Search This Blog

5.6.09

போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது அப்பழுக்கற்ற அயோக்கியத்தனமாகும்.


இலங்கை - இந்திய அதிபர்களின் உரைகள்

இலங்கை அதிபர் ராஜபக்சே, தமது மூர்க்கத்தனமான போர் நடவடிக்கைகளால் போராளிகளை வென்றதாகக் கூறி, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து, அதற்கான வெற்றி விழாவை கொழும்பில் நடத்தியுள்ளார். தமது மனைவியுடன் அவ்விழாவில் பங்குகொண்டு மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

அந்த விழாவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:

புலிகளுக்கு எதிரான சண்டை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். இதுதான் அடுத்த இலக்கு. நிதிநிலை பற்றாக்குறையைப் போக்குவது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, முதலீட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சிறுபான்மையாக உள்ள தமிழ் மக்களும், பெரும்பான்மை சிங்கள மக்களும் ஒன்றுபட்டு வாழவேண்டும். கடந்த 1983-லிருந்து, கடந்த மாதம் வரை நடந்த சண்டையில் 24 ஆயிரம் இராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். அய்யாயிரம் பேர் நிரந்தர ஊனம் அடைந்துள்ளனர். நாட்டில் அமைதி நிலவுவதற்காக இராணுவ வீரர்கள் செய்த தியாகம் மகத்தானது.
தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டிய நேரம் இது. தமிழ் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். எந்தவித அச்சமும் இல்லாமல் அவர்கள் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருக்கிறார்.

அதிபர் ராஜபக்சேயின் கடந்தகால நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு இந்த உரை பூனை சைவம் பற்றி விளக்கவுரை ஆற்றுவதுபோல்தானிருக்கும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்தவரை அது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒன்றுதான் என்றாலும், 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு - பெரும்பான்மை சிங்கள மக்கள் - அரசு, இராணுவம் இவற்றின் துணை கொண்டு சிறு பான்மைத் தமிழர்களை முற்றிலுமாக அழிக்கும் இன அழிப்பில் ஈடுபட்டனர் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.
உள்நாட்டுப் போரில் 24 ஆயிரம் இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர் என்பது கேள்விப்படாத ஒரு அதிசயம் தான். அப்படியென்றால் எந்த அளவுக்கு உக்கிரமான யுத்த மாக - சொந்த நாட்டுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு இருக்கும் என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.


ஏன் இந்த யுத்தம் நடைபெற்று இருக்கிறது? தமிழர்கள் சிங்களர்மீதான ஆதிக்கத்தைச் செலுத்துவதற்காகவா? சிறுபான்மை மக்களான தமிழர்கள் இலங்கை நிருவாகம் அனைத்தையும் தங்களுக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவா?

இல்லையே! தங்கள் தாய்மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவேண்டும்; சுயமரியாதையோடு தமிழர்கள் நடத்தப்படவேண்டும்; அங்கீகரிக்கப்படவேண்டும் என்கிற அடிப்படை மனித உரிமைகளுக்காகத்தானே தமிழ்ப் போராளிகள் குரல் கொடுத்தனர்? எடுத்த எடுப்பிலேயே ஆயுதங்களை அவர்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்களா?

ஈழத் தந்தை செல்வா போன்றவர்கள் மேற்கொண்ட - காந்தியார் அவர்களையும் விஞ்சிய அகிம்சைப்போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது அப்பழுக்கற்ற அயோக்கியத்தனமாகும். போராட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பன்றிகளுக்குமுன் முத்துகளை வாரி இறைத்துப் பயனில்லை என்ற ஒரு முற்றிய நிலையில், தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், தமிழ்ப் பெண்களின் மான மீட்புக்காகவும் எதிரிகளின் கைகளில் இருப்பது வெறும் ஆயுதம் மட்டுமேதான் என்பதை மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, வேறு வழியின்றிதான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது அப்பழுக்கற்ற அயோக்கியத்தனமாகும்

இப்பொழுதுகூட, போர் முடிந்துவிட்டது; வெற்றி பெற்று விட்டோம் என்று வீரப் பிரதாபம் பேசும் நிலையில்கூட இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் அகதிகளின் முகாம்களில் சொல்லொண்ணாத் துன்ப நிலையில்தான் அடைக்கப்பட்டுள் ளனர். உணவு, மருந்துகளின்றி உளைச்சலுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.

விசாரணை என்ற பெயரில் வாலிபர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் - அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறி.

முகாம்களில் உள்ள பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்கள் இலங்கைக்குச் செல்ல மறுக்கின்றனர். இவைதான் உண்மையான யதார்த்தமான நிலைப்பாடு.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்கள் நாடாளுமன்ற இரு அவைகளையும் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வு காண அந்நாட்டு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், இலங்கைத் தலைமை நீதிபதி சரத் என் செல்வா அகதிகள் முகாம்களை நேரில் பார்த்துவிட்டு, இலங்கை சட்டத்தின்மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று உள்ளந்திறந்து கூறிவிட்டு, இப்படிக் கூறியதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார். இதற்கு விளக்கம் தேவையில்லை.

இலங்கை அரசு என்ன அரசியல் தீர்வுகாணப் போகிறது? இந்தியா என்ன உதவியைச் செய்யப் போகிறது? சற்றுப் பொறுப்போம்!


-------------------"விடுதலை"தலையங்கம் 5-6-2009

0 comments: