Search This Blog

19.11.09

திராவிடர் என்று அழைத்துக் கொள்வது ஏன்?எதற்காக?


சக்கிலியன், பறையன், பஞ்சமன், செட்டி, முதலி, நாய்க்கன் என்னும் ஜாதிப் பெயர்களெல்லாம் சூத்திரன் என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த இழிவு நீங்குவதற்காகத்தான், மொத்தத்தில் ஒரே இனப் பெயரான திராவிடன் என்று சொல்ல வேண்டுமென்கிறேன். அதற்காகத்தான் திராவிடர் கழகமும் வேலை செய்து வருகிறது.
  
பார்ப்பனர்கள் ஆரிய சங்கம், பிராமண சங்கம் என்ற ஸ்தாபனத்தைத் தங்கள் முன்னேற்றத்திற்காக வைத்திருக்கின்றார்கள். முன்னேறிய சமூகத்திற்கு ஏன் இச்சங்கம்? அவர்கள் கட்டு உடையாமல் இருப்பதற்காக, உஷாராக இருக்கின்றார்கள். அவர்கள் தனி இனம் என்பதை பச்சையாகக் காட்டிக் கொண்டு, நம்மைத்தான் வகுப்புவாதிகள் என்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமை இருக்கின்றது. நம்மிடையேதான், பல ஜாதிப் பிரிவுகள், நமக்குத்தான் சங்கங்கள் தேவை. ஆச்சாரிகள், பிராமணர்கள் என்றும், வன்னியர், நாடார், ஆந்திரர் முதலியோர் தங்களை க்ஷத்திரியர் என்றும், அருந்ததியர், பள்ளர்கள் என்பவர்கள், தேவேந்திர குலவேளாளர் என்றும், உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறார்களே யொழிய, சூத்திரப்பட்டம் ஒழியவேண்டும் என்பதில் அவர்களுக்குக் கவலை இல்லை. இதை ஒழிப்பதற்காகத்தான், திராவிடர் கழகம்.
 
 
நாம் இந்துக்களல்ல, திராவிடர்களே, என்பதாக, நமது திருவாரூர் மாநாட்டிலே தீர்மானம் நிறைவேறி இருக்கின்றது. மக்கள் வேறு காரியங்களில் சிந்தனையைச் செலுத்துகிறார்கள். கம்யூனிசம், 'கிசானிஷம்', ஜெய்ஹிந்த், பேசுகிறார்களேயொழிய ஈன நிலையைப் போக்க வாயைத் திறக்க அவர்களுக்கு மனமில்லை. ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆவதற்குப் பாடு பட்டார்களேயொழிய சூத்திரப் பட்டம் போவதற்கு அல்ல.


தமிழ் பேசுகின்றவன் எல்லாம் தமிழன் என்கிறார்களே அப்படியானால் ஆரியனும் தமிழன்தான். ஆகவே தான் சிதைந்து கிடக்கின்ற நமது இனத்திற்குத் திராவிடன் என்கிறோம். முடியுமானால் வேறு பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்.

--------------"விடுதலை" 11-4-1947

2 comments:

Unknown said...

//முடியுமானால் வேறு பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்.//

ஓவியா அவர்களே,
ஆந்திராவில் திராவிட தமிழனை,
"ஒக்க சொன்டிலு,ஒக்க தொங்கடு" என்று
சொல்கிறார்கள்.இந்த பெயர்களில் இருந்து ஒரு பெயர் தேர்ந்தெடுத்து ஏன் அழைக்கக்கூடாது,கழகம் இதை பற்றி சிந்தித்து ஒரு முடிவெடுக்க வேண்டுகிறேன்.

தமிழ் ஓவியா said...

maruthu



உங்க அசல் பேர் "ஒக்க சொன்டிலு,ஒக்க தொங்கடு" தானா?

எங்களுக்கும் எள்ளல் தெரியும். எழுத ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்.