Search This Blog

16.11.09

ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?


மேனாட்டான் கண்டுபிடித்ததை பயன்படுத்திக்கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதா?

அண்ணா கேட்ட கேள்வியை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு

‘மேல்நாட்டான் கண்டு பிடித்ததை எல்லாம் உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயா? நீ கண்டு பிடித்தது என்ன என்று அண்ணா அவர்கள் கேட்ட கேள்வியை எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள்’’ என்ற தலைப்பில் 1.9.2009 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

எண்ணிப்பார் கோபியாமல்

அதற்கடுத்து இன்னொரு கருத்தை அண்ணா அவர்கள் சொல்லுகின்றார். ‘எண்ணிப்பார் கோபியாமல்’ இது ஒரு தலைப்பு. அதாவது அண்ணா அவர்கள் சுருக்கமாகச் சொல்லி மற்றவர்களை எப்படி சிந்திக்க வைக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

‘எண்ணிப்பார் கோபியாமல்’ என்ற தலைப்பில் உள்ள செய்தியைப் படிக்கின்றேன். எலக்ட்ரிக் ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிகப்பல், அதைக் கண்டு பிடிக்கும் கருவி, டார்பிடோ அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி கருவி, இன்ஜெக்சன் ஊசி, இனாகுலேசன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆபரேசன் ஆயுதங்கள், தூரதிருஷ்டி கண்ணாடி, ரேடியோ, கிராமஃபோன், டெலிஃபோன், தந்தி, கம்பி இல்லா தந்தி, ஃபோட்டோ மெசின், சினிமா படம் எடுக்கும் மெசின், விமானம், ஆளில்லா விமானம், டைப்மெசின், அச்சு எந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி சுரங்கத்துக்குள் போகும் கருவி, மலை உச்சி ஏறமெசின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெசின், இன்னும் எண்ணற்ற கருவிகள், புதிய பயன்தரும் மனிதனின் கற்பனைக்கு எட்டாது இருந்த மனிதனின் உழைப்பை குறைக்கும் உரைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கண்டு பிடித்தவர்கள் எல்லாம் இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள்.

வைதீகத்திற்கு என்ன சம்பந்தம்?

ஆகவே இதற்கும் வைதீகத்திற்கும் சம்பந்தம் உண்டா? என்று கேட்டுவிட்டு, அடுத்ததை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்கள் எல்லாம் ஆயுத பூஜை செய்தவர்கள் அல்லர். (சிரிப்பு). இளைஞர்களுக்கு இது மாதிரியான விசயங்கள் துண்டு, துண்டாகப் போட்டுத் தெரிவிக்கலாம்.

ஆகவே, நமது தோழர்கள் இவைகளை எல்லாம் மக்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ள துண்டறிக்கைகளாகப் போட வேண்டும்.

அந்தக் காலத்தில் தெருவில் நின்று சாக்ரட்டீஸ் சத்தம் போட்டார் என்ற மாதிரியாவது படிக்க வேண்டும். மேலும் சொல்கிறார்.

தீக்குச்சி பெட்டி கூட

நவராத்திரி கொண்டாடியவர்கள் அல்லர். நூற்றுக்கு நூறு பேர் என்று படித்துள்ள மேல் நாட்டிலே சரசுவதி பூஜை, ஆயுத பூஜை இல்லை. ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டி கூட நீ செய்தது இல்லை. கற்பூரம் கூட நீ செய்தது இல்லை. கடவுள் படத்துக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரசுவதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான்; நீ கொண்டாடுகிறாய்.

என்ன அதிசயப் பொருளை கண்டோம்?

ஒரு கணமாவது யோசித்தாயா? இவ்வளவு பூஜைகள் செய்து வந்த நாம் நமது மக்கள் இதுவரை என்ன புதிய அதியப் பொருளை கண்டு பிடித்தோம், உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப் படாதே உண்மை அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல் யோசி; உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களிலிருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம் கூட ஓலைச்சுவடியில் தானே எழுதினார்கள்.

அந்தப் பரம்பரையில் வந்த நீ அவர்கள் மறைந்து ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்தில் அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!.

அவன் அச்சு எந்திரத்தில் உன் பஞ்சாங்கம்

மேனாட்டான் கண்டு பிடித்த அச்சு எந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்து படித்து அக மகிழ்கிறாயே (கைதட்டல்); அவன் கண்டு பிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு பழைய அற்புதம் நடந்த திருத்தலம் போகிறாயே; அவன் கண்டு பிடித்துக் கொடுத்த ரேடியோவிலே பழைய பஜனைப் பாடலை வைத்து மகிழ்கிறாயே!.

எல்லாம் மேனாட்டான் கண்டு பிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, இது சரியா? யோசித்துப் பார்.

நாரதர் சர்வீஸ்

சரசுவதி பூஜை விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையில் செய்தி வருகிறதே, அது நாரதர் சர்வீஸ் அல்லவே, அசோசியேட் அல்லது ராயிட்டர் சர்வீஸ்! நாரதர் என்று ஒருவர் வந்து பத்திரிகைக்கு செய்தி கொடுத்தாரா? இங்கே நடந்தது இது, அங்கே விமர்சையாக நடந்தது அது என்று கொடுத்தாரா என்று கேட்கிறார்.

விநாயகன் சிலையை நேற்று கடலில் கரைத்தார்கள். நாம் செய்வதைவிட பக்தர்கள் விநாயகனை அந்த அளவுக்குப் பழிவாங்கி இருக்கிறார்கள்.

விநாயகனை கை வேறு, கால் வேறாக துண்டு துண்டாக வெட்டி கடலில் தூக்கிப் போடுகிறார்கள். நாமெல்லாம் பிள்ளையாரை உடைத்த பொழுது ஒரே தட்டுத், தட்டி பிள்ளையாரை உடைத்தோம். அவ்வளவுதான் தவிர வேறு அல்ல. மேலும் சொல்கிறார்.

ராகவன் ரேடியோ கேட்டதில்லையே

தசரதன் வீட்டிலிருந்ததில்லையே தந்தி முறை. ராகவன் ரேடியோ கேட்டதில்லை (ராகவன் என்றால் ராமன்). சிபி சினிமா பார்த்ததில்லை. தர்மராஜன் தந்திக் கம்பம் பார்த்ததில்லை. (எழுத்து எவ்வளவு அழகாக வருகிறது பாருங்கள்). இவைகள் எல்லாம் மிக மிக சாமான்யர்களான நமக்கு சுலபமாகக் கிடைக்கிறது. அனுபவிக்கிறோம்.

அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம். அவர்கள் சரசுவதி பூஜை, ஆயுத பூஜை செய்து அறியாதவர்கள் என்பதையும் மறந்துவிடுறோம்.

ரேடியோவிலே ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவிலே சிபிச் சக்ரவர்த்தி கதையையும் கேட்டு ரசிக்கிறோம். இது முறைதானா?

முதலில் கோபம் வரும்

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூஜை, ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே. அந்த பூஜைகள் செய்தறியாதவர் நாம் ஆச்சரியப் படும்படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை, அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும். என்று சொல்லி அண்ணா அவர்கள் முடித்திருக்கின்றார்.

எவ்வளவு அழகாக எவ்வளவு சிறப்பாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். இது போல ஏராளமான செய்திகளை எடுத்துச் சொல்லலாம்.

கீழே விழுந்த பழம்

இன்னொரு செய்தியை உங்களுக்கு குறிப்பாகச் சொல்ல வேண்டும். ‘கீழே விழுந்த பழம்’ என்று ஒரு தலைப்பு -அண்ணா அவர்கள் எழுதியது.

நம்மாள்கள் பூராவுமே ஞானப் பழத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். அண்ணா அவர்கள் கொடுத்த தலைப்பு ‘கீழே விழுந்த பழம்’. ஒரு பழம் உலகுக்கே உன்னதமான ஆராய்ச்சியினை வழங்கிற்று. சின்னஞ்சிறு ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்தது, அது தந்தது. அருமையான சிந்தனையை. ஏன் விழுந்தது? பழம் விழுந்ததைப் பார்த்தவன் கேட்டான் தன் உள்ளத்தை. பிறரைப் பார்த்துக் கேட்டிருந்தால் பழம் ஏன் விழும்? பழுத்தால் விழுந்திருக்கும் என்றே பதில் தந்திருப்பார். இந்தப் பதில் பலரும் சொல்லக் கேட்டு, அவன் சலித்துப் போன பதில். ஆகவே தன் மனதைக் கேட்டான்.

ஒரு பழம் பூமியை நோக்கி

விழுந்த பழம் நேரே ஏன் பூமியை நோக்கி விழவேண்டும் கேள்வி. கேள்வி கிண்டலுக்கு ஆளாக்கும். எவனாவது இன்னொருவனைக் கேட்டால் அவனோ தன் சிந்தனையைக் கேட்டான். சிறு கல்லை ஆகாயத்தில் வீசி அதன் வேகத்தைக் கணக்கிட்டான். உயரமான இடத்திலிருந்து ஒரு பொருளைப் போட்டு அது பூமியை நோக்கி விழுவதை எண்ணினான். விளைவு? விஞ்ஞான உலகுக்கு விசித்திர உண்மை கிடைத்தது. நியூட்டன் வரலாற்று மனிதனானான். (எவ்வளவு அழகான செய்தி பாருங்கள் பல்கலைக் கழகங்களில் கூட இந்த மாதிரி சொல்லிக் கொடுக்க முடியாது. பல்கலைக் கழகங்களின் புவிஈர்ப்பு மய்ய விசையையும் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். அண்ணா அவர்களைப் போல சொல்லிக் கொடுக்க முடியாது. சாதாரண திராவிடநாடு வாசகர்க்கு எவ்வளவு எளிமையாக எடுத்துச் சொல்லுகிறார் பாருங்கள். மிக விசித்திரமான உண்மை)

நியூட்டன் வரலாற்று மனிதனானான். பூமிக்கு ஆகர்ஷண சக்தி உண்டென்று விளக்கினான். இது அங்கே இங்கிலாந்தில். ஒரு பழம் உன்னதமான உண்மையை உலகுக்கு வழங்கிற்று. இதோ ஒரு பழம் பாரதப் பிரசங்கி பக்தி பிரவாகத்தோடு விவரிக்கிறார்.

பாண்டவர்கள் ஆரண்ய வாசம் செய்த பொழுது பாஞ்சாலி கேட்க அர்ஜூனன் ஒரு மரத்திலிருந்த பழத்தை அறுத்துத் தந்தானாம். அது முனிவர் ஒருவருடையதாம். அவர் கண்டால் ஆபத்து வரும் என்று அஞ்சி இருந்த இடத்திலே அதை கொண்டு வைக்க தருமரும், தம்பிகளும் சக்ரபாணியைத் (கிருஷ்ணரை) துதித்தனராம். நீலமேக சியாமள வண்ணனாக வந்தாராம். நெஞ்சத்து உண்மைகளை ஒவ்வொருவரும் சொன்னால் மரத்து உச்சிக்குப் பழம் போகும். (பஞ்சபாண்டவர்கள் இருக்கிறார்கள். துரோபதை இருக்கிறார். கிருஷ்ணன் இருக்கிறார். அந்தப் பழம் மறுபடியும் போய் ஒட்ட வேண்டும். அதற்கு என்ன நிபந்தனை? என்று கேட்டால் யார் என்ன நினைக்கிறீர்களோ அதை மறைக்காமல் நெஞ்சத்து உண்மைகளை அப்படியே சொல்ல வேண்டும். சொன்னால் அந்தப் பழம் ஒட்டும் என்று சொன்னாராம்).

விழுந்த பழம் ஒட்டிக்கொண்டதாம்!

உண்மைகளைச் சொல்ல கீழே விழுந்த பழம் உயர நோக்கி ஓரிடத்தில் வந்து நின்றதாம். கொஞ்சம், கொஞ்சமாக வருகிறது. சினிமாவில் விட்டலாச்சாரியார் திரைப்படங்களில் வருகிற மாதிரி சொல்லுகிறார்கள்.

இப்பொழுது கிராஃபிக்ஸ் வந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு வந்தாகி விட்டது. கிராபிக்ஸ் வருவதற்கு முன்னாலேயே விட்டலாச்சாரியார் தான் இதை செய்தவர். பழம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே போய்க் கொண்டிருக்கிறது. பழம் மரத்திற்குப் போகாமல் பாதியிலேயே நிற்கிறது).

கீழே விழுந்த பழம் உயர நோக்கி ஓரிடத்தில் வந்து நின்றதாம். பாஞ்சாலி உண்மையை மறைத்தாளாம். உடனே பழம் பூமிக்கு வந்ததாம். (பழம் மேலே போனது கீழே வருகிறது. அந்தப் பழம் பழைய இருந்த இடத்திற்குப் போய் ஒட்டவில்லை. அது கீழே வந்ததாம்)

கண்ணன் சிரித்துக் கொண்டே நீ பொய் சொன்னாய் திரவுபதா! என்று சொல்ல, அவள் உண்மையைச் சொன்னாளாம். அய்வரின் பத்தினி நான். இந்த அய்வரும் எனக்கிருந்தாலும் கூட, உள்ளத்தில் ஒரு கோடியில் கர்ணன் மீதும் என் கண்கள் பதிந்திருந்தன என்று துரோபதை சொன்னாள். (பாரதக் கதையில் உள்ளதைப் பாருங்கள்).

அதனால்தான் நேற்று சொன்னேன், சோமசுந்தரபாரதியார் சொன்னதைப் பற்றி. பாரதத்தை வீட்டில் படிக்கக் கூடாது; அதை வெளியில் தான் படிக்க வேண்டும், அவ்வளவு ஆபாசம். என்று அண்ணா அவர்களுக்கு முன்னாலேயே வாதத்தில் சொல்லியிருக்கின்றார்) என்று பக்தி ரசம் சொட்ட வர்ணிக்கிறார் புராணிகர். அய்ம்புலன்களும் போல, அய்வரும் பதிகளாக இன்னும் வேறு ஒருவன் எப்பொழுதும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேரிதயம் அம்புதனில் பெண் பிறந்த எவர்க்கும் ஆடவர் இலாமையினால் நம்புதற்குளவோ என்றனள் வசிஷ்டன் மனைவியே அணையாள், இன்னும் வேறு ஒருவர் எம்பெரும் கொழுநன் ஆவதற்கு...! கவனித்தீர்களா கவிதையை? உருகுதாம் உள்ளம். புராணிகரும் மனம் உருகியே வர்ணிக்கிறார் இதனை. இந்த உண்மையைக் கேட்டதும், உடனே பழம் ஒட்டிக் கொண்டதாம்.

ஒரு பழம் விஞ்ஞான உண்மையைத் தர பயன்பட்டது அங்கே. ஒரு பழம் புராணப் பெருமையை விளக்கப் பயன்படுகிறது இங்கே. நியூட்டனுக்கு கோயில் கட்டி யாரும் கும்பிடவில்லை அங்கே. வேத வியாசருக்கும், கண்ணபிரானுக்கும் பத்தினி பாஞ்சாலிக்கும் விழாக்களுக்கு இங்கே குறைவில்லை. இரண்டும் கீழே விழுந்த பழங்கள்தான். என்ன செய்வது?

அறிவு நடை போடுகிறது அங்கே; மகாத்மியம் பவனி வர முயல்கிறது இங்கே. பகுத்தறிவுச் சிந்தனைகளை இப்படி ஏராளமாக அண்ணா அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். ஏராளமான நூல்கள் இருக்கின்றன. அந்த நூல்களில் உள்ள அவ்வளவு செய்திகளையும் சொல்ல பல மணி நேரம் போதாது. இதுவே நேரம் போனது தெரியாத அளவிற்குப் போயிருக்கிறது.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------"விடுதலை" 16-11-2009

0 comments: