Search This Blog

26.5.09

ராஜபக்சே போர் குற்றவாளியே என்று நிரூபிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள்


விசாரிக்கப்படுகிறார் அதிபர் ராஜபக்சே

இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்படவேண்டும் என்ற கருத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி வந்துள்ளார். அவர் தலைமையில் அமைந்துள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கமும் இதனை வலியுறுத்தியுள்ளது.

ஜூன் முதல் தேதி சென்னையிலும், தொடர்ந்து ஜூன் 7 ஆம் நாள் திருச்சியிலும், 13 ஆம் தேதி மதுரையிலும் நடக்கவிருக்கும் பேரணிகள், பொதுக்கூட்டங்களில் வலியுறுத்தப்படும் கருத்துகளில் முக்கியமானது கொடுங்கோலன் ராஜபக்சே போர்க் கைதியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே!

அதற்கான தருணம் வந்துவிட்டது; 17 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது நற்செய்தியாகும். நீதி இன்னும் தோற்றுப் போய்விடவில்லை; நாகரிக உலகம் இன்னும் மிச்ச சொச்சமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை இது ஏற்படுத்துகிறது.

அய்.நா. மனித உரிமைக் கழகம் இன்று விசாரணை நடத்தியிருக்கிறது.

மனித உரிமைக் கழகத்தில் 45 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 17 நாடுகளின் ஆதரவு இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். சீனாவும், ருசியாவும் முட்டுக்கட்டை போட்டன; அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் முயற்சியால் 17 நாடுகளின் ஆதரவு கிடைத்துவிட்டது.

உருகுவே, இங்கிலாந்து, அர்ஜென்டினா, போஸ்னியா, கனடா, சிலி, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, மொரீசியஸ், ஹாலந்து, தென்கொரியா, சுலோவேக்கியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்ததற்காக அந்நாடுகளின் பிரதிநிதிகளை வெகுவாகப் பாராட்டுகிறோம்.


இலங்கை அதிபர் போர் குற்றவாளியே என்று நிரூபிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

பாதுகாப்பு வலயத்துக்குள் சரண் அடைந்த மக்கள் மீதும் குண்டு வீசப்பட்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி இருக்கிறார்கள். இதுபற்றிய செயற்கைக் கோள் ஒளிப்படங்களை அய்.நா.வே வெளியிட்டுள்ளது. விசாரணையில் இவையெல்லாம் சாட்சியங்களாக வந்து நிற்கும்.

மருத்துவமனைகள் மீதும், வழிபாட்டு நிலையங்கள்மீதும் குண்டுகள் பொழியப்பட்டுள்ளன. இவையெல்லாம் போர் நெறிமுறைகளை மீறிய ஒழுங்கு தவறிய செயல்களாகும்.


இலங்கை நாடாளுமன்றத்தில் மூவாயிரம் தமிழர்களைக் கொன்றிருக்கிறீர்களே என்று தமிழர் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் குற்றஞ்சாற்றியபோது, சிங்கள அமைச்சர் குறுக்கிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

உறுப்பினர், சபையில் தவறான தகவலைத் தருகிறார். 3000 பேர் இறந்ததை அவர் போய்ப் பார்த்தாரா? என்று கேட்கிறார், உறுப்பினர்கள் சிரித்தனராம்.

தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினர், இன்னொரு பிரச்சினையைக் கிளப்புகிறார்: பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்களைக் குறி பார்த்துக் கொல்கிறது சிங்கள இராணுவம் என்று பதறுகிறார். உடனே எழுந்து இன்னொரு அமைச்சர், பதுங்கு குழியில் இருக்கும் பிரபாகரன் உங்களுக்கு இதைச் சொன்னாரா? என்று கேட்டதும் சபையில் பலத்த கைதட்டலாம்! இவ்வளவுத் தகவல்களையும் நம்ம ஊர் ஆனந்தவிகடனே (6.5.2009, பக்கம் 1000) சொல்லித் துக்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் தேசியத் தொழிலாக இப்போது மாறிவிட்ட கொலையும், கற்பழிப்பும்தான் என்றும் அது விவரிக்கிறது.


இந்த நிலையில் ராஜபக்சே குற்றக் கூண்டில் நிறுத்தப்படவேண்டியது மிகமிக அவசியமாகும். ஹிட்லரையும் விஞ்சிய இந்தக் கொலைகாரன், போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு உரிய தண்டனை விதிக்கப்படாவிட்டால், வேறு யாரைத்தான் விசாரிக்க முடியும்? 21 ஆம் நூற் றாண்டில் மிகப்பெரிய மனித வேட்டைக்காரன் ராஜபக்சேயாகத்தான் இருப்பார்.

பச்சை ரத்தம் பன்னீர்போல - இந்தப் பாதகனுக்கு! தமிழர்களின் துன்பம் மட்டுமே இந்தக் கொலைகாரனுக்கு இன்ப நீச்சல் குளமாக இருக்கும் போலும்!

தமிழர்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்க்கிறது - போர்க் குற்றவாளி ராஜபக்சே தண்டிக்கப்படவேண்டும் என்று.

நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்ப்போம்!

--------------- நன்றி:-"விடுதலை"தலையங்கம் 26-5-2009

0 comments: