Search This Blog

30.5.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - அல்பேனியா-அல்ஜீரியா-அண்டோரா




அல்பேனியா

பொது ஆண்டுக் கணக்கு 535 முதல் 1204 வரை பைஜான்டைன் வமிசம் அல்பேனியாவை ஆண்டது. அதன்பின் ஒட்டாமான் துருக்கியர் சுமார் 400 ஆண்டுகள் இந்நாட்டை ஆண்டனர்.
ஒட்டாமான் பேரரசிடமிருந்து 1912 இல் அல்பேனியா விடுதலை பெற்றது. இரண்டாம் உலகப் போருக்கு முன் இத்தாலியின் முசோலினி இந்நாட்டின்மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டான்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, அல்பேனியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்வர் ஹோக்கர் என்பவர் நாட்டின் அதிபரானார். 1948 முதல் சோவியத் நாடு அல்பேனியாவுக்கு உதவத் தொடங்கியது. வார்சா ஒப்பந்தத்தின் தொடக்க கால உறுப்பினராக 1955 முதல் அல்பேனியா இருந்தது. இருப்பினும் 1961 இல் சோவியத் இந்நாட்டுடன் அரசு ரீதியான உறவுகளைத் துண்டித்துக் கொண்டு விட்டதால், சீனாவுடன் அல்பேனியா சேர்ந்து கொண்டது. காரணம் சித்தாந்தப் பிணக்கு!

1967 இல் அல்பேனியா தன்னை ஒரு நாத்திக நாடாக அறிவித்துக் கொண்டது. இந்த அறிவிப்பைச் செய்த முதல் நாடும் அதுதான். ஒரே நாடும் அதுதான்.

1990 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தவறான ஆட்சி முறைகளால் பொது உடைமை நாடுகள் உடைந்து சிதறிப் போன நிலையில் ஆயிரக் கணக்கில் அல்பேனியர்கள் மேற்கு நாடு களுக்கும் இத்தாலிக்கும் ஓடிவிட்டனர்.

தொண்டறச் செம்மலும், நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரசா அல்பேனிய நாட்டில் பிறந்தவர்தான்.

28 ஆயிரத்து 748 சதுர கி.மீ. பரப்புள்ள நாடு. 35 லட்சத்து 81 ஆயிரத்து 655 பேர் (2006) வாழும் நாடு. முசு லிம்கள் 70 விழுக்காடு, அல்பேனிய பழமைவா தக் கிறித்துவர்கள் 20 விழுக்காடு, ரோமன் கத்தோலிக்கர்கள் 10 விழுக்காடு என்ற அளவில் வாழ்கின்றனர். டோஸ்க் எனும் அல்பேனிய மொழியும் கிரேக்க மொழியும் பேசப்படுகின்றன.
டிரானா என்பது தலைநகரின் பெயர்.

அல்ஜீரியா

ரோம சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நாடாக 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்த அல்ஜீரியா ஒட் டாமான் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்கு வந்தது. 1830 இல் பிரான்சு நாடு கைப்பற்றியது. 1848 இல் பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டது. 1962 இல் அல்ஜீரியா விடுதலை பெற்றது. விடுதலைக்குக் கொடுத்த விலை இரண்டரை லட்சம் பேர்களின் உயிர்கள்.

மோசமான பொருளாதார நிலைகளின் காரணமாக 1980 இல் நாட்டில் கலவரங்களும் குழப்பங்களும் தலை விரித்தாடின. 1991 இல் நாடாளுமன்றத்திற்கான முதல் தேர்தல் நடந்தது. இசுலாமிய மதவாதக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்று முதன்மைக் கட்சியாக வந்தது.

அதுவரை ஆட்சியில் இருந்த ராணுவத் தலைமை தேர்தலை ரத்து செய்துவிட்டு 5 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை முகம்மது பவுடியாப் என்பவரின் தலைமையில் அமைத்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. வன்செயல்கள் நிறைந்த உள்நாட்டுப் போர் வெடித்தது. இதில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இசுலாமிய மதவாதக்கட்சி தடை செய்யப்பட்டது. 1998 வாக்கில் உள்நாட்டுப் போர் ஓய்ந்து போனது. கொரில்லாப் போரில் ஈடுபட்டிருந்தவர்களும் 2002 இல் அழிக்கப்பட்டனர்: 1995 இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. பின்னர் 1999 இல் ஒரு தேர்தல் நடந்தது. அதில் அப்துல் அஜிஸ் பவு டெப்லிகா என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தக் குழப்பங்களுக்கு மொழியும் ஒரு காரணி. பெர்பெர் மொழிக்குரிய பெருமை தரப்படாத நிலையில், 2001 வரை கலவரங்கள் நீடித்தன. பெர்பெர் மொழி நாட்டு மொழி ஆக்கப்பட்டு பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்கிற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்பே போராட்டங்கள் ஓய்ந் தன.

23 லட்சத்து 81 ஆயி ரத்து 740 சதுர கி.மீ. பரப்புள்ள நாடு. 3 கோடி 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆட்சியாளரின் மதமான (அரசாங்க மதம்) சன்னி முஸ்லிம்கள் 99 விழுக் காடு உள்ளனர். மீதிப்பேர் யூதர்களும், கிறித்துவர்களும் உள்ளனர்.

அண்டோரா

468 சதுர கி.மீ. பரப்பளவும் 71ஆயிரம் மக்கள் தொகையும் கொண்ட அண்டோரா நாட்டின் வரலாறு வேடிக்கையானது. 1993 முதல் நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ளது என்றாலும் இரண்டு நாடுகளின் இரண்டு அதிகார மய்யங்களைத் தம் நாட்டுத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கும் நாடு - பிரான்சு நாட்டுக் குடியரசுத் தலைவர் ஒருவர் - ஸ்பெயின் நாட்டின் சியோ உர்கல் பிஷப் மற்றொருவர். இவர்களின் சார்பாக அந் நாட்டுப் பிரமுகர்கள் நாட்டின் கூட்டுத் தலைவர்கள்.

பிரான்சு நாட்டுத் தளபதி பாய்க்ஸ் பிரபும் ஸ்பானிஷ் பிஷப்பும் சேர்ந்து 1278 இல் இந்நாட்டுக்குச் சுதந்திரம் அளித்தனர். பிரான்சு, ஸ்பெயின் நாடுகளின் சட்டங்களே இந்த நாட்டுக்கும் சட்டங்கள்.

2005 மே 27 முதல் ஆர்பர்ட் பின்டாட் சான்டோலனியா என்பவர் ஆட்சித் தலைவராக உள்ளார். ஈரோ நாணயம்தான் செலாவணி.ரோமன் கத்தோலிக மதம்தான் முழுமையும். காட்டலன், பிரெஞ்ச், காஸ்டிலி மொழி, போர்த்துகீசிய மொழி ஆகியவை பேசப்படுகின்றன.

------------"விடுதலை" 27-5-2009

0 comments: