Search This Blog

27.5.10

நாட்டைப் பீடித்த நோய்களுள் சினிமாவும் ஒன்று

சினிமா மாயை!

ராணி இதழில் உங்களோடு பேசுகிறேன் எனும் தலைப்பில் நடிகரும், ஓவியருமான சிவகுமார் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இந்த வார இதழில் (16.5.2010) அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து சுரீர் என்று தைக்கிறது. திரையுலகத்தில் மின்னிக் கொண்டே, அந்த மோகத் திரையைக் கிழித்துள்ளது அசாதாரணமானதே!

சினிமாவில் காட்டப் படும் அத்தனையும் உண்மையில் மாயை, கட்டுக் கதை என்பதை அறிவுப் பூர்வமாக மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டால், சினிமாவுக்கு உள்ள கவர்ச்சி அடியோடு அழிந்து விடும். மக்களின் அறியாமை தொடரும்வரை அரசியலுக்கும், சினிமாவுக்கும் அழிவில்லை என்ற கருத்தினைப் பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகுமார்.

உண்மைதானே; சினிமா ஒரு தொழில்; அதில் நடிப்பதெல்லாம் தொழிலைச் சார்ந்தது என்பதைத் தவிர அதற்குமேல் என்ன வாழ்கிறது?

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நடிப்பு என்றால் என்ன? உண்மையல்ல என்பதன் மறுபெயர்தானே!

அந்த நடிப்பை நிஜம் என்று நினைத்துவிட்டால் விபரீதம்தானே!

இப்பொழுதெல்லாம் மக்களிடத்தில் தம்மைப்பற்றிய வடிவம் (இமேஜ்) பேருருப் பெறவேண்டும் மக்களின் மனத்தில் ஆணி அடித்து உட்காரவேண்டும் அதன்மூலம் கிடைக்கும் பாமரத்தனமான செல்வாக்கை அரசியலுக்கு மினுமினுப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அதன்மூலம் இந்த நாட்டையே ஆளவேண்டும் என்ற மனப்பால் குடித்து, வேண்டுமென்றே திட்டமிட்டு சில வசனங்களைக் கதாநாயகன் பேசுவதுபோல சித்திரிக்கிறார்கள்.

நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதற்குச் சமம் என்பது போன்றவை எல்லாம் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.

எப்பொழுது வரவேண்டுமோ, அப்பொழுது வருவேன்! என்பதெல்லாம் இரு பொருளில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்.

இப்பொழுது இந்தக் களத்தில் போட்டிகள் அதி-கரித்துவிட்டன. சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்கள் பெரும்பாலோர் அடுத்த முதலமைச்சர் நாம்தான் என்ற மனப்பான்மையில் மிதக்கின்றனர்.

நாட்டுக்காகப் பாடுபட்டு இருக்கவேண்டாம்; தியாகம் செய்திருக்கவேண்டாம்; சில வசனங்களைப் பேசினாலே போதும்; இந்த அப்பாவிப் பாமர மக்களின் வாக்குகளை சுலபமாக, சாமர்த்தியமாக ஜேப்படி செய்துவிடலாம் என்று நினைக்கும் போக்கை மனதில் கொண்டுதான் நடிகர் சிவகுமார் நறுக்கென்று பட்டுத் தெறித்ததுபோல் கூறியிருக்கிறார்.

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று வாழப்பாடியில் (19.5.1962) 48 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார் கூறிய தொலைநோக்கை என்ன வென்று கூறுவது!

----------------- மயிலாடன் அவர்கள் 13-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு தோழர் ஓவியா அவர்களுக்கு ...

நாட்டை பிடித்திருக்கும் நோய்களுள் முதன்மையானதுகளில் ஒன்று சினிமா என்பது எனது கருத்து ...சில அபூர்வமான விதி விலக்குகள் இருக்கலாம் ...

ரஜினி மூத்திரத்தை கூட குடிப்பேன் என்றார் ஒரு முறை எனது பள்ளி ஆசிரியர் ... விஜய் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி காண 300 ருபாய் கொடுக்க வில்லையெனில் தற்கொலை செய்து விடுவேன் என கூலி வேலைக்குபோகும் தனது அம்மாவை மிரட்டினான் எனது வகுப்புத் தோழன் ஒருவன் ...இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம் ...

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் அருவருப்பாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது ...

நன்றி தோழர் ...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

சரி தான். பொய்யா வசனம் எழுதி, ஆட்சிய பிடிச்சு - டாஸ்மாக கடைகளினாலும், இலவச தொலைக்காட்சிகளாலும் நாட்டை சீரழிக்கும் நல்லவரை பத்தியும், தைரியமிருந்தா நாலு வரி எழுதுங்க