் புராணங்களிலே அதிக ஆபாசமுண்டு என்பேன்.

மேலும் சொல்லுகிறார், நீங்கள் அண்ணாதுரை பேசும்போது அவர் பேச்சை அங்கீகரித்தும், அகமகிழ்ந்தும் அடிக்கடி கை தட்டினீர்கள்; எனக்கு அதுபோல் கை தட்டாவிட்டாலும் மனதையாவது திறந்து வைத்துக் கேளுங்கள். நோய் தீர மருந்து தரமுடியாமல் விஷங்கொடுத்து ஆளையே கொல்வதுபோல், ஆரியத்தைப் போக்க முடியாமல் தமிழரையே இழிவுபடுத்தித் தமிழ்க் கலையை அழிக்க வேண்டாம். மக்களுக்கு அறிவூட்டுங்கள். ஆரிய ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள். அதுதான் தக்கவழி என்று பேராசிரியர் பாரதியார் தமது மறுப்புரையாற்றிவிட்டு, இரயிலுக்கு நேரமாகிவிட்டதென்று கூறி, உடனே போய்விட்டார்.

கடைவிரித்தேன் கொள்வாரில்லை

மற்றொன்று, கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிவிட்டேன் என்று ரொம்ப சலிப்போடு வள்ளலார் சொன்னார். அதேபோல நாவலர் சோமசுந்தரபாரதியாரும் சென்றார். அண்ணா அவர்கள் அதற்கு பதில் சொன்னார்.

தோழர்களே! நான் ஆரம்பத்தின்போது சொன்னபடியே எனக்கும், பாரதியாருக்கும் போர் நோக்கத்தைப் பற்றிக் கருத்தொற்றுமை இருந்ததையும், போர்முறை பற்றி மட்டுமே அவர் வேறுவிதமான கருத்து கொண்டிருந்தார் என்பதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்தக் கருத்து வேற்றுமை தவிர, மற்றபடி ஆரிய ஆதிக்கம் கூடாதென்பதிலோ, ஆரியம் தமிழருக்கு ஆகாது என்பதிலோ, பாரதியார் வேறுபாடான கருத்தை தெரிவிக்கவில்லை.

இராமாயணத்திலே ஆபாசங்களும், சில ஒழுக்கக் குறைவுகளும் இல்லையென்று அவர் கூறவில்லை. அவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி மக்களின் அறிவைப் பெருக்குங்கள்; ஏடுகளைக் கொளுத்த வேண்டாம்; சமய வெறிபிடித்த மக்கள், சுயமரியதைக்காரர்களையே சுட்டெரிப்பார்கள் என்றுரைத்தார்கள்.

தமிழர் உணர்ந்து எழுச்சி பெற்றால் அந்த எதிர்ப்பை அடக்கவே ஆரியரால் முடியாது. அவர்கள் நம்மைத் தீயிலிடத் துணிவரென்று அஞ்சும் தலைவர் பாரதியார், பசுமலையில் ஓய்வாக இருக்கட்டும். நாங்கள் அந்த ஏடுகளைத் தீயிலிட்டுக் காட்டி அவரிடம் சென்று ஏடுகளைப் பொசுக்கினோம், இதோ வந்தோம்; நாங்கள் மூட்டிய தீ ஆரியத்தையும், அது தங்கியிருக்கும் இடத்தையும் சூழ்ந்து கொள்ளுமோ என்றே இப்போது ஆரியர் அஞ்சுகின்றனர் என்று பாரதியிடம் கூற, நான் வருவேன் என்று உறுதி கூறுகிறேன். புகழ், சாந்தி, அமைதி, புலவர்களுக்கே கிடைக்கட்டும்! எதிர்ப்பு, கஷ்ட நஷ்டம், சுயமரியாதைக்காரர்களாகிய எங்கட்கே இருக்கட்டும்.

ஆரியத்துடன் போராடுகிறோம்

நாங்கள் எத்தகைய தொல்லையையும் சகித்துக் கொண்டு, ஆரியத்துடன் போராடுகிறோம். பாரதியார் போன்றவர்களுக்கு எமது தீவிரமான போர்முறை பிடிக்கவில்லையானால், ஏடுகளிலே காணப்படும் ஆபாசங்களையும், ஆரியக் கருத்துகளையும், மக்களுக்கு எடுத்துக் கூறட்டும்.

பிற மத நூல்களைப் படிப்பதால், தமிழன் கெடுவானோ என்று கேட்கிறார். கம்ப இராமாயணத்தைத் தமிழன் பிற மத நூலொன்று படிக்கவில்லை; தனக்காக உண்டாக்கப்பட்ட மத நூல் என்று பக்தியோடு பாராயணம் செய்தல்லவா, ஆரியத்தைத் தழுவிக் கொள்ளுகிறான்.

தமிழனுக்குத் தனிக்கலை இருக்க, தனிநெறி இருக்க, ஏன் ஆரியக்கலையையும் மதத்தையும் தன் தலைமேல் சுமந்து திரிய வேண்டும் என்று கேட்டால் அதற்கோர் சமாதானம் கூறக்காணோம். இவை மட்டும் எரித்தால் போதுமா? இன்னும் பல உள என்று கூறுவதும் என்ன பதில்? உவமைகள் கூறி வாதிடுவது ஆபத்து. பாரதியார் ஓர் உவமை கூறினார்.

விஷம் சேர்த்து கொல்வதற்குச் சமம்

நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோய் தீர்க்காமல் விஷமூட்டிக் கொல்வதற்குச் சமம். இராமாயணத்தை எரிப்பது என்று அவர் கூறினார். நான் உவமை கூற முடியும். உடலிலே கொப்பளிக்கும் கட்டியைக் கரைய வைக்க, உள்ளுக்கு மருந்து சாப்பிட்டும் தீராததால், ஆபரேசன் செய்வது ஒரு முறை, அதுபோல், ஆரிய நோய் கொண்ட தமிழ் மக்களுக்கு உள்ளுக்கு மருந்து தருவது போல் பாரதியார் போன்றவர்களின் அறிவுரைப் பிரச்சாரம் செய்து பார்த்து ஆரிய ஏடுகளைத் தீயிலிடுவோம் என்ற தீவிர முறையைச் சுயமரியாதைக்காரர்கள் கையாள்கின்றனர்.

1938ஆம் ஆண்டு திருவத்திபுரத்தில்...

இன்று கம்ப இராமாயணத்தை விடச் சிறந்த கலை இல்லை என்று வாதிட்ட பேராசிரியர் 1938ஆம் ஆண்டு மார்ச்சு மாத முதல் வாரத்தில் வடஆர்க்காடு வட்டாரத் தமிழ் மாநாடு திருவத்திபுரத்தில் நடைபெற்றபோது, தலைமை வகித்து ஆற்றிய சொற்பொழிவிலே சொல்கிறார்.

தமிழர் தங்கள் கலப்பில்லாத கலை நயத்தையும், குற்றமில்லாத மொழி நலத்தையும் நிகரில்லாத இலக்கிய நலத்தையும் பெற்றிருந்தனர். என்று பேசினார். இதைத்தான் நான் இன்று சொன்னேன். தமிழுக்குக் கலப்பில்லாத தமிழ்க்கலை எப்போது இருந்தது? கேளுங்கள், பாரதியார் அன்று கூறினதை.

கம்பரை இழக்க மாட்டாராம்!

அசோகர் தமது கருத்துகளைச் சிலா சாசனங்களில் வெளியிடுவதற்கு முன்னமேயே, இயேசு கிறிஸ்து மக்களுக்கு உண்மைகளை எடுத்துக் காட்டுவதற்கு முன்னமேயே என்கிறார் பாரதியார்.

எனவே, கம்பன் காலத்திற்கு முன்பே தமிழருக்குத் தனிக்கலை இருந்தது. எது அக்கலை என்பதையும் அவர் விளக்கினார்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொல்காப்பியம் எனும் பேரிலக்கணப் பெருநூல், மொழியின் தொண்மைச் சிறப்பை விளக்கும் ஒரு பெருநூலாகும் என்று அன்று கூறினார். இன்று தமிழ்நாட்டையும் இழப்பேன்; கம்பனை இழக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

சரித்திர காலத்துக்கு முன்பே தோன்றிய இலக்கியங்கள் வரம்பின்றிப் பரந்து பல்வேறு கலைத்துறைகளைத் தன்னத்தே கொண்டு, பல்வேறு மக்களை சமமாகக் கருதி, நிலவி இருந்தன என்று கூறிவிட்டுத் தமிழர் கலைகளின் பட்டியலைத் தருகிறார். அவற்றுள் கம்ப இராமாயணம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டுகிறேன்.

தோற்றேன்! தோற்றேன்!! தோற்றேன்!!!

பாரதியார் அன்று தந்த பட்டியல் இது. வள்ளுவர் வழங்கிய வான்புகழ் குறளும் அகத்துறை நிரம்பிய கலியும், குறுந்தொகையும் குறுநூறும், பொருட்டுறை காட்டிய புறநானூறும், இளங்கோ அருளிய வளங்கெழுமிய சிலப்பதிகாரமும், பண்டைத் தமிழ் மக்கள் புதுப்பொருள் கண்டு ஆராய்ந்து உணர்த்தும் மதியை உடையவர் என்பதை விளக்குகின்றன என்றெல்லாம் இவரே சொல்லிவிட்டு, இவரே 700ஆண்டுகளுக்குப் பிறகு வந்த கம்ப ராமாயணத்திற்காக வக்காலத்து வாங்குகிறாரே என்று கேட்டார்.

கடைசியாக இரா.பி.சேதுப்பிள்ளை, நான் தோற்றேன்! தோற்றேன்!! தோற்றேன்!!! என்று மும்முறை சொல்லுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள்.

---------------------தொடரும்... "விடுதலை" 4-11-2009

2 comments:

Siva said...

Why don't you discuss about Quoran or Bible whether they have to be destroyed or not? Show some guts.

Guna said...

கடவுள் சம்பந்தப்பட்ட எந்த நுலும் வேண்டாம் என்றால்.திருக்குறளும் வேண்டாம் என்று நீங்கள் சொல்ல வேண்டியது தானே ?.முடிய வில்லை அதற்க்கு நாத்திக விளக்கம் வேறு கொடுப்பது.

நான் ஒரு பிரமணன் கிடையாது ஆனால் பெரியார் தாசன் இல்லை .