
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்
சென்னையில் நேற்றைய தினம் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அவ்வார்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதற்கு முன்பாக சென்னை பெரியார் திடலில் அவர்கள் மூவரும் கூடி கலந்துரையாடியபோது, இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக இதில் அக்கறையுள்ளவர்களை ஒருங்கிணைத்து ஓர் அமைப்பினைத் தொடங்குவது என்று முடிவு எடுத்தனர். அமைப்புக்கு ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டது. இதில் மேலும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த, அமைப்புகளைச் சேராதவர்களையும் இணைத்துக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
விடுதலைப்புலிகளின் எழுச்சிமிகு தலைவர், மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட்டாரா - உயிருடன் இருக்கிறாரா? என்பது வேறு பிரச்சினை. அதன் உண்மையான நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது.
அதைவிட மிக முக்கியமானது - ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பற்றியதாகும். சிங்கள ராஜபக்சேயின் ஆட்சியில் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிட்டும்; அவர்களுக்கு நாகரிகமான, சுயமரியாதையுள்ள வாழ்வுக்கு உத்தரவாதம் கிட்டும் என்று எதிர்ப்பார்ப்பது என்பதை கற்பனை செய்து பார்ப்பது கூடக் கடினமானதாகும்.
காரணம், கடந்த காலத்தில் ராஜபக்சே நடந்துகொண்டு வந்திருக்கிற பாசிச குணம் நிறைந்த செயல்பாடுகளே அதற்குச் சாட்சியங்களாகும்.
உலக வரலாற்றில் சொந்த நாட்டு மக்கள்மீதே குண்டுவீசி அழித்ததை யாரும் கேள்விப்பட்டு இருக்கவே முடியாது.
இன்னொரு நாட்டுக்காரன் படையெடுப்பின்போதுகூட மருத்துவமனைகள்மீது குண்டு போடுவது கிடையாது. போரில் கூட சில மரபுகள் மரியாதைக்குரிய முறையில் பின்பற்றப்பட்டாக வேண்டும்; அதற்கான நியதிகள் உண்டு; எந்த வகையான நன்னெறிகளுக்கும் உட்படாத, காட்டுவிலங் காண்டித்தனத்தில் புழுத்த மனிதன் - அருவருக்கத்தக்க அழுக்கு மனிதன்தான் ராஜபக்சே!
கடந்த சில நாள்களில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின்மீது நச்சுக் குண்டுகளை வீசிப் படுகொலை செய்திருக்கிறான். இந்த உண்மை வெளி உலகத்துக்குத் தெரிந்து விடக் கூடாது; மூடி மறைக்கவேண்டும் என்ற நயவஞ்சகத்தில் அரங்கேற்றப்பட்டதுதான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பும், பிரச்சாரமும் ஆகும்.
அதைக்கூட மாறி மாறி முரண்பாடுகளுடன் வெளிப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். காட்டுப்பகுதியில் ஆம்புலன்சில் தப்பி ஓடினார் என்று சொல்வது எல்லாம் அறிவுக்குப் பொருந்தக்கூடியதுதானா? அது கேவலப்பட்டுப் போனது என்றவுடன் அதனை மறுத்துவிட்டனர்.
உலகத்தின் பல்வேறு நாடுகளும் இலங்கை அரசை நோக்கிக் கண்டனக் கணைகளை வீசிக்கொண்டிருக்கின்றன. நிதி உதவிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசே திவாலாகும் ஒரு நிலைக்கு ஆளான நிலையில், எதைச் சொல்லியாவது தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற நெருக்கடி இலங்கை ஆட்சிக்கு ஏற்பட்டுவிட்டது.
அதற்காக அவசர அவசரமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டது. தீவிரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது; இனி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நோக்கி இலங்கை அரசு செயல்படும்; விடுதலைப்புலிகள்தான் எங்களுக்கு எதிரிகளே தவிர, தமிழர்கள் அல்லர். அவர்கள் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்றெல்லாம் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவும் ஒரு நயவஞ்சக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்சே.
அப்படி சொல்லும்போதுகூட இலங்கையில் தமிழர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். வேறு எந்த நாடும் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அகம்பாவத்துடன் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டிய தார்மீகக் கடமை, தொப்புள்கொடி உறவுக்காரர்களான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உறுதியாக உண்டு.
இந்தத் திசையில் சிந்தித்து தேவையான செயல்பாடுகளில் இறங்குவதுதான் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் நோக்கமாகும். மனித உரிமை, வாழ்வுரிமை, சுயமரியாதை இதன் அடிநாதமாகும்.
இந்த இயக்கத்தில் இணைக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுமல்ல - கடமைகளும், பணிகளும்கூட விரிவடையும்.
தமிழா, இன உணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!
-----------------"விடுதலை" தலையங்கம் 20-5-2009
0 comments:
Post a Comment