Search This Blog

20.11.09

தமிழ்நாடே பெரியார் நினைவு சமத்துவபுரமாக ஒளிவிடவேண்டும்


பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், குறிப்பாக மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து நடத்திய சாதனைகளில் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்பது தனித்தன்மையானது.

தந்தை பெரியார் அவர்களுக்குப் புது புகழாரம் என்பதைவிட, தந்தை பெரியார் அவர்களின் கருத்துவழி ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் என்று இதனைக் கூறவேண்டும்.

1997 இல் தொடங்கப்பட்ட ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் நூறு வீடுகள்; அதில் 40 வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கு, 25 வீடுகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 25 வீடுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு, 10 வீடுகள் இதரப் பிரிவினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

1997 முதல் 2001 வரை 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இடையில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சி வந்தது. ஆட்சி மாறினாலும் நல்ல திட்டங்கள் நல்லபடி நடைபெறவேண்டும் என்கிற நல்லெண்ணம் இல்லாதவர், தனக்கே உரித்தான அணுகுமுறையோடு அத்திட்டத்தை முடக்கி வைத்தார்.

மீண்டும் கலைஞர் தலைமையிலான ஆட்சி, அத்திட்டத்தை விரிவாக்கிக் கொண்டு வருகிறது.

தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் வாழ்ந்த அகவையைக் கணக்கிட்டு மேலும் 95 சமத்துவபுரங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டு இதுவரை 59 கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை 2011 ஆம் ஆண்டில் முடிக்கப்பட உள்ளன.

துணை முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை திறந்து வைத்து, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும், நோக்கங்களையும் இடையறாது எடுத்துக் கூறி வருகிறார்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே இதுபோன்ற ஒரு சிந்தனை _ திட்டம் என்பது தந்தை பெரியார் பிறந்த மண்ணில் முகிழ்த்தது பொருத்தமானதே! அதேநேரத்தில் ஆட்சியில் வந்தவர்களுக்கு அப்படியொரு சிந்தனை வரவேண்டுமே, தந்தை பெரியாரியலில் மாணவர் பருவந்தொட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் முதல்வராக வந்த காரணத்தால் இது சாத்தியப்பட்டது என்பதுதான் உண்மை.

ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம்; ஜாதியின் காரணமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்களை உயர்த்துவது இன்னொரு பக்கம்.

மூன்றாவதாக அந்தச் சிந்தனைக்கு ஒரு வடிவம் கொடுத்து செயல்படுத்துவது என்பதாகும். அதுதான் மானமிகு கலைஞர் அவர்களின் மகத்தான இந்தப் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் ஆகும்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் இது தொடங்கப்பட்டாலும், நியாயமாக வெளிமாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் இந்தத் திட்டம் அதிகம் தேவைப்படக் கூடியதாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட அங்கெல்லாம் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.

இதில் இன்னொரு சிந்தனையும், கணிப்பும் தேவைப்படக்கூடியதாகும். எந்த நோக்கத்துக்காக இந்த சமத்துவபுரங்கள் தோற்றுவிக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் எந்த அளவுக்கு அங்கு நிறைவேறியுள்ளது, நிறைவேறி வருகிறது என்பதை கணிக்கவேண்டியதும் அவசியமாகும்.

ஜாதியற்ற நிலை, சமத்துவச் சிந்தனை, பகுத்தறிவு வளர்ச்சி, பெண் சமத்துவம் தொடர்பான சிந்தனைகள் மய்யம் அங்குள்ள நூலகத்தின் வழியாக ஊட்டப்படலாம்.

தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் விழாவை அங்கு மேலும் சிறப்பாகக் கொண்டாடி, சமத்துவபுரத்தின் நோக்கம் மேலும் மெருகேற்றப்படலாம். மிகச் சிறப்பாக செயல்படும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தினைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்கப்படுத்தலாம்.

பெரும் பொருள் செலவு செய்து, இந்தியாவுக்கே வழிகாட்டியாகச் செயல்படுத்தும் ஒரு திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுவதில் நமது கவனமும், செயல்பாடும் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

அவ்வப்பொழுது கட்டடங்களை சரி செய்வது, தேவைகளை நிறைவு செய்வது, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்து போக்குவது உள்ளிட்ட முறையில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடே பெரியார் நினைவு சமத்துவபுரமாக ஒளிவிடவேண்டும். அரசுடன் நாமும் நமது ஒத்துழைப்பை அளிப்போம்!


------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 20-11-2009

0 comments: