Search This Blog

25.5.09

வதந்திகள் முடிவதில்லை....

ஆனந்த விகடன் (8.10.2008) வார ஏட்டில் காலம் (Column) எழுதும் ஒருவர் வதந்திகளைப் பற்றி எழுதி, வழக்கமாக எழுதும் வகையில் மீன், கருவாடு பற்றியும் எழுதியுள்ளார். பல வதந்திகளைப் பற்றி எழுதியவர், நிறைய வதந்திகளை வசதியாக மறந்து விட்டார். மறைத்து விட்டார்.

அவருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவதற்காகச் சில வதந்திகளை நினைவு படுத்துகிறோம்.

மகாபாரதத்தில் யானை இறந்ததை வதந்தியாக தருமனே பரப்பியது முதல் வதந்தியா? அதற்கு முன்பே பூப்புக்கு வராத குந்தி குழந்தை பெற்றது வதந்தியல்லவா?

தொடர்ந்து அய்ந்து குழந்தை பெற்று விட்டுக் கடவுள் கொடுத்தாகச் சொன்னது வதந்தியல்லவா?

சூரியனைச் சக்கரத்தால் நிறுத்திப் பொழுதை நீட்டித்துச் சண்டை போட்டனர் என்பது வதந்தியல்லவா?

மரத்திலிருந்து கீழே அடித்து வீழ்த்தப்பட்ட நெல்லிக்கணி மீண்டும் மேலே சென்று ஒட்டிக் கொண்டது வதந்தியல்லவா?

அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீது ஆசைப்பட்டதைத் திரவுபதி எடுத்துச் சொன்னதும் கீழே விழுந்த பழம் மேலே, போனது என்று இருப்பது வதந்தி அல்லவா? (நியூட்டன் விதியை எழுதி விளக்க வேண்டமா?)

தொப்புள் இல்லாத சீதா (அயோனிஜா தானே) லட்சுமியின் அவதாரம் என்பது வதந்தி அல்லவா?

ஏர் உழும்போது கலப்பையில் மாட்டியது குழந்தை சீதா என்பது வதந்தியல்லவா?

ஓர் ஆள், குடிசையோடு அடி மண்ணையும் பெயர்த்து எடுத்துத் தூக்கிக் கொண்டு போனான் என்பது வதந்தி அல்லவா?

ஒரு குரங்கு மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தது என்பது வதந்தியல்லவா?

30 கி.மீ. தூரத்தை இந்தப் பக்கம் ஒரு காலும் அந்தப் பக்கம் ஒரு காலும் வைத்து குரங்கு நின்றது என்பது வதந்தியல்லவா?

கோட்டை மதில் உயரமாக இருந்ததால் நிலவு அதைத் தாண்டிப்போக முடியாமல் தேங்கி விட்டது என்றது வதந்தியல்லவா?

ராமன் விட்ட அம்பு இராவணனின் மார்பில் தையல் மிசின் போலத் துளைத்துச் சல்லடைக் கண்களாக்கி சீதையின் நினைப்பு எங்கே, எங்கே என்று தேடியது வதந்தி அல்லவா?

இராவணனின் மார்பைத் துளைத்து அலுத்துப் போன அம்பு கூலில் குளித்துக் கழுவிக் கொண்டு மீண்டும் ராமனின் அம்பறாத் தூளியில் வந்து புகுந்து கொண்டது வதந்தி அல்லவா?

உடலின் அழுக்கைத் திரட்டிப் பொம்மை செய்து உயிராக்கிக் காவலுக்கு வைத்தாள் பார்வதி என்பது வதந்தியல்லவா?

அழுக்குப் பொம்மையின் தலைவெட்டப் பட்டு அதில் யானைத் தலை ஒட்டப்பட்டது என்பது வதந்தியல்லவா?

யானை புணர்வதைப் பார்த்துக் கொண்டே புணர்ந்ததால் பார்வதியின் பிள்ளைக்கு யானைத் தலையுடன் மகன் பிறந்தான் என்றது வதந்தியல்லவா?

சனி (பகவானின்)ப் பார்வை பட்டதால் குழந்தையின் தலை டக் என்று காணாமல் போய்விட்டது, கிருஷ்ணன் யானைத் தலையைக் கொண்டு வந்து ஒட்டவைத்தான் என்பது வதந்தியல்லவா?

ஆற்றில் விட்ட ஆணின் விந்து, ஆறு முகமாகப் பிறந்தது என்பது வதந்தியல்லவா?

தாமரைப் பூவில் சரசுவதி நிற்கிறாள் என்பது வதந்தியல்லவா?

பாம்பில் பரந்தாமன் படுத்துத் தூங்குகிறான் என்பது வதந்தியல்லவா?

மயில்மேறி ஏறிப் பறக்கிறான் முருகன் என்பது வதந்தியல்லவா?

எலிமேல் ஏறித் தொந்திக் கணபதி வலம் வருகிறான் என்பது வதந்தியல்லவா?

பிரம்மாவின் நாக்கில் அவனது மகளும் மனைவியுமான சரசுவதி வசிக்கிறாள் என்பது வதந்தியல்லவா?

யானையின் காலைப் பிடித்த முதலை, விஷ்ணு வரும் வரை காத்திருந்து சுதர்சனச் சக்கரத்தால் அரியப்பட்டது என்பது வதந்தியல்லவா?

ஆதிசங்கரனின் காலைக் கடித்த முதலை அவன் அம்மா ஆர்யாம்பா சந்நியாசத்துக்கு அனுமதி தரும்வரை காலைத் துண்டாக்காமல் விட்டு வைத்தது என்பது வதந்தியல்லவா?

அவிநாசியில் சிறுவனை விழுங்கிய முதலை மூன்று ஆண்டுகள் கழித்து சட்டை, துணிமணியுடன் அப்படியே கக்கியது என்பது வதந்தியல்லவா?

எரிந்த எலும்புத் துண்டுகள் பூம்பாவையாக உருக்கொண்டது என்பது வதந்தியல்லவா?

ஆண் பனை மரங்கள் பதிகம் பாடியதும் பெண் பனை மரங்களாகின என்பது வதந்தி அல்லவா?

நரி குதிரையாகி அணிவகுத்ததும், இரவில் நரியாகி ஊளையிட்டதும் வதந்தியல்லவா?

விருத்தாசலம் ஆற்றில் போட்ட பொன் கட்டி திருவாரூரில் குளத்தில் எடுக்கப்பட்டது என்பது வதந்தியல்லவா?

நெருப்பில் போடப்பட்ட பனை ஏடுகள் எரியாமல் இருந்தன என்பது வதந்தியல்லவா?

ஆற்றில் வீசப்பட்ட ஏடுகள் எதிர் நீச்சல் அடித்தன என்பது வதந்தியல்லவா?

வெறும் கையில் வாட்ச் வரவழைத்தான் புட்டபர்த்தி சாய்பாபா என்பது வதந்தியல்லவா?

ரமண ரிஷி சாகும்போது அலாரம் கடிகாரம் நின்று விட்டது என்பது வதந்தியல்லவா?


நாஞ்சில் நாடன் எவ்வளவோ எழுதலாம் - எழுதும் போது நிதானம் வேண்டும். கூடவே அறிவும் வேண்டும்.

-------------------------சார்வாகன் அவர்கள் "உண்மை' அக்டோபர் 16-31 2008 இதழில் எழுதியது

0 comments: