Search This Blog

9.5.09

தனி ஈழம் என்று கலைஞர் சொன்னால் பிரிவினைவாதம்; அதையே ஜெயலலிதா சொன்னால், தெய்வப்பிரசாதமோ?

கலைஞர் ஏற்படுத்திய பூகம்பம்


மானமிகு கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.

தன்மான இயக்கத்தின் கொள்கைகளுக்குத் தனியிடம் கொடுத்தார். இடைவெளியில்லாமல் நிலுவைகளை நிரப்பினார்.

(1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம்; அதற்கான பயிற்சிப் பள்ளிகள், தமிழிலும் வழிபாட்டுரிமை என்பதில் உள்ள லும்மைத் தூக்கி எறியச் செய்தார். தமிழ் வழிபாட்டு உரிமை என்பதை அதிகாரப் பூர்வமாக்கினார்.


(2) தமிழ் செம்மொழி பிரகடனம்

(3) ஆரிய ஆண்டு - ஆபாச வருஷங்களைத் தூக்கி எறிந்து, தமிழறிஞர்களின் நீண்ட நாள் கனவான தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்வித்தார்.

(4) தில்லை வாழ் தீட்சிதர்களின் சுரண்டல் கூடமாயிருந்த நடராஜர் கோயிலை அரசின் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்தார் - சிற்றம்பல மேடையில் தடை செய்யப்பட்டிருந்த தேவார, திருவாசகப் பாடல்கள் பாடுவதற்கான உரிமையை நிலை நாட்டினார்.

(5) வடலூர் இராமலிங்கனார் அவர்களால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபையில் - அவர் கொள்கைக்கு மாறாக அவரது உருவ வழிபாட்டை அரங்கேற்றி துரைத்தனம் நடத்தி வந்த பார்ப்பன அர்ச்சகரை வெளியேற்றி தமிழர் ஒருவர் இடம் பெறும் நிலையை உறுதிப்-படுத்தினார்.

சுத்த சூனா மானா ஆட்சி நடை-பெறுகிறது என்கிற நிலையைக் கெட்டிப்படுத்தினார்.


பொறுக்குமா பூணூல் கோத்திரத்துக்கு? தி.மு.க. ஆட்சிக்கு வெடி வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்தனர்.

ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கருணாநிதி புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற பல்லவியைப் பார்ப்பனர்கள் - அவர்களின் ஒலி பெருக்கிகளான ஏடுகள் பாட ஆரம்பித்தன.

இந்த வகையில்தான் இதற்கு முன்பும் இரண்டு முறை தி.மு.க. ஆட்சியை மத்திய ஆட்சியினரின் துணை கொண்டு கவிழ்த்தனர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் வகுக்கும் வியூகங்களைக் கவனிக்க வேண்டும்.


இதில் திருவாளர் சோ. ராமசாமி என்ற பார்ப்பனர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஆசிரியராக இருந்து நடத்தி வரும் துக்ளக் இதழினை இதற்கு ஓர் இரசாயன ஆயுதமாகப் பயன் படுத்தி வருகிறார்.

"இலங்கைத் தமிழரின் நலனைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு, விடுதலைப் புலி ஆதரவு மற்றும் பிரபாகரனுக்குப் பாராட்டு ஆகியவற்றைப் பிரகடனம் செய்கிற பொதுக் கூட்டங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. அதே மேடைகளில் நம் நாட்டிலேயே பிரிவி-னையைத் தூண்டுகிற பிரச்சாரங்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன. இவை எல்லாம் சட்ட விரோதமானவை; குற்றங்கள். ஆனால், தமிழ்நாடு அரசு இவற்றில் ஈடுபடுகிறவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. வேறு வழியே இல்லாமல், தமிழ்நாடு அரசு இனி ஏதாவது நடவடிக்கை எடுக்க நேரிட்டால் கூட, அது ஒப்புக்குத்தான் இருக்கும் என்பது சினிமா டைரக்டர் ஒருவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை நாடகத்தின் மூலம் தெளிவாகிவிட்டது.

தி.மு.க. அரசு இப்படி நடந்து கொள்வதில் வியப்பில்லைதான். இலங்கைத் தமிழர் நலனை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் கூறி, எம்.பி.க்களை ஏவி, ராஜினாமா நாடகத்தை ஆடி, மனித சங்கிலி என்று ஒரு மாய்மாலம் நடத்தி, இதில் பள்ளிச் சிறுவர்களைக் கூட இழுத்து வந்து நிறுத்தி; சட்ட சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றி - மத்திய அரசு கவலையே படவில்லை என்று குற்றம் சாட்டி - இறுதித் தீர்மானம் என்கிற மிரட்டலை விடுத்து; வெளி விவகாரத்துறை அமைச்சர் இலங்கை போய் வரவேண்டும் என்று நிர்ப்பந்தித்து; விடுதலைப் புலிகளுக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்று கொள்கை விளக்கம் அளித்து, விடுதலைப் புலிகளை எதிர்க்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி; பதவியையும், உயிரையும் விடத்தயார் என்று சவால் விட்டு, இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களைத் தவறான வழியில் தூண்டிவிட்ட பெருமையில் தி.மு.க. விற்கும் அதன் தலைவரும், முதல்வருமான கலைஞருக்கும் பெரும் பங்கு உண்டு.

இப்படி இவர்கள் செயல்பட்டதால், வக்கீல்கள் கோர்ட்டுகளைப் புறக்கணிக்கிறார்கள். பத்திரிகைகள், புலிப் பிரச்சாரத்தில் மீண்டும் இறங்கியுள்ளன; சில இளைஞர்கள் தங்களுடைய நிதானத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்குக் கண்மூடித்தனமான உணர்ச்சி கிளறிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. புலிப் பற்று யாழ்ப்பாணத்தை சுடுகாடாக்கியது. தமிழகத்திலும் அந்த நிலை வரவேண்டும் என்று துடிப்பவர்கள் மாநில அரசின் ஆசியுடன் அதற்கான முயற்சிகளில் முழுவேகத்துடன் இறங்கிவிட்டார்கள்.

இவ்வளவு நடந்தும் மத்திய அரசும், ஆளும் கட்சியான காங்கிரஸும் தி.மு.க. அரசைக் காப்பாற்றி வருகிறது".

- இவ்வளவையும் சோ ராமசாமி தனது துக்ளக் இதழில் (25-2-2009) தலையங்கமாகவே தீட்டித் தந்துள்ளார்.

ஏற்கெனவே இருமுறை ஈழத் தமிழர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி தி.மு.க. ஆட்சியைக் கவிழ்த்த அதே பாணியிலான அஸ்திவாரத்தினை இதன் மூலம் போட்டு வருகின்றனர்.

இதில் வெட்கப்பட வேண்டிய வேடிக்கை என்ன வென்றால், தி.மு.க. ஆட்சியில் புலிப் பிரச்சாரம், பிரிவினைப் பிரச்சாரம் அதிகம் நடைபெறுகிறது. இவற்றை தி.மு.க. ஆட்சி கண்டு கொள்வதில்லை என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம்; அதே நேரத்தில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுபவர்களோ, தி.மு.க. ஆட்சி ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அது பற்றி பேசமுடிவதில்லை, கருத்துகளைக் கூற முடிவதில்லை, கெடுபிடி அதிகமாகிவிட்டது - ஈழத் தமிழர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று மற்றொரு பக்கத்தில் குற்றப் பத்திரிகை படிக்கிறார்கள். இதன் விளக்கம் - பார்ப்பன சோக்களுக்கு வேறு ஒரு வகையில் சேவகம் செய்பவர்களாகிவிட்டனர்.

இரு சாராராலும் கூறப்படும் காரணங்கள் முரண்பட்டதாகயிருந்தாலும், அடிவிழும் இடம் மட்டும் குறி தவறாமல் சூத்திர ஆட்சியான தி.மு.க. மீதாகத்தானிருக்கிறது.

மூன்றாவது முனையில் அரசியல் ஆதாயத்தைத் தூக்கிக் கொண்டு இன்னொருவர் நிற்கிறார். அவர்தான் அ.இ.அ.தி.-மு.க.-வின் பொதுச் செயலாளர், முன்னாள் முதல் அமைச்சர் - எப்படியும் கருணாநிதி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அந்த நாற்காலியில் மதில் சுவரைத் தாண்டிக் குதித்தாவது குறுக்கு வழியில் அந்த நாற்காலியில் அமர்ந்தே தீரவேண்டும் என்ற வெறியில் துடியாய்த் துடிக்கிறார்.

அதற்கும் சோ போன்ற பார்ப்பனர்கள் இந்த ஈழத் தமிழர் பிரச்சினை என்கிற ஆயுதத்தைத்தான் பயன்படுத்துகின்றனர்.

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியின் போது, புலிகளின் ஆதரவு மாவீரர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?

பதில்: ஜெயலலிதா ஆட்சியின் போது, புலி ஆரவாளர்கள் எங்கே போகவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள்; மவுனம் சாதித்தார்கள். அதனால்தான் அவர்கள் அப்போது எங்கே போயிருந்தார்கள் என்று நீங்கள் இப்போது கேட்கிறீர்கள்.

(துக்ளக் - 25-2-2009)

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்தான் நாட்டில் பிரிவினைப் பேச்சுகள் இருக்காது, சட்ட விரோத நடவடிக்கை இருக்காது என்று ஒரு பிரச்சாரத்தைத் தவழவிடுகிறார்கள்.

இதில் பிரிவினைப் பேச்சுகள் அனுமதிக்கப் படுவதால் கருணாநிதி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறுவது ஜெயலலிதாவின் வாடிக்கையான பேச்சுமாகும்.

ஈழத்தமிழர் பிரச்சினையை கருணாநிதியால் தீர்க்க முடியாது. எனவே தி.மு.க. ஆட்சி பதவி விலக வேண்டும். மத்திய ஆட்சிக்குக் கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இன்னொரு நாள் அறிக்கை விடுவார்.

மத்தியில் ஆதரவை விலக்கிக் கொண்டால் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு காங்கிரஸ் கொடுத்துவரும் ஆதரவும் விலக்கிக் கொள்ளப்படும். அந்தச் சந்தர்ப்பத்தில் காங்கிரசோடு கைகோத்துக் கொண்டு மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க.- ஆட்சி அமைத்திட வாய்ப்பு ஏற்படும் என்ற திட்டமும் பின்னணியில் உண்டு.


இவை எல்லாமுமே அ.இ.அ.தி.மு.க.வுக்கு அப்பட்டமான தோல்வியில் முடிந்துபோய் விட்டது. தி.மு.க. ஆட்சி விலகாது - கவிழாது என்று உறுதியாகத் தெரிந்தவுடன் பார்ப்பன வட்டாரம் ஜெயலலிதாவை முன்னிறுத்தி அடுத்த கட்டத்திற்குத் தாவியிருக்கிறது.

15 ஆவது மக்களவைத் தேர்தல் வருகிறது. மே 13 அன்று இறுதி கட்ட தேர்தல் முடிந்து மாத இறுதியில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுவிடும்.

இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என உச்சக் கட்டத் திட்டம் பின்னப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் மக்கள் மத்தியில் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன. எதைச் சொல்லி தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவது?

தமிழ்நாட்டில் பொதுவாக இனஉணர்வு, மொழி உணர்வுகளுக்கு முக்கிய இடம் உண்டு. இப்பொழுது ஈழப் பிரச்சினை என்பது முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஈழத்திலே இலங்கை அரசால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். நாள் ஏடுகளில் அன்றாடத் துயரத் தகவல்கள் வந்து கொண்டி ருக்கின்றன. கொல்லப்பட்ட தமிழ் மக்களின் படங்களும் பக்கம் பக்கமாக ஏடுகளில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆயுதத்தை நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? இதற்கு முன்பு எப்படியோ பேசியிருக்கலாம் - அறிக்கைகள் வெளியிட்டிருக்கலாம். அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல.

ஏற்கெனவே இடதுசாரிகள் அணு ஆயுதப் பிரச்சினையால் காங்கிரஸ் அணியிலிருந்து வெளியேறிவிட்டன. ஈழத் தமிழர் பிரச்சி-னையை முன்னிறுத்தினால் அந்தத் தூண்டிலில் சில கட்சிகள் சிக்கும். இக்கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தால் தி.மு.க. கூட்டணியை ஒரு கை பார்க்கலாம் என்ற ஆழமான திட்டத்தின் கீழ் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய கூட்டணி ஒன்று மூன்றாவது அணியாக உருவாக்கப் பட்டுள்ளது.

கருணாநிதி ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்வது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் என்று அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா (நமது எம். ஜி.ஆர். 16-10-2008) இன்று போர் நிறுத்தம் வேண்டும் என்று ஆவேசக் கூச்சல் போடுகிறார். இலங்கையின் உள் நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியுமா? அது இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்தாக முடியும் என்று அறிக்கை வெளியிட்ட அம்மையார் ( அதே தேதி அறிக்கை) இன்று திடீர் என்று தனிஈழம் என்று குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்.

இது சந்தர்ப்பவாதம்தான் என்றாலும், அம்மையாரை ஆதரிப்போம் என்கிறது பெரியார் பெயரைக் கட்சியில் வைத்துள்ள ஒரு குழு. (அதனால் என்ன? அண்ணா பெயரையும், திராவிட பெயரையும் ஜெயலலிதா கட்சியில் வைத்துக் கொள்ளவில்லையா?)

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் தூக்கிப் போடப்பட்ட வைகோவும் வரிந்து கட்டிக் கொண்டு அம்மையாருக்கு ஜே போடுகிறார். தடை செய்யப் பட்ட விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியவர் பழ. நெடுமாறன் என்பதற்காகவே அவரின் தமிழர் தேசிய இயக்கத்தையும் தடை விதிக்கக் காரணமாக இருந்த ஜெயலலிதாவால் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டார். அவரும் கூட ஜெயலலிதா தேரை ஆட்சிப் பீடத்தில் கொண்டு வந்து நிறுத்த வடம் பிடிக்கிறார்.

பா.ம.க. நிறுவனரோ ஜெயலலிதாவை பிரதமராகவே ஆக்கித் தீருவோம் என்று சண்ட பிரசண்டம் செய்கிறார்.

இவ்வளவு பூத்துக்குலுங்கும் சந்தர்ப்பத்தை பார்ப்பனர்கள் கை நழுவ விட்டு விடுவார்களா?


அவுட்லுக் (27-4-2009) பல வண்ணத்தில் ஜெயலலிதாவின் படத்தை அட்டையில் போட்டு பூரிக்கிறது. தி.மு.க. அணியில் சச்சரவுகள் நிலவுகின்றன. அ.இ.அ.தி.மு.க. அணி நல்ல கட்டமைப்புடன் இருக்கிறது. இந்நிலை-யில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் (மத்தியில் ஆட்சி அமைப்பதில்) ஜெயலலிதா வலிமையுடையவராக இருப்பார்.

Jaya Ho!

Squabbles in the DMK fold and a well-knit AIADMK coalition - leader Jayalalitha holding all the Aces, regardless of which alliance rides to power in Delhi.

- அவுட்லுக் அட்டைப் படம் கூறும் - அவாளின் ஆசையை வெளிப்படுத்தும் செய்தி இது.

இந்தியா டுடே (8-4-2009) இதழோ அட்டைப் படத்தில் அம்மையாரைப் போட்டு தேர்தல் 2009 - முந்துகிறார் ஜெயலலிதா என்று பூரித்துத் தலைப்பைக் கொடுக்கிறது.

கருணாநிதியின் வானவில் கூட்டணியில் இருந்து பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை வளைத்-திருக்கும் ஜெயலலிதாவின் கை சற்றே வலுத்திருப்பது போலத் தெரியும் என்றும் தன் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்கிறது இந்தியா டுடே!

இதன் மூலம் மக்கள் மத்தியிலே ஜெயலலிதா மாயையை உருவாக்குவதுதான் அவாளின் அந்தரங்கத் திட்டம். இலங்கைத் தமிழர் பிரச்சினைதான் பிரதான பிரச்சினையாக முன் வைக்கப் படும் என்பதைக் கணித்த அ.தி.மு.க. தலைவி தனது நீண்ட கால கொள்கையை மாற்றிக்கொண்டு இரு கம்யூனிஸ்டுகளையும் தன் பிடிக்குள் இழுத்து வந்திருப்பது ராஜதந்திர ரீதியில் கூடுதல் பலனைத் தரும். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி முகாம்களை கட்டி இருக்கிறது என்று இந்தியா டுடே கொம்பு சீவி விடுகிறது - கொம்புத் தேனாக தன் அந்தரங்கச் சிரிப்பை வாரி இறைத்திருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (28-4-2009) தலையங்கத்திலேயே முதல் அமைச்சர் கலைஞரை கேலி செய்தது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் உறுதியாக தனக்குச் சாதகமாக அமையச் செய்ய வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்டு வரும் யோசனைகள், செயல்-திட்டங்கள் வெகு வேகமாக காலியாகிக் கொண்டிருக்கின்றன என்று எழுதியதோடு நில்லாமல் தலையங்கப் பகுதியில் கிண்டலும் செய்கிறது. போதுமான சத்துணவு எடுத்துக் கொண்ட பின்சிறிது நேரம் கடற்கரைப் பகுதியில் இருந்துவிட்டு மறுபடியும் மேற்கொண்டு சத்துணவு எடுத்துக் கொள்ள திரும்பிச் சென்றுவிட்டார். உண்ணா விரதம் என்ற கோட்பாட்டையே இந்த வெற்று நாடகம் நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று ஏகடியம் செய்வதற்காக ஜெயலலிதா கூறிய உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்ற சொலவடையே எக்ஸ்பிரசும் கையாண்டுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.

ஈழத்தில் போரை நிறுத்துக என்று சொன்னாலே தாண்டித் தோண்டியில் விழும் திருவாளர் சோ ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதா ஒருவர்தான் உறுதியாக தெளிவாக உள்ளார் என்று சான்றுப் பத்திரங்களை வழங்கிக் கொண்டிருந்த துக்ளக் ஆசிரியர் - ஈழத்தில் போர் நிறுத்தம் தேவை என்றும், தனி ஈழம் தான் தீர்வு என்றும் பிரகடனப்படுத்தும் ஜெயலலிதா பற்றி என்ன எழுதுகிறார்? மயில் தோகையால் அல்லவா வருடுகிறார்.

கேள்வி: போர் என்றால் அப்பாவி மக்களும் பலியாகத்தான் செய்வார்கள். அதைத் தவிர்க்க முடியாது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறிய ஜெயலலிதா இப்போது திடீரென்று தனது கருத்தை மாற்றிக் கொண்டு, இலங்கையில் நடை பெறும் போரை நிறுத்தத் தவறிய மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தது பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்: போர் நடந்தால் அப்பாவிகள் பலியாகத்தான் செய்வார்கள்; போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவதில் ஒன்றைத் தொடர்ந்து, அதை ஒட்டி, மற்றொன்று வருகிறது. அவர் ஏற்கெனவே, போர் நிறுத்தம் பற்றிச் சொல்லியும் இருக்கிறார். ஆகையால் இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

(துக்ளக் 25-3-2009)

ஜெயலலிதா தலைகீழாக முரண்பட்டுள்ள நிலையிலும் கூட அதனைக் கண்டிக்க, கேலி செய்ய (அதுதானே துக்ளக் பாணி) முன்வராது, வழவழா, கொழகொழா என்ற பாணியில் தெளிவற்ற முறையில் வழுக்கி பதில் சொல்ல முயன்றுள்ளதையும் கவனித்தால் பார்ப்-பனர்-களின் இனப்பற்றும் அதற்காக எந்த எல்லைக்கும், உயரத்துக்கும் சென்று பல்டியடிக்கும் வஞ்சகமும் பளிச்சென்று புரியும்.

தனி ஈழம் என்று கலைஞர் சொன்னால் பிரிவினைவாதம்; அதையே ஜெயலலிதா சொன்னால், தெய்வப்பிரசாதமோ?

பார்ப்பனத்தி ஆடினால் பரதம். சூத்திரச்சி ஆடினால் சதுர் என்பதுதானே அவாளின் ரத்தப் பாஷை!


பார்ப்பனர்களும், அவர்களின் கைவசம் வலுவாக உள்ள ஊடகங்களும் என்னதான் குட்டிக் கரணங்கள் போட்டாலும் கலைஞர் மீது குப்பைகளை வாரிக் கொட்டினாலும், அக்கிரகாரத்து அம்மையாரை ஜோடித்துத் தூக்கி நிறுத்தினாலும், ஒரு நொடியில் கலைஞருக்குள் பொறிதட்டும் ஒரு சிந்தனைப் பொறி ஒரு நொடியில் அனைத்து வியூகங்களையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும்.

ஆம். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உண்ணாவிரதம் சில மணி நேரம் பட்டினியல்ல; அது ஒரு பூகம்பம்! அது வரை யாருக்கும் அடங்காத, எவர் பேச்சையும் செவி மடுக்காத - அமெரிக்காவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத, அய்.நா. மன்றத்தின் வலியுறுத்தலையும் கண்டு கொள்ளாத இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயை - அந்த பூகம்பம் பணியவைத்துவிட்டதே!

ஈழத் தமிழர் பிரச்சினையைக் கை முதலாகக் கொண்டு, போர் ஆயுதமாக ஏந்தி, கலைஞரை நோக்கி வீசலாம் - தேர்தல் களத்தில் பணிய வைக்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அரசியல் கழைக் கூத்தாடிகளையும் அந்தச் சில மணி நேர உண்ணாவிரதம் குப்புற வீழச் செய்துவிட்டதே! உலக அரங்கில் அந்த 85 வயதைக் கடந்த தலைவரை மேலும் ஒரு அடி உயர்த்தி விட்டதே!

கவிழ்க்க நினைத்தவர்களை

கவிழ்ந்து படுக்கச் செய்துவிட்டாரே!

70 ஆண்டு அனுபவத்திற்கு முன் ஆதிக்கச் சக்திகளும், துணைபோகும் சக்திகளும் கோலி விளையாட அனுப்பப்பட்டுவிட்டன.

ஆனாலும், ஆரியம் அடுத்தடுத்த வலைகளைப் பின்னும். அதற்குத் துணைபோகும் சக்திகளும் மலிவாக நம்மிடமிருந்தே ஆள்கள் கிடைப்பார்கள். தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்களாக!

-------------- மே 01-15_2009 "உண்மை" இதழில் கவிஞர் கலி.பூங்ன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

ராவணன் said...

அது யாருங்க அக்கா...கலைஞரு?அந்த நபருக்கு பெயர் எதுவும் இல்லையா?
அவரு என்ன பெரியாரா?பதவிக்கு அலையாத நபரா?கட்டையில போகிறவரைக்கும் நாற்காலியில் இருந்து இறங்காத ஒரு நபருக்கு மானம் ரோசம் ஏதும் இருக்கா?உங்க கொழுந்து அதான் ஜெயலலிதாவிற்கு பட்டம் கொடுத்த வீரமணியிடம் கேட்டுச் சொல்லலாமே?பெரியார் பெயரைக் கெடுப்பதற்கே வீரமணியும்,கருணாநிதி என்ற நபரும் இருக்கின்றார்கள்.
மனைவிகளை கோவிலுக்கு அனுப்பி அழகு பார்க்கும் கருணாநிதி என்ற நபர் கொடுக்கும் கோடிகளுக்காக பெரியாரை விற்கவேண்டாம்.

நம்பி said...

//ராவணன் said...

அது யாருங்க அக்கா...கலைஞரு?அந்த நபருக்கு பெயர் எதுவும் இல்லையா?
அவரு என்ன பெரியாரா?பதவிக்கு அலையாத நபரா?கட்டையில போகிறவரைக்கும் நாற்காலியில் இருந்து இறங்காத ஒரு நபருக்கு மானம் ரோசம் ஏதும் இருக்கா?//

ஏன்? லூசு இராவணா?...உனக்கு ஏதாவது அந்த நாற்காலி மேல ஆசை இருக்குதா?

யாருக்காவது ஒதுக்க ஆசைப்படுகிறாயா? மக்கள் செல்வாக்கு இருக்கணுமே...? இருக்குதா..? மக்கள் ஒட்டு போட்டா ராவணன் கூட மந்திரி தான். என்ன லூசு சரியா...?


....ஐ! லூசு ராவணணுக்கு! மான ரோசம் வந்துடுச்சாண்டோய்!...அப்ப நமக்கு இலாபம் தான்!....வடிவேலு காமடி...!