Search This Blog

2.11.09

ஜாதி சான்றிதழ் ஒரு பார்வை


ஜாதி சான்றிதழ்

ஜாதி சான்றிதழ்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

சமூகநீதி, இட ஒதுக்கீடு என்று வருகின்றபோது ஜாதி சான்றிதழ் என்பது அடிப்படையான சான்றாகும். கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் காலகட்டத்தில் ஜாதி சான்றிதழ் பெறுவதில் மக்கள் பெரிதும் அலைக்கழிக்கப்படுவது கண்கூடு.

அதுவும் கிராமப்பகுதிகளிலிருந்து நகரத்துக்கு வந்து வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெறுவதற்கு பல நாள்களைச் செலவிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஜாதி சான்றிதழ் வாங்கிக்கொடுப்பதற்கென்றே இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் என்றும், விரும்பும் ஜாதி சான்றிதழை அவர்கள் பெற்றுத் தருகிறார்கள் என்ற நிலை எல்லாம்கூட இடையில் இருந்ததுண்டு.

இதற்கெல்லாம் முடிவு கட்டி நிரந்தரமாக குடும்பவாரியாக அட்டைகள் வழங்குவதுபற்றிகூட யோசிக்கலாம்.

இப்பொழுது வழங்கப்பட்டுள்ள ஆணை குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்லும்போது அவர்களுக்குரிய ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதமும், இடர்ப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருவதால் அதற்குப் பரிகாரம் தேடும் ஏற்பாடாகும்.

தாங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள்; அப்பொழுது அந்தப் பகுதியில் எந்த ஜாதி சான்றிதழையும் பெற்று இருந்தனர் என்பதற்கான ஆதாரங்களைத் தந்து சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களது ஜாதிக்குரிய சான்றிதழையும் அளித்துவிட்டால், இடம் மாறி வந்தாலும் பழைய நிலைக்குரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என்பதுதான் முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்துள்ள புதிய ஆணையாகும்.

குமரி மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் முறை மிகவும் சிறப்பானதாகும்.

கொண்டாரெட்டி என்ற பிரிவினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்னியாண்டி பிரிவினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதிலும் சில பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அவற்றிற்கும் இதுபோல் தீர்வு காணப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

சலவைத் தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால் நெல்லை மாவட்டம் செங்கோட்டைப் பகுதியில் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த நிலை மற்ற மற்ற பகுதிகளில் இருக்கும் சலவைத் தொழிலாளர்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக அவர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

ஜாதி மறுப்புப் பெற்றோர்களின் பிள்ளைகளுக்குத் தாயின் ஜாதி பொருந்தாது என்று கடந்த டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்ற ஆயம் அளித்த ஒரு தீர்ப்பு குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது.

அதற்குமுன் அந்த நிலை இல்லை; தாய் அல்லது தந்தையின் ஜாதியைப் போட்டுக் கொள்ளலாம் என்றிருந்தது. அந்த நிலைக்கு மாறான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதானது. பெண்ணுரிமைக் கண்ணோட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.

இட ஒதுக்கீடு தொடர்பாக ஜாதிபற்றி ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் சமூகநீதியில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களைக் கொண்ட குழு ஒன்றினை ஏற்படுத்தி, அந்தக் குழுமூலம் நிரந்தரத் தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகும். அல்லது இப்பொழுதுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்கூட இந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்படலாமே!

--------------------"விடுதலை"தலையங்கம் 28-10-2009

0 comments: