Search This Blog

11.11.09

நேபாளத்தில் நடக்கும் இந்து மதக் குரூரம்!



உலகில் ஒரே இந்து நாடாகவிருந்த நேபாளத்தில் இந்துமத ஆட்சி மாறினாலும், மாவோயிஸ்ட்கள் கையில் ஆட்சி வந்தாலும் இந்து மத சனாதன சடங்குகள் மட்டும் ஆணி அடித்ததுபோல அப்படியே ஆணிவேருடன் அப்படியே நிலை பெற்றுதான் இருக்கின்றன.

அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நேபாள நாட்டின் தென்பகுதியில் உள்ள பர மாவட்டத்தில் நேபாள பெண் கடவுளான காதிமையைச் சாந்திபடுத்த அய்ந்து லட்சம் ஆடு, மாடு, கோழி, புறா, வாத்துகளைப் பலியிடுவார்களாம். இம்மாதம் 24, 25 ஆகிய நாள்களில் இந்த காட்டுவிலங்காண்டித்தனமான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.

ஒருகணம் நினைத்துப் பார்ப்போம்; அய்ந்து லட்சம் உயிர்களைப் பலியிடுவதென்றால் அது எவ்வளவுப் பெரிய அச்சுறுத்தக்கூடிய பயங்கரமான செயலாக, கோர காட்சியாக இருக்க முடியும்? அந்த வட்டாரமே ரத்த வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடாதா? அந்தப் பகுதிவாழ் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாதா? சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதா? எவ்வளவு குரூர நெஞ்சம் படைத்திருந்தால் அய்ந்து லட்சம் உயிர்களை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லுவார்கள்!

இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நேபாள அரசு நிராகரித்துவிட்டதாம். மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாதாம் நேபாள அரசு.

பக்தியின் பெயரால் நடக்கும் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தைத் தடுக்க முடியவில்லையே மாவோயிஸ்ட்களால் என்றால், அந்நாடு மன்னராட்சியிலேயே இருந்துவிட்டுப் போகலாமே! மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வதுதானா? மூட நம்பிக்கைகளை அழிக்கும் சக்தியை, ஆற்றலை, அறிவை மார்க்சியம் அளிக்கவில்லையா? அல்லது அதனை இந்த மாவோயிஸ்ட்கள்தான் புரிந்துகொள்ளவில்லையா?

பசுவதையைத் தடுக்கவேண்டும் என்று கூறும் சங்கராச்சாரியார்களும், சங் பரிவார்க் கும்பலும் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.

இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் மனிதர்களையே கொன்று யாகம் நடத்தியிருக்கிறார்களே, அதற்கு “புருஷ யஜ்ஞ’’ என்று பெயர் ஆகும்.

“இந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்’’ (இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்தில் பதிப்பு வால்யூம் ஒன்று 405 ஆம் பக்கம்).

மனிதனையே கொன்று குவிக்கும் கொலைகாரத்தனத்துக்கு இந்து மதம் சூட்டும் பெயர் “புருஷ யஜ்ஞ’’வாம்.

மாட்டுக்குத் தார்குச்சி போட்டால் அது மிருகவதை என்று கூறி, அது குற்றச்செயல் என்று (ஷிறிசிகி) தண்டிக்கும் சட்டம் தனியே இருக்கிறது. ஆனால், யாகம் என்ற பெயரால் மாடுகளையும், ஆடுகளையும் வெட்டிக் கொல்லுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால், இது என்ன இரட்டை அளவுகோல்!

ஒரே நேரத்தில் 5 லட்சம் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது உலகில் வேறு எங்குமே கிடையாதாம்.

வேறு எங்கு இருக்க முடியும்.ஒரு இந்து நாட்டைத் தவிர? இதே நேபாளத்தில்தானே (2001) சோதிடக் கிறுக்குத்தனம் காரணமாக தாய், தந்தையர் உள்பட எட்டு பேர்களைச் சுட்டுக் கொன்றான் இளவரசன்.

எந்த சோதிடனும் இதுபோல் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லவில்லையே! இவ்வளவு கொடூரம் நடந்ததற்குப் பிறகும்கூட அதுபற்றிய உரத்த சிந்தனைக்கு இடமில்லாமல், தோஷம் கழிக்கும் பார்ப்பனிய சடங்குகளைத்தானே நடத்தினார்கள்.

இது ஏதோ நேபாள நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. கொடூரமான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த உலக நாடுகள் கடமைப்படவில்லையா?

----------------"விடுதலை" தலையங்கம் 11-11-2009

1 comments:

சுனா பானா said...

மக்களின் இறைநம்பிக்கை, மூடநம்பிக்கைகளை களையவது என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டமாகும். நேபாளத்தில் ஒன்றும் மாவோயிஸ்டு தலைமையில் சோசலிச குடியரசு உருவாகவில்லையே. இந்தியாவை விட படுபிற்போக்கான நிலையில் இருந்து இப்போது தான் மன்னராட்சி தூக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி ஏற்படுத்துவதற்கான தயாரிப்பு நிலையில் தான் உள்ளது. அரசியல் நிர்ணய சட்டங்களை உருவாக்குவதற்கான இடைக்காலம் தான் இது. பிரசண்டா பிரதமராக பொறுப்பேற்றாலும், ராணுவத்திற்கு அதிக அதிகாரமா அல்லது மக்கள் ஆட்சிக்கு அதிக அதிகாரமா என்ற பிரச்சனையை ஒட்டி ராஜினாமா செய்தார். மாவோயிஸ்டு உறுப்பினர்கள் இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததாலும் 22 கட்சி கூட்டணி மாவோஸ்டுகளை எதிர்த்து ராணுவத்திற்கு அடிபணிந்து செல்கிறது. மக்கள் அட்சி அதிகாரத்திற்காக இப்போதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது நேபாளத்தில்.

நிலைமை இப்படி இருக்கையில் நேபாளத்தில் மூடநம்பிக்கை செயல்கள் நடந்தால் மாவோயிஸ்டுகள் பொறுப்பு என்றால், ஏற்ககூடியதாக இல்லை. தமிழ் நாட்டில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கம் கட்டினார். திராவிட கட்சிகளும் சுமார் நாற்பது ஆண்டுகள் அட்சி செய்து விட்டன. இருப்பினும் தமிழ்நாட்டில் பார்ப்பனீய பாம்புகளுக்கு பெரியார் காலத்தில் பிடுங்கப்பட்ட பல் இப்போது முளைக்க வில்லையா? மூடநம்பிக்கைகளும் தொடர வில்லையா?