Search This Blog

4.5.09

மே நாளும் மனு தர்மமும்






இன்று தனியார் நிறுவனங்களிலும், பெல், நெய்வேலி போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் போக்குவரத்து, இரயில்வே போன்ற அரசுத் துறை நிறுவனங்களிலும் புதிய பணி நியமனங்கள் நடைபெறுகின்றன.

இவற்றில் அனைத்து நிரந்தரப் பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் அனைவரும் நிரந்தரம் என்று எடுக்கப்படுவதும், உடலுழைப்புத் தொழில்கள் செய்யக்கூடிய தொழிலாளர்களை மட்டும் தற்காலிகம் என்று எடுத்து ஒரு குறிப்பிட்ட காலம் அவர்களைத் தற்காலிகமாகவே வைத்திருந்து அதன் பிறகுதான் நிரந்தரம் என்றும் நடைமுறை வைத்திருக்கிறார்கள்.

அத்துடன் உடலுழைப்புத் தேவைப்படும் அனைத்துக் கடைநிலை வேலைகளும் ஒப்பந்த அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன.

தற்காலிக பொறியாளர், தற்காலிக மேற்பார்வையாளர் என்றோ, ஒப்பந்த பொறியாளர், ஒப்பந்த மேற்பார்வையாளர் என்றோ நியமிக்கப் படுவதில்லை.

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது? உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு நிலையான வேலை கொடுத்தாலோ, அதிக சம்பளம் கொடுத்தாலோ அவர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள். சரியாக வேலைக்கு வர மாட்டார்கள்; அதனால்தான் அவர்களை நிரந்தரமில்லாமல் குறைந்த கூலியில் வேலை வாங்குகிறோம் என்று ஆதிக்க வர்க்கம் கூறுகிறது.

இந்தத் தொழிலாளர்களால் தான் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இலாபமும் அதிகரிக்கிறது. இவர்களுக்கு அதிக ஊதியமும் நிரந்தர வேலையும் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வேலை செய்வார்கள். ஆனால் அதிகார வர்க்கம் இதனை மாற்றித் தலைகீழாகக் கூறுகிறது என்றால் அதுதான் இந்த நாட்டில் காலங்காலமாக நிலவி வரும் மனுதர்ம மனப்பான்மை என்பது.

மனுதர்மத்தில் உடலுழைப்புச் செய்கிற சூத்திரனின் சக்தியையும், அவன் பணிவிடையையும், அவன் காப்பாற்ற வேண்டிய குடும்பத்தையும் யோசித்து ஜீவனத்திற்குத் தக்கபடி கூலி கொடுத்தால் போதுமானது என்றும்,

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற்கு உபயோகமானதைவிட அதிகமாக சம்பாதிக்கக்கூடாது. அப்படி சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத் தக்க பிராமணனுக்கு மனக்கஷ்டம் எற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த சிந்தனை இன்னும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அரசில் உள்ளவர்களுக்கும் இருப்பதால்தான் உடலுழைப்புத் தொழிலாளர்கள் இன்னும் தற்காலிக ஊழியர்களாகவும் ஒப்பந்த ஊழியர்களாகவும் இருந்து அல்லல்பட்டு வருகின்றனர்.

நாம் இதைச் சொன்னால் மிகவும் சாமார்த்தியமாக சிலர் இப்பல்லாம் எங்கே சார் மனுதர்மம் இருக்கிறது? செல்லரித்த ஏடுகளில் வேண்டுமானால் இருக்கலாமே தவிர நடைமுறையில் இல்லை என்பார்கள்.

மனுதர்மம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது என்பதற்குப் பல தீர்ப்புகள் உள்ளன.

2008 நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் கீழ்ஜாதிப் பெண்ணுக்கும், மேல்ஜாதி ஆணுக்கும் பிறந்த பிள்ளை என்ன ஜாதி என்பதற்காக நடந்த வழக்கில் அளித்த ஒரு தீர்ப்பில் ஆணுடைய ஜாதிதான் அந்தக் குழந்தைக்குப் பொருந்தும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அது மனுதர்மம் பத்தாவது அத்தியாயத்தில் 67 ஆவது சுலோகத்தின்படி வழங்கப்பட்ட தீர்ப்பாகும். அதே போல் 1-4-2009 நாளிட்ட துக்ளக் இதழில் ஒரு கேள்வி - பதில். அதில்

கேள்வி: எதிரி காயம் ஏற்படுத்தப் போவதாகத் தெரிந்தால் தற்காப்புக்காகக் கொலை செய்வது சட்டப்படி குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது பற்றி?

பதில்: இது ஒன்றும் புதிய விஷயமில்லை. தற்காப்புக்கான உரிமை என்பது சட்டத்திலேயே இருக்கிற விஷயம்தான். சொல்லப்போனால் மனுஸ்மிருதியிலேயே இருக்கிற விஷயம்தான். என்று சோ பதிலளித்திருக்கிறார். அதுவும் கூட பிராமணர்களுக்குத் தான் பொருந்தும் என்பதை சோ மிகவும் சாமார்த்தியமாக மறைத்துவிட்டார்.


மனுதர்மம் எட்டாவது அத்தியாயம் 349 ஆவது சுலோகம் இவ்வாறு சொல்கிறது:
தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகவும் தங்களுக்கு வரவேண்டிய மதவழிக் கட்டணங்களுக் காகவும் பெண்களைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு பார்ப்பனன் கொலை செய்தால் அது பாவமாகாது.

ஒரு குலத்துக்கு ஒரு நிதி (அநீதி சொல்லும் இந்த உண்மையை மறைத்து மனுதர்மம் ஏதோ அனைவருக்கும் பொதுவான நீதியைச் சொல்லி விட்டதாக சோ புளகாங்கிதமடைகிறார்.
மனுஸ்மிருதி என்பது இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் ஆதாரங்கள். அந்த மனுஸ்மிருதியை ஒழிக்காதவரை உடலுழைப்புத் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் தற்காலிக ஊழியர்களாகவும், ஒப்பந்த ஊழியர்களாகவும் தான் இருப்பார்கள்.

அந்த மனுஸ்மிருதியையும், மனுதர்ம மனப்பான்மையை ஒழித்துக்கட்ட இந்த மே நாளில் உறுதியேற்போம்!

-------------பெல் ம. ஆறுமுகம், பொதுச் செயலாளர், தி.தொ.க. பேரவை -"விடுதலை" 3-5-2009

0 comments: